உறவுகளைச் சுமந்தவன்...



கடைத்தெருவில் உந்தன்
கரம்பிடித்துக் கொண்டபடி
கண்ணில்கண்ட அத்தனையும்
கேட்டுக்கேட்டு அடம்பிடிப்பேன்...

கொஞ்சமும் தயங்காமல்
தங்கையென் முகம்பார்த்து
அண்ணன் வளர்ந்தபின்னே
அத்தனையும் தருவேனென்பாய்...

நடைநடந்து என் பாதம்
நோகுமென்று மனம்வருந்தி
உப்புமூட்டையாக எனை
வீடுவரை சுமந்துசெல்வாய்...

வறுமையுடன் போராடும்
உறவுகளைச் சுமப்பதற்காய்
சுடும்நீர் விழிநனைக்க
கடல்கடந்து பயணம்கொண்டாய்...

முதுகில் சுமந்தபாசம்
மனசில் கனத்திருக்க
விரைவில் வருவாயென்று
வருஷம்பல காத்திருந்தேன்...

தந்தைக்குப் பணமனுப்பி
தங்கையென் மணமுடித்தாய்
ஊரும்உறவும் மெச்ச
சீர்சிறப்புச் செய்யவைத்தாய்...

மாவரைத்துப் பிழைத்ததுபோய்
மாடிமனை ஆனபின்னும்
நாடுவிட்டுப் போனநீயும்
வீடுவரத் தாமதமேன்?

உன்னுடைய இடத்தை
இங்கே
பொன்பொருளால் நிரப்பிவிட்டு
என்னுடைய சோதரனே,
எங்கே நீ தவிக்கின்றாயோ?...

கருத்துகள்

  1. தந்தைக்குப் பணமனுப்பி
    தங்கையென் மணமுடித்தாய்
    ஊரும்உறவும் மெச்ச
    சீர்சிறப்புச் செய்யவைத்தாய்...

    மாவரைத்துப் பிழைத்ததுபோய்
    மாடிமனை ஆனபின்னும்
    நாடுவிட்டுப் போனநீயும்
    வீடுவரத் தாமதமேன்?//

    மிக வருத்தம் தரும் உண்மை.
    அழகா அமைந்திருக்கிறது கவிதை. சுந்தரா.

    பதிலளிநீக்கு
  2. அந்நிய நாட்டில் வசிக்கும் நிறையப்பேரின் அனுபவங்களைக் கேட்கையில் மனசில் வருத்தம்தான் தோன்றுகிறது வல்லிம்மா...

    நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!