இயற்கை கொடியதில்லை...


இருட்டு வானத்தில்
ஒளிக்கீற்றாய் ஊசிமின்னல்
உருண்டு மலைமுகட்டில்
முட்டிடும் மழைமேகம்

விரித்த சடையுடன்
அசைந்தாடும் மரக்கிளைகள்
சுருட்டிப் பூவுலகைச்
புரட்டிடும் புயல்காற்று

அரசமரப் பொந்தில்
ஐந்தாறு குருவிகள்
அங்கே,
காலன் புகுந்ததுபோல்
காற்றின் பெருஓலம்

அஞ்சி நடுங்கிய
குஞ்சுகளை அரவணத்து
அன்னைக் குருவி
ஆறுதலாய்ச் சொன்னது...

அஞ்சவேண்டாம் செல்வங்களே,
அமைதியாய் உறங்கிடுங்கள்...
அன்னைபோல் நமைக்காக்க
இந்த
அரசமரம் மட்டும்போதும்...

உணவுக்கும் பொருளுக்கும்
மதத்திற்கும் மொழிக்குமென்று
குண்டு வெடிக்கவைத்துக்
கொல்லும் மனிதர்கள்போல்

இரக்கமின்றி எமை
இரையாக்கிக் கொள்வதற்கு
இயற்கையன்னை ஒன்றும்
அத்தனை கொடியளில்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!