இடுகைகள்

மே, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுட்டது நிஜம்...

படம்
மழைபெய்து ஓய்ந்திருந்த மணக்கும் இளம்மாலை தும்பிகள் பறந்துகொண்டு சுதி சேர்க்கும் எழில்வேளை கம்பிக்கதவு தாண்டி வாயிலில் அமர்ந்திருந்தேன் சந்திரனைத் தோற்கடிக்கும் பொன்னெழில் வதனமுடன் வந்து நின்றாள் என்மனைவி சந்தேகப் பார்வையுடன்... விந்தையாக எனைப்பார்த்து வித்தியாசமாய்ச் சிரித்தாள் என்ன கேட்கப்போகிறாள் என்று மனசுக்குள் சந்தடியின் இடைவெளியில் சின்னதாய் ஒரு பட்டிமன்றம் சிந்தனைகள் விரிந்திடவே சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே... அந்தி உணவுக்கு என்னவேண்டும் என்பாளோ? இந்தப்புடவையில் நான் அழகா எனக் கேட்பாளோ? முந்தைய நினைவுகளை மனம் இனிக்கச் சொல்வாளோ? என்று பலவாறாய் எண்ணித் திகைத்தவேளை "தண்ணிலாரி வந்து முன்னாலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியாமல் கனவா"என்று உலுக்கிவிட அந்தரத்தைத் தொட்டுவிட்டு அறுந்துவீழ்ந்த பட்டம்போல சந்தோஷம் வடிந்தவனாய்க் குடமெடுக்க விரைந்து சென்றேன்

கிளம்பினாள் கிருஷ்ணவேணி...

அதிகாலை நேரத்துக் கனவின் கதகதப்பு... கல்லூரி மாணவியாய் கவர்னரிடம் பட்டம் வாங்கி கல்யாண மேடையில் கணவனின் கைப்பிடித்து, வெட்கத்தில் சிவந்த விழிகள் நிலம்நோக்க பக்கத்தில் கணவனின் சுடும்மூச்சில் உடல் சிலிர்க்க... ஐயோ... பொழுது விடிஞ்சிடுச்சா என்று உடல் பதறி, உதறி மடித்துவைத்த கிழிசல் போர்வைக்குள் கனவின் சிதறல்களைக் காப்பாற்றி வைத்துவிட்டு, தூக்குச் சட்டியில் பழங்கஞ்சி நிறைத்தபடி தார்ச்சாலை போடக் கிளம்பினாள் கிருஷ்ணவேணி...

மேகத்திற்கும் காதல் உண்டு

படம்
கருவுற்ற மேகங்கள் காற்றலையின் கைப்பிடித்து செறிவுற்ற மலைச்சரிவில் துளிமழையாய்ப் பிரசவிக்கும் பெருகியது அருவிவெள்ளம் பன்மலரின் மணம்பருகி வழிந்திடும் தேனலையாய் மண்மடியை நனைத்திறங்கும் உருகியது மண்ணின்மனம் உற்சாகம் ஊற்றெடுக்க விரிந்திடும் ஆற்றுநீராய் விம்மிக் குமிழியிடும் வழியெலாம் செழிக்கவைத்து வளைந்த உடல்களைப்புறவே சரிந்திடும் கடல்மடியில் காதல் அங்கு அலைமோதும்.

மனித உயிருக்குப் போட்டா போட்டி

படம்
ஆனாலும் இது அநீதியின் உச்சம்தான் மனிதனும் இயற்கையும் மாறிமாறி மோதிக்கொள்ளும் சோதனையின் காலகட்டம் ஓராயிரம் உயிரை நீ வெடிக்கவைத்து அழித்தால் நான் நூறாயிரம் உயிர்களை துடிக்கவிட்டுச் சிதைப்பேன் என்று உலுக்கி உடல் சிலிர்த்து ஓங்காரமிடுகிறது இயற்கை... தொடர்ந்திடும் இந்த யுத்தத்தின் முடிவாக எஞ்சிடப்போவது யாராக இருக்கும்? மமதையில் திரியும் மனிதத்தின் மிச்சமா இல்லை, எதிரொன்றும் இல்லாத இயற்கையின் எச்சமா உணர்ந்து உரைத்திட யாரால்முடியும்?

அம்மா உனக்காக...

அழைக்கச் சலிக்காத அன்பின் மறுபெயர் உழைத்து எனை உயரவைத்து ஊக்குவிக்கும் ஓருயிர் விளக்கிவைத்த திருவிளக்காய் ஒளிரச்செய்து என் வாழ்க்கை தளர்ச்சியின்றிச் செல்ல தவமிருந்த என்தாயே.. வயிற்றையும் மனசையும் வாட விடாமல் மழையெனக் குளிர்விக்கும் நீ எனக்கு ஒரு மகிழ்ச்சியின் மென்பொருள் உறக்கம் வரும்வரைக்கும் உன்மடியில் படுத்தபடி விரல்கள் தலைவருடக் கேட்ட கதையெல்லாம் இன்று, எனக்குநானே மனதுக்குள்சொல்லி தைரியத்தை விதைக்கக் கற்றுக்கொடுத்தவள் நீ எட்ட இருந்தாலும் மொத்தக் குடும்பத்தையும் கட்டி யணைத்திடும் உன் அன்பெனும் கயிற்றுக்கு காட்டுப்படாதவர் யாருமேஇல்லை கிட்ட இருக்கையில் புரியாத உன் பெருமைகூட இன்று எட்ட இருக்கையில் உணர்கிறேன் தாயே... அன்று, கல்லூரி விடுதியில் காலம் கழித்தபோது அர்த்தமே இல்லாமல் உன்னோடு சண்டையிட்டு எதுவுமே பேசாமல் அழவைத்த நாட்களுண்டு... இன்று, செய்த தவறுக்குத் தண்டனையாக ஏழாம் நாளில் உன் குரலைக் கேட்பதற்காக ஆறு நாளும் ஆசையைத்தேக்கி ஆவலுடன் இங்கு காத்துக் கிடக்கிறேன் அம்மா...

வாழை - கவிதையில் பொதிந்த கதை

படம்
1. வெறுமையாய் ஒரு தனிமை மெல்லநடை போட்டு மேலெழும்பும் வெண்ணிலா அல்லைப் பகலாக்கி அழகு செய்யும் விண்மீன்கள் சொல்லத்தெரியாத ஓர் சோகத்தின் பிடியினில் செல்லத்துரை தாத்தா சிக்கியது போலிருந்தார்... மெல்லவும் வழியில்லை விழுங்கவும் வகையில்லை எல்லையில்லாச் சுமையை உள்ளுக்குள் புதைத்திருந்தார்... கல்யாணிப் பாட்டி கடவுளிடம் போனபின்பு நல்வார்த்தை சொல்லி நலம்கேட்க ஆளில்லை பிள்ளைகள் மூவரைப் பெற்றிருந்த போதினிலும் தள்ளாத தந்தையிடம் வந்தமர்ந்து பேசவில்லை ஊருக்கே ராஜாவாய் உயர்ந்துநின்ற பெரியவர் வேரில்லா மரமாக வாட்டமுற்று வாழலானார்... 2. மனப்புழுக்கம் முற்றத்துத் திண்ணையின் மேல்புறத்து மூலையினில் சற்றே சரிந்த ஒரு கயிற்றுக் கட்டிலுண்டு அதில், இற்றுப்போனதுபோல் இதயம் படபடக்க ஒற்றையாய்த் தான்மட்டும் சரிந்திருந்தார் நம் தாத்தா முற்றத்துக் குழல்விளக்கும் நிலவொளியும் சேர்ந்துகொள்ள சுற்றியுள்ள மரக்கிளைகள் சாய்ந்தபடி நிழல் பரப்ப வாசலில் நிழல்கோலம் பார்த்தபடி படுத்திருந்தார் கன்னத்தில் நீர்க்கோலம் வந்தவிதம் தானுணர்ந்தார் கல்யாணிப் பாட்டி கால்மாட்டில் அமர்ந்திருக்க கதைகதையாய் பேசிய நினைவுகளில் மூழ்கிப்போனார் பிள்ளைக

வேஷமிட்டும் ஜெயிக்கவில்லை...

ரெண்டு வயசிருக்கையில் கண்ணனாய் வேஷமிட்டு அன்னையர் சங்கத்தில் தங்கப்பதக்கம் வென்றேன்... ஐந்து வயசிருக்கும்போது ஆண்டுவிழா மேடையிலே அன்னை தெரசாவாய் வேடமிட்டுப் பரிசுபெற்றேன்... ஏழு வயசானபோது இந்திரா காந்தியாகி மந்திரியின் கையாலே சான்றிதழ் பெற்றுக்கொண்டேன்... பதினொரு வயசினிலே பாரதியார் வேஷமிட்டு பள்ளியிலே முதலாய்வந்து பதக்கத்தைப் பரிசாய்ப்பெற்றேன்... பதினாறு வயதினிலே புதுமைப்பெண் உருவமேற்று மாவட்டப் போட்டியிலே பாராட்டும் பரிசும்பெற்றேன்... இன்று, கல்யாண வயசினிலே மணப்பெண்ணாய் வேஷமிட்டு பலமுறை நின்றுவிட்டேன் இதுவரை ஜெயிக்கவில்லை...

முத்தமிட ஏன் மறுத்தாய்?...

படம்
விடியலை முத்தமிட்டு இரவுகளும் பிரிகிறது இரவுவந்து முத்தமிடப் பகல்பொழுதும் மறைகிறது இமைகள் ரெண்டும் முத்தமிட உறக்கம் பிறக்கிறது இதழ்கள் மூடி முத்தமிட மௌனம் நிலைக்கிறது நிலவு தந்த முத்தத்தால் வானம் ஒளிர்கிறது கதிரவனின் முத்தத்தால் பூமியும் பொலிகிறது பூக்களுக்கு முத்தமிட்டு வண்டுகள் இசைக்கிறது ஏக்கமுடன் முத்தமிட்டுப் பறவைகள் களிக்கிறது கரைதழுவி முத்தமிட்டுக் கடலலை சிரிக்கிறது புவியில்மோதி முத்தமிட்டு மழைத்துளி நனைக்கிறது எத்தனையோ முத்தங்கள் அத்தனையும் ரசிக்கிறாய் நீ என்னைமட்டும் முத்தமிட வெட்கத்துடன் மறுக்கிறாயே...

ஜன்னலில் பூ எங்கே?

படம்
நினைவுகளெல்லாம் உனை நில்லாமல் சுற்றிவர கனவுகளின் வேதனையில் துரும்பாகச் சுழலுகிறேன் எல்லையில்லா மனத்தவிப்பில் இரவுகள் நீள்வதனால் எனைக் கல்லாகச் சமைத்திடடி காதல்வலி தாளவில்லை அன்று, அப்பாவின் பின்நின்று அவசரமாய் ஒருபார்வை தப்பாமல் தந்துவிட்டு தலைகுனிந்து சென்றுவிட்டாய் கற்றாழை முட்செடியில் காற்றில்வீழ்ந்த ஆடையைப்போல் அப்பாவி என் இதயம் அகப்பட்டுத் தவிக்குதடி உன் கன்னக்குழிகளுக்குள் சிக்கிய என் இதயத்தை உன் அப்பாவுக்குத் தெரியாமல் அப்படியே வைத்துக்கொள் தப்பாக நான் பார்த்த பார்வைகளின் தண்டனையாய் கப்பமாக அதனை உனக்கே கொடுத்துவிட்டேன் உச்சி வெயில்பொழுதில் உன்வீட்டுக் கடைத்தெருவில் எத்தனை மணிநேரம் எனைச் சுற்றிவரச் செய்வாய் நீ? அத்தனை கண்களும் என்னையே கவனிக்க நீ இன்னும் ஏனடி உன் சன்னலில் பூக்கவில்லை???

ஒரு பார்வை பார்ப்பாயா...

படம்
விடியல் தொடங்கி முடியாத அலுவல்கள் அடிமையாக்கி எனை ஆளுகின்ற பணிச்சுமை அலுத்துச் சலித்துவந்து வீட்டிற்குள் நுழைகையில் அடித்துக் குழந்தையை அழவிட்டுக் குரலுயர்த்தி அப்பாவின் பிடிவாதம் அப்படியே இருக்குதென்று இழுத்துத் தரையில்தள்ளி இளக்காரம் பேசுகிறாய்... சிரித்துச் சகித்தபடி உன் முகத்தைப் பார்க்கிறேன், முறைத்து எதிரியைப்போல் முகம்திருப்பிச் செல்கிறாய்... வருத்தமா யிருக்குதடி இறுக்கமான சூழல்கண்டு உழைத்த மனம்களைத்து உற்சாகம் தேடுகையில் எரிக்காதே என்னவளே என்மனதில் சக்தியில்லை சிரித்த மலர்போல் நீ இருக்கவே ஆசைகொண்டேன் அதற்காக, வாசலில் நின்று நீயும் வரவேற்கத் தேவையில்லை ஆசையும் பாசமுமாய் ஒருபார்வை பார்ப்பாயா...

கொத்தமல்லிச் சட்னியும் காலைநேரத்து விவாதமும்

படம்
காலை நேரத்தின் வேலைப் பரபரப்பு... ஆளுக்கொரு புறமாய்ப் புறப்படும் அவசரத்தில்... பாலைக் காய்ச்சிவிட்டு, பச்சைநிறச் சட்னிவைத்து தோசை ஊற்றிவந்து மேசையில் அம்மாவைக்க, பத்து நிமிஷத்தில் பஸ்பிடிக்கும் அவசரத்தில் கொத்துமல்லிச் சட்னியின்மேல் காரசாரமாய் ஒரு விவாதம்... நிறமெல்லாம் நல்லாயிருக்கு மணமும்கூடப் பரவாயில்லை சாப்பிட மட்டும்தான் சங்கடமாயிருக்குதென்றான் தம்பி... பச்சையெல்லாம் கால்நடைக்கு பால்மட்டும் போதுமென்று சுட்டதோசை தள்ளிவிட்டு தப்பிச்சென்றாள் என் தங்கை... ஏழுமணி ஆவதற்குள் எதுக்கு இப்போ சாப்பாடு? மதியம் உண்ணவருவேனென்று நழுவிச்செல்லும் என் அப்பா... அரைச்சுவச்ச சட்டினியோ அப்படியே இருக்குதென்றும் சுட்டுவைச்ச தோசையெல்லாம் சூடாறிப் போச்சுதென்றும் வருத்தமாய்ச் சொன்னபடி என்னைப்பார்க்கிறாள் அம்மா... அவளை, நினைத்துச் சிரிக்கின்றேன் கொத்துமல்லி மணக்கிறது...

கண்ணனுக்கு அன்னையானாய்...

படம்
அன்னையே யசோதையம்மா ஆயர்குலப் பெண்கொடியே அச்சுதனைப் பிள்ளையென அன்பாக வளர்த்தவளே உன்பிள்ளை அறியாமல் கண்ணனுக்குத் தாயானாய் மண்ணிலே மகிமைபெற்றாய் மாறாத சுகங்கள் கற்றாய் வெண்ணெய் திருடி உண்டு வேடிக்கை செய்தபோது கண்ணனைக் கட்டிவைத்து அன்பாகக் கடிந்துகொண்டாய் மண்ணெடுத்துத் தின்றுவிட்டு மாநிலத்தைக் காட்டுகையில் கண்ணிரண்டும் நீர்நிறைய கல்லாகச் சமைந்துபோனாய் வேய்ங்குழலில் இசையெழுப்பி வேதனைகள் தீர்த்தபோது தாய்மனம் தளும்பிடவே தன்னிலை மறந்துநின்றாய் பிள்ளையாய்த் தோழருடன் பெருங்குறும்பு செய்திடினும் அன்னையாக அமைதியுடன் அமைதியுடன் ரசித்திருந்தாய் என்ன தவம் செய்தாயோ யார்கருணை கொண்டாயோ மண்ணகத்துத் அன்னையெல்லாம் உன்னைக்கண்டு ஏக்கம்கொண்டார்...

வீதியோர விசும்பல்கள்...

படம்
கிழிசல் கோணிக்குள் பசிபோர்த்திய இரவுகள் விழியோடு தேங்கிவிட்ட வேதனையே கனவுகளாய்... வழியோரத் திண்ணைகளே உறங்கிடும் பள்ளியறை பழியாகி வலியெடுக்கும் அனாதையெனும் அவச்சொல்... பக்கத்தில் படுத்திருக்கும் பழகிய நாய்க்குட்டி பசியோடு விலகாத பாசமும் சுமந்தபடி... வயிற்றுக்குள் எழுந்தபசி சுழற்றிச் சிறுகுடலை முறுக்கிய நோவின்வலி விழிகளில் நீராக... சம்பந்தன் அழுதகணம் சடுதியில் எதிரில்வந்து செம்பொன் குவளையில் ஞானப்பால் கொடுத்தவளே பந்தம் எனக்கிலையோ பாவமென்று தோணலையோ இன்னல்கண்ட ஏழைக்கும் இரங்கிட மாட்டாயோ...

கடல்கடந்த கண்ணீர்...

படம்
கண்ணீருடன் என்னைக் கரமசைத்து அனுப்பிவிட்டு முந்தானைச் சேலையில் வேதனைகள் துடைத்தவளே... தலைமகனாய்ப் பிறந்த காரணத்தால் என்னைநம்பி தங்கையும் தம்பியரும் வாழ்க்கைக்குக் காத்திருக்க கண்கலங்க உனைப்பிரிந்து கடல்கடந்து வந்துவிட்டேன் என்னதவம் செய்தேனோ என்னவளாய் உனைஅடைந்தேன் மண்மகளை விஞ்சிய பொறுமையின் பொக்கிஷமே நான் சொன்னதும் சம்மதித்து சோதனைக்கு உடன்பட்டாய்... துக்கம் விழுங்கிய உன் தொலைபேசிச் சத்தத்தில் சித்தம்கலங்கி மன யுத்ததில் தொலைந்துபோனேன் சத்தியம் இது கிளியே சங்கடங்கள் தீர்ந்தபின்னே சன்னதியின் தெய்வமாக கண்ணில்உனைத் தாங்கிடுவேன் முத்தமிட்டால் கூட முகம்சிவக்கும் மென்கொடியே அத்தான் வரும்வரைக்கும் அன்பைத்தேக்கிக் காத்திருப்பாய்...

நியாயமோ சொல்...

நேற்றைய நினைவுகள் நெஞ்சில் வடுவாகப் பதிந்ததால் காற்றும்கூட இன்று கனமாகத் தெரியுதடி... ஊற்றுத் தண்ணீரென்று உன்னை நினைத்திருக்க ஆற்று வெள்ளமெனக் கடலில் கலந்துவிட்டாய்... போனதுதான்போனாய் படுத்தாமல் போனாயா வானவெளி யெங்குமுன்னை விதைத்துவிட்டுப் போய்விட்டாய்... காணுமிடமெல்லாம் நீயே நிறைந்துகொண்டு வாழவிடாமல் எனை விரட்டுவதும் நியாயமோ???

புதுசு கண்ணா புதுசு...

நேற்றைப்போல் இன்றைக்கும் மாற்றங்கள் இல்லாமல் மணக்க மணக்க சுவை விருந்தளிப்பாய் என வந்தேன்... தோற்றுப் போனேன் உன் தோற்றத்தின் புதுமையில்... ஆற்றுநீர்ப் புதுவெள்ளம் ஏற்றுவந்த மலரலைபோல் தமிழ்க் காற்றுக்குப் புது சுகந்தம் கற்றுத்தரவந்த சேற்றிதழ்த் தாமரையே மாற்றம் கண்ட தமிழ்மணமே மயங்கினேன் உன் அழகில்...

இயற்கை கொடியதில்லை...

படம்
இருட்டு வானத்தில் ஒளிக்கீற்றாய் ஊசிமின்னல் உருண்டு மலைமுகட்டில் முட்டிடும் மழைமேகம் விரித்த சடையுடன் அசைந்தாடும் மரக்கிளைகள் சுருட்டிப் பூவுலகைச் புரட்டிடும் புயல்காற்று அரசமரப் பொந்தில் ஐந்தாறு குருவிகள் அங்கே, காலன் புகுந்ததுபோல் காற்றின் பெருஓலம் அஞ்சி நடுங்கிய குஞ்சுகளை அரவணத்து அன்னைக் குருவி ஆறுதலாய்ச் சொன்னது... அஞ்சவேண்டாம் செல்வங்களே, அமைதியாய் உறங்கிடுங்கள்... அன்னைபோல் நமைக்காக்க இந்த அரசமரம் மட்டும்போதும்... உணவுக்கும் பொருளுக்கும் மதத்திற்கும் மொழிக்குமென்று குண்டு வெடிக்கவைத்துக் கொல்லும் மனிதர்கள்போல் இரக்கமின்றி எமை இரையாக்கிக் கொள்வதற்கு இயற்கையன்னை ஒன்றும் அத்தனை கொடியளில்லை...

கடவுளே காப்பாற்று...

படம்
பாண்டியன் காலத்துப் பழமையான கோயில் பார்க்கச் சலிக்காத பச்சிலை ஓவியங்கள் பாலும் பழமுமாய் பலப்பல அபிஷேகம் ஆனால், பாழும் மனசுமட்டும் ஏதோ ஞாபகத்தில்... வேண்டுதல் எல்லாம் நிறைவேறும் தலமென்று அர்ச்சகர் சொன்னதும் அவசரமாய் வேண்டினான்... "வாங்கிய புதுச்செருப்பை வாசலிலே விட்டுவந்தேன் போகும்வரைக்கும் அதைப் பத்திரமாய்க் காப்பாற்று" என்று...

பசுங்கிளியே தூங்கலியோ?...

ஆடிய பூந்தொட்டில் அசைதல் நின்றவுடன் பாடிய தாலாட்டுப் பாடலது முடிந்தவுடன் மூடிய பூவிதழ்கள் மெல்ல விரிவதுபோல் தேடி விரிந்த கண்கள் துழாவி வெறுமைகண்டு வாடி முகம்வருத்தி வண்ண இதழ்பிதுக்கி நாடிக் குரலுயர்த்தி 'ம்மா' என்றழைக்கையிலே பாடுபட்ட ஏழைக்குப் புதையல் கிடைத்ததுபோல் ஓடி அருகில்வந்து உயிரினிக்கச் சேர்த்தணைத்தேன் தேடிக் கண்டெடுத்த திரவியமே தீஞ்சுடரே, பாடி உறங்கவைத்தேன் பசுங்கிளியே தூங்கலியோ?