எந்த முகம் உனது?

காலைவிடியல் முதல்
கண்ணயறும் இரவுவரை
எத்தனையோ முறை
என்னை நீ பார்க்கிறாய்

எந்தமுகம் உனதென்று
இன்னமும் புரியவில்லை...
ஏனிந்தக் குழப்பமென்று
எனக்கும் தெரியவில்லை...

இருளோடு இணைந்ததால்
இடுங்கிய விழிகளுடன்
ஒளிக்குப் பழகாத
உறக்க முகம்...

பல்லில் நுரைகோர்த்து
பலவேஷம் காட்டியே
என்னைப் பயமுறுத்தும்
எதிரிமுகம்...

ஈரக்கூந்தலை
வாரிமுடிக்குமுன்
எட்டிஎட்டிப் பார்க்கும்
ஏக்க முகம்...

பின்னல் அழகில்
பிழையேதும் தோன்றினால்
அவிழ்த்துக் கலைத்திடும்
எரிச்சல் முகம்...

பின்னி முடிப்பதற்குள்
பொழுதெல்லாம் போச்சென்று
அன்னை திட்டினால்
ஆத்திர முகம்...

ஆகும் மணிபார்த்து
அரக்கப்பரக்கவே
அழுத்திப் பொட்டிடும்
அவசர முகம்...

அக்காவுக்கு மட்டும்
அதிகம் பூவா என்று
பொருமிச் சண்டையிடும்
பொறாமை முகம்...

புத்தகப்பை கொள்ளாப்
பாடச்சுமையுடன்
பள்ளிவிட்டுத் திரும்பிய
பாவ முகம்...

மாலைப் பொழுதினில்
மயக்கும் இசையினில்
மலர்ந்து விரிந்திருக்கும்
மகிழ்வு முகம்...

படிக்கும் பொழுதினில்
குறுக்கும் நெடுக்குமாய்
நடக்கையில் நோக்கிடும்
குறும்பு முகம்...

இரவின் மடியினில்
உறங்கச் செல்லுமுன்
கனவு சுமந்திருக்கும்
கவிதை முகம்...

எந்த முகம் உனது?
இன்றாவது சொல்லிவிடு...
ஏக்கத்தில் கேட்டது
வீட்டுக் கண்ணாடி!!!

கருத்துகள்

  1. அன்பு முகம் அனைத்திலும் மறைந்து இருக்கும் அதுதான் எனது முகம் என சொல்லிவிடு இப்பொழுது.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் வடிவான பின்னூட்டத்திற்கும் நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!