என்னத்தைச் செய்தீங்க -( 2)

என்னத்தைச் செய்தீங்க...(இரண்டாவது பகுதி)

"என்னங்க, இதைப்பிடிங்க...
என்றகுரல் கேட்டவுடன்
கன்னத்தில் அறைந்ததுபோல்
கனவொதுங்கி நிஜம்திரும்ப
முன்நெற்றி வியர்வையினைப்
பின்கையால் துடைத்தபடி
கிண்ணத்துக் காப்பியினைத்
தன்கையில் வாங்கிக்கொண்டார்.

ஆற்றிக் குடிப்பதற்கு
அவசியம் இல்லெனினும்
ஊற்றி மெதுவாக
ஓசையின்றிக் குடித்துவிட்டு
காற்றில்லாப் புழுக்கத்தால்
கைத்துண்டால் விசிறிக்கொள்ள,
"நேற்றைக்குக் கேட்டேனே,
அது என்னாச்சு" என்றுகேட்டாள்.

என்னத்தைக் கேட்டாள்?
என்று மனசுக்குள்
முன்னுக்கும் பின்னுக்கும்
துழாவித் தோற்றவராய்,
"எத்தனையோ கேட்டிருப்பாய்
எதையென்று நான்நினைக்க?"
சத்தம் தேய்ந்துவர
முனகினார் செல்வமணி...

"ஓ...
அத்தனை அலட்சியமோ?
என்று குரலுயர்த்தி,
இத்தனை வருஷம்
மாடாய் உழைச்சிருக்கேன்
மக்களைப் பெத்து
பத்திரமா வளர்த்திருக்கேன்
எத்தனைதான் செய்தாலும்
என்
பேச்சுக்கு மதிப்பில்லை...

என்று விழிகசக்கி
கண்ணீரைப் பிழிந்தெடுத்து
என்றோ நடந்ததெல்லாம்
ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து
" அப்பாவின் வீட்டில்
அரசியாய் வாழ்ந்திருந்தேன்,
இப்படி வந்து இங்கே
வருந்துகிறேன் என்றழுதாள்.

கருத்துகள்

  1. கண்ணைக் கசக்கி அழுவதைப் பார்க்க கணவர்களும் உட்கார்ந்திருக்கிறார்களா:)

    பதிலளிநீக்கு
  2. சரியாகக் கேட்டீங்க வல்லிம்மா :)

    இந்த செல்வமணி வாத்தியார் பாவம்...சட்டையைப் போட்டுகிட்டு சட்டுன்னு வெளியே கிளம்பாம மாட்டிக்கிட்டார் :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!