முடிச்சவிழ்த்தான் முகுந்தனவன்!!!


துடித்த உதடுகள்
அடக்கிய வார்த்தையை
எடுத்து மறுபடியும்
சொல்லுகின்றாள் சுசீலையவள்...

அடுத்துவரும் வார்த்தை
என்னவாய் இருக்குமென்று
நடுக்கமாய்க் கணவனின்
முகக்குறிப்பைப் பார்த்துநின்றாள்...

எத்தனை வருஷமாச்சு,
என்நிலையும் வறுமையாச்சு
இத்தனைநாள் இல்லாமல்
இல்லாமை தகித்தவுடன்,
அட்டமியில் அவதரித்த
கிருஷ்ணனைப்போய் பார்ப்பதற்கும்
வெட்கமா யிருக்குதடி,
வேதனையும் தோன்றுதடி...

என்று பதிலுரைத்தான்
இயலாமை எடுத்துரைத்தான்
வழி யொன்றுமறியாமல்
வாய்மூடி நின்றவளைக்
கண்டு மனம்வருந்திக்
கண்விழிநீர் துளிர்த்தவனாய்
நின்றான் குசேலன்
நெடிதுயிர்த்தான் வார்த்தையின்றி...

பண்டு குருகுலத்தில்
பழகிய கண்ணனவன்
இன்று துவாரகையின்
மன்னனாய்த் திகழ்கின்றான்
கொண்டுபோய் அவனிடத்தில்
அன்போடு கொடுப்பதற்கும்
ஒன்றுமில்லை என்னிடத்தில்
என்றவனும் மருகிநிற்க,

ஒன்றும் எதிருரைக்க
இயலாமல் தளர்ந்தவளாய்ச்
சென்று சிறிதவலைக்
கொண்டுவந்த மாதரசி,
நன்றாய் அவலதனைத்
துண்டினில் முடித்துக்கட்டி,
தந்தாள் கணவனிடம்
செல்லுங்கள் என்றுரைத்தாள்...

சென்றான் குசேலனவன்
சோர்வுற்ற நடையுடனே
கண்டான் கண்ணவன்
தாவிவந்து அரவணைத்தான்
வண்டார்குழல் மனையாள்
ருக்மணியை உடனழைத்து
கொண்டான் பேருவகை
கொண்டாடி மகிழ்ச்சியுற்றான்...

என்புதோல் போர்த்திட்ட
ஏழை ஒருவனுக்கு
மன்னவன் கால்பிடித்துப்
பணிவிடை செய்ததன்றி,
மன்னவன் மனைவியும்
அன்னவன் வறியனுக்குச்
சாமரம் வீசிடவே
சகலரும் வியந்துநின்றார்...

என்னினிய தோழனே,
முன்னைய நம்நினைவுகளை
இன்று நினைத்தாலும்
இனிக்குமென்று சொன்னபடி,
உன்னுடைய தோழனுக்கு
என்ன நீயும் கொண்டுவந்தாய்?
என்று முகிலன் கேட்டான்,
குசேலனும் நாணிநின்றான்...

கந்தையில் பொதிந்துவந்த
சின்னஞ்சிறு முடிச்சை
சிந்தையில் நாணமிகத்
தந்த மறுகணமே,
அந்தத் துணிமுடிச்சை
அவிழ்த்த மன்னவனும்
தின்றான் ஒருபிடியை
திருமுகம் மலரநின்றான்...

இன்று நீ தந்த
இணையற்ற சுவையுணவால்
நன்று நான் மகிழ்ந்தேன்
நண்பனே என்றபடி,
அன்புடன் தோழனை
அரண்மனையில் சீராட்டித்
தன்னுடன் தங்கவைத்து
மறுநாள் அனுப்பிவைத்தான்...

கண்ணனின் பாசத்தைக்
கருத்தினில் சுமந்தபடி,
மின்னலாய் நடையிட்டு
மிடுக்காய் உடையுடுத்தி
தன்னுடைய ஊர்வந்த
தரித்திரன் குசேலனவன்,
தன்மனையின் இருப்பிடத்தில்
பொன்னெழில் மாடம்கண்டான்...

வந்த வழிதவறோ
என்று திகைத்தவேளை,
இன்னிசை முழவொலிக்க
ஏந்திழையர் பண்ணிசைக்க,
புன்னகையை மிஞ்சும்
பொன்னகைகள் சுமந்தபடி,
தன்மனையாள் தோற்றம்கண்டான்
மாயவனின் அருளுணர்ந்தான்!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!