இடுகைகள்

2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குளக்கரை விடியல்!

படம்
  இத்தனைபேர் சுற்றிவர அத்தனை அழகா நான்!? மீசை முறுக்குது ஆசைச்சூரியன்... சூரியக்கதிர் வருடச் செவ்விதழ் விரித்தது தண்ணீர் குளத்துத் தாமரை... தாமரை இதழ்விரியத் தன் முகம் புதைத்தது நிலவுக்கு ஏங்கிடும் அல்லி... அல்லிக் குளத்தினில் வெள்ளிச் சிதறல்கள், துள்ளித் திரியும் மீன்கள்... மீன்களைப் பார்த்ததும் மோகம் பெருகிட மோனத் தவமியற்றும் கொக்கு... கொக்கிற்குப் போட்டியாய் குளக்கரையில் தவமிருக்கும், ஒற்றைக்கால் அரசமரம்... அரசமரத்தடியில் அசையா நெடுந்தவம், அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை!

அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது!!??...

பத்து மாதங்கள்  பத்தியமாய்க் காத்திருந்து  எட்டி உதைக்கையிலே  செல்லமாய் வருடிவிட்டுப்  பட்டுப் பூவாகப்  பெற்றெடுத்த என்னுயிரை  தொட்டிலிலே போட்டாலும்  தோள்வலிக்கும் என்றெண்ணி  பக்குவமாய் மடியிலிட்டு  பாட்டிசைத்துத் தூங்கவைத்து  சின்னவிரல் பிடித்து  சித்திரம்போல் நடைபழக்கி  அன்னம் ஊட்டுகையில்  அறிவையும் பிசைந்து ஊட்டி  அம்பாரி ஆனையோடு  உப்புமூட்டை சுமந்தலைந்து  கண்ணுறங்கும் வேளைவரை  கண்மணியைக் காத்திருந்து  பள்ளிக்கு அனுப்பிடும்  பருவம்வந்த வேளையிலே  விடியலிலே கண்விழித்து  உடையிட்டு அழகுபார்த்து,  படியத் தலைவாரிப்  பள்ளிக்கு அனுப்புகையில்,  கலைத்துச் சிறுமுடியைக்  கண்ணாடி முன்சென்று,  திருத்திச் சீவிவிட்டு  சிரித்தபடி சொல்கிறது,  "அம்மா, உனக்கு  ஒண்ணுமே தெரியாதென்று"

தமிழுக்கு வணக்கம்!

படம்
தொட்டிலிட்டுத் தாலாட்டி துணையாய்க் கரம்பிடித்து கட்டிலில் கனியமுதாய்க் காதல் மொழி பேசி என்னை உருவாக்கி என்னோடு கலந்துவிட்ட அன்னைத் தமிழுக்கு ஆயிரம் வணக்கங்கள்!!!