இடுகைகள்

ஏப்ரல், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உருகி வழியுது காதல்...

ஓரத்துக் கரைப்படகு உச்சிவெயில் சுடும்பொழுது உலகையே மறந்தபடி சிரித்திருக்கும் இரு இளசு கடலோரம் தொட்டுத் தொடுவானம் வரைக்குமாய் பொங்கிப் பரவும் இது காதலில் ஒரு தினுசு அன்றாடக் கூலியான அப்பாவை ஏமாற்றி அகப்பட்ட காசு இங்கே உருகுது ஐஸ்கிரீமாய்... பத்துப்பத்திரம் தேய்த்துப் பாடுபட்டுப் படிக்கவைக்கும் அன்னையின் நம்பிக்கை அனல்பட்ட பனிநீராய்... விழிகளில் தேக்கிய காதலின் மயக்கத்தால் கல்லூரிப் பாடங்கள் கனக்குது பெரும்சுமையாய்... இன்று, உணர்ச்சிகளின் பெருக்கத்தில் கடமைகள் தொலைத்துவிட்டு விளையாட்டாய் வரும் காதல் வினையாகிவிடும் வாழ்வில்...

என்னருகில் நீ வேண்டும்...

எங்கே இருந்தாலும் என் பார்வைக்குள் நீ வேண்டும் உன் மூச்சுக்காற்றை நான் உயிர்க்காற்றாய்ப் பருகவேண்டும் கண்கள் எனைவருடக் கரங்கள் கோர்த்தபடி கானகத்தில் நடந்தாலும் எனக்கது சொர்க்கம்தான்... பற்றிய கரங்கள் ரெண்டும் பல கதைகள் பேசிக்கொள்ள ஒற்றைநொடி விட்டாலும் உயிர்துடிக்கும் அறிவாயோ?... காலைப் பரபரப்பில் விறுவிறுப்பாய்ச் சுழலுகையில் வேலை கெடுக்கும் உந்தன் விழிகளின் உரசல்கள் மாலைப் பொழுதுவரை மனதில் நின்று இம்சை செய்யும்... இன்னமும் சொல்லிவிட்டால் வார்த்தைகளும் வழிமறக்கும் என்னருமை மன்னவனே என்னருகில் நீ வேண்டும்...

வாழ்க்கைப் புத்தகம்

வலிகள் தடவிய வாழ்க்கையின் பக்கங்கள் புரட்டும் வேளையில் விழியோர ஈரங்கள்... இருட்டாய்த் தெரியும் சில ஒதுக்கப்பட்ட பக்கங்களில் விசும்பலாய் ஒலிக்கும் வேதனைக் குரல்கள்... யாருக்காகவோ வாழ்ந்து எதற்காகவோ ஓடி எதையோ தொலைத்துவிட்ட இழப்பின் மிச்சங்கள்... பாசமும் நேசமும் பழகி அலைக்கழிந்து வேஷங்கள் கண்டு வெறுத்த நிழற்படங்கள்... மண்ணாகிப்போ என்று மனதிற்குள் சபித்தபடி கைகுலுக்கிச் சென்ற காட்சிப் பதிவுகள்... இவற்றையெல்லாம் வாசகனாய் வந்து விழிவிரியப் படித்துவிட்டு பேச்சின்றித் திரும்பிடும் மௌன நிகழ்வுகள்...

ஏன் என் தந்தையே??!

ஏராள நினைவுகள் கவிந்திருக்கும் இதயம் தாராளமாய் நெஞ்சில் தளும்பிநிற்கும் துயரம்... நான், பாராள வேண்டுமென்று பகலிரவாய் உயிர்வருத்தி ஏரோட்டிப் பயிர்காத்து ஏற்றமிட்டு நீரிறைத்து யார்யாரை யெல்லாமே எங்கெங்கோ சென்றுபார்த்து ஊர்மெச்ச உயர்கல்வி கற்கவைத்து உயர்த்திவிட்டு சேறோடு உன்பொழுதைக் கழித்த என் தந்தையே... இன்று, ஊராளும் உயர்பதவி காரோடு பெரும்செல்வம் சீரோடு வாழ்வதற்குச் செம்மையான வீடென்று பேரோடும் புகழோடும் நானிங்கு வாழ்ந்தாலும் ஊரோடு பதித்த உன் சுவடுகளைப் பிரியாமல் என்னைப் போராட வைப்பதும் ஏன்? பொறுமையினைச் சிதைப்பதும் ஏன்?

அலையே...கடலலையே...

வந்த அலைசரிந்து வரும் அலைக்கு வழிகொடுக்கும் இந்த உலகவாழ்க்கை இன்னதென்று எடுத்துரைக்கும் மண்ணில் நுரைகோர்க்கும் மாலையாக்கி அழகுபார்க்கும் கண்ணைக் குளிரவைக்கும் கவியழகு நிறைந்திருக்கும்... கண்ணெட்டும்வரை பரந்து கடைவானின் கைகுலுக்கும் கதிரவனைக் காலையினில் காதலுடன் வழியனுப்பும் கதிர்நீலப் பட்டுடுத்தி நிலமகளை அழகுசெய்யும் சுதியோடு இசையெழுப்பி காற்றோடு சதிராடும்... கப்பலுடன் கதைபேசும் கரைப்படகைத் தாலாட்டும் உப்பளங்கள் ஏறிவந்து உவர்மணியாய் உருமாறும் சிப்பிக்குள் துகள்நுழைத்து முத்தாக உருவாக்கும் செப்பவும் அரிதாகும் உன்பெருமை பெரிதாகும்.

கடல்நீரைக் குடிக்கின்றேன்...

ஐந்து வயசினில் கடல்நீச்சல் பழகுகையில் அஞ்சி அழுததினால் கொஞ்சநீரைக் குடித்துவிட அச்சச்சோ பிள்ளை உப்புநீர் குடித்தானென்று உச்சபட்சக் குரலில் அலறி அவசரமாய்க் கரைக்குக் கொண்டுவந்து கவிழ்த்துத் தலைதாழ்த்தி உப்புநீரெல்லாம் துப்பிடு என்று சொல்லி அப்பாவும் அம்மாவும் பதறிய காலம்போய் இன்று, பாலைமணல் பூமியினில் பகலிரவாய் வேலைசெய்து, பாடுபட்ட என்குடும்பம் மீண்டுவரும் முயற்சியிலே பத்து வருஷங்களாய் நான் கடல்நீர் குடிக்கின்றேன் பாவமென்று யாரும் என்மேல் பரிதாபம் கொள்ளவில்லை...

ஒற்றை ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?...

காலணாவுக்குக் கடலைமிட்டாய் வாங்கி நாலுபேருக்குப் பங்கிட்டுக் கொடுத்ததும் அரையணாவுக்கு அவல்பொரி வாங்கி ஆறுபேருக்கு அள்ளிக் கொடுத்ததும் நாலணாவுக்கு நாட்டுப்பழம் வாங்கி காலைஉணவுக்கு வயிறாரத் தின்றதும் எட்டணாவுக்கு எள்ளுருண்டை வாங்கி தட்டுப்பாடின்றி சுவைத்து மகிழ்ந்ததும் இப்போது கதையாச்சு இல்லாத நடையாச்சு முப்போகம் விளைந்தபூமி முழுசுமிங்கு வீடாச்சு அப்பாவின் சம்பளத்தில் அத்தனை பிள்ளைகளும் பத்தினியும் வாழ்ந்தகாலம் கனவாகிப் போயாச்சு பெண்களும் படித்துவிட்டு வேலைக்குப் போயாச்சு பிள்ளைகள் ஒன்றிரண்டும் ஆயாவின் பொறுப்பாச்சு பொன்பொருளைப் பின் துரத்தி ஓடிடும் ஓட்டத்தில் பெண்களும் ஆண்களுடன் போட்டியிட வந்தாச்சு இன்றைய இந்நிலையினிலே, ஐயா எனவந்து யாசகம் கேட்பவர்க்கும் பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுக்கவந்தால் கையை அசைத்தபடி மறுத்துச் சொல்லுகிறார் ஒற்றை ரூபாய்க்கு இப்போ என்ன கிடைக்குமென்று...

விடியல் ரகசியங்கள்

புள்ளினம் பாடும் பூபாளம் கேட்டுப் புலர்ந்திடும் புதுவிடியல் மின்னிடும் பனித்துளி வாங்கிக் கதிரவன் பூத்திடும் புன்முறுவல் எண்ணிய தெல்லாம் ஈடேற வாழ்த்தியே விரிந்திடும் எழில்மலர்கள் பண்ணொலி மாறாமல் பூமகள் பாதத்தைத் தழுவிடும் நீரலைகள் தன்னுயிர் புரந்து மன்னுயிர் காக்கவும் சுரந்திடும் ஆநிரைகள் விண்ணொடு விளையாடி வேகமாய் இசைத்திடும் வித்தகக் குயிலினங்கள் இன்னமும் இனிமையாய் என்றென்றும் தோன்றிடும் இயற்கையின் ஓவியங்கள் புண்ணியம் பண்ணிடல் வேண்டும் புவியினைப் புலர்கையில் ரசிப்பதற்கு...

வளைந்து கொடு...

விண்ணில் வளைந்திருக்கும் காரணத்தால் வானவில் அழகு காற்றில் இசைந்தாடும் மென்மையால் முல்லைக்கொடி அழகு சேற்றில் வளைந்திருக்கும் செழிப்பினால் கதிருக்கு அழகு ஆற்றில் நெகிழ்ந்துநிற்கும் பண்பினால் நாணலும் அழகு சொல்லில் அதிர முகம்சிவந்து ஆத்திரம்கொள்ளாமல் வளைந்துகொடுத்துப்பார்... உன் வாழ்க்கையும் அழகு.

அது ஜுரமல்ல...வரம்

அன்று, களைத்து உடல்சோர்ந்து காய்ச்சலில் கிடக்கையிலே அணைத்து அருகமர்ந்து ஆதரவாய்த் தலைவருடி அன்பாய்க் குழையவைத்து அன்னப்பால் கஞ்சியிட்டு சின்னக்குழந்தை போல சிறுகரண்டி கொண்டுஊட்டி குறுக்கி மருந்துசெய்து குடிக்கவைத்து முதுகுநீவி, குலச்சாமி திருநீறைக் கும்பிட்டுப் பூசிவிட்டு படுக்கையில் படுக்கவைத்து பக்கத்தில் இருந்த தாயே, இன்று, துணைக்கென்று யாருமின்றி தனித்த ஓர் அறையினிலே கணிப்பொறியும் கடிகாரமும் முறைத்தபடி அருகிருக்க மணமுடித்த மனைவியையும் மக்களையும் பணிதுரத்த மூன்றுநாள் ஜுரத்துடன் முனகிக் கிடக்கிறேன்... அணைத்தென் அருகிருந்த அன்பெனும் என் தாயே... உன்னை நினைத்துத் தவிக்கிறேன் அந்தநாள் திரும்பிடுமோ?

கனவுதிர்காலம்...

உதிரும் சிறகுகளாய் வாழ்க்கையின் நம்பிக்கை சிதறும் சருகுகளாய்க் கலைந்திடும் கனவுகள்... உனக்குமட்டும் ஏன் புரியமறுக்கிறது என் உதடுகள் உச்சரிக்கும் உரத்த சப்தங்கள்கூட... கனவுகளின் சுகத்தில் நிஜங்களின் வலியை நெருப்புக்கு இரையாக்கி நிமிர்ந்து நிற்கிறேன்... அன்று உன் அலட்சிய வார்த்தைகளால் பலியிடப்பட்டுவிட்ட ரத்தம்தோய்ந்த மனதுடன் எதிர்காலம் நோக்கி எழுந்து நடக்கிறேன்... இன்னமும் எண்ணற்ற கேள்விகளால் என்னைச்சிறையிட்டு எங்கும் நகரவிடாமல் நங்கூரமிடுகிறாயே... நியாயமா இது?

அந்நிய மண்ணில்...

அப்பளம் வடகமும் அரைத்துவிட்ட சாம்பாரும் கொப்பரைத் துவையலும் கொழுந்து வெற்றிலையோடு கற்பூரம் மணக்கக் கதைசொல்லும் காற்றினையும் சிற்பம்போல் சிரிக்கும் எங்குலப் பெண்களையும் நட்போடு நலம்பேசும் நல்ல மனிதரையும் அற்பப் பதவிக்காய் உதறிவிட்டேனோ என்று அத்தான் புலம்புவார் அவர்வழியில் நானும்தான்...

நரகம் நிச்சயம்...

மெல்ல அருகில் வந்து மெதுவாய் விரல்வளைத்து கண்ணோடு கண்ணாய் கனிவோடு எனைப்பார்த்து கன்னத்தில் சுடும் கனத்த மூச்சுடனே சின்ன இடை தழுவிச் சரியும் நிமிஷத்தில்.... ஆ...ஆ... என்னைக் கடித்து என் கனவைக் கலைத்திட்ட சின்னக் கொசுவே, உனக்கு நரகம் நிச்சயம்.

கல்யாண மாற்றம்...

நிலவனைய முகமுனக்கு நித்திலமே என்று சொன்னாய், அகமெல்லாம் குளிரெடுக்க அருகணைந்து உருகிநின்றேன்... பயமணிந்த மான்பிணைபோல் மருளும் எழில் விழியிரண்டும் கயலழகைப் போன்றதென்றாய் கண்மயங்கி முகம்கவிழ்ந்தேன்... விரல்பிடித்து நகம்நோக்கி அலைகுளித்த பவளமென்றாய் அழகிய உன் புகழ்மொழியில் அத்தனையும் மறந்துநின்றேன்... கருமையான எழில்கூந்தல் கண்ணருகில் மேகமெனக் கலைந்திடுதல் கவிதையென்றாய் நிலைதளர்ந்து நெஞ்சினித்தேன்... இன்று, மணமுடித்து மனைவியாகி முகம்பார்த்து நிற்கின்றேன் மரம்போல் ஏன் நிற்கிறாய்? என்றெரிந்து விழுகிறாயே...

காதலுடன் காத்திருப்பேன்...

என் நினைவெனும் தொட்டிலிலே நிதம் உறங்கும் தேவதையே, இங்கே, கனவுகளும் இல்லாமல் உயிர்சுமத்தல் பெரும்வதையே... உறவுகளெல்லாம் கூடி உனையெனக்கு மணமுடித்தால் சிறகடித்துப் பறப்பதற்குச் செவ்வானில் வழியமைப்பேன்... இரவுகளெல்லாம் தகிக்க இரக்கமின்றிப் பிரித்துவிட்டால் கரைபுரளும் கண்ணீரில் காதல்மனம் துடித்துநிற்பேன்... பிரிவுதனில் பரிதவித்துப் பார்க்காத நிலைவரினும் கனவுகளில் உனைச்சுமந்து காதலுடன் காத்திருப்பேன்...

உறங்கிவிடு மகளே...

உறங்கிவிடு மகளே இரவுகள் சிறியதுதான் உறவுகளின் அணைப்பில் கனவுகளின் கதகதப்பில் கவலைகள் பழகும்வரை உறங்கிவிடு மகளே... இனி, விடியும் பொழுதுகளில் வருத்தங்கள் காணநேரும் படிக்கச் செல்லுகையில் பாதகம் எதிரில் தோன்றும் பிடிக்காத நிகழ்வுகளில் நடித்திடப் பழகவேண்டும் துடிக்காமல் மனதினைக் காத்திடத் தெரியவேண்டும் எதிர்த்துவரும் இடர்கள் தவிர்த்திடத் துணிவுவேண்டும் சினம் துளிர்த்திடும் பொழுதிலும் வார்த்தையில் பணிவுவேண்டும் கொதித்திடும் வார்த்தைகள் கேட்டிடும் பொழுதினில் பொறுத்திட மனமும் உறுதியாய் உனக்கு வேண்டும் ஆகவே மகளே, அழுகையை உதறிடு ஆணவம் தொலைத்திட்டு அறிவினைத் தேர்ந்தெடு இளமையெனும் காலம் இருக்கும் வரையினில் துயரங்கள் தவிர்த்திட்டு உறங்கிடப் பழகிடு...

சக்தி கொடு...

பழகிப் போனதிங்கு பாசத்தின் வலிகள் விலகிப் போனதின்று வாழ்க்கையில் கிலிகள் மண்ணில் பிறந்தமுதல் கண்ணுக்கு இமைபோல என்னுடைய உறவுகளை அரவணைத்துக் காத்திருந்தேன் தண்ணீர் குடித்துமட்டும் பசியை விழுங்கிவிட்டு கண்ணுறக்கம் தொலைத்தும்கூட தொடர்ச்சியாய் தினமுழைத்தேன் உழைத்துச் சேர்த்ததெல்லாம் மறைக்காமல் கொடுத்திருந்தும் என்ன கொடுத்தாயென்று என்னைச் சிதைக்கிறது என்னுடைய பரம்பொருளே இன்னுமொரு பிறவிகொடு போதுமென்று சொல்லும்வரை பொருள்குவிக்கும் திறமைகொடு மண்ணுலகில் வாழும்வரை என்னுறவைச் சேர்த்தணைக்க திண்ணியதோர் இதயம்கொடு தினம்புதிதாய் சக்திகொடு...

வந்திடுவேன் விரைவினிலே...

பனிவிழும் மெல்லிரவு பால்குளித்த வெண்ணிலவு இன்னுமா உறங்கவில்லை என்னவளே இளம்பிறையே... விஞ்சும் குளிர்பொறுக்காமல் விரிந்திருந்த மலர்களெல்லாம் அஞ்சியே இதழ்குவித்து அமைதியாய் உறங்குதடி கொஞ்சிடும் கிளிகளெல்லாம் கூட்டுக்குள் அடைந்தபடி பஞ்சனைய பெண்கிளியின் மென்சிறகில் ஒளியுதடி வஞ்சியர்போல் சலங்கைபூண்டு விளையாடும் பசுங்கன்று தஞ்சமெனத் தாயருகில் பிஞ்சுமுகம் புதைக்குதடி நெஞ்சினிக்கும் இனியவளே நெடுமூச்சில் உயிர்கொதித்து வஞ்சிநீயும் வருந்தாதே வந்திடுவேன் விரைவினிலே...

நீயா அழைத்தது?

காலை விடியலில் காதோரம் கிசுகிசுப்பாய் மாலைப் பொழுதினில் மனதோடு முணுமுணுப்பாய் உணவுண்னும் பொழுதினில் உள்ளெழும் ஒலிக்குறிப்பாய் கனவோடு அயர்கையில் கழுத்தோடு குறுகுறுப்பாய் இன்றென்ன செய்தாயென்று யாரென்னை வினவுவது? காதலின் தேவதையோ? சாதலின் தூதுவனோ? பாதகமாய் ஏதும் பழிவரும் உள்ளுணர்வோ? மாதவருக்கே கிடைக்கும் மகேசனின் அறிமுகமோ? எண்ணரிய மனச்சுழலில் எண்ணிஎண்ணிப் புரண்டு கண்ணுறக்கம் துறந்து கண்ணாடி முன்சென்றேன் என்னையே தெரியலியா? என்று முகம் கடிந்து என்னுடைய மனசாட்சி ஏளனமாய் நகைக்கிறது...

எங்கிருந்து வந்தாய் நீ?!!

காலைப்பொழுதின் கறுத்த விடியலில் என்னைப் பரிகசிக்க எனக்குமுன் இறங்கிவந்து என்வீட்டுப் பூக்களை வருடிக்கொண்டு நிற்கிறாயே, எங்கிருந்து வந்தாய் நீ? யாருன்னைக் கொண்டுவந்தார்? நீ மேகத்தின் மிச்சமோ? வானத்தின் வரமோ? தேவலோகம் திறந்துவந்த தெய்வீக அமுதமோ? இரவுக்குப் பரிசளித்த விடியலின் முத்தமோ? நேற்று நான் தெளித்தநீரை கதிரால் உறிஞ்சிவிட்டுக் கதிரவன் பரிசளித்த காதல் பன்னீரோ? வெண்ணிலவு உடல்குளித்த தண்ணீரின் மிச்சமோ? சொல்லிடு பனித்துளியே மனதை அள்ளிடும் நீர்த்துளியே!

உறக்கம் தொலைத்த உறவுகளைப் பார்...

இரக்கம் தொலைத்துவிட்டு எழுந்துவந்த பெருங்கடலே, நீ அரக்கப்பரக்க வந்து அள்ளிச்சென்ற கொடுமையால் உறக்கம் தொலைத்துவிட்ட உறவுகளைப் பார்த்தாயா? பூமித்தட்டுகள் பொறுப்பின்றி மோதியதால் நீ கோபக்கனலோடு கொந்தளித்து எழுந்தாயோ? பாவப்பட்ட மக்களைப் பந்தாடி ஓய்ந்தாயோ? உன் ஆங்கார அலைப்பெருக்கால் அன்பு உள்ளங்கள் அனாதைகளானது... அலையோசையைத் தோற்கடிக்கும் அழுகை ஓசையே கரையோர மக்களின் காணிக்கையானது... ஊடுருவிப் பரவிய உன் உப்புநீரினால் உயிருள்ள நிலமெல்லாம் உவர்நிலமானது கதறிய மக்களின் கண்ணீர் சேர்ந்ததால் உன் கடல் நீரும் கொஞ்சம் கரிப்பு ஏறியது. பண்ணிய கொடுமைகள் போதும் கடல்தாயே எண்ணிப்பார் இதுவரை எடுத்த உயிர்களை அன்னையாய் உன்னை வணங்கிக் கேட்கிறோம் புண்ணியமாய்ப் போகும் இனி ஊருக்குள் நுழையாதே...

நிலாவே வா...

என்னருமை வெண்ணிலவே இத்தனைநாள் எங்குசென்றாய்? உன் வரவைக் காணாமல் உறக்கமின்றி விழித்திருந்தேன் கண்சிமிட்டும் விண்மீன்கள் கேலிசெய்து சிரிக்குதடி மேகத்தில் முகம்மறைத்து விளையாடிச் சென்றாயோ? மோகத்தில் எனைமறந்து காதலனைச் சேர்ந்தாயோ? வேகமாய் வந்துவிட்டு விரைவாகச் சென்றாயோ? பாவமேதும் செய்தேனோ மறைக்காமல் சொல்லிவிடு. காதலியைக் காணாமல் கவலையால் துவண்டபோது ஸ்நேகிதியாய் அருகிருந்து சோகத்தைப் பகிர்ந்துகொண்டாய் ஆதரவாய் முகம்பார்த்து அழகாகப் புன்னகைத்தாய் உன்னழகில் துயர்மறந்து என்னவளை நினைத்திருந்தேன். இன்னும் என்னைப் புரியலையா இரக்கமேதும் தோணலையா? புன்னகைக்கும் வெண்ணிலவே என்னிலையைச் சொல்லிவிட்டேன் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிடு என்னெதிரே...

அலையே...கடலலையே...

வந்த அலைசரிந்து வரும் அலைக்கு வழிகொடுக்கும் இந்த உலகவாழ்க்கை இன்னதென்று எடுத்துரைக்கும் மண்ணில் நுரைகோர்க்கும் மாலையாக்கி அழகுபார்க்கும் கண்ணைக் குளிரவைக்கும் கவியழகு நிறைந்திருக்கும்... கண்ணெட்டும்வரை பரந்து கடைவானின் கைகுலுக்கும் கதிரவனைக் காலையினில் காதலுடன் வழியனுப்பும் கதிர்நீலப் பட்டுடுத்தி நிலமகளை அழகுசெய்யும் சுதியோடு இசையெழுப்பி காற்றோடு சதிராடும்... கப்பலுடன் கதைபேசும் கரைப்படகைத் தாலாட்டும் உப்பளங்கள் ஏறிவந்து உவர்மணியாய் உருமாறும் சிப்பிக்குள் துகள்நுழைத்து முத்தாக உருவாக்கும் செப்பவும் அரிதாகும் உன்பெருமை பெரிதாகும்.

காட்டிலே மழை...

நீளமான மழைநாளின் விடியாத மெல்லிரவில் காளானின் குடைமறைவில் ஆளான தவளைச்சத்தம் மீளாமல் துயிலுறங்கும் மொட்டுகளைத் துயிலெழுப்பும். பூப்படைந்த மொட்டுகளின் புன்னகையில் மதிமயங்கி புல்லினமும் தலைநிமிர்த்தும் புள்ளினங்கள் மெய்சிலிர்க்கும் பூரிப்பாய் மலர்நுழைந்து புதுவண்டு தேனெடுக்கும் தேன்குடித்த வண்டுகளின் தெய்வீக இசையமுதம் வானகத்துத் தேவர்களின் வயிற்றுக்கும் உணவாகும் கானகத்துக் கலையழகில் மானினங்கள் மகிழ்ந்தோடும் சோம்பல்கொண்ட சூரியனை ஆம்பல் கண்டு தலைகவிழும் காம்புகளில் மதுவழியும் கவின்மலர்கள் உடைதிருத்தும் வீம்பாகக் குயிலொன்று விரகத்தில் குரலெழுப்பும் கானகத்து மழைநாளின் கவினழகை நான்கண்டேன் நான்பெற்ற இன்பமதை எல்லோரும் பெறவேணும்

காதல் வந்தபோது...

வாராத போதெல்லாம் சோதனை செய்யாமல் வந்ததும் காதல் வேதனை செய்கிறது... உராயும் பார்வையின் தீண்டல்கள் பொறுக்காமல் உறைக்குள் ஆமையாய் உள்ளம் தவிக்கிறது... காதலென்று பெயர்சொல்லி என் காதினில் ஓதியது காதல் தேசத்தின் தேவதையின் குரலோ? மெல்லிய புன்னகை சூடிச் சிறுநெஞ்சைத் கொல்லத் துடித்தது கனிமொழி வண்ணமோ? ஏக்கம் அணியவைத்து இளமையின் வலிமையைத் நோக்கிச் சிதைத்தது விழியெனும் மாயமோ? பூக்கள் சுமந்த ஒரு புயலாய் என்மனதில் தாக்குதல் செய்தவளே, தவிக்கிறேன் காதலியே...

ஏனடி இனியவளே?...

ஊமையான வார்த்தைகளின் சோகமான அழுகுரல் மோதித் தலையணைக்குள் புதையும் குமுறல்கள் உன் தோட்டத்துப் பூக்கள்மட்டும் என் வீட்டைப் பார்த்திருக்க நீ மட்டும் ஏனடி முகம்திருப்பிக் கொள்கிறாய்? கனத்த விழியிமைகள் நினைவுகள் கோர்த்தபடி விரைத்து உறக்கத்தை துரத்தி விட்டதடி உரத்த பெருமூச்சின் உஷ்ணம் பொறுக்காமல் வீட்டுச் சுவர்கூட வெம்மையைப் பொழியுதடி... முற்றத்து நிலவொளியின் முதிர்ந்த கிரணங்கள் உன் முத்துச் சிரிப்பழகை நினைவூட்டிச் சென்றிட பத்துத் தலைகொண்ட ராவணன் போலவே சித்தம் மயங்கவைத்தாய் ஏனடி இனியவளே?...