ஜன்னலில் பூ எங்கே?




நினைவுகளெல்லாம்
உனை
நில்லாமல் சுற்றிவர
கனவுகளின் வேதனையில்
துரும்பாகச் சுழலுகிறேன்

எல்லையில்லா மனத்தவிப்பில்
இரவுகள் நீள்வதனால்
எனைக்
கல்லாகச் சமைத்திடடி
காதல்வலி தாளவில்லை

அன்று,
அப்பாவின் பின்நின்று
அவசரமாய் ஒருபார்வை
தப்பாமல் தந்துவிட்டு
தலைகுனிந்து சென்றுவிட்டாய்

கற்றாழை முட்செடியில்
காற்றில்வீழ்ந்த ஆடையைப்போல்
அப்பாவி என் இதயம்
அகப்பட்டுத் தவிக்குதடி

உன்
கன்னக்குழிகளுக்குள்
சிக்கிய என் இதயத்தை
உன்
அப்பாவுக்குத் தெரியாமல்
அப்படியே வைத்துக்கொள்

தப்பாக நான் பார்த்த
பார்வைகளின் தண்டனையாய்
கப்பமாக அதனை
உனக்கே கொடுத்துவிட்டேன்

உச்சி வெயில்பொழுதில்
உன்வீட்டுக் கடைத்தெருவில்
எத்தனை மணிநேரம்
எனைச்
சுற்றிவரச் செய்வாய் நீ?

அத்தனை கண்களும்
என்னையே கவனிக்க
நீ இன்னும் ஏனடி
உன்
சன்னலில் பூக்கவில்லை???

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!