மண்ணின் மடியில்...

கடந்தகால நினைவுகளைக்
காப்பாற்றிவைத்திருக்கும்
சொந்த மண்ணின்
சுகமான சுவாசம்...

சுகந்த மலர்களின்
வாசம் சுமந்தபடி
சுற்றித் திரியும்
சுத்தமான காற்று...

சாணம் தெளித்த
முற்றத்து வாயிலில்
கோலம் விரித்த
கொள்ளை அழகு...

பாதம் வருடும்
பன்னீர் மலர்களாய்
பள்ளிக் காலத்துப்
பழைய நினைவுகள்...

நினைவுகளைப்போலவே
மிகவும் பழமையாய்
நான் பாதம் பதித்த
பழைய தெருக்கள்...

பயிரினை வருடிப்
பலகுரலில் பாடி
விளையாடி நடந்த
வயலின் வரப்புகள்...

வைக்கோல் அடியினில்
காய் பழுக்கவைத்துப்
பங்கிட்டுச் சுவைத்த
வாழைத் தோட்டங்கள்...

அம்மாவுக்குத் தெரியாமல்
ஐந்து பைசாவுக்கு
சுக்குமிட்டாய் வாங்கிய
செல்லண்ணன் கடை...

எருக்கம் பூக்களை
இறுக்கக் கட்டிவைத்து
பரிட்சைக்கு வேண்டிய
பாதை விநாயகர்...

உலுக்கிப் புளிபறித்து
உப்பிட்டுத் தின்ற
ஊர்க் கோவில்
புளிய மரம்...

என்
இளமையின் சுவடுகளை
இன்னமும் எறியாமல்
தாங்கிக்கொண்டிருக்கும்
தாய்மண்ணை ஸ்பரிசித்தேன்...

காலணிகள் உதறிக்
கால்களைப் பதிக்கையில்
ஞாபகங்கள் தந்த
நெஞ்சின் நினைவினால்

கண்களில் துளிர்த்தது
கண்ணீரல்ல...
என் இளமையின்
மணம்வீசும் பன்னீர்...

கருத்துகள்

  1. மனதை வருடும் அற்புதமான கவிதை. பழைய நினைவுகள் சுகமானவை. மிகவும் அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. பின்னோக்கிச் சென்று பழைய நினைவுகளை அசைபோட்டு ரசித்த உங்களுக்கு என் நன்றிகள் சகோதரரே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!