Tuesday, May 13, 2008

வாழை - கவிதையில் பொதிந்த கதை
1. வெறுமையாய் ஒரு தனிமை

மெல்லநடை போட்டு
மேலெழும்பும் வெண்ணிலா
அல்லைப் பகலாக்கி
அழகு செய்யும் விண்மீன்கள்

சொல்லத்தெரியாத ஓர்
சோகத்தின் பிடியினில்
செல்லத்துரை தாத்தா
சிக்கியது போலிருந்தார்...

மெல்லவும் வழியில்லை
விழுங்கவும் வகையில்லை
எல்லையில்லாச் சுமையை
உள்ளுக்குள் புதைத்திருந்தார்...

கல்யாணிப் பாட்டி
கடவுளிடம் போனபின்பு
நல்வார்த்தை சொல்லி
நலம்கேட்க ஆளில்லை

பிள்ளைகள் மூவரைப்
பெற்றிருந்த போதினிலும்
தள்ளாத தந்தையிடம்
வந்தமர்ந்து பேசவில்லை

ஊருக்கே ராஜாவாய்
உயர்ந்துநின்ற பெரியவர்
வேரில்லா மரமாக
வாட்டமுற்று வாழலானார்...


2. மனப்புழுக்கம்

முற்றத்துத் திண்ணையின்
மேல்புறத்து மூலையினில்
சற்றே சரிந்த ஒரு
கயிற்றுக் கட்டிலுண்டு

அதில்,
இற்றுப்போனதுபோல்
இதயம் படபடக்க
ஒற்றையாய்த் தான்மட்டும்
சரிந்திருந்தார் நம் தாத்தா

முற்றத்துக் குழல்விளக்கும்
நிலவொளியும் சேர்ந்துகொள்ள
சுற்றியுள்ள மரக்கிளைகள்
சாய்ந்தபடி நிழல் பரப்ப

வாசலில் நிழல்கோலம்
பார்த்தபடி படுத்திருந்தார்
கன்னத்தில் நீர்க்கோலம்
வந்தவிதம் தானுணர்ந்தார்

கல்யாணிப் பாட்டி
கால்மாட்டில் அமர்ந்திருக்க
கதைகதையாய் பேசிய
நினைவுகளில் மூழ்கிப்போனார்

பிள்ளைகளின் பெருமைகளும்
பேரர்களின் குறும்புகளும்
அள்ளுகின்ற மகிழ்ச்சியுடன்
அலசியதை நினைத்துக்கொண்டார்

அன்னையென்ற ஓருறவு
அணைந்த அந்தநாள் முதலாய்
அன்போடு பாசம் வீட்டில்
அகன்றநிலை அவருணர்ந்தார்

உள்ளுக்குள் புகைந்தெழுந்த
உணர்வுகளின் பெருக்கத்தால்
வெள்ளமாய் வியர்த்திடவே
வெளியிறங்கி நடக்கலானார்.

3. மக்களைப் பெற்ற மகராசன்

குறுக்கும் நெடுக்குமாய்
நடக்கையில் மனதினுள்
குறுக்கிட்ட மகன்களின்
நினைவுகளை அசைபோட்டார்...

ஒன்றுக்கு மூன்றாகப்
பிள்ளைகள் பெற்றெடுத்து
கண்ணுக்கு இமைபோல
கருத்துடன் கவனித்து

எண்ணியதெல்லாம் கொடுத்து
எதிர்பார்ப்பை ஈடேற்றிப்
பிள்ளைகள் மூவரையும்
நல்லபடி படிக்கவைத்து

அள்ள அள்ளக் குறையாத
அத்தனை செல்வமும்
உள்ளபடி மூவருக்கும்
உரிமையாய்ப் பிரித்துத்தந்து

எள்ளளவும் குறையில்லா
எழிலோடு மனம்கவர்ந்த
பெண்களாகப் பார்த்து
பெருமையுடன் மணமுடித்து

பேரப் பிள்ளைகளைப்
பார்த்துப் பெருமையுற்று
மாரிலே போட்டு
மனம்குளிரத் தாலாட்டி

ஊர்மெச்ச வாழ்ந்திருந்தேன்
நாலுபேர்க்கு நலம்புரிந்தேன்
இல்லாள் என் மனைவியவள்
இறந்திடும் காலம்வரை.

4. எதிர்ப்பட்ட இனிய நண்பர்


செல்லத்துரை தாத்தா
நினைவுகளில் நனைந்தபடி
மெல்ல நடந்தபோது
மெல்லிய குரல்கள் கேட்டார்

தூரத்தில் ஓரிருவர்
நடந்துவரும் தோற்றம் கண்டு
யாரது என்றவாறு
விழியிடுக்கி நோக்கலானார்

நான்தான் துரை ஐயா
என்றபடி குரல்கொடுத்து
அருகில் நடந்துவந்தார்
ஆசிரியர் சவரிமுத்து

வணக்கம் சொன்னபடி
வாத்தியார் மகனும் வர
நல்லா இருக்கியளா
அண்ணாச்சி என்றபடி,

அன்னாரின் மனைவியும்
அருகினில் வந்துநிற்க
அன்போடு தாத்தாவும்
ஆசிரியர் கரம்பிடித்தார்

அண்டைவீட்டு அன்புநண்பர்
ஆசிரியர் சவரிமுத்து
ரெண்டுநாள் பயணம்சென்று
வந்தகதை எடுத்துரைக்க

முந்தைய நினைவுகளில்
மூழ்கி முகம்மலர
வந்துநின்ற நண்பரிடம்
வாழ்க்கைநலம் விசாரித்தார்.

அன்பான மனதோடு
ஆசிரியர் மனைவியும்
கல்யாணிப்பாட்டியைக்
கண்ணீருடன் நினைவுகூர்ந்து

அண்ணி இருந்தபோது
ஆருயிராய்ப் பழகினோம்
இன்று தவிக்கிறேன்
என்று மனமுடைந்தார்.

5. மகனின் வருகை

அன்போடு அளவளாவி
அந்தநாள் நினைவுகளைப்
பண்போடு பகிர்ந்தவேளை
பளிச்சென்ற ஒளிச்சிதறல்

கண்கள் ஒளியில்கூச
வந்துநின்ற மகிழ்வுந்தில்
தாத்தாவின் மூத்தமகன்
தனயனுடன் வந்திறங்க

பார்த்த கணத்தில் அந்தப்
பச்சிளம் சிறுவன்வந்து
தாத்தாவின் கரம்பிடித்து
அன்போடு நெருங்கிநின்றான்

வந்துநின்ற பெயரவனை(பேரன்)
வாரிஅன்பாய் அருகணைத்து
பிஞ்சுமுகத்தில் அன்பாய்
நெஞ்சினிக்க முத்தமிட்டார்

முத்தமிட்ட மறுநிமிடம்
சத்தமிட்டு மருமகளும்
தட்டிப் பறிப்பதுபோல்
தன்மகனை இழுத்துச்சென்றாள்.

வேளைகெட்ட வேளையினில்
வெளியில்நின்று கதைகள்பேச
புத்திகெட்டுப் போனாயோ
என்றபடி மகனை வைய

அனல்விழுந்த மலரெனவே
முகம்கறுத்துத் தன்வலியை
அகத்தினுள்ளே அழுத்திவிட்டு
ஆசிரியர் முகத்தைப் பார்த்தார்.


6. இருண்ட முகங்கள் (வெளியே)முகம்திரிந்த அனிச்சமென
மெய்விதிர்த்த அவர்களிடம்
மருமகளோ நல்லவள்தான்
வழிப்பயண அசதியென்றார்.

ஒன்றுமில்லை அதனாலென்று
நின்றவர்கள் முகம்துடைத்து
சென்றிடுங்கள் ஐயா என்று
செல்பவரைப் பார்த்துநிற்க

மெல்லத் திரும்பிச்சென்ற
செல்லத்துரை தாத்தா
தள்ளிவிட்டு வீழ்வதுபோல்
தடுமாறி விழத்தெரிந்தார்

ஐயா என்றழைத்தபடி
ஆசிரியர் மகனும்வந்து
கையணைத்துப் பிடித்தபடி
காலடியில் கூர்ந்துபார்க்க

ஒன்றுமில்லை தம்பி அது
உதவாத வாழைமரம்
இன்றுகாலை குலைபறித்து
வெட்டிப்போட்ட வெறுமைமரம்

தின்பதற்குப் பழம்கொடுத்துத்
தண்டுமுதல் இலைகள்வரை
அன்புடனே கொடுத்தபின்பு
அகற்றப்பட்ட அகதிமரம்

என்று சொல்லித் தாத்தாவும்
நன்றிசொல்லித் தான்நடக்க
குன்றனைய பெரியவரைக்
கண்டவர்கள் கண்ணீர்விட்டார்...

7. இருண்ட முகங்கள் (உள்ளே)


கைப்பிடித்து இழுத்துச்சென்று
கட்டிலிலே மகனை விட்டு
சட்டையினைக் கழற்றிவிடும்
அன்னையிடம் மகனும் கேட்டான்

பாட்டிக்கு திவசமென்று
பட்டுச்சேலை வாங்கிவந்தாய்
பாக்கு வெற்றிலையோடு
பூக்களும் வாங்கிவந்தாய்

பாட்டிக்குப் பிடித்ததாய்
பலகாரம் பட்சணங்கள்
வீட்டுக்கு வந்துசெய்ய
சமையலுக்கு ஆள்பார்த்தாய்

பாட்டிக்குப் பிடித்ததெல்லாம்
பார்த்துப்பார்த்து வாங்கிவிட்டு
தாத்தாவை மட்டும் ஏன்
பாவமாக விட்டுவிட்டாய்?

இல்லாத பாட்டிக்கு
இவ்வளவு செய்துவிட்டு
இருக்கின்ற தாத்தாவை
வருத்துகிறாய் ஏனம்மா?

நன்றாக நான் வளர்ந்து
கல்யாணம் செய்தபின்னால்
உன்னையும் இப்படித்தான்
நடத்திடவும் வேண்டுமா?

என்று முகம்பார்த்துப்
பிள்ளை கேட்டதும்
கொள்ளியை விழுங்கிய
கோழிபோல் திகைத்தவளாய்

கணவன் முகம்பார்த்தாள்
அவனும் திகைத்துநிற்க
சங்கடமாய்த் தானுணர்ந்தாள்
சட்டென்று வெளியில்சென்றாள்

பட்டென்று தாத்தாவின்
பாதத்தில் தான்விழுந்தாள்
தப்பெல்லாம் செய்துவிட்டேன்
பொறுத்திடுங்கள் என்றுசொல்லி

அப்பாவைப்போல் இனிமேல்
தப்பாமல் பார்த்துக்கொள்வேன்
என்று மருமகளும் சொல்ல
திகைத்துநின்றார் நம் தாத்தா...

முற்றும்.

4 comments:

 1. வாழைக் கதையும் கவிதையும் வெகு அழகு. சுந்தரா.

  இவ்வளவு பொறுமையாகத் தாத்தாவின் மனதை அடியொற்றி எழுதி இருக்கிறீர்கள்.

  நல்ல வேளை தாத்தா பிழைத்தார்.
  நல்ல திருப்பமாகப் பேரன் நல் வார்த்தை சொன்னானே.
  வாழ்த்துகள் மா.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கு நன்றி வல்லி அம்மா...

  அமீரகப் பயணத்துக்கு தயாராயிட்டீங்களா?

  ReplyDelete
 3. க்விதையும்
  கதையும்
  கருத்தும் நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 4. நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete