இடுகைகள்

மார்ச், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாயானாய் நீயும்...

ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து உனையங்கே அமரவைத்தேன் கண்ணுக்கு இமைபோலக் காதலுடன் கவனித்தேன்... உணவளிக்க வந்தாலும் உர்ரென்று நீ சினக்க கோபமேதும் கொள்ளாமல் கனிவுடனே அதை ரசித்தேன்... எத்தனை பொறுமைகொண்டாய் எங்கு நீயும் கற்றுக்கொண்டாய்? பத்திரண்டு நாள்வரைக்கும் பரிவுடனே அமர்ந்திருந்தாய்... முத்துப்போல் அலகுகொத்தி மெல்லமெல்ல ஓடுடைத்து அத்தனை குஞ்சுகளும் முகிழ்த்துவர அருகணைத்தாய்... பக்கத்தில் யாரும்வந்தால் பகைவர்களைப் பார்ப்பதுபோல் உக்கிரம் காட்டினாய் உயிர்த்தாயாய் வளையவந்தாய்.

மண்ணின் மடியில்...

கடந்தகால நினைவுகளைக் காப்பாற்றிவைத்திருக்கும் சொந்த மண்ணின் சுகமான சுவாசம்... சுகந்த மலர்களின் வாசம் சுமந்தபடி சுற்றித் திரியும் சுத்தமான காற்று... சாணம் தெளித்த முற்றத்து வாயிலில் கோலம் விரித்த கொள்ளை அழகு... பாதம் வருடும் பன்னீர் மலர்களாய் பள்ளிக் காலத்துப் பழைய நினைவுகள்... நினைவுகளைப்போலவே மிகவும் பழமையாய் நான் பாதம் பதித்த பழைய தெருக்கள்... பயிரினை வருடிப் பலகுரலில் பாடி விளையாடி நடந்த வயலின் வரப்புகள்... வைக்கோல் அடியினில் காய் பழுக்கவைத்துப் பங்கிட்டுச் சுவைத்த வாழைத் தோட்டங்கள்... அம்மாவுக்குத் தெரியாமல் ஐந்து பைசாவுக்கு சுக்குமிட்டாய் வாங்கிய செல்லண்ணன் கடை... எருக்கம் பூக்களை இறுக்கக் கட்டிவைத்து பரிட்சைக்கு வேண்டிய பாதை விநாயகர்... உலுக்கிப் புளிபறித்து உப்பிட்டுத் தின்ற ஊர்க் கோவில் புளிய மரம்... என் இளமையின் சுவடுகளை இன்னமும் எறியாமல் தாங்கிக்கொண்டிருக்கும் தாய்மண்ணை ஸ்பரிசித்தேன்... காலணிகள் உதறிக் கால்களைப் பதிக்கையில் ஞாபகங்கள் தந்த நெஞ்சின் நினைவினால் கண்களில் துளிர்த்தது கண்ணீரல்ல... என் இளமையின் மணம்வீசும் பன்னீர்...

கேளடி என் தோழி...

உரக்கச் சொல்லிவிட்டால் பிழையாய்த் தோன்றுமென்று குரல் இறக்கிச் சொல்லுகிறேன் கேளடி என் தோழி... ஊரென்பார் பேரென்பார் உயர்ந்த தமிழ்க் குடியென்பார் ஊருக்குள் சாதிசொல்லி ஒதுக்கிடுதல் யார்சொல்வார்? உறவென்பார் நட்பென்பார் ஒன்றுக்குள் ஒன்றென்பார் துயரத்தில் உதவிகேட்டால் கதவடைத்துப் போய்விடுவார்... ஆணென்பார் பெண்ணென்பார் அம்மையப்பன் ஒன்றென்பார் அடுக்களையில் பெண்ணினத்தை அடைத்து வைத்தல் விதியென்பார்... நாடென்பார் இனமென்பார் நாட்டுமக்கள் சமமென்பார் மற்றநாட்டுப் பெண்கள்வந்தால் மானபங்கம் செய்திடுவார்... ஏடென்பார் எழுத்தென்பார் எண்ணெழுத்தும் கண்ணென்பார் கல்விக்கண் கொடுப்பதற்கும் கையூட்டுக் கேட்டிடுவார்... இன்னமும் நான் சொல்லிடுவேன் யாருமிதைக் கேட்டுவிட்டால் இந்தியரின் எதிரியென்று ஏளனமும் செய்திடுவார்!!!

மலர்கள் அழகுதான்!

பூக்களின் மணத்தினால் பூப்படைந்த பொழுதினில் வண்டுகள் பாட்டிசைக்க நாணிவிழும் எழில் மலர்கள்... பன்னீர்ப் பூக்களின் பரந்த விரிப்பினை எட்டிப் பார்த்திடும் எழில் முழுநிலவு... மண்மடி சேர்ந்த முல்லையின் சிரிப்பினில் கொள்ளை போனது விண்மீனின் கூட்டம்... கிணற்று நீரினில் விரித்த மலர்ப்போர்வை கலைத்து விளையாடுது கள்ளமில்லா மீன்கள்... முற்றத்து நிலவொளியில் தென்றலின் சிலுசிலுப்பில் சத்தமின்றி உதிருது வேம்பின் பூக்கள்... காலை விடியலில் போர்வை உதறலில் தரையெங்கும் விரிந்தது கூந்தலின் மலர்கள்... ஊரோரக் காட்டில் உடல் உறங்கும் மேட்டில் இன்னமும் உறங்காத வெள்ளை மலர்கள்... இப்படி, வீதியில் தொடங்கி விதி முடியும் எல்லைவரை எங்கே விழுந்தாலும் மலர்கள் அழகுதான்....

எந்த முகம் உனது?

காலைவிடியல் முதல் கண்ணயறும் இரவுவரை எத்தனையோ முறை என்னை நீ பார்க்கிறாய் எந்தமுகம் உனதென்று இன்னமும் புரியவில்லை... ஏனிந்தக் குழப்பமென்று எனக்கும் தெரியவில்லை... இருளோடு இணைந்ததால் இடுங்கிய விழிகளுடன் ஒளிக்குப் பழகாத உறக்க முகம்... பல்லில் நுரைகோர்த்து பலவேஷம் காட்டியே என்னைப் பயமுறுத்தும் எதிரிமுகம்... ஈரக்கூந்தலை வாரிமுடிக்குமுன் எட்டிஎட்டிப் பார்க்கும் ஏக்க முகம்... பின்னல் அழகில் பிழையேதும் தோன்றினால் அவிழ்த்துக் கலைத்திடும் எரிச்சல் முகம்... பின்னி முடிப்பதற்குள் பொழுதெல்லாம் போச்சென்று அன்னை திட்டினால் ஆத்திர முகம்... ஆகும் மணிபார்த்து அரக்கப்பரக்கவே அழுத்திப் பொட்டிடும் அவசர முகம்... அக்காவுக்கு மட்டும் அதிகம் பூவா என்று பொருமிச் சண்டையிடும் பொறாமை முகம்... புத்தகப்பை கொள்ளாப் பாடச்சுமையுடன் பள்ளிவிட்டுத் திரும்பிய பாவ முகம்... மாலைப் பொழுதினில் மயக்கும் இசையினில் மலர்ந்து விரிந்திருக்கும் மகிழ்வு முகம்... படிக்கும் பொழுதினில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கையில் நோக்கிடும் குறும்பு முகம்... இரவின் மடியினில் உறங்கச் செல்லுமுன் கனவு சுமந்திருக்கும் கவிதை முகம்... எந்த முகம் உனது? இன