
போவதுபோல் போய்விட்டு
வந்திடுவாய் என நினைத்து
ஆவலுடன் வாயிலிலே
அகலாமல் விழிபதித்தேன்...
போனதிசை இருண்டு
புதுநிலவு வந்தபின்னும்
காணவில்லை உந்தன்முகம்
கவலையினில் மூழ்கிநின்றேன்...
பசிவருத்திப் பிள்ளையழ
பரிதவிப்பில் நானும் அழ
பெண்ணிவளின் மனம்சிதைத்து
என்னவனே எங்குசென்றாய்?
உனக்கும் எனக்குமான
உறவினைச் சிதைப்பதற்கு
இன்னொருத்தி வந்ததாக
யார்யாரோ இழித்துரைத்தார்
கல்யாணச் சேலையிலே
புதுவாசம் போகுமுன்னே
கல்யாணி நானுமுந்தன்
மனதிற்குக் கசந்தேனோ...
இறுக்கமாக என்தலைப்பில்
முடித்துவைக்க வில்லையென்று
'சுருக்'கெனவே உறவுகளும்
சொல்லிச் சிரிக்கின்றார்...
உருக்கி உயிர்குடிக்கும்
ஊராரின் பழிதீர்க்க
'விருக்'கெனவே வருவாயோ
வீண்வார்த்தை களைவாயோ...
Tuesday, June 10, 2008
கல்யாணியின் கணவன்...
Labels: கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
எதை விடுவது
அத்தனை வரிகளும் அருமை
இயல்பான நடை
அழகான கவிதை
தொடர்ச்சியான உங்கள் வருகைக்கும், மகிழ்ச்சியூட்டும் உங்கள் ஊக்குவித்தலுக்கும் நன்றிகள் திகழ்மிளிர்!
சுந்தரா அப்படியே ஒரு சோக முகம் வரைந்து மாட்டியது போலத்தெரிகிறது. எத்ட்தனை பெண்களின் வாழ்விலும் நடக்கும் அத்தியாயம் தானெ.
வெகு இயல்பு. அழகு.
உங்க பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது வல்லிம்மா...
Post a Comment