Tuesday, November 25, 2008

கல்லியல் ஆதி...


இந்திரனும் சந்திரனும்
இணைந்தே சதிசெய்ய
அந்தநாள் பூவுலகில்
நிகழ்ந்ததோர் அவலமிது...

சுந்தரமாய்த் தேயும்
சுடர்மிகு நிலவினுக்கு
வந்ததோர் களங்கமும்
நிரந்தரமாய் நிலைத்ததன்று...

சேவலாய் நள்ளிரவில்
சந்திரன் குரலெழுப்ப
ஆவலாய் நதியாடப்
புறப்பட்ட கௌதமனும்

ஆற்றங்கரை நோக்கி
அகன்ற அவ்வேளை,
அகலாத இரவுகண்டு
ஐயம் மிகக்கொண்டான்

கேட்ட குரலெண்ணிக்
குழப்பம் மிகுந்திடவே
மதியினில் கேள்வியைப்
பதியமிட்டு வந்தவேளை,

இந்திரனின் சதிவலையில்
இறுகப் பிணைந்தபடி
சுந்தரனாம் அன்னவனைச்
சேர்ந்திருந்தாள் அகலிகையும்...

வந்தவன் பிறனென்று
புத்திக்குப் புரிந்தபின்னும்
மந்திரம் போலவளும்
மனமிசைந்து மயங்கிநின்றாள்

கண்டான் கௌதமனும்
கண்ணெதிரே களவதனைக்
கொண்டான் பெருங்கோபம்
எரிதழலாய் மாறிநின்றான்

தன்னிலை மறந்தாள்தன்
துணைவியென்ற றிந்தவனாய்
இல்லுறை மனைவியைக்
கல்லியல் ஆதியென்றான்

விதியங்கு ஜெயித்தது
வேதனை பெருகிடவே
பதியினை நோக்கிக்
கதறினாள் அகலிகையும்...

இழிந்தனை நீயும்
இதயத்தில் என்றுரைத்து,
கழிந்திடும் உன் துயர்
காத்திருப்பாய் என்றுசொல்லி,

பழியுற்ற பெண்ணவளின்
பாவத் துயர்துடைக்க
வழியினில் ராமனும்
வருவான் என்றுரைத்தார்

ஆயிரம் ஆண்டுகள்
அகலாத உறுதியுடன்
தூயவ ளாகித்
துலங்கிடும் துடிப்புடனே

ஆவலுடன் காத்திருந்தாள்
அகந்தை அழிந்திருந்தாள்
பார்த்தறியாப் பரம்பொருளை
நோக்கியே தவமிருந்தாள்

வந்தனன் ராமனும்
வனவழியில் வில்லுடனே
விந்தையாம் திருவடித்
துகளினால் உயிரடைந்தாள்

'அன்னையே' என்று
அன்புடன் விளித்த அண்ணல்
பெண்ணவள் கொண்ட
பெருந்துயரம் மாற்றிவிட,

கண்ணிலே நீருடன்
கைதொழுது நின்றவளும்
பெண்ணாகப் பிறந்ததன்
பெருமையையும் அன்றுகண்டாள்!


"கல்லியல் ஆதி" என்ற இந்த வார்த்தைகள், "கல்லாகிக் கிடப்பாயாக" என்ற பொருளில், கௌதம முனிவனால், இந்திரனால் கற்பிழந்த தன் மனையாள் அகலிகையை நோக்கிச் சொல்லப்பட்டவையாக, கம்பனால் இராமாயண நூலில் ஆளப்பட்டவையாகும்.

கருத்தினில் உடன்பாடு, முரண்பாடு என்பனவற்றைக் கருத்தினில் கொள்ளாமல், கம்பனின் வார்த்தைகளை எளிதாக்கிப் படைக்கப்பட்டதே இக்கவிதை.

வாரணம் ஆயிரம்...


வாரணமாயிரம் சூழவேவந்து
நாரணன் நங்கையைச்
சூடிடக் கனவுகண்டு
தேடுகிறாள் கோதை
புலராத விடியலில்...

ஏக்கத்தின் மிகுதியால்
தூக்கம் தொலைந்துபோக
தூதுசொல்லத் தோதாகப்
பூங்குயிலைத் தேர்ந்தெடுக்க,

அங்கே,
தூதுசெல்லும் குயிலினமும்
சேவலுடன் கூடிநிற்க
மாதுநின்று மருகுகிறாள்
மன்மதனைச் சினந்தபடி...

காத்திருந்த கண்கள்ரெண்டும்
கலங்கிக் குளமாக
பூத்திருந்த நாளும்தேய்ந்து
பொழுதடைந்து இரவாக,

மாலையைச் சூடிய
மயக்கத்தில் மதிமயங்கி
மார்கழிப் பூவெனவே
மங்கையவள் காத்திருந்தாள்...

காதலின் வலிகண்டு
இளைத்துப்போனது மனசு
ஆனாலும்
காதல்செய்ய மட்டும்
சளைக்கவே இல்லை...

ஆழி வெண்சங்கும்
அவனுடைய குழலிசையும்
கேலிசெய்து அங்கே
குரலெழுப்பிச் சிரித்திருக்க,

ஆழிமழை வண்ணனின்
அதரச்சுவை எண்ணி
நாழிகைகள் நகர்ந்திடாமல்
தவிக்கின்றாள் நங்கையவள்...

Thursday, November 20, 2008

என்னத்தைச் செய்தீங்க... (8)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை- எட்டாவது பகுதி)

மட்டைப் பந்தாடிய
மதுரையின் சிறுவர்கள்
ஒற்றைப்புற விளக்கை
உடைத்துவிட்ட காரணத்தால்
பொன்போல மதுரைக்குப்
போன வாகனம்
புண்பட்டுத் திரும்பியதைக்
கண்டார் செல்வமணி...

சேமித்த காசெல்லாம்
செலவாகிப் போய்விடவே
சாமிக்கு நேர்ந்துவைத்த
உண்டியலைத் திறந்தெடுத்து
வாகன விளக்கினைச்
சரிசெய்து வந்தவரை
வாய்மூடி மௌனமாய்ப்
பார்த்திருந்தாள் சிவகாமி.

திருவிழாக் காலமாய்
தீபாவளி வந்தது...
பள்ளிக்குச் சென்று
திரும்பிய தந்தையிடம்
பிள்ளைகள் உடைவாங்கப்
போகலாம் என்றுரைக்க,
முள்ளிலே மிதித்தவராய்
முகம்கறுத்தார் செல்வமணி...

செல்லமகள் சொன்னது
செவியிலே கேட்கலையோ?
நல்லநாள் வருமுன்னே
நாலும் வாங்கவேண்டாமோ?
என்றுதானும் மக்களுக்கு
இசைவாகக் குரல்கொடுத்து
இன்றுபோய் அனைவருக்கும்
ஆடைவாங்கலாம் என்றாள்...

இன்றுசெல்ல இயலாது
இன்னொருநாள் வாங்கிடலாம்
என்று முகம்திருப்பி
மெதுவாகச் சொன்னபடி,
சென்றுதான் கழற்றிய
சட்டையை அணிந்தபடி
பையைத் தடவிப்பார்த்தார்
பெருமூச்சைப் படரவிட்டார்...

Sunday, November 9, 2008

என்னத்தைச் செய்தீங்க...( 7)

பள்ளிசென்ற நாட்களிலே
பயணம்செய்ய இயலாமல்
முற்றத்தில் வாகனம்
முழுவெயிலில் நிற்கக்கண்டு,
மூவாயிரம் ரூபாய்
முழுசாய்ச் செலவுவைத்து
ஆடைவாங்கிச் சூட்டிவிட்டாள்
அழகாகச் சிவகாமி...

வார இறுதிநாட்கள்
வந்தது மறுபடியும்...
சக்கரத்தில் எலுமிச்சை
குங்குமம் தடவிவைத்து
பத்திரமாய்ப் புறப்பட்டு
பழனிக்கு நேர்ந்துகொண்டு
அக்காவின் வீட்டுக்கு
அழையாமல் சென்றபோதும்,

ஆரத்தழுவிக் கொண்டு
அன்போடு வரவேற்று
காரக் கறிவறுவல்
செய்துவைத்து விருந்தளித்து,
மதுரைக்குச் சென்று
மகள்வீட்டைப் பார்த்துவர
மறுநாள் ஒருநாளும்
வாகனம் கேட்டாள் அக்கா...

அக்கா கேட்ட கணம்
'திக்'கென்று அதிர்ந்தாலும்
அக்கா நீ கேட்டும்
மறுப்பேனா என்றுசொல்லி,
பக்குவமாய்த் தன்பெருமை
காப்பாற்றும் வண்ணமாக
மதுரைக்கு வந்துநானும்
மகளைப்பார்க்க வேணுமென்றாள்...

அக்காவும் தங்கையும்
அருமை மக்களுடன்
மதுரைக்கு மகிழ்வுடன்
செல்லும் வழியிலே
மறுநாள் வேலைக்காய்
ஊர்செல்லும் கணவரை
பேருந்து நிறுத்தத்தில்
இறக்கிவிட்டாள் சிவகாமி

மத்தியான வெயில்
மண்டையைப் பிளந்தாலும்
மகிழ்வுந்தைப் பார்த்து
இகழ்நகையைச் சிந்திவிட்டு,
கரையோர இருக்கையைத்
தேர்ந்தெடுத்து அமர்ந்தபடி
பணிக்காகப் பேருந்தில்
புறப்பட்டார் செல்வமணி.

Tuesday, November 4, 2008

என்னத்தைச் செய்தீங்க...(6)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை-ஆறாவது பகுதி)

ஆரத்தி யெடுத்து
அழகாய்ப் பொட்டிட்டு
காருக்குச் செய்த
மரியாதை எதனையும்
கணவன் எனக்குக்கூடச்
செய்ததில்லை என்றபடி
தனக்குள் புலம்பியே
நெடிதுயிர்த்தார் செல்வமணி

வாகனம் வாங்கினால்
போதுமா என்ன,
வாகான ஓட்டுனரைத்
தேடுங்கள் என்றுசொல்ல
நாளுக்கு நூறென்று
நறுவிசாய்ப் பேசியே
காருக்கு ஓட்டுனரைக்
கொண்டுவந்தார் ஆசிரியர்.

வந்த ஓட்டுனரைக்
கொஞ்சமும் விட்டிடாமல்
செந்தூர்க் குமரனையும்
சீர் குலசை அம்மனையையும்
கன்னியா குமரியையும்
கடற்கரை மாதாவையும்
ரெண்டுநாள் விடுமுறையில்
கண்டுவரத் திட்டமிட்டு,

வண்டியில் புறப்பட்டு
வழியில் இளைப்பாறிவிட்டு
சென்று கிளம்புகையில்
சக்கரம் பழுதாக,
உண்டுவரக் கொண்டுசென்ற
உணவுவகை அத்தனையும்
வழியோர மரநிழலில்
உண்ணும் நிலைவரவே,

உள்ளுக்குள் எழுந்துவந்த
உக்கிரம் புதைத்தபடி,
ஊரோட கண்ணெல்லாம்
மொத்தமாய் ஒன்றுபட்டு,
காரோட சக்கரத்தைப்
பாதித்த தென்றுசொல்லி
பழுதினை நீக்கிப்பின்னர்
வீட்டுக்கே திரும்பச்சொன்னாள்...

LinkWithin

Related Posts with Thumbnails