இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடிச்சவிழ்த்தான் முகுந்தனவன்!!!

படம்
துடித்த உதடுகள் அடக்கிய வார்த்தையை எடுத்து மறுபடியும் சொல்லுகின்றாள் சுசீலையவள்... அடுத்துவரும் வார்த்தை என்னவாய் இருக்குமென்று நடுக்கமாய்க் கணவனின் முகக்குறிப்பைப் பார்த்துநின்றாள்... எத்தனை வருஷமாச்சு, என்நிலையும் வறுமையாச்சு இத்தனைநாள் இல்லாமல் இல்லாமை தகித்தவுடன், அட்டமியில் அவதரித்த கிருஷ்ணனைப்போய் பார்ப்பதற்கும் வெட்கமா யிருக்குதடி, வேதனையும் தோன்றுதடி... என்று பதிலுரைத்தான் இயலாமை எடுத்துரைத்தான் வழி யொன்றுமறியாமல் வாய்மூடி நின்றவளைக் கண்டு மனம்வருந்திக் கண்விழிநீர் துளிர்த்தவனாய் நின்றான் குசேலன் நெடிதுயிர்த்தான் வார்த்தையின்றி... பண்டு குருகுலத்தில் பழகிய கண்ணனவன் இன்று துவாரகையின் மன்னனாய்த் திகழ்கின்றான் கொண்டுபோய் அவனிடத்தில் அன்போடு கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்னிடத்தில் என்றவனும் மருகிநிற்க, ஒன்றும் எதிருரைக்க இயலாமல் தளர்ந்தவளாய்ச் சென்று சிறிதவலைக் கொண்டுவந்த மாதரசி, நன்றாய் அவலதனைத் துண்டினில் முடித்துக்கட்டி, தந்தாள் கணவனிடம் செல்லுங்கள் என்றுரைத்தாள்... சென்றான் குசேலனவன் சோர்வுற்ற நடையுடனே கண்டான் கண்ணவன் தாவிவந்து

காலச் சுவடுகள்

படம்
அவள், வழிமறந்த கோவலனைப் பழிவாங்க முயலாமல் வழிமாற்றிப் பிள்ளைகளைப் பழியின்றி வளர்த்த அன்னை... கல்லும் மண்ணுமாய்க் கலந்து கட்டிய வீட்டை தன் சொல்லாலும் செயலாலும் சொர்க்கமாக்கிக் காட்டியவள்... அவள், கையளவு அரிசியுடன் உப்பிட்டுக் கஞ்சிகாய்ச்சி, கைபொறுக்கும் சூட்டில் ஊட்டிவிட்ட சுவையதனில் நெய்யிட்ட பால்சோறும் தோற்றுப்போய் ஓடிவிடும்... வாடா என்றருகிருத்தி வாஞ்சையாய்க் கரம்பிடித்து கூடாத நட்புடனே கூடாதே என்றுரைக்க, இன்று, கோடானு கோடி கொடுப்பவர் வந்தாலும் மீறாமல் நிற்கும்பிள்ளை மாயமோ அவளின் வார்த்தை? அன்று, இல்லாமை என்றவொன்று இருந்ததே தெரியாமல் வெள்ளாமைக் காட்டில் வேலைசெய்து உடல்மெலிந்தும் கல்லாமை இல்லாமல் பிள்ளைகளை வளர்த்துவிட்டு, அன்னையென்ற தெய்வமொன்று இல்லாத குறையன்றி இல்லாமை ஏதுமின்றி இமயமாய் நிற்கின்ற பிள்ளைகளின் புகழைமட்டும் காணாமல் போய்விட்டாள்... அன்னையின் நினைவுகளை அடிமனதில் சுமந்தபடி கண்ணீரின் சுவடுகளை கதவுக்குள் பூட்டிவிட்டு, நாடுவிட்டுப் போனபிள்ளை தேடிவந்தான் சுவடுகளை... கூடுகட்டி வாழ்ந்ததுபோல் குளிரிலும் மழையினிலும் அன்னையின்

என்னத்தைச் செய்தீங்க... (9)

என்னத்தைச் செய்தீங்க...(ஒன்பதாவது பகுதி) தொய்வுற்ற நடையுடன் தந்தை வெளியில்செல்ல ஐயுற்ற பிள்ளைகள் அமைதியை அணிந்தபடி, வெய்யிலில் வாடிய கொடியாய் முகம்கறுத்து பையவே போயங்கே வாசலில் அமர்ந்தனர்... உறையிட்ட வாகனம் ஒய்யாரமாய் நிற்க, உடைவாங்கப் பணமின்றி நிற்கும் மனத்தவிப்பில் முறையற்ற ஆசையால் மனவருத்தம் வந்ததென்று மருகினாள் சிவகாமி மௌனமாய் மனதுக்குள்... பக்கத்து வீட்டில் வெடித்த வெடியிலொன்று முற்றத்தில் வந்து சத்தமாய் வெடித்ததிர எட்டிப்போய்ப் பார்த்த பிள்ளைகள் இருவரும் பட்டாசும் பையுமாக அப்பாவைப் பார்த்தார்கள்... பைநிறைய வெடிவகைகள் பளபளக்கும் புது உடைகள் நெய்யிலே செய்த நெஞ்சினிக்கும் சுவையினங்கள் என்று யாவையும் எடுத்துவைத்த கணவனிடம் கையிலே மோதிரம் இல்லையே எங்கேயென்றாள்...

கல்லியல் ஆதி...

படம்
இந்திரனும் சந்திரனும் இணைந்தே சதிசெய்ய அந்தநாள் பூவுலகில் நிகழ்ந்ததோர் அவலமிது... சுந்தரமாய்த் தேயும் சுடர்மிகு நிலவினுக்கு வந்ததோர் களங்கமும் நிரந்தரமாய் நிலைத்ததன்று... சேவலாய் நள்ளிரவில் சந்திரன் குரலெழுப்ப ஆவலாய் நதியாடப் புறப்பட்ட கௌதமனும் ஆற்றங்கரை நோக்கி அகன்ற அவ்வேளை, அகலாத இரவுகண்டு ஐயம் மிகக்கொண்டான் கேட்ட குரலெண்ணிக் குழப்பம் மிகுந்திடவே மதியினில் கேள்வியைப் பதியமிட்டு வந்தவேளை, இந்திரனின் சதிவலையில் இறுகப் பிணைந்தபடி சுந்தரனாம் அன்னவனைச் சேர்ந்திருந்தாள் அகலிகையும்... வந்தவன் பிறனென்று புத்திக்குப் புரிந்தபின்னும் மந்திரம் போலவளும் மனமிசைந்து மயங்கிநின்றாள் கண்டான் கௌதமனும் கண்ணெதிரே களவதனைக் கொண்டான் பெருங்கோபம் எரிதழலாய் மாறிநின்றான் தன்னிலை மறந்தாள்தன் துணைவியென்ற றிந்தவனாய் இல்லுறை மனைவியைக் கல்லியல் ஆதியென்றான் விதியங்கு ஜெயித்தது வேதனை பெருகிடவே பதியினை நோக்கிக் கதறினாள் அகலிகையும்... இழிந்தனை நீயும் இதயத்தில் என்றுரைத்து, கழிந்திடும் உன் துயர் காத்திருப்பாய் என்றுசொல்லி, பழியுற்ற பெண்ணவளின் பாவத் துயர்துடைக்க வழியினில் ராமனும் வருவான் என்றுரைத்தார் ஆயிரம் ஆண்டுகள்

என்னத்தைச் செய்தீங்க... (8)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை- எட்டாவது பகுதி) மட்டைப் பந்தாடிய மதுரையின் சிறுவர்கள் ஒற்றைப்புற விளக்கை உடைத்துவிட்ட காரணத்தால் பொன்போல மதுரைக்குப் போன வாகனம் புண்பட்டுத் திரும்பியதைக் கண்டார் செல்வமணி... சேமித்த காசெல்லாம் செலவாகிப் போய்விடவே சாமிக்கு நேர்ந்துவைத்த உண்டியலைத் திறந்தெடுத்து வாகன விளக்கினைச் சரிசெய்து வந்தவரை வாய்மூடி மௌனமாய்ப் பார்த்திருந்தாள் சிவகாமி. திருவிழாக் காலமாய் தீபாவளி வந்தது... பள்ளிக்குச் சென்று திரும்பிய தந்தையிடம் பிள்ளைகள் உடைவாங்கப் போகலாம் என்றுரைக்க, முள்ளிலே மிதித்தவராய் முகம்கறுத்தார் செல்வமணி... செல்லமகள் சொன்னது செவியிலே கேட்கலையோ? நல்லநாள் வருமுன்னே நாலும் வாங்கவேண்டாமோ? என்றுதானும் மக்களுக்கு இசைவாகக் குரல்கொடுத்து இன்றுபோய் அனைவருக்கும் ஆடைவாங்கலாம் என்றாள்... இன்றுசெல்ல இயலாது இன்னொருநாள் வாங்கிடலாம் என்று முகம்திருப்பி மெதுவாகச் சொன்னபடி, சென்றுதான் கழற்றிய சட்டையை அணிந்தபடி பையைத் தடவிப்பார்த்தார் பெருமூச்சைப் படரவிட்டார்...

என்னத்தைச் செய்தீங்க...( 7)

பள்ளிசென்ற நாட்களிலே பயணம்செய்ய இயலாமல் முற்றத்தில் வாகனம் முழுவெயிலில் நிற்கக்கண்டு, மூவாயிரம் ரூபாய் முழுசாய்ச் செலவுவைத்து ஆடைவாங்கிச் சூட்டிவிட்டாள் அழகாகச் சிவகாமி... வார இறுதிநாட்கள் வந்தது மறுபடியும்... சக்கரத்தில் எலுமிச்சை குங்குமம் தடவிவைத்து பத்திரமாய்ப் புறப்பட்டு பழனிக்கு நேர்ந்துகொண்டு அக்காவின் வீட்டுக்கு அழையாமல் சென்றபோதும், ஆரத்தழுவிக் கொண்டு அன்போடு வரவேற்று காரக் கறிவறுவல் செய்துவைத்து விருந்தளித்து, மதுரைக்குச் சென்று மகள்வீட்டைப் பார்த்துவர மறுநாள் ஒருநாளும் வாகனம் கேட்டாள் அக்கா... அக்கா கேட்ட கணம் 'திக்'கென்று அதிர்ந்தாலும் அக்கா நீ கேட்டும் மறுப்பேனா என்றுசொல்லி, பக்குவமாய்த் தன்பெருமை காப்பாற்றும் வண்ணமாக மதுரைக்கு வந்துநானும் மகளைப்பார்க்க வேணுமென்றாள்... அக்காவும் தங்கையும் அருமை மக்களுடன் மதுரைக்கு மகிழ்வுடன் செல்லும் வழியிலே மறுநாள் வேலைக்காய் ஊர்செல்லும் கணவரை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டாள் சிவகாமி மத்தியான வெயில் மண்டையைப் பிளந்தாலும் மகிழ்வுந்தைப் பார்த்து இகழ்நகையைச் சிந்திவிட்டு, கரையோர இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தபடி பணிக்காகப் ப

என்னத்தைச் செய்தீங்க...(6)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை-ஆறாவது பகுதி) ஆரத்தி யெடுத்து அழகாய்ப் பொட்டிட்டு காருக்குச் செய்த மரியாதை எதனையும் கணவன் எனக்குக்கூடச் செய்ததில்லை என்றபடி தனக்குள் புலம்பியே நெடிதுயிர்த்தார் செல்வமணி வாகனம் வாங்கினால் போதுமா என்ன, வாகான ஓட்டுனரைத் தேடுங்கள் என்றுசொல்ல நாளுக்கு நூறென்று நறுவிசாய்ப் பேசியே காருக்கு ஓட்டுனரைக் கொண்டுவந்தார் ஆசிரியர். வந்த ஓட்டுனரைக் கொஞ்சமும் விட்டிடாமல் செந்தூர்க் குமரனையும் சீர் குலசை அம்மனையையும் கன்னியா குமரியையும் கடற்கரை மாதாவையும் ரெண்டுநாள் விடுமுறையில் கண்டுவரத் திட்டமிட்டு, வண்டியில் புறப்பட்டு வழியில் இளைப்பாறிவிட்டு சென்று கிளம்புகையில் சக்கரம் பழுதாக, உண்டுவரக் கொண்டுசென்ற உணவுவகை அத்தனையும் வழியோர மரநிழலில் உண்ணும் நிலைவரவே, உள்ளுக்குள் எழுந்துவந்த உக்கிரம் புதைத்தபடி, ஊரோட கண்ணெல்லாம் மொத்தமாய் ஒன்றுபட்டு, காரோட சக்கரத்தைப் பாதித்த தென்றுசொல்லி பழுதினை நீக்கிப்பின்னர் வீட்டுக்கே திரும்பச்சொன்னாள்...

என்னத்தைச் செய்தீங்க...(5)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை - ஐந்தாவது பகுதி) கடந்தது சிலநாட்கள் கனத்த மௌனத்துடன் நகர்ந்தது சிலபொழுது நேர்கொள்ளாப் பார்வையுடன் நிலவிட்ட மன இறுக்கம் சங்கடம் கொடுத்தாலும் துலங்கிட்ட ஒருவழியைக் கண்டுகொண்டார் செல்வமணி. புலர்ந்திட்ட அன்று புதியதோர் காலையில் மலர்ந்திட்ட விழிகள் மகிழ்ச்சியில் அகன்றிட கோலமிட்ட வாயிலில் கொள்ளை அழகுடன் வந்து இறங்கியது வாகனம் ஒன்று... வாகனம் கண்டதும் விழிகளில் வியப்புடன் தாயிடம் சொல்லிடச் சென்றனர் பிள்ளைகள் கல்லிலே தோசையைக் காயவே விட்டுவிட்டு நல்லநாள் வந்ததென வாசல்வந்தாள் சிவகாமி... என்னதான் என்மீது கோபம் கொண்டாலும் என்னவருக்கு என்மேல் பாசம் அதிகம்தான் என்று மனமகிழ்ந்து "என்னங்க" என்றவாறு சென்று கணவனை எழுப்பினாள் சிவகாமி... மக்களும் மனைவியும் மகிழ்ந்ததைக் கண்டாலும் மனதின் ஓரத்தில் மருட்சியும் தென்பட போவது வரைக்கும் போகட்டு மென்றெண்ணி வாகனம் நோக்கிச் சென்றார் செல்வமணி.

என்னத்தைச் செய்தீங்க...(4)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை- நான்காவது பகுதி) என்று பதிலுரைத்தார் எண்ணத்தை எடுத்துரைத்தார் கொன்று விடுவதுபோல் கோபம்கொண்டு நின்றவளை சொல்லித் திருத்திடவோர் வழியேதும் அறியாமல் மெல்லக் கரம்பிடித்தார் மின்னல் பாய்ந்த மரமானார்... கன்னல் கரும்பே கனியமுதே என்றுசொல்லி கல்யாணம் கழிந்தபோது காதலுடன் கைப்பிடிக்க மெல்லத் தலைகுனிந்து உள்ளம்சிதைத்த பெண்ணை எங்கே தொலைத்தேனென்று ஏங்கினார் செல்வமணி... கணவனின் மனப்போக்கை அறியாத மடமையுடன் நினைத்ததை நடத்திடும் பிடிவாதம் பிடித்திழுக்க அடுத்த அம்பினை ஆத்திரம் தோய்த்தபடி எடுத்து எறியலானாள் சினத்துடன் சிவகாமி... "என்னத்தைச் செய்தீங்க? எதை வாங்கித் தந்தீங்க? ஒண்ணுக்கு ரெண்டுபெற்று ஓடாகத் தேய்ந்தாலும் நாய்பட்ட பாட்டில் ஒரு நானோ வாங்கத் துப்பில்லை, என்ன இது அநியாயம்? என்று குரலுயர்த்த, மானம் போகுதென்று மனவருத்தம் கொண்டவராய் "போ நீ உள்ளே"யென்று புகைச்சலுடன் சொல்லிவிட்டுத் தானெழுந்து சென்றார் தன் நடையில் தளர்ச்சியுற்றார் தாயுடன் கைகோர்த்த மக்கள்கண்டு மனமுடைந்தார்.

என்னத்தைச் செய்தீங்க...(3)

என்னத்தைச் செய்தீங்க...(மூன்றாவது பகுதி) "அச்சச்சோ சிவகாமி, அழாதே நீ" என்றபடி, நிச்சயமாய் இன்றைக்குக் கலவரம்தான் என்றெண்ணி உச்சிமுதல் ஓடியதோர் அச்சத்தை மறைத்தவராய் "பச்சைப் பிள்ளைபோல் அழுதிடாமல் சொல்" என்றார். போகும் இடத்தினிலே பெருமையான வாழ்வுவரும் வீடும் வாகனமும் விருத்தியும் கூடுமென்று கரட்டுப்பட்டி ஜோசியர் சொன்ன கணக்கெல்லாம் கண்மூடும் முன்னாலே பார்ப்பேனோ மாட்டேனோ... என்று சலிப்பாகச் சொன்ன நிமிடத்தில் விளக்குப் போட்டதுபோல் துலங்கியது அந்நினைவு... "நீர்செழித்து நெல்விளையும் வயல்நிலத்தை விற்றுவிட்டு வாகனம் வாங்குவோம்" என்றது நினைவில்வர, ஆனாலும் சிவகாமி, அது அப்பாவின் குலச்சொத்து கோடையிலும் வாடையிலும் குறையாத நீர்வரத்து... சோறுதரும் மண்ணைவிற்றுக் காரை வாங்கி நிறுத்திவிட்டால் விலையரிசி வாங்கிஉண்ணும் நிலைவருமே கவனியென்றார்...

என்னத்தைச் செய்தீங்க -( 2)

என்னத்தைச் செய்தீங்க...(இரண்டாவது பகுதி) "என்னங்க, இதைப்பிடிங்க... என்றகுரல் கேட்டவுடன் கன்னத்தில் அறைந்ததுபோல் கனவொதுங்கி நிஜம்திரும்ப முன்நெற்றி வியர்வையினைப் பின்கையால் துடைத்தபடி கிண்ணத்துக் காப்பியினைத் தன்கையில் வாங்கிக்கொண்டார். ஆற்றிக் குடிப்பதற்கு அவசியம் இல்லெனினும் ஊற்றி மெதுவாக ஓசையின்றிக் குடித்துவிட்டு காற்றில்லாப் புழுக்கத்தால் கைத்துண்டால் விசிறிக்கொள்ள, "நேற்றைக்குக் கேட்டேனே, அது என்னாச்சு" என்றுகேட்டாள். என்னத்தைக் கேட்டாள்? என்று மனசுக்குள் முன்னுக்கும் பின்னுக்கும் துழாவித் தோற்றவராய், "எத்தனையோ கேட்டிருப்பாய் எதையென்று நான்நினைக்க?" சத்தம் தேய்ந்துவர முனகினார் செல்வமணி... "ஓ... அத்தனை அலட்சியமோ? என்று குரலுயர்த்தி, இத்தனை வருஷம் மாடாய் உழைச்சிருக்கேன் மக்களைப் பெத்து பத்திரமா வளர்த்திருக்கேன் எத்தனைதான் செய்தாலும் என் பேச்சுக்கு மதிப்பில்லை... என்று விழிகசக்கி கண்ணீரைப் பிழிந்தெடுத்து என்றோ நடந்ததெல்லாம் ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து " அப்பாவின் வீட்டில் அரசியாய் வாழ்ந்திருந்தேன், இப்படி வந்து இங்கே வருந்துகிறேன் என்றழுதாள்.

என்னத்தைச் செய்தீங்க... (1)

படம்
என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை - முதல்பகுதி) தெள்ளியதோர் மாலைநேரம் புள்ளினமோ கூடுதேடும்... பள்ளிவிட்டு இல்லம்வந்து ஓய்ந்தமர்ந்தார் செல்வமணி. அவர், பிள்ளைகள் இருவரும் முற்றத்தில் பாண்டியாட, கள்ளமில்லா அவர்கள் புன்னகையைப் பார்த்தபடி, அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் சுமந்ததனால் முன்நெற்றி முடியெல்லாம் பின்னோக்கிப் படையெடுக்க, சுயேச்சையாய்ப் போட்டியிட்டுச் சுருண்ட வேட்பாளர்போல அயர்ச்சியாய் வாசலிலே அமர்ந்திருந்தார் ஆசிரியர்... அங்கே, கைநிறையப் பொன்வளையல் கழுத்திழுக்கும் பொன்வடங்கள் மின்னலெனக் கண்சிமிட்டி முகம்காட்டும் மூக்குத்தி, கன்னத்துச் சதையெழுந்து காதிரண்டை மறைத்துநிற்க கிண்ணத்தில் காப்பியுடன் வந்தமர்ந்தாள் அவர் மனைவி...

மொத்தமும் அழகுதான்...

மனதும் உயிரும் வாடித் தவிக்கையிலும் பூஞ்சோலை நிழலாய்க் குளிவித்த நினைவுகள்... ஆமணக்குச் செடியின் முள்ளுடைக் காயாய் மருந்தாகித் தப்பாமல் பயன் தந்த சுவடுகள்... சாமரம் வீசிய வார்த்தைகள் நெகிழ்ச்சியாய் வந்து விழுந்த பொன்னான நிமிஷங்கள்... தேம்பல் எழுந்திட தழுவிக் கரம்சேர்த்து அன்புடன் தேற்றி அரவணைத்த உறவுகள்... சாம்பல் மூடிய நெருப்பாய் மனசுக்குள் சோம்பலின் நிமிஷத்தில் சூடுதந்த வார்த்தைகள்... பாம்பின் விஷம்சிந்தி பாடாய்ப் படுத்தியெனை ஓங்கி உயரும்படி ஊக்கம்தந்த எதிர்ப்புகள்... அத்தனையும் எண்ணி அமைதியாய் யோசித்தால் மொத்தமும் அழகுதான் இப்புவி வாழ்க்கையில்!

காத்திருக்குமோ காதல்?

எத்தனையோ மலர்கள் தினம் இத்தரையில் உதிர்ந்தாலும் உன் கூந்தல் மலர்கள் மட்டும் காய்ந்தாலும் மணக்கிறது... பத்தியக்காரன் முன்னே பால்சோறு கண்டதுபோல் உன்னில் வைத்தவிழி விலக்க வழியின்றித் தவிக்கிறேன் நான்... புத்தனவன் அன்று போதியின்கீழ் துறந்ததெல்லாம் மொத்தமாய் வந்து எனைப் பற்றிப் படருதடி... பித்தனென்று சொல்வாயோ பேதை இளங்கொடியே! நான் சித்தனைப்போல் இன்று தத்துவங்கள் பேசுகின்றேன்... பெத்த மகன் எனக்கு என்னவோ ஆனதென்று அன்னை முத்தாரம்மன் கோயிலிலே மாவிளக்குப் போடுகின்றாள்... மொத்தமாகத் திருடியெனை மோகத்தில் புதைத்தவளே! என் அக்காவின் திருமணம் முடியும்வரை பொறுப்பாயோ???...

ஊடல்

படம்
ஏக்கம் தடவிய இறுக்கமான மௌனம் தூக்கம் தொலைத்தவிழி தழுவிட மறுக்கும் பார்க்கவும் கூடாமல் விழிகள் விலகிட நோக்கிச் சுவரினை நெஞ்சம் தவிக்கும் உடைந்த வார்த்தைகள் ஊனமாய்த் தடைபட தகிக்கும் அமைதியோ தாண்டவம் ஆடும் புரளும் அசைவுகள் எதிர்பார்ப்பை விதைத்திட ஏமாற்றம் வந்து இதயத்தை மூடும் நடந்த நிகழ்வினை நினைவில் படரவிட்டு இடைஞ்சலின் காரணம் புரியாமல் துவளும் இறுக்கம் தொலைத்திட வருத்தமாய் யோசித்து பாராத பொழுதினில் பார்வையால் வருடும் மனதின் குமுறல்கள் மௌனப் பெருமூச்சாய் மோதி முதுகினில் மெல்லச் சுடுகையில் திரும்பிய விழிகள் நெருங்கிய நிமிஷத்தில் செல்லக் கோபமாய் சிணுங்கல்கள் வெளிப்பட அலையும் காற்றில் கலையும் மேகமாய்த் தொலைந்தது கோபம் தீர்ந்தது மௌனம்!!!

காதல் சிறையில்...

படம்
இரவோடு ஒளிரும் மின்மினியாய் மனதில் கனவோடு வந்துவந்து கலைத்துச் செல்பவளே சிறகடித்துச் சுதந்திரமாய் சிறகடிக்க எண்ணாமல் சிறையாகத் துடிக்கின்றேன் சித்திரமே உன்விழிக்குள் முந்தைய பிறவியிலே என்நெஞ்சில் தைத்தாயோ? இன்னொரு பிறவியிலும் என்னோடு தொடர்வாயோ? கிண்ணத்துத் தேனில் தத்தளிக்கும் எறும்பினைப்போல் மெல்லவும் விழுங்கவும் முடியாத அவஸ்தையடி சென்றுவா என்று உன் மெல்லிதழ்கள் சொல்லுகையில் வென்றிடும் காதல்நோய் என்னுயிரைக் கொல்லுதடி பனிக்காற்றில் சிக்கிய பாவப்பட்ட மலர்போல தனிக்காட்டில் தள்ளிவிடும் வேதனையில் துடிக்கின்றேன் வந்திடுவாய் மலர்விழியே என்தனிமை போக்கிடவே சிந்திடும் உன்புன்னகையில் சந்திரனும் நாணட்டும்!

உறவுகளைச் சுமந்தவன்...

படம்
கடைத்தெருவில் உந்தன் கரம்பிடித்துக் கொண்டபடி கண்ணில்கண்ட அத்தனையும் கேட்டுக்கேட்டு அடம்பிடிப்பேன்... கொஞ்சமும் தயங்காமல் தங்கையென் முகம்பார்த்து அண்ணன் வளர்ந்தபின்னே அத்தனையும் தருவேனென்பாய்... நடைநடந்து என் பாதம் நோகுமென்று மனம்வருந்தி உப்புமூட்டையாக எனை வீடுவரை சுமந்துசெல்வாய்... வறுமையுடன் போராடும் உறவுகளைச் சுமப்பதற்காய் சுடும்நீர் விழிநனைக்க கடல்கடந்து பயணம்கொண்டாய்... முதுகில் சுமந்தபாசம் மனசில் கனத்திருக்க விரைவில் வருவாயென்று வருஷம்பல காத்திருந்தேன்... தந்தைக்குப் பணமனுப்பி தங்கையென் மணமுடித்தாய் ஊரும்உறவும் மெச்ச சீர்சிறப்புச் செய்யவைத்தாய்... மாவரைத்துப் பிழைத்ததுபோய் மாடிமனை ஆனபின்னும் நாடுவிட்டுப் போனநீயும் வீடுவரத் தாமதமேன்? உன்னுடைய இடத்தை இங்கே பொன்பொருளால் நிரப்பிவிட்டு என்னுடைய சோதரனே, எங்கே நீ தவிக்கின்றாயோ?...

அம்மாவின் அருமைமகன்...

படம்
இரவை உலுக்கிய இடைவிடாத இருமல் உறக்கமின்றி வருடியது அன்னையின் விரல்கள்... காய்ச்சிய பாலில் கற்கண்டும் மிளகுமிட்டு ஆற்றி இதமாக அம்மா கொடுக்கையில் தொண்டைக் குழிக்குள் தோன்றியது ஆசுவாசம்... பண்ணிரண்டாண்டுகள் பறந்துபோன பின்னர், உள்ளிருக்கும் உயிரை உருவி யெடுத்தல்போல இன்றும் அதே இருமல் அன்னையின் சிறுஅறையில்... சத்தமின்றி எழுந்துசென்று கதவினைத் தாளிட்டு கும்மென்று ஒலியெழுப்பும் குளிர்சாதனம் உயிர்ப்பித்து நிம்மதியாய் உறங்கினான் அம்மாவின் அருமைமகன்...

உன்னாலே...உன்னாலே...

படம்
மனசுப் பிரதேசத்தில் ஆயிரமாயிரமாய் வண்ணத்துப்பூச்சிகளின் கண்கொள்ளா அணிவகுப்பு... பள்ளிக்குச் செல்லும் முதல்நாள் மாணவனாய் உள்ளம் நிறைய உருளும் பரபரப்பு... எங்கேயோ பிறந்திருந்து எனக்கென்று வளர்ந்திருந்து என்னை காண்பதற்கு இன்றுவரும் வெண்ணிலவே, உன்னைச் சந்திக்கப்போகும் அந்த நிமிஷத்தில் என்னென்ன சொல்லி என்னைக் கொள்வாய் நீ... அம்மாவின் பின்னால் அடக்கமாய் ஒளிந்தபடி கொல்லும் பார்வையால் என்னைச் சிதைப்பாயோ... கன்னம் சிவக்கப் புன்னகை மலர்பூக்க பின்னல் நுனிதிருத்தி என்னைக் கலைப்பாயோ... உள்ளம் நிறைய உற்சாகம் சுமப்பதனால் நெஞ்சம் நிறைந்து விழிகளும் தளும்புதடி... ஆனால், ஒன்றுமட்டும் இன்னும் விளங்கிட வில்லையடி... ஆசையின் அலைகளில் அலைபாயும் நேரத்தில் ஓசையே இல்லாமல் கோபம் தொலைந்துபோய் மென்மையே மனதினில் முழுமையாய் நிறைகிறது... அச்சம் என்பதையே அறியாத நான் கூட காதலின் மயக்கத்தில் கோழையாகிப் போகின்றேன் கிரகணம் கண்ட கீழைச் சூரியனாய் மரணம்வரை தொட்டு மறுபடியும் உயிர்க்கின்றேன்... இத்தனையும் நிகழ்த்திவிட்டு எதுவுமே அறியாதவள்போல் வெட்கம் போர்த்தி எனை வதைப்பாயோ என் கிளியே...

ஜனனம்

படம்
அலுத்து உடல்வலிக்க அன்றைய உணவுக்காக உழைத்துத் திரும்பிடும் வறுமைச் சேலைக்காரி... மலையளவு துயரம் மனசினில் புதைந்திருக்க தலைச்சுமையில் முள்விறகு வயிற்றிற்குள் முட்டும்பிள்ளை... அவள் காயாத விறகெடுத்து காய்ந்துபோன வயிற்றோடு அடுப்பைக் கூட்டி உலையேற்றும் இரவுவேளை... கழற்றிப் போட்டுவந்த தலைப்புச் சேலையினில் முடிந்துவைத்த காசுக்குக் குடித்துவந்த அவள் கணவன்... அடுப்பில் உலைகொதிக்க அனலாக மனம்தகிக்க தழலாக வந்துவிழும் சாராய வசவுச்சொற்கள்... எடுத்துக்கொள் கடவுளே இந்தவாழ்க்கை இனியும்வேண்டாம் என்று மனம்குமுற எழுந்தது வயிற்றில்வலி... சுழித்துச் சிதறடித்த வேதனையை விழுங்கிவிட்டு உரக்கக் குரல்கொடுத்தாள் கணவனை அழைப்பதற்கு... போதையின் போர்வையில் புலம்பிக் கிடந்தவனின் காதில் விழாதகுரல் அயலாரை அழைத்துவர அடுப்பின் கணகணப்பில் அரைகுறை இருள்விளக்கில் சிரிப்பை மறந்தவளின் வாழ்க்கையில் ஒளிஉதயம்... வீறிட்டு அழுதபிள்ளை விரல்பூவால் தொடச்சிலிர்த்து மாறியது சோகம் முகிழ்த்தது மென்முறுவல்... பெற்றமகன் முகத்தைப் பெருமையுடன் பார்த்தவேளை அவள் பட்டதுயரமெல்லாம் பஞ்சாகிப் பறந்ததங்கே...

சுட்டது நிஜம்...

படம்
மழைபெய்து ஓய்ந்திருந்த மணக்கும் இளம்மாலை தும்பிகள் பறந்துகொண்டு சுதி சேர்க்கும் எழில்வேளை கம்பிக்கதவு தாண்டி வாயிலில் அமர்ந்திருந்தேன் சந்திரனைத் தோற்கடிக்கும் பொன்னெழில் வதனமுடன் வந்து நின்றாள் என்மனைவி சந்தேகப் பார்வையுடன்... விந்தையாக எனைப்பார்த்து வித்தியாசமாய்ச் சிரித்தாள் என்ன கேட்கப்போகிறாள் என்று மனசுக்குள் சந்தடியின் இடைவெளியில் சின்னதாய் ஒரு பட்டிமன்றம் சிந்தனைகள் விரிந்திடவே சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே... அந்தி உணவுக்கு என்னவேண்டும் என்பாளோ? இந்தப்புடவையில் நான் அழகா எனக் கேட்பாளோ? முந்தைய நினைவுகளை மனம் இனிக்கச் சொல்வாளோ? என்று பலவாறாய் எண்ணித் திகைத்தவேளை "தண்ணிலாரி வந்து முன்னாலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியாமல் கனவா"என்று உலுக்கிவிட அந்தரத்தைத் தொட்டுவிட்டு அறுந்துவீழ்ந்த பட்டம்போல சந்தோஷம் வடிந்தவனாய்க் குடமெடுக்க விரைந்து சென்றேன்

கிளம்பினாள் கிருஷ்ணவேணி...

அதிகாலை நேரத்துக் கனவின் கதகதப்பு... கல்லூரி மாணவியாய் கவர்னரிடம் பட்டம் வாங்கி கல்யாண மேடையில் கணவனின் கைப்பிடித்து, வெட்கத்தில் சிவந்த விழிகள் நிலம்நோக்க பக்கத்தில் கணவனின் சுடும்மூச்சில் உடல் சிலிர்க்க... ஐயோ... பொழுது விடிஞ்சிடுச்சா என்று உடல் பதறி, உதறி மடித்துவைத்த கிழிசல் போர்வைக்குள் கனவின் சிதறல்களைக் காப்பாற்றி வைத்துவிட்டு, தூக்குச் சட்டியில் பழங்கஞ்சி நிறைத்தபடி தார்ச்சாலை போடக் கிளம்பினாள் கிருஷ்ணவேணி...

மேகத்திற்கும் காதல் உண்டு

படம்
கருவுற்ற மேகங்கள் காற்றலையின் கைப்பிடித்து செறிவுற்ற மலைச்சரிவில் துளிமழையாய்ப் பிரசவிக்கும் பெருகியது அருவிவெள்ளம் பன்மலரின் மணம்பருகி வழிந்திடும் தேனலையாய் மண்மடியை நனைத்திறங்கும் உருகியது மண்ணின்மனம் உற்சாகம் ஊற்றெடுக்க விரிந்திடும் ஆற்றுநீராய் விம்மிக் குமிழியிடும் வழியெலாம் செழிக்கவைத்து வளைந்த உடல்களைப்புறவே சரிந்திடும் கடல்மடியில் காதல் அங்கு அலைமோதும்.

மனித உயிருக்குப் போட்டா போட்டி

படம்
ஆனாலும் இது அநீதியின் உச்சம்தான் மனிதனும் இயற்கையும் மாறிமாறி மோதிக்கொள்ளும் சோதனையின் காலகட்டம் ஓராயிரம் உயிரை நீ வெடிக்கவைத்து அழித்தால் நான் நூறாயிரம் உயிர்களை துடிக்கவிட்டுச் சிதைப்பேன் என்று உலுக்கி உடல் சிலிர்த்து ஓங்காரமிடுகிறது இயற்கை... தொடர்ந்திடும் இந்த யுத்தத்தின் முடிவாக எஞ்சிடப்போவது யாராக இருக்கும்? மமதையில் திரியும் மனிதத்தின் மிச்சமா இல்லை, எதிரொன்றும் இல்லாத இயற்கையின் எச்சமா உணர்ந்து உரைத்திட யாரால்முடியும்?

அம்மா உனக்காக...

அழைக்கச் சலிக்காத அன்பின் மறுபெயர் உழைத்து எனை உயரவைத்து ஊக்குவிக்கும் ஓருயிர் விளக்கிவைத்த திருவிளக்காய் ஒளிரச்செய்து என் வாழ்க்கை தளர்ச்சியின்றிச் செல்ல தவமிருந்த என்தாயே.. வயிற்றையும் மனசையும் வாட விடாமல் மழையெனக் குளிர்விக்கும் நீ எனக்கு ஒரு மகிழ்ச்சியின் மென்பொருள் உறக்கம் வரும்வரைக்கும் உன்மடியில் படுத்தபடி விரல்கள் தலைவருடக் கேட்ட கதையெல்லாம் இன்று, எனக்குநானே மனதுக்குள்சொல்லி தைரியத்தை விதைக்கக் கற்றுக்கொடுத்தவள் நீ எட்ட இருந்தாலும் மொத்தக் குடும்பத்தையும் கட்டி யணைத்திடும் உன் அன்பெனும் கயிற்றுக்கு காட்டுப்படாதவர் யாருமேஇல்லை கிட்ட இருக்கையில் புரியாத உன் பெருமைகூட இன்று எட்ட இருக்கையில் உணர்கிறேன் தாயே... அன்று, கல்லூரி விடுதியில் காலம் கழித்தபோது அர்த்தமே இல்லாமல் உன்னோடு சண்டையிட்டு எதுவுமே பேசாமல் அழவைத்த நாட்களுண்டு... இன்று, செய்த தவறுக்குத் தண்டனையாக ஏழாம் நாளில் உன் குரலைக் கேட்பதற்காக ஆறு நாளும் ஆசையைத்தேக்கி ஆவலுடன் இங்கு காத்துக் கிடக்கிறேன் அம்மா...

வாழை - கவிதையில் பொதிந்த கதை

படம்
1. வெறுமையாய் ஒரு தனிமை மெல்லநடை போட்டு மேலெழும்பும் வெண்ணிலா அல்லைப் பகலாக்கி அழகு செய்யும் விண்மீன்கள் சொல்லத்தெரியாத ஓர் சோகத்தின் பிடியினில் செல்லத்துரை தாத்தா சிக்கியது போலிருந்தார்... மெல்லவும் வழியில்லை விழுங்கவும் வகையில்லை எல்லையில்லாச் சுமையை உள்ளுக்குள் புதைத்திருந்தார்... கல்யாணிப் பாட்டி கடவுளிடம் போனபின்பு நல்வார்த்தை சொல்லி நலம்கேட்க ஆளில்லை பிள்ளைகள் மூவரைப் பெற்றிருந்த போதினிலும் தள்ளாத தந்தையிடம் வந்தமர்ந்து பேசவில்லை ஊருக்கே ராஜாவாய் உயர்ந்துநின்ற பெரியவர் வேரில்லா மரமாக வாட்டமுற்று வாழலானார்... 2. மனப்புழுக்கம் முற்றத்துத் திண்ணையின் மேல்புறத்து மூலையினில் சற்றே சரிந்த ஒரு கயிற்றுக் கட்டிலுண்டு அதில், இற்றுப்போனதுபோல் இதயம் படபடக்க ஒற்றையாய்த் தான்மட்டும் சரிந்திருந்தார் நம் தாத்தா முற்றத்துக் குழல்விளக்கும் நிலவொளியும் சேர்ந்துகொள்ள சுற்றியுள்ள மரக்கிளைகள் சாய்ந்தபடி நிழல் பரப்ப வாசலில் நிழல்கோலம் பார்த்தபடி படுத்திருந்தார் கன்னத்தில் நீர்க்கோலம் வந்தவிதம் தானுணர்ந்தார் கல்யாணிப் பாட்டி கால்மாட்டில் அமர்ந்திருக்க கதைகதையாய் பேசிய நினைவுகளில் மூழ்கிப்போனார் பிள்ளைக

வேஷமிட்டும் ஜெயிக்கவில்லை...

ரெண்டு வயசிருக்கையில் கண்ணனாய் வேஷமிட்டு அன்னையர் சங்கத்தில் தங்கப்பதக்கம் வென்றேன்... ஐந்து வயசிருக்கும்போது ஆண்டுவிழா மேடையிலே அன்னை தெரசாவாய் வேடமிட்டுப் பரிசுபெற்றேன்... ஏழு வயசானபோது இந்திரா காந்தியாகி மந்திரியின் கையாலே சான்றிதழ் பெற்றுக்கொண்டேன்... பதினொரு வயசினிலே பாரதியார் வேஷமிட்டு பள்ளியிலே முதலாய்வந்து பதக்கத்தைப் பரிசாய்ப்பெற்றேன்... பதினாறு வயதினிலே புதுமைப்பெண் உருவமேற்று மாவட்டப் போட்டியிலே பாராட்டும் பரிசும்பெற்றேன்... இன்று, கல்யாண வயசினிலே மணப்பெண்ணாய் வேஷமிட்டு பலமுறை நின்றுவிட்டேன் இதுவரை ஜெயிக்கவில்லை...

முத்தமிட ஏன் மறுத்தாய்?...

படம்
விடியலை முத்தமிட்டு இரவுகளும் பிரிகிறது இரவுவந்து முத்தமிடப் பகல்பொழுதும் மறைகிறது இமைகள் ரெண்டும் முத்தமிட உறக்கம் பிறக்கிறது இதழ்கள் மூடி முத்தமிட மௌனம் நிலைக்கிறது நிலவு தந்த முத்தத்தால் வானம் ஒளிர்கிறது கதிரவனின் முத்தத்தால் பூமியும் பொலிகிறது பூக்களுக்கு முத்தமிட்டு வண்டுகள் இசைக்கிறது ஏக்கமுடன் முத்தமிட்டுப் பறவைகள் களிக்கிறது கரைதழுவி முத்தமிட்டுக் கடலலை சிரிக்கிறது புவியில்மோதி முத்தமிட்டு மழைத்துளி நனைக்கிறது எத்தனையோ முத்தங்கள் அத்தனையும் ரசிக்கிறாய் நீ என்னைமட்டும் முத்தமிட வெட்கத்துடன் மறுக்கிறாயே...

ஜன்னலில் பூ எங்கே?

படம்
நினைவுகளெல்லாம் உனை நில்லாமல் சுற்றிவர கனவுகளின் வேதனையில் துரும்பாகச் சுழலுகிறேன் எல்லையில்லா மனத்தவிப்பில் இரவுகள் நீள்வதனால் எனைக் கல்லாகச் சமைத்திடடி காதல்வலி தாளவில்லை அன்று, அப்பாவின் பின்நின்று அவசரமாய் ஒருபார்வை தப்பாமல் தந்துவிட்டு தலைகுனிந்து சென்றுவிட்டாய் கற்றாழை முட்செடியில் காற்றில்வீழ்ந்த ஆடையைப்போல் அப்பாவி என் இதயம் அகப்பட்டுத் தவிக்குதடி உன் கன்னக்குழிகளுக்குள் சிக்கிய என் இதயத்தை உன் அப்பாவுக்குத் தெரியாமல் அப்படியே வைத்துக்கொள் தப்பாக நான் பார்த்த பார்வைகளின் தண்டனையாய் கப்பமாக அதனை உனக்கே கொடுத்துவிட்டேன் உச்சி வெயில்பொழுதில் உன்வீட்டுக் கடைத்தெருவில் எத்தனை மணிநேரம் எனைச் சுற்றிவரச் செய்வாய் நீ? அத்தனை கண்களும் என்னையே கவனிக்க நீ இன்னும் ஏனடி உன் சன்னலில் பூக்கவில்லை???

ஒரு பார்வை பார்ப்பாயா...

படம்
விடியல் தொடங்கி முடியாத அலுவல்கள் அடிமையாக்கி எனை ஆளுகின்ற பணிச்சுமை அலுத்துச் சலித்துவந்து வீட்டிற்குள் நுழைகையில் அடித்துக் குழந்தையை அழவிட்டுக் குரலுயர்த்தி அப்பாவின் பிடிவாதம் அப்படியே இருக்குதென்று இழுத்துத் தரையில்தள்ளி இளக்காரம் பேசுகிறாய்... சிரித்துச் சகித்தபடி உன் முகத்தைப் பார்க்கிறேன், முறைத்து எதிரியைப்போல் முகம்திருப்பிச் செல்கிறாய்... வருத்தமா யிருக்குதடி இறுக்கமான சூழல்கண்டு உழைத்த மனம்களைத்து உற்சாகம் தேடுகையில் எரிக்காதே என்னவளே என்மனதில் சக்தியில்லை சிரித்த மலர்போல் நீ இருக்கவே ஆசைகொண்டேன் அதற்காக, வாசலில் நின்று நீயும் வரவேற்கத் தேவையில்லை ஆசையும் பாசமுமாய் ஒருபார்வை பார்ப்பாயா...

கொத்தமல்லிச் சட்னியும் காலைநேரத்து விவாதமும்

படம்
காலை நேரத்தின் வேலைப் பரபரப்பு... ஆளுக்கொரு புறமாய்ப் புறப்படும் அவசரத்தில்... பாலைக் காய்ச்சிவிட்டு, பச்சைநிறச் சட்னிவைத்து தோசை ஊற்றிவந்து மேசையில் அம்மாவைக்க, பத்து நிமிஷத்தில் பஸ்பிடிக்கும் அவசரத்தில் கொத்துமல்லிச் சட்னியின்மேல் காரசாரமாய் ஒரு விவாதம்... நிறமெல்லாம் நல்லாயிருக்கு மணமும்கூடப் பரவாயில்லை சாப்பிட மட்டும்தான் சங்கடமாயிருக்குதென்றான் தம்பி... பச்சையெல்லாம் கால்நடைக்கு பால்மட்டும் போதுமென்று சுட்டதோசை தள்ளிவிட்டு தப்பிச்சென்றாள் என் தங்கை... ஏழுமணி ஆவதற்குள் எதுக்கு இப்போ சாப்பாடு? மதியம் உண்ணவருவேனென்று நழுவிச்செல்லும் என் அப்பா... அரைச்சுவச்ச சட்டினியோ அப்படியே இருக்குதென்றும் சுட்டுவைச்ச தோசையெல்லாம் சூடாறிப் போச்சுதென்றும் வருத்தமாய்ச் சொன்னபடி என்னைப்பார்க்கிறாள் அம்மா... அவளை, நினைத்துச் சிரிக்கின்றேன் கொத்துமல்லி மணக்கிறது...

கண்ணனுக்கு அன்னையானாய்...

படம்
அன்னையே யசோதையம்மா ஆயர்குலப் பெண்கொடியே அச்சுதனைப் பிள்ளையென அன்பாக வளர்த்தவளே உன்பிள்ளை அறியாமல் கண்ணனுக்குத் தாயானாய் மண்ணிலே மகிமைபெற்றாய் மாறாத சுகங்கள் கற்றாய் வெண்ணெய் திருடி உண்டு வேடிக்கை செய்தபோது கண்ணனைக் கட்டிவைத்து அன்பாகக் கடிந்துகொண்டாய் மண்ணெடுத்துத் தின்றுவிட்டு மாநிலத்தைக் காட்டுகையில் கண்ணிரண்டும் நீர்நிறைய கல்லாகச் சமைந்துபோனாய் வேய்ங்குழலில் இசையெழுப்பி வேதனைகள் தீர்த்தபோது தாய்மனம் தளும்பிடவே தன்னிலை மறந்துநின்றாய் பிள்ளையாய்த் தோழருடன் பெருங்குறும்பு செய்திடினும் அன்னையாக அமைதியுடன் அமைதியுடன் ரசித்திருந்தாய் என்ன தவம் செய்தாயோ யார்கருணை கொண்டாயோ மண்ணகத்துத் அன்னையெல்லாம் உன்னைக்கண்டு ஏக்கம்கொண்டார்...

வீதியோர விசும்பல்கள்...

படம்
கிழிசல் கோணிக்குள் பசிபோர்த்திய இரவுகள் விழியோடு தேங்கிவிட்ட வேதனையே கனவுகளாய்... வழியோரத் திண்ணைகளே உறங்கிடும் பள்ளியறை பழியாகி வலியெடுக்கும் அனாதையெனும் அவச்சொல்... பக்கத்தில் படுத்திருக்கும் பழகிய நாய்க்குட்டி பசியோடு விலகாத பாசமும் சுமந்தபடி... வயிற்றுக்குள் எழுந்தபசி சுழற்றிச் சிறுகுடலை முறுக்கிய நோவின்வலி விழிகளில் நீராக... சம்பந்தன் அழுதகணம் சடுதியில் எதிரில்வந்து செம்பொன் குவளையில் ஞானப்பால் கொடுத்தவளே பந்தம் எனக்கிலையோ பாவமென்று தோணலையோ இன்னல்கண்ட ஏழைக்கும் இரங்கிட மாட்டாயோ...

கடல்கடந்த கண்ணீர்...

படம்
கண்ணீருடன் என்னைக் கரமசைத்து அனுப்பிவிட்டு முந்தானைச் சேலையில் வேதனைகள் துடைத்தவளே... தலைமகனாய்ப் பிறந்த காரணத்தால் என்னைநம்பி தங்கையும் தம்பியரும் வாழ்க்கைக்குக் காத்திருக்க கண்கலங்க உனைப்பிரிந்து கடல்கடந்து வந்துவிட்டேன் என்னதவம் செய்தேனோ என்னவளாய் உனைஅடைந்தேன் மண்மகளை விஞ்சிய பொறுமையின் பொக்கிஷமே நான் சொன்னதும் சம்மதித்து சோதனைக்கு உடன்பட்டாய்... துக்கம் விழுங்கிய உன் தொலைபேசிச் சத்தத்தில் சித்தம்கலங்கி மன யுத்ததில் தொலைந்துபோனேன் சத்தியம் இது கிளியே சங்கடங்கள் தீர்ந்தபின்னே சன்னதியின் தெய்வமாக கண்ணில்உனைத் தாங்கிடுவேன் முத்தமிட்டால் கூட முகம்சிவக்கும் மென்கொடியே அத்தான் வரும்வரைக்கும் அன்பைத்தேக்கிக் காத்திருப்பாய்...

நியாயமோ சொல்...

நேற்றைய நினைவுகள் நெஞ்சில் வடுவாகப் பதிந்ததால் காற்றும்கூட இன்று கனமாகத் தெரியுதடி... ஊற்றுத் தண்ணீரென்று உன்னை நினைத்திருக்க ஆற்று வெள்ளமெனக் கடலில் கலந்துவிட்டாய்... போனதுதான்போனாய் படுத்தாமல் போனாயா வானவெளி யெங்குமுன்னை விதைத்துவிட்டுப் போய்விட்டாய்... காணுமிடமெல்லாம் நீயே நிறைந்துகொண்டு வாழவிடாமல் எனை விரட்டுவதும் நியாயமோ???

புதுசு கண்ணா புதுசு...

நேற்றைப்போல் இன்றைக்கும் மாற்றங்கள் இல்லாமல் மணக்க மணக்க சுவை விருந்தளிப்பாய் என வந்தேன்... தோற்றுப் போனேன் உன் தோற்றத்தின் புதுமையில்... ஆற்றுநீர்ப் புதுவெள்ளம் ஏற்றுவந்த மலரலைபோல் தமிழ்க் காற்றுக்குப் புது சுகந்தம் கற்றுத்தரவந்த சேற்றிதழ்த் தாமரையே மாற்றம் கண்ட தமிழ்மணமே மயங்கினேன் உன் அழகில்...

இயற்கை கொடியதில்லை...

படம்
இருட்டு வானத்தில் ஒளிக்கீற்றாய் ஊசிமின்னல் உருண்டு மலைமுகட்டில் முட்டிடும் மழைமேகம் விரித்த சடையுடன் அசைந்தாடும் மரக்கிளைகள் சுருட்டிப் பூவுலகைச் புரட்டிடும் புயல்காற்று அரசமரப் பொந்தில் ஐந்தாறு குருவிகள் அங்கே, காலன் புகுந்ததுபோல் காற்றின் பெருஓலம் அஞ்சி நடுங்கிய குஞ்சுகளை அரவணத்து அன்னைக் குருவி ஆறுதலாய்ச் சொன்னது... அஞ்சவேண்டாம் செல்வங்களே, அமைதியாய் உறங்கிடுங்கள்... அன்னைபோல் நமைக்காக்க இந்த அரசமரம் மட்டும்போதும்... உணவுக்கும் பொருளுக்கும் மதத்திற்கும் மொழிக்குமென்று குண்டு வெடிக்கவைத்துக் கொல்லும் மனிதர்கள்போல் இரக்கமின்றி எமை இரையாக்கிக் கொள்வதற்கு இயற்கையன்னை ஒன்றும் அத்தனை கொடியளில்லை...

கடவுளே காப்பாற்று...

படம்
பாண்டியன் காலத்துப் பழமையான கோயில் பார்க்கச் சலிக்காத பச்சிலை ஓவியங்கள் பாலும் பழமுமாய் பலப்பல அபிஷேகம் ஆனால், பாழும் மனசுமட்டும் ஏதோ ஞாபகத்தில்... வேண்டுதல் எல்லாம் நிறைவேறும் தலமென்று அர்ச்சகர் சொன்னதும் அவசரமாய் வேண்டினான்... "வாங்கிய புதுச்செருப்பை வாசலிலே விட்டுவந்தேன் போகும்வரைக்கும் அதைப் பத்திரமாய்க் காப்பாற்று" என்று...

பசுங்கிளியே தூங்கலியோ?...

ஆடிய பூந்தொட்டில் அசைதல் நின்றவுடன் பாடிய தாலாட்டுப் பாடலது முடிந்தவுடன் மூடிய பூவிதழ்கள் மெல்ல விரிவதுபோல் தேடி விரிந்த கண்கள் துழாவி வெறுமைகண்டு வாடி முகம்வருத்தி வண்ண இதழ்பிதுக்கி நாடிக் குரலுயர்த்தி 'ம்மா' என்றழைக்கையிலே பாடுபட்ட ஏழைக்குப் புதையல் கிடைத்ததுபோல் ஓடி அருகில்வந்து உயிரினிக்கச் சேர்த்தணைத்தேன் தேடிக் கண்டெடுத்த திரவியமே தீஞ்சுடரே, பாடி உறங்கவைத்தேன் பசுங்கிளியே தூங்கலியோ?

உருகி வழியுது காதல்...

ஓரத்துக் கரைப்படகு உச்சிவெயில் சுடும்பொழுது உலகையே மறந்தபடி சிரித்திருக்கும் இரு இளசு கடலோரம் தொட்டுத் தொடுவானம் வரைக்குமாய் பொங்கிப் பரவும் இது காதலில் ஒரு தினுசு அன்றாடக் கூலியான அப்பாவை ஏமாற்றி அகப்பட்ட காசு இங்கே உருகுது ஐஸ்கிரீமாய்... பத்துப்பத்திரம் தேய்த்துப் பாடுபட்டுப் படிக்கவைக்கும் அன்னையின் நம்பிக்கை அனல்பட்ட பனிநீராய்... விழிகளில் தேக்கிய காதலின் மயக்கத்தால் கல்லூரிப் பாடங்கள் கனக்குது பெரும்சுமையாய்... இன்று, உணர்ச்சிகளின் பெருக்கத்தில் கடமைகள் தொலைத்துவிட்டு விளையாட்டாய் வரும் காதல் வினையாகிவிடும் வாழ்வில்...

என்னருகில் நீ வேண்டும்...

எங்கே இருந்தாலும் என் பார்வைக்குள் நீ வேண்டும் உன் மூச்சுக்காற்றை நான் உயிர்க்காற்றாய்ப் பருகவேண்டும் கண்கள் எனைவருடக் கரங்கள் கோர்த்தபடி கானகத்தில் நடந்தாலும் எனக்கது சொர்க்கம்தான்... பற்றிய கரங்கள் ரெண்டும் பல கதைகள் பேசிக்கொள்ள ஒற்றைநொடி விட்டாலும் உயிர்துடிக்கும் அறிவாயோ?... காலைப் பரபரப்பில் விறுவிறுப்பாய்ச் சுழலுகையில் வேலை கெடுக்கும் உந்தன் விழிகளின் உரசல்கள் மாலைப் பொழுதுவரை மனதில் நின்று இம்சை செய்யும்... இன்னமும் சொல்லிவிட்டால் வார்த்தைகளும் வழிமறக்கும் என்னருமை மன்னவனே என்னருகில் நீ வேண்டும்...

வாழ்க்கைப் புத்தகம்

வலிகள் தடவிய வாழ்க்கையின் பக்கங்கள் புரட்டும் வேளையில் விழியோர ஈரங்கள்... இருட்டாய்த் தெரியும் சில ஒதுக்கப்பட்ட பக்கங்களில் விசும்பலாய் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்... யாருக்காகவோ வாழ்ந்து எதற்காகவோ ஓடி எதையோ தொலைத்துவிட்ட இழப்பின் மிச்சங்கள்... பாசமும் நேசமும் பழகி அலைக்கழிந்து வேஷங்கள் கண்டு வெறுத்த நிழற்படங்கள்... மண்ணாகிப்போ என்று மனதிற்குள் சபித்தபடி கைகுலுக்கிச் சென்ற காட்சிப் பதிவுகள்... இவற்றையெல்லாம் வாசகனாய் வந்து விழிவிரியப் படித்துவிட்டு பேச்சின்றித் திரும்பிடும் மௌன நிகழ்வுகள்...

ஏன் என் தந்தையே??!

ஏராள நினைவுகள் கவிந்திருக்கும் இதயம் தாராளமாய் நெஞ்சில் தளும்பிநிற்கும் துயரம்... நான், பாராள வேண்டுமென்று பகலிரவாய் உயிர்வருத்தி ஏரோட்டிப் பயிர்காத்து ஏற்றமிட்டு நீரிறைத்து யார்யாரை யெல்லாமே எங்கெங்கோ சென்றுபார்த்து ஊர்மெச்ச உயர்கல்வி கற்கவைத்து உயர்த்திவிட்டு சேறோடு உன்பொழுதைக் கழித்த என் தந்தையே... இன்று, ஊராளும் உயர்பதவி காரோடு பெரும்செல்வம் சீரோடு வாழ்வதற்குச் செம்மையான வீடென்று பேரோடும் புகழோடும் நானிங்கு வாழ்ந்தாலும் ஊரோடு பதித்த உன் சுவடுகளைப் பிரியாமல் என்னைப் போராட வைப்பதும் ஏன்? பொறுமையினைச் சிதைப்பதும் ஏன்?

அலையே...கடலலையே...

வந்த அலைசரிந்து வரும் அலைக்கு வழிகொடுக்கும் இந்த உலகவாழ்க்கை இன்னதென்று எடுத்துரைக்கும் மண்ணில் நுரைகோர்க்கும் மாலையாக்கி அழகுபார்க்கும் கண்ணைக் குளிரவைக்கும் கவியழகு நிறைந்திருக்கும்... கண்ணெட்டும்வரை பரந்து கடைவானின் கைகுலுக்கும் கதிரவனைக் காலையினில் காதலுடன் வழியனுப்பும் கதிர்நீலப் பட்டுடுத்தி நிலமகளை அழகுசெய்யும் சுதியோடு இசையெழுப்பி காற்றோடு சதிராடும்... கப்பலுடன் கதைபேசும் கரைப்படகைத் தாலாட்டும் உப்பளங்கள் ஏறிவந்து உவர்மணியாய் உருமாறும் சிப்பிக்குள் துகள்நுழைத்து முத்தாக உருவாக்கும் செப்பவும் அரிதாகும் உன்பெருமை பெரிதாகும்.

கடல்நீரைக் குடிக்கின்றேன்...

ஐந்து வயசினில் கடல்நீச்சல் பழகுகையில் அஞ்சி அழுததினால் கொஞ்சநீரைக் குடித்துவிட அச்சச்சோ பிள்ளை உப்புநீர் குடித்தானென்று உச்சபட்சக் குரலில் அலறி அவசரமாய்க் கரைக்குக் கொண்டுவந்து கவிழ்த்துத் தலைதாழ்த்தி உப்புநீரெல்லாம் துப்பிடு என்று சொல்லி அப்பாவும் அம்மாவும் பதறிய காலம்போய் இன்று, பாலைமணல் பூமியினில் பகலிரவாய் வேலைசெய்து, பாடுபட்ட என்குடும்பம் மீண்டுவரும் முயற்சியிலே பத்து வருஷங்களாய் நான் கடல்நீர் குடிக்கின்றேன் பாவமென்று யாரும் என்மேல் பரிதாபம் கொள்ளவில்லை...

ஒற்றை ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?...

காலணாவுக்குக் கடலைமிட்டாய் வாங்கி நாலுபேருக்குப் பங்கிட்டுக் கொடுத்ததும் அரையணாவுக்கு அவல்பொரி வாங்கி ஆறுபேருக்கு அள்ளிக் கொடுத்ததும் நாலணாவுக்கு நாட்டுப்பழம் வாங்கி காலைஉணவுக்கு வயிறாரத் தின்றதும் எட்டணாவுக்கு எள்ளுருண்டை வாங்கி தட்டுப்பாடின்றி சுவைத்து மகிழ்ந்ததும் இப்போது கதையாச்சு இல்லாத நடையாச்சு முப்போகம் விளைந்தபூமி முழுசுமிங்கு வீடாச்சு அப்பாவின் சம்பளத்தில் அத்தனை பிள்ளைகளும் பத்தினியும் வாழ்ந்தகாலம் கனவாகிப் போயாச்சு பெண்களும் படித்துவிட்டு வேலைக்குப் போயாச்சு பிள்ளைகள் ஒன்றிரண்டும் ஆயாவின் பொறுப்பாச்சு பொன்பொருளைப் பின் துரத்தி ஓடிடும் ஓட்டத்தில் பெண்களும் ஆண்களுடன் போட்டியிட வந்தாச்சு இன்றைய இந்நிலையினிலே, ஐயா எனவந்து யாசகம் கேட்பவர்க்கும் பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுக்கவந்தால் கையை அசைத்தபடி மறுத்துச் சொல்லுகிறார் ஒற்றை ரூபாய்க்கு இப்போ என்ன கிடைக்குமென்று...

விடியல் ரகசியங்கள்

புள்ளினம் பாடும் பூபாளம் கேட்டுப் புலர்ந்திடும் புதுவிடியல் மின்னிடும் பனித்துளி வாங்கிக் கதிரவன் பூத்திடும் புன்முறுவல் எண்ணிய தெல்லாம் ஈடேற வாழ்த்தியே விரிந்திடும் எழில்மலர்கள் பண்ணொலி மாறாமல் பூமகள் பாதத்தைத் தழுவிடும் நீரலைகள் தன்னுயிர் புரந்து மன்னுயிர் காக்கவும் சுரந்திடும் ஆநிரைகள் விண்ணொடு விளையாடி வேகமாய் இசைத்திடும் வித்தகக் குயிலினங்கள் இன்னமும் இனிமையாய் என்றென்றும் தோன்றிடும் இயற்கையின் ஓவியங்கள் புண்ணியம் பண்ணிடல் வேண்டும் புவியினைப் புலர்கையில் ரசிப்பதற்கு...

வளைந்து கொடு...

விண்ணில் வளைந்திருக்கும் காரணத்தால் வானவில் அழகு காற்றில் இசைந்தாடும் மென்மையால் முல்லைக்கொடி அழகு சேற்றில் வளைந்திருக்கும் செழிப்பினால் கதிருக்கு அழகு ஆற்றில் நெகிழ்ந்துநிற்கும் பண்பினால் நாணலும் அழகு சொல்லில் அதிர முகம்சிவந்து ஆத்திரம்கொள்ளாமல் வளைந்துகொடுத்துப்பார்... உன் வாழ்க்கையும் அழகு.

அது ஜுரமல்ல...வரம்

அன்று, களைத்து உடல்சோர்ந்து காய்ச்சலில் கிடக்கையிலே அணைத்து அருகமர்ந்து ஆதரவாய்த் தலைவருடி அன்பாய்க் குழையவைத்து அன்னப்பால் கஞ்சியிட்டு சின்னக்குழந்தை போல சிறுகரண்டி கொண்டுஊட்டி குறுக்கி மருந்துசெய்து குடிக்கவைத்து முதுகுநீவி, குலச்சாமி திருநீறைக் கும்பிட்டுப் பூசிவிட்டு படுக்கையில் படுக்கவைத்து பக்கத்தில் இருந்த தாயே, இன்று, துணைக்கென்று யாருமின்றி தனித்த ஓர் அறையினிலே கணிப்பொறியும் கடிகாரமும் முறைத்தபடி அருகிருக்க மணமுடித்த மனைவியையும் மக்களையும் பணிதுரத்த மூன்றுநாள் ஜுரத்துடன் முனகிக் கிடக்கிறேன்... அணைத்தென் அருகிருந்த அன்பெனும் என் தாயே... உன்னை நினைத்துத் தவிக்கிறேன் அந்தநாள் திரும்பிடுமோ?

கனவுதிர்காலம்...

உதிரும் சிறகுகளாய் வாழ்க்கையின் நம்பிக்கை சிதறும் சருகுகளாய்க் கலைந்திடும் கனவுகள்... உனக்குமட்டும் ஏன் புரியமறுக்கிறது என் உதடுகள் உச்சரிக்கும் உரத்த சப்தங்கள்கூட... கனவுகளின் சுகத்தில் நிஜங்களின் வலியை நெருப்புக்கு இரையாக்கி நிமிர்ந்து நிற்கிறேன்... அன்று உன் அலட்சிய வார்த்தைகளால் பலியிடப்பட்டுவிட்ட ரத்தம்தோய்ந்த மனதுடன் எதிர்காலம் நோக்கி எழுந்து நடக்கிறேன்... இன்னமும் எண்ணற்ற கேள்விகளால் என்னைச்சிறையிட்டு எங்கும் நகரவிடாமல் நங்கூரமிடுகிறாயே... நியாயமா இது?

அந்நிய மண்ணில்...

அப்பளம் வடகமும் அரைத்துவிட்ட சாம்பாரும் கொப்பரைத் துவையலும் கொழுந்து வெற்றிலையோடு கற்பூரம் மணக்கக் கதைசொல்லும் காற்றினையும் சிற்பம்போல் சிரிக்கும் எங்குலப் பெண்களையும் நட்போடு நலம்பேசும் நல்ல மனிதரையும் அற்பப் பதவிக்காய் உதறிவிட்டேனோ என்று அத்தான் புலம்புவார் அவர்வழியில் நானும்தான்...

நரகம் நிச்சயம்...

மெல்ல அருகில் வந்து மெதுவாய் விரல்வளைத்து கண்ணோடு கண்ணாய் கனிவோடு எனைப்பார்த்து கன்னத்தில் சுடும் கனத்த மூச்சுடனே சின்ன இடை தழுவிச் சரியும் நிமிஷத்தில்.... ஆ...ஆ... என்னைக் கடித்து என் கனவைக் கலைத்திட்ட சின்னக் கொசுவே, உனக்கு நரகம் நிச்சயம்.

கல்யாண மாற்றம்...

நிலவனைய முகமுனக்கு நித்திலமே என்று சொன்னாய், அகமெல்லாம் குளிரெடுக்க அருகணைந்து உருகிநின்றேன்... பயமணிந்த மான்பிணைபோல் மருளும் எழில் விழியிரண்டும் கயலழகைப் போன்றதென்றாய் கண்மயங்கி முகம்கவிழ்ந்தேன்... விரல்பிடித்து நகம்நோக்கி அலைகுளித்த பவளமென்றாய் அழகிய உன் புகழ்மொழியில் அத்தனையும் மறந்துநின்றேன்... கருமையான எழில்கூந்தல் கண்ணருகில் மேகமெனக் கலைந்திடுதல் கவிதையென்றாய் நிலைதளர்ந்து நெஞ்சினித்தேன்... இன்று, மணமுடித்து மனைவியாகி முகம்பார்த்து நிற்கின்றேன் மரம்போல் ஏன் நிற்கிறாய்? என்றெரிந்து விழுகிறாயே...

காதலுடன் காத்திருப்பேன்...

என் நினைவெனும் தொட்டிலிலே நிதம் உறங்கும் தேவதையே, இங்கே, கனவுகளும் இல்லாமல் உயிர்சுமத்தல் பெரும்வதையே... உறவுகளெல்லாம் கூடி உனையெனக்கு மணமுடித்தால் சிறகடித்துப் பறப்பதற்குச் செவ்வானில் வழியமைப்பேன்... இரவுகளெல்லாம் தகிக்க இரக்கமின்றிப் பிரித்துவிட்டால் கரைபுரளும் கண்ணீரில் காதல்மனம் துடித்துநிற்பேன்... பிரிவுதனில் பரிதவித்துப் பார்க்காத நிலைவரினும் கனவுகளில் உனைச்சுமந்து காதலுடன் காத்திருப்பேன்...

உறங்கிவிடு மகளே...

உறங்கிவிடு மகளே இரவுகள் சிறியதுதான் உறவுகளின் அணைப்பில் கனவுகளின் கதகதப்பில் கவலைகள் பழகும்வரை உறங்கிவிடு மகளே... இனி, விடியும் பொழுதுகளில் வருத்தங்கள் காணநேரும் படிக்கச் செல்லுகையில் பாதகம் எதிரில் தோன்றும் பிடிக்காத நிகழ்வுகளில் நடித்திடப் பழகவேண்டும் துடிக்காமல் மனதினைக் காத்திடத் தெரியவேண்டும் எதிர்த்துவரும் இடர்கள் தவிர்த்திடத் துணிவுவேண்டும் சினம் துளிர்த்திடும் பொழுதிலும் வார்த்தையில் பணிவுவேண்டும் கொதித்திடும் வார்த்தைகள் கேட்டிடும் பொழுதினில் பொறுத்திட மனமும் உறுதியாய் உனக்கு வேண்டும் ஆகவே மகளே, அழுகையை உதறிடு ஆணவம் தொலைத்திட்டு அறிவினைத் தேர்ந்தெடு இளமையெனும் காலம் இருக்கும் வரையினில் துயரங்கள் தவிர்த்திட்டு உறங்கிடப் பழகிடு...

சக்தி கொடு...

பழகிப் போனதிங்கு பாசத்தின் வலிகள் விலகிப் போனதின்று வாழ்க்கையில் கிலிகள் மண்ணில் பிறந்தமுதல் கண்ணுக்கு இமைபோல என்னுடைய உறவுகளை அரவணைத்துக் காத்திருந்தேன் தண்ணீர் குடித்துமட்டும் பசியை விழுங்கிவிட்டு கண்ணுறக்கம் தொலைத்தும்கூட தொடர்ச்சியாய் தினமுழைத்தேன் உழைத்துச் சேர்த்ததெல்லாம் மறைக்காமல் கொடுத்திருந்தும் என்ன கொடுத்தாயென்று என்னைச் சிதைக்கிறது என்னுடைய பரம்பொருளே இன்னுமொரு பிறவிகொடு போதுமென்று சொல்லும்வரை பொருள்குவிக்கும் திறமைகொடு மண்ணுலகில் வாழும்வரை என்னுறவைச் சேர்த்தணைக்க திண்ணியதோர் இதயம்கொடு தினம்புதிதாய் சக்திகொடு...

வந்திடுவேன் விரைவினிலே...

பனிவிழும் மெல்லிரவு பால்குளித்த வெண்ணிலவு இன்னுமா உறங்கவில்லை என்னவளே இளம்பிறையே... விஞ்சும் குளிர்பொறுக்காமல் விரிந்திருந்த மலர்களெல்லாம் அஞ்சியே இதழ்குவித்து அமைதியாய் உறங்குதடி கொஞ்சிடும் கிளிகளெல்லாம் கூட்டுக்குள் அடைந்தபடி பஞ்சனைய பெண்கிளியின் மென்சிறகில் ஒளியுதடி வஞ்சியர்போல் சலங்கைபூண்டு விளையாடும் பசுங்கன்று தஞ்சமெனத் தாயருகில் பிஞ்சுமுகம் புதைக்குதடி நெஞ்சினிக்கும் இனியவளே நெடுமூச்சில் உயிர்கொதித்து வஞ்சிநீயும் வருந்தாதே வந்திடுவேன் விரைவினிலே...

நீயா அழைத்தது?

காலை விடியலில் காதோரம் கிசுகிசுப்பாய் மாலைப் பொழுதினில் மனதோடு முணுமுணுப்பாய் உணவுண்னும் பொழுதினில் உள்ளெழும் ஒலிக்குறிப்பாய் கனவோடு அயர்கையில் கழுத்தோடு குறுகுறுப்பாய் இன்றென்ன செய்தாயென்று யாரென்னை வினவுவது? காதலின் தேவதையோ? சாதலின் தூதுவனோ? பாதகமாய் ஏதும் பழிவரும் உள்ளுணர்வோ? மாதவருக்கே கிடைக்கும் மகேசனின் அறிமுகமோ? எண்ணரிய மனச்சுழலில் எண்ணிஎண்ணிப் புரண்டு கண்ணுறக்கம் துறந்து கண்ணாடி முன்சென்றேன் என்னையே தெரியலியா? என்று முகம் கடிந்து என்னுடைய மனசாட்சி ஏளனமாய் நகைக்கிறது...

எங்கிருந்து வந்தாய் நீ?!!

காலைப்பொழுதின் கறுத்த விடியலில் என்னைப் பரிகசிக்க எனக்குமுன் இறங்கிவந்து என்வீட்டுப் பூக்களை வருடிக்கொண்டு நிற்கிறாயே, எங்கிருந்து வந்தாய் நீ? யாருன்னைக் கொண்டுவந்தார்? நீ மேகத்தின் மிச்சமோ? வானத்தின் வரமோ? தேவலோகம் திறந்துவந்த தெய்வீக அமுதமோ? இரவுக்குப் பரிசளித்த விடியலின் முத்தமோ? நேற்று நான் தெளித்தநீரை கதிரால் உறிஞ்சிவிட்டுக் கதிரவன் பரிசளித்த காதல் பன்னீரோ? வெண்ணிலவு உடல்குளித்த தண்ணீரின் மிச்சமோ? சொல்லிடு பனித்துளியே மனதை அள்ளிடும் நீர்த்துளியே!

உறக்கம் தொலைத்த உறவுகளைப் பார்...

இரக்கம் தொலைத்துவிட்டு எழுந்துவந்த பெருங்கடலே, நீ அரக்கப்பரக்க வந்து அள்ளிச்சென்ற கொடுமையால் உறக்கம் தொலைத்துவிட்ட உறவுகளைப் பார்த்தாயா? பூமித்தட்டுகள் பொறுப்பின்றி மோதியதால் நீ கோபக்கனலோடு கொந்தளித்து எழுந்தாயோ? பாவப்பட்ட மக்களைப் பந்தாடி ஓய்ந்தாயோ? உன் ஆங்கார அலைப்பெருக்கால் அன்பு உள்ளங்கள் அனாதைகளானது... அலையோசையைத் தோற்கடிக்கும் அழுகை ஓசையே கரையோர மக்களின் காணிக்கையானது... ஊடுருவிப் பரவிய உன் உப்புநீரினால் உயிருள்ள நிலமெல்லாம் உவர்நிலமானது கதறிய மக்களின் கண்ணீர் சேர்ந்ததால் உன் கடல் நீரும் கொஞ்சம் கரிப்பு ஏறியது. பண்ணிய கொடுமைகள் போதும் கடல்தாயே எண்ணிப்பார் இதுவரை எடுத்த உயிர்களை அன்னையாய் உன்னை வணங்கிக் கேட்கிறோம் புண்ணியமாய்ப் போகும் இனி ஊருக்குள் நுழையாதே...

நிலாவே வா...

என்னருமை வெண்ணிலவே இத்தனைநாள் எங்குசென்றாய்? உன் வரவைக் காணாமல் உறக்கமின்றி விழித்திருந்தேன் கண்சிமிட்டும் விண்மீன்கள் கேலிசெய்து சிரிக்குதடி மேகத்தில் முகம்மறைத்து விளையாடிச் சென்றாயோ? மோகத்தில் எனைமறந்து காதலனைச் சேர்ந்தாயோ? வேகமாய் வந்துவிட்டு விரைவாகச் சென்றாயோ? பாவமேதும் செய்தேனோ மறைக்காமல் சொல்லிவிடு. காதலியைக் காணாமல் கவலையால் துவண்டபோது ஸ்நேகிதியாய் அருகிருந்து சோகத்தைப் பகிர்ந்துகொண்டாய் ஆதரவாய் முகம்பார்த்து அழகாகப் புன்னகைத்தாய் உன்னழகில் துயர்மறந்து என்னவளை நினைத்திருந்தேன். இன்னும் என்னைப் புரியலையா இரக்கமேதும் தோணலையா? புன்னகைக்கும் வெண்ணிலவே என்னிலையைச் சொல்லிவிட்டேன் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிடு என்னெதிரே...

அலையே...கடலலையே...

வந்த அலைசரிந்து வரும் அலைக்கு வழிகொடுக்கும் இந்த உலகவாழ்க்கை இன்னதென்று எடுத்துரைக்கும் மண்ணில் நுரைகோர்க்கும் மாலையாக்கி அழகுபார்க்கும் கண்ணைக் குளிரவைக்கும் கவியழகு நிறைந்திருக்கும்... கண்ணெட்டும்வரை பரந்து கடைவானின் கைகுலுக்கும் கதிரவனைக் காலையினில் காதலுடன் வழியனுப்பும் கதிர்நீலப் பட்டுடுத்தி நிலமகளை அழகுசெய்யும் சுதியோடு இசையெழுப்பி காற்றோடு சதிராடும்... கப்பலுடன் கதைபேசும் கரைப்படகைத் தாலாட்டும் உப்பளங்கள் ஏறிவந்து உவர்மணியாய் உருமாறும் சிப்பிக்குள் துகள்நுழைத்து முத்தாக உருவாக்கும் செப்பவும் அரிதாகும் உன்பெருமை பெரிதாகும்.

காட்டிலே மழை...

நீளமான மழைநாளின் விடியாத மெல்லிரவில் காளானின் குடைமறைவில் ஆளான தவளைச்சத்தம் மீளாமல் துயிலுறங்கும் மொட்டுகளைத் துயிலெழுப்பும். பூப்படைந்த மொட்டுகளின் புன்னகையில் மதிமயங்கி புல்லினமும் தலைநிமிர்த்தும் புள்ளினங்கள் மெய்சிலிர்க்கும் பூரிப்பாய் மலர்நுழைந்து புதுவண்டு தேனெடுக்கும் தேன்குடித்த வண்டுகளின் தெய்வீக இசையமுதம் வானகத்துத் தேவர்களின் வயிற்றுக்கும் உணவாகும் கானகத்துக் கலையழகில் மானினங்கள் மகிழ்ந்தோடும் சோம்பல்கொண்ட சூரியனை ஆம்பல் கண்டு தலைகவிழும் காம்புகளில் மதுவழியும் கவின்மலர்கள் உடைதிருத்தும் வீம்பாகக் குயிலொன்று விரகத்தில் குரலெழுப்பும் கானகத்து மழைநாளின் கவினழகை நான்கண்டேன் நான்பெற்ற இன்பமதை எல்லோரும் பெறவேணும்

காதல் வந்தபோது...

வாராத போதெல்லாம் சோதனை செய்யாமல் வந்ததும் காதல் வேதனை செய்கிறது... உராயும் பார்வையின் தீண்டல்கள் பொறுக்காமல் உறைக்குள் ஆமையாய் உள்ளம் தவிக்கிறது... காதலென்று பெயர்சொல்லி என் காதினில் ஓதியது காதல் தேசத்தின் தேவதையின் குரலோ? மெல்லிய புன்னகை சூடிச் சிறுநெஞ்சைத் கொல்லத் துடித்தது கனிமொழி வண்ணமோ? ஏக்கம் அணியவைத்து இளமையின் வலிமையைத் நோக்கிச் சிதைத்தது விழியெனும் மாயமோ? பூக்கள் சுமந்த ஒரு புயலாய் என்மனதில் தாக்குதல் செய்தவளே, தவிக்கிறேன் காதலியே...

ஏனடி இனியவளே?...

ஊமையான வார்த்தைகளின் சோகமான அழுகுரல் மோதித் தலையணைக்குள் புதையும் குமுறல்கள் உன் தோட்டத்துப் பூக்கள்மட்டும் என் வீட்டைப் பார்த்திருக்க நீ மட்டும் ஏனடி முகம்திருப்பிக் கொள்கிறாய்? கனத்த விழியிமைகள் நினைவுகள் கோர்த்தபடி விரைத்து உறக்கத்தை துரத்தி விட்டதடி உரத்த பெருமூச்சின் உஷ்ணம் பொறுக்காமல் வீட்டுச் சுவர்கூட வெம்மையைப் பொழியுதடி... முற்றத்து நிலவொளியின் முதிர்ந்த கிரணங்கள் உன் முத்துச் சிரிப்பழகை நினைவூட்டிச் சென்றிட பத்துத் தலைகொண்ட ராவணன் போலவே சித்தம் மயங்கவைத்தாய் ஏனடி இனியவளே?...

தாயானாய் நீயும்...

ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து உனையங்கே அமரவைத்தேன் கண்ணுக்கு இமைபோலக் காதலுடன் கவனித்தேன்... உணவளிக்க வந்தாலும் உர்ரென்று நீ சினக்க கோபமேதும் கொள்ளாமல் கனிவுடனே அதை ரசித்தேன்... எத்தனை பொறுமைகொண்டாய் எங்கு நீயும் கற்றுக்கொண்டாய்? பத்திரண்டு நாள்வரைக்கும் பரிவுடனே அமர்ந்திருந்தாய்... முத்துப்போல் அலகுகொத்தி மெல்லமெல்ல ஓடுடைத்து அத்தனை குஞ்சுகளும் முகிழ்த்துவர அருகணைத்தாய்... பக்கத்தில் யாரும்வந்தால் பகைவர்களைப் பார்ப்பதுபோல் உக்கிரம் காட்டினாய் உயிர்த்தாயாய் வளையவந்தாய்.

மண்ணின் மடியில்...

கடந்தகால நினைவுகளைக் காப்பாற்றிவைத்திருக்கும் சொந்த மண்ணின் சுகமான சுவாசம்... சுகந்த மலர்களின் வாசம் சுமந்தபடி சுற்றித் திரியும் சுத்தமான காற்று... சாணம் தெளித்த முற்றத்து வாயிலில் கோலம் விரித்த கொள்ளை அழகு... பாதம் வருடும் பன்னீர் மலர்களாய் பள்ளிக் காலத்துப் பழைய நினைவுகள்... நினைவுகளைப்போலவே மிகவும் பழமையாய் நான் பாதம் பதித்த பழைய தெருக்கள்... பயிரினை வருடிப் பலகுரலில் பாடி விளையாடி நடந்த வயலின் வரப்புகள்... வைக்கோல் அடியினில் காய் பழுக்கவைத்துப் பங்கிட்டுச் சுவைத்த வாழைத் தோட்டங்கள்... அம்மாவுக்குத் தெரியாமல் ஐந்து பைசாவுக்கு சுக்குமிட்டாய் வாங்கிய செல்லண்ணன் கடை... எருக்கம் பூக்களை இறுக்கக் கட்டிவைத்து பரிட்சைக்கு வேண்டிய பாதை விநாயகர்... உலுக்கிப் புளிபறித்து உப்பிட்டுத் தின்ற ஊர்க் கோவில் புளிய மரம்... என் இளமையின் சுவடுகளை இன்னமும் எறியாமல் தாங்கிக்கொண்டிருக்கும் தாய்மண்ணை ஸ்பரிசித்தேன்... காலணிகள் உதறிக் கால்களைப் பதிக்கையில் ஞாபகங்கள் தந்த நெஞ்சின் நினைவினால் கண்களில் துளிர்த்தது கண்ணீரல்ல... என் இளமையின் மணம்வீசும் பன்னீர்...

கேளடி என் தோழி...

உரக்கச் சொல்லிவிட்டால் பிழையாய்த் தோன்றுமென்று குரல் இறக்கிச் சொல்லுகிறேன் கேளடி என் தோழி... ஊரென்பார் பேரென்பார் உயர்ந்த தமிழ்க் குடியென்பார் ஊருக்குள் சாதிசொல்லி ஒதுக்கிடுதல் யார்சொல்வார்? உறவென்பார் நட்பென்பார் ஒன்றுக்குள் ஒன்றென்பார் துயரத்தில் உதவிகேட்டால் கதவடைத்துப் போய்விடுவார்... ஆணென்பார் பெண்ணென்பார் அம்மையப்பன் ஒன்றென்பார் அடுக்களையில் பெண்ணினத்தை அடைத்து வைத்தல் விதியென்பார்... நாடென்பார் இனமென்பார் நாட்டுமக்கள் சமமென்பார் மற்றநாட்டுப் பெண்கள்வந்தால் மானபங்கம் செய்திடுவார்... ஏடென்பார் எழுத்தென்பார் எண்ணெழுத்தும் கண்ணென்பார் கல்விக்கண் கொடுப்பதற்கும் கையூட்டுக் கேட்டிடுவார்... இன்னமும் நான் சொல்லிடுவேன் யாருமிதைக் கேட்டுவிட்டால் இந்தியரின் எதிரியென்று ஏளனமும் செய்திடுவார்!!!

மலர்கள் அழகுதான்!

பூக்களின் மணத்தினால் பூப்படைந்த பொழுதினில் வண்டுகள் பாட்டிசைக்க நாணிவிழும் எழில் மலர்கள்... பன்னீர்ப் பூக்களின் பரந்த விரிப்பினை எட்டிப் பார்த்திடும் எழில் முழுநிலவு... மண்மடி சேர்ந்த முல்லையின் சிரிப்பினில் கொள்ளை போனது விண்மீனின் கூட்டம்... கிணற்று நீரினில் விரித்த மலர்ப்போர்வை கலைத்து விளையாடுது கள்ளமில்லா மீன்கள்... முற்றத்து நிலவொளியில் தென்றலின் சிலுசிலுப்பில் சத்தமின்றி உதிருது வேம்பின் பூக்கள்... காலை விடியலில் போர்வை உதறலில் தரையெங்கும் விரிந்தது கூந்தலின் மலர்கள்... ஊரோரக் காட்டில் உடல் உறங்கும் மேட்டில் இன்னமும் உறங்காத வெள்ளை மலர்கள்... இப்படி, வீதியில் தொடங்கி விதி முடியும் எல்லைவரை எங்கே விழுந்தாலும் மலர்கள் அழகுதான்....

எந்த முகம் உனது?

காலைவிடியல் முதல் கண்ணயறும் இரவுவரை எத்தனையோ முறை என்னை நீ பார்க்கிறாய் எந்தமுகம் உனதென்று இன்னமும் புரியவில்லை... ஏனிந்தக் குழப்பமென்று எனக்கும் தெரியவில்லை... இருளோடு இணைந்ததால் இடுங்கிய விழிகளுடன் ஒளிக்குப் பழகாத உறக்க முகம்... பல்லில் நுரைகோர்த்து பலவேஷம் காட்டியே என்னைப் பயமுறுத்தும் எதிரிமுகம்... ஈரக்கூந்தலை வாரிமுடிக்குமுன் எட்டிஎட்டிப் பார்க்கும் ஏக்க முகம்... பின்னல் அழகில் பிழையேதும் தோன்றினால் அவிழ்த்துக் கலைத்திடும் எரிச்சல் முகம்... பின்னி முடிப்பதற்குள் பொழுதெல்லாம் போச்சென்று அன்னை திட்டினால் ஆத்திர முகம்... ஆகும் மணிபார்த்து அரக்கப்பரக்கவே அழுத்திப் பொட்டிடும் அவசர முகம்... அக்காவுக்கு மட்டும் அதிகம் பூவா என்று பொருமிச் சண்டையிடும் பொறாமை முகம்... புத்தகப்பை கொள்ளாப் பாடச்சுமையுடன் பள்ளிவிட்டுத் திரும்பிய பாவ முகம்... மாலைப் பொழுதினில் மயக்கும் இசையினில் மலர்ந்து விரிந்திருக்கும் மகிழ்வு முகம்... படிக்கும் பொழுதினில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கையில் நோக்கிடும் குறும்பு முகம்... இரவின் மடியினில் உறங்கச் செல்லுமுன் கனவு சுமந்திருக்கும் கவிதை முகம்... எந்த முகம் உனது? இன