இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடன், இரவல், இலவசம்

கேட்டுக்கேட்டு வாங்கினான் கொடுக்கையில் கசந்தது கோப்பையிலிருந்த காப்பியும் கொடுத்தவனின் நட்பும். ************************ கூறைப்புடவையைக் கழற்றிவிட்டு வேறுபுடவை மாற்றச்சொல்லி விலகிப்போனார்கள் மற்றவர்கள்... விலகத்தோன்றாமல் அறைக்குள்ளேயே இருந்தது, இரவலாய் நகைகொடுத்த ராணியக்காவின் பார்வை. **************************** பாத்திரத்தில் இருந்த பழங்கஞ்சிச் சோற்றை பக்கத்துவீட்டிலிருந்துவந்த கோழிக்குழம்பு வாசனையுடன் சேர்த்துச் சாப்பிட்டுச் சிலாகித்துக்கொண்டது, குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த கூடைக்காரியின் பிள்ளை.

பூக்களைச் சிதைக்காதீர்கள்!

என்றைக்கும்போல் அவன் இரைந்து கொண்டிருந்தான் அவளைச், 'சண்டைக்கு வாடி' என்றழைக்கிற தோரணையில்... "இன்றைக்கும் என்னிடத்தில் தோற்பாய் நீ" என்பதுபோல், கண்டுகொள்ளாமல் கர்வமாய் அவன் மனைவி... ஒன்றுக்கும் உதவாத ஆணவத்தைக் கட்டிக்கொண்டு தினம் சண்டைக் காட்சிகளை அரங்கேற்றிப் பார்த்திருக்க, காதலும் கனிவுமாய் அமைத்துக்கொண்ட வாழ்க்கை இன்று, துடுப்புகளைத் தொலைத்துவிட்டுச் சுற்றுகிற படகாக... எந்த நேரத்தில் மூழ்குமோ என்று அஞ்சி, சொந்தங்கள் தேடிப்போய் பெற்றவர்கள் சொல்லியழ, இவை எதுவுமே புரியாமல், தாய்மடியின் வெறுமையில் துவண்டுபோன கன்றுகளாய், யார்மடியில் புதையவென்று புரியாமல் தவிக்கிற பிள்ளைகள்... இப்படியே, காசும் கர்வமும் சபலமும் சங்கடமுமாய் வீட்டுக்குள் வெடிக்கிற போராட்டச் சத்தத்தில், ஒடுங்கிப் போகின்றன ஒன்றுமறியாத சின்னப்பூக்கள்.

கிறக்கம்!

நெஞ்சுமுட்டக் குடித்திருந்தேன்... கொஞ்சமாய்க் கண்திறக்க முயற்சித்துத் தோற்றுப்போனேன்... இழுத்துச் சொருகிக்கொண்டன இமைகள் ரெண்டும்... "பாரு இந்தப் பயலை..."என்று பரிகாசம் பேசினார்கள் பக்கத்தி லிருந்தவர்கள்... அவர்களுக்கெல்லாம் புரியவாபோகிறது என்னுடைய நிலைமை? மூடிய கண்களுக்குள் பேசியமுகங்கள் வந்துபோனது... அவற்றில், ஒற்றை முகம் மட்டும் ஒளிவட்டம் பூசிக்கொண்டு... காலை நிமிண்டியும் கன்னத்தைத் தட்டியும் கலைக்கப் பார்க்கிறார்கள் என்னுடைய, கிறக்கமான உறக்கத்தை... ஆனால், நெஞ்சுப் பக்கத்தில் சின்னதாய்த் துடித்தபடி, கதகதப்பைக் கொடுத்த அந்த அருகாமையிலிருந்து அகலத்தான் முடியவில்லை... "கொஞ்சியது போதும், கொஞ்சம் நிமிர்ந்திருடா..." என்று பொய்க்கோபம் காட்டி, நிமிர்த்திவைத்து என்முதுகை நீவுகிறாள் அம்மா... கெட்டுப்போனது சுகமான தூக்கமென்று முட்டிக்கொண்டு வந்தது கோபம்... இனி, எப்போ நான் ஏப்பம்விட்டு, எப்போதான் தூங்குவதாம்?

ஆச்சி ரொம்பத்தான் மாறிப்போச்சு!

அப்பல்லாம் ஆச்சிக்கு அடுத்த வீடே தெரியாது... எப்போதும் பிள்ளைகள், இல்லாவிட்டால் புருஷனென்று தப்பாமல் தன்வீட்டுக் கதையைத்தான் நமக்குச்சொல்லும்... ஊர்கண்ணு பட்டிடாம உலையடுப்பு அவிஞ்சிடாம ஆறிரண்டு பிள்ளைகளை அடுத்தடுத்துத் தான்பெற்று பேர்சொல்ல வளர்த்ததெல்லாம் பெருமிதம் பொங்கச்சொல்லும்... எப்போதாவது அலுத்துவிட்டால் இலவச இணைப்பாக, வச்சிருந்த நகைநட்டு, வளர்த்துவந்த ஆடு மாடு, முற்றத்து மரத்தடியில் நட்டுவைத்த சாமியென்று அத்தனை விஷயமும் அழகழகாய் அடுக்கிச் சொல்லும்... ஆனா, இப்பல்லாம் கதைகேட்டா எந்தக்கதை சொல்வதென்று ஆச்சி ரொம்பத்தான் தவிக்கிறது... அடுக்கடுக்காய்க் கஷ்டப்பட்ட அபியின் வீட்டில் நுழைந்து, அதிகாரம் குறையாத அரசியை அதிசயித்து, கஷ்டமே படும் அந்தக் கஸ்தூரிக்குக் கண்கலங்கி, துரதிர்ஷ்டம் தொடருகிற துளசிக்காய்த் துக்கம்கொண்டு, அர்ச்சனாவின் மாமியாரை ஆத்திரமாய்த் திட்டிவிட்டு, செல்லம்மாவின் கதைவரைக்கும் சொல்லிச்சொல்லி மாய்கிறது... இந்தக்கதை வேண்டாம் ஆச்சி, வேறுகதை சொல் என்றால் கள்ளிக்காட்டில் பார்த்த பள்ளிக்கூடக் கதையைச் சொல்ல, உள்ளபடி, ஏங்கித்தான்

அப்பாவும் அவனும்!

வீட்டுக்குள் நுழைகையில் நள்ளிரவாகியிருந்தது... உள்ளே, ஒற்றை விளக்கொளியில் உறங்காதிருந்தது வீடு... தேடியெடுத்த பதிலுடன் தைரியமாய் நுழைகையில், வாசல்படி தாண்டி வந்து விழுந்தன நெல்லைச் சீமையின் மண்மணம் மாறாத வசவுகள்... அப்பாவின் வசவுக்கு எதிர் வசவு தேடாமல் சட்டையைச் சுருட்டித் தலைக்கடியில் கொடுத்தபடி, மிதிவண்டித் திண்ணையில் ஒருநொடியில் உறங்கிப்போனான்... ஒற்றை விளக்கோடு வசவுகளும் ஓய்ந்திட, சத்தமின்றித் தூங்கியது வீடு... முப்பது நிமிடங்கள் முழுமையாய்க் கரையுமுன் அவன் தந்தை, தொட் டெழுப்பினர் தன் மனைவியை மெதுவாக... என்னவென்று கேட்டபடி எழுந்த மனைவியிடம் சொன்னார் மெதுவாக, "வெளியே, பிள்ளைக்குக் கொசுக் கடிக்கும், போய் போர்த்திவிட்டு வா" என்று!

என்னையும் புரிந்துகொள்ளேன்...

நான் கடந்து போகும்வரை நகராமல் ரசித்துவிட்டுத் தான் கடந்துபோகிறாய்... சொல்,நானும் அழகுதானே? தாமதமாய் வந்தாலும் தகவல்சொல்ல மறப்பதில்லை ஆனாலும், கேவலமாய்த் திட்டுகிறாய்... என் பெருமூச்சே பதிலுனக்கு. இரவு நேரத்தில் என்னோடு வந்தாய்... உன்னைத் தாலாட்டி மடியிலிட்டு இதமாகத் தூங்கவைத்தேன்... ஆனால், போகிற அவசரத்தில் உடைமைகளைச் சேகரித்து, எட்டியும் பார்க்காமல் என்னை விட்டுப் போகின்றாய்... இதைக் குற்றமென்று சொல்லிக் கொடிபிடிக்க மாட்டேன் நான்... ஆனாலும், என் நெஞ்சுக்குள் புகைந்திடும் நீண்டநாள் குமுறல் இது... அதுபோல, எத்தனையோ உறவுகளைச் சேர்த்துத்தான் வைத்தேன்... ஆனாலும், என்னுடைய சிநேகிதத்தில் உனக்கு எப்போதும் சந்தேகம்தான்... குற்றமென்ன செய்தேன்? கொடுக்கிற காசுக்குத் தக்கபடி கவனிப்பேன்... கூடப் பணம்கொடுத்தால் குளிரவைத்து சுகம்கொடுப்பேன்... ஆனால், அதற்காக நீ, சமயத்தில் காசே கொடுக்காமல் கன்னம்வைத்தால் என்ன அர்த்தம்? எத்தனையோ தவறுகள் எங்கேயோ நடக்கிறதுதான்... அதற்காக, என்னைச் சிதைத்துப் பார்ப்பதில் உனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி? எனக்கும் வலிக்கிறது, ஆ

என்னோட கதையும் சோகம்தான்!

வெள்ளி செவ்வாய் தவிர மத்தநாளில் விரதம் அதுவும், வெள்ளை வெறுஞ்சோறு வெஞ்சனமெல்லாம் இல்ல... அள்ளிவச்ச சோறும் ஆடுகோழி தின்னுபோக எஞ்சிய மிச்சம்தான், என் வயிறும் நிறையுதில்ல... நல்லநாள் பெரியநாளில் நாலுகுடம் தண்ணி, வெல்லமிட்ட சோறு வேகவச்ச கடலை... பிள்ளைகள் பந்தடிக்கப் பேசாத நடுவர், பெண்களின் சண்டையிலோ கண்ணவிஞ்ச கடவுள்... இன்னுமென்ன சொல்ல, என்னுடைய பெருமையின்னு? பிள்ளையாரா யிருப்பதற்குப் பெருச்சாளியே தேவலாம்தான்... **************************************     இந்தக் கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க,   இங்கே   அழுத்துங்க...

தரிசு

தரிசாக் கிடக்கிற மேக்காட்டு பூமிய வெறுசா வச்சிருந்து ஒண்ணும் பலனில்ல... வெரசா அத வித்து வேற காணி வாங்கிப்போட்டா மகசூலும் ஆகும் மனசுக்கும் நிறைவுபாரு.... அம்மா உரக்கச்சொன்னாள் அறைக்குள் மனமுடைந்து அழுதாள் அவன் மனைவி... சும்மா அவளைப் பழியேற்கவைத்துவிட்டு அம்மா, சரியென்றான் அவன்...

முகவரி

படம்
தன்னுடைய முகவரியை உலகுக்கு உணர்த்த எண்ணி ஓடிக்களைத்த அவன் திரும்பிப் பார்க்கிறான்... முகச்சுருக்க வரிகளால் அவனுடைய முகமே அவனுக்கு வித்தியாசமாய்...

நெருப்பிலே பிறந்த சாதி

மேல்சாதிப் பெண்ணும் கீழ்ச்சாதிப் பையனும் உறவுகளை உதறிவிட்டு ஊரெல்லைக் கோயிலிலே மாலைமாற்றிக் கொண்டார்கள்... அடியும் தடியுமாக விடிந்தது அன்றைய பொழுது... கீழ்ச்சாதித் தெருவெங்கும் மேல்சாதித் தலைகள் மோதலில் உடைந்ததோ இருசாதிச் சிலைகள்... ஊர்மத்தி ஆலமரம் உட்கார்ந்த பெரிசுகள் வேரணைத்து உட்கார்ந்த வேடிக்கை மனிதர்கள்... சாதிவிட்டுச் சாதிமாறிக் கல்யாணம் செய்தவரை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க ஓலமிட்ட உறவுகள்... கோலமிட்ட தெருக்களெல்லாம் ஆளரவ மற்றுப்போய் ஆலமரத் தடியிருந்து ரசித்ததோ வசவுகள்... அடுப்பில் சோறுவைத்ததை மறந்து கூரைவீட்டு மீனாட்சி ஊர்வாயைப் பார்த்தபடி கதைகேட்டு நின்றிருக்க, ஆளெதுவும் பார்க்காமல் அந்தஸ்தும் அறியாமல் கீழ்ச்சாதித் தீ பரவி மேல்சாதித் தெருவணைக்க ஊரெல்லாம் ஒன்றாகி ஓடி யணைத்தது தீயை... அதற்குள், காற்றுக்கும் நெருப்புக்கும் இரையானது ஒருபகுதி... சாதி,சாதியென்று சத்தமிட்ட சனமெல்லாம் வீதிவேலை முடிந்ததென்று வீட்டுவேலை பார்க்கச் செல்ல, ஈரமான விழிகளும் எரிந்துபோன உடமையுமாய் அங்கே, வீடிழந்த சாதியொன்று வீதியிலே உதயமாச்சு... இந்தக்கவிதை, ய

இன்னுமொரு அன்னையாக...

அவள், வந்து வளைகுலுங்க நின்ற தருணத்தில் கவனித்தேன்... முன்பைவிட, இன்னும் தளர்ந்திருந்தாள் கண்கள் சோர்ந்திருந்தாள்... இடுப்பினில் கைவைத்து இடையிடையே நீவிவிட்டு நிறைமாதப் பூரிப்பில் நின்ற அவளிடம், என்ன சொல்வதென்று யோசித்த அக்கணத்தில், புன்னகையைப் பரிசாக்கி தன் புடவைத் தலைப்பினால் என்முகம் துடைத்துவிட்டாள்... என்னவென்று கேட்டபடி என்னை வருடியது அவள் பார்வை... என்னவோ தெரியவில்லை... எதுவும் சொல்லத்தோன்றாமல் கண்கள் கலங்கியது எனக்கு.

நிழல்படமும் நினைவுகளும்

படம்
அன்று, புத்தக அடுக்கினைப் புரட்டிப்பார்த்தபோது சிக்கியது அந்தச் சிறுவயதுப் புகைப்படம்... மரத்தடி நிழலில் முகம்கொள்ளாச் சிரிப்புடன் நான்... அருகில், தோளில் கைபோட்டுத் தோழியொருத்தி... பொய் சொல்லி என்னைவிட்டுப் பிரிந்துசென்ற பூரணி... பை நிறையப் பொரியோடு பள்ளிவரும் பார்வதி, கையெழுத்தால் அனைவரையும் கவர்ந்துவிடும் கலைவாணி... அழகழகாய்க் கோலமிடச் சொல்லித்தந்த அலமேலு, விசிலடிச்சுப் படம்பார்த்த விஷயம் சொன்ன வானதி... பசிவேளை உணவையும் பேசித்தீர்த்த கதைகளையும் பேசாமல் எங்களுடன் பகிர்ந்துகொண்ட  ஆலமரம்... எத்தனை நினைவுகள்! எத்தனை சுவடுகள்!! பொக்கிஷமாய் இளமையின் நினைவுகளைச் சுமந்திருந்த சித்திரத்தை வருடினேன்... புத்தகப்பை நிறையப் பூரிப்பைச் சுமந்திருந்த பள்ளி வயதின் அத்தனை மகிழ்ச்சியையும் அப்போதும் தந்தது அந்தப் புகைப்படம்!

முதுமை அத்தியாயம்

படம்
திரைகட லோடி அன்று திரவியம் தேடிவைத்த துலுக்காணக் கிழவரின் அழுக்கான பாத்திரம் நிரம்பிக் கிடக்கிறது, மிச்சச் சோறும் கொச்சை வசவுகளுமாக...

என்னத்தைச் செய்தீங்க...(நிறைவுப்பகுதி)

கையிருந்த மோதிரம் காசான உண்மையினை ஐயமின்றி உணந்திட்டாள் அவர் மனைவி சிவகாமி... பொய்யேதும் சொல்லிப் புதுக்குழப்பம் செய்யாமல் பைய இடத்தைவிட்டு அகன்றார் செல்வமணி... தான்கொண்ட ஆசையால் தன்குடும்பம் கடனுற்ற வேதனையைச் சொல்லாமல் விதிர்த்துநின்றாள் சிவகாமி ஆதரவாய் அவள்மனதைப் புரிந்துகொண்ட ஆசிரியர் பாதகம் இல்லை எல்லாம் சரியாகும் என்றுரைத்தார்... புத்தி தடுமாறிப் பேசுவார் சொல்கேட்டு சக்திக்குமீறியதாய்ச் சங்கடத்தைச் சேர்த்துவிட்டேன் புத்திக்கு எட்டிப் புலனாகும் நேரத்தில் எத்தனையோ இழந்துவிட்டோம் என்றழுதாள் சிவகாமி எதையும் இழக்கவில்லை எதுவும் விட்டுப்போகவில்லை கனவாக வந்துவிட்டுப் போனதோர் காட்சியிது உனையே நீ புரிந்துகொள்ள உண்மைநிலை அறிந்துகொள்ள கொஞ்சம் செலவழித்துக் கண்டதோர் காட்சியிது பிழையான காட்சியெல்லாம் போயகல இனி வாழ்வில் நலமே பெருகிடும் நம்பிட வேண்டுமென்றார். இழையோடும் கண்ணீரை அழுத்தித் துடைத்துவிட்டுப் பலகாரம் செய்வதற்குப் புறப்பட்டாள் சிவகாமி விடிந்தது தீபாவளி வீட்டிலே மகிழ்ச்சிபொங்க விதவிதமாய் இனிப்புகளும் விருந்தும் மணமணக்க புதியதாய் வாழ்கையைப்

தீபாவளி மிச்சங்கள்

விடிய விடிய விடாத வேட்டுச்சத்தம்... உறங்கிவிட்ட அம்மாவின் தலைப்பினைப் பிடித்தபடி, காதுகளை மூடிக்கொண்டு கண்திறந்து படுத்திருந்தான் மகன்... சிதறிய வாணங்கள் இடைவெளியில் தெரிந்தபோது, கூரையிலும் விழுமோவென்று பதறித்தான்போனது மனசு... உறக்கமில் லாதவனின் உள்ளம் புரிந்ததுபோல் புகையோடு விரைவாகப் புலர்ந்தது புதுப்பொழுது... ஆளரவ மில்லாமல் உறங்கிக் கிடந்தது வீதி... அங்கே, வெடிக்காத சரவெடி அடிக்காத பொட்டுவெடி எரியாத மத்தாப்பூ விரியாத பூச்சட்டி ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கம் தலையெடுக்கக் காகிதக் குப்பையைக் கண்களால் துழாவுகிறான், கால்சட்டை நழுவிவரக் கைப்பிடித்த சிறுவனவன்...

புதிதாய்ப் பிறந்தவன்

மருத்துவமனைப் படுக்கையில் அவள் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்... அடுக்களையில் தவறிவீழ்ந்து அடிபட்டுக் கிடந்தவளை அடுத்தவீட்டார் ஓடிவந்து மருத்துவ மனையில் சேர்க்க, குடித்துவிட்டு நள்ளிரவில் வீடுவந்தான் கணவன் அவன்... துணையாரு மில்லாமல் நிறைமாதம் சுமந்த அவள் வலிகொண்டு வேதனையில் நிலைகுலைந்து போயிருந்தாள்... அவள் நிலைகண்ட அதிர்ச்சியில் அவனுக்கு மனசைவிடச் சட்டென்று தெளிந்தது போதை... வெளிர்த்த முகமும் துளிர்த்த கண் நீருமாய் அவளைப் பார்க்கையில் என்னவோ செய்தது அவனுக்கு... ஆனால் அவள், துடிக்கவைத்த வலியையும் பொருட் படுத்தாதவளாய், அடுத்து ஒரு பிறவி வந்தால் அதிலும் உங்களோடு வாழவே விருப்பமென்றாள்... "பைத்தியக்காரி... நேற்றுவரை நான் நிறையப் படுத்தினாலும் கேட்கிறாள் பார்" என்று அவன் தனக்குள் வியந்தபோது கேட்காமலே துளிர்த்தது கண்ணீர்... "பிதற்றாமலிரு" என்று அவளை அதட்டிவிட்டு மருத்துவரை அழைக்கிறேன் என்று அவன் எழுந்தபோது, "இதை மட்டும் கேளுங்கள்" என்று கரம்பிடித்து நிறுத்தினாள் அவனை, நின்று திரும்பினான்... அடுத்துவரும் பிறவியில் ஆணாக நானும், நானாக நீங்களும் பிறப்பெடுக்க வேண்ட

காதலுடன் நான்...

புலருகிற பொழுதுகளில் என்னோடு வெளிச்சமாயிருந்தவன் நீ... விலகி வெளிமண்ணில் வேலைதேடிப் போனாலும் உன் விலகாத ஞாபகங்கள் இன்னமும் இனிமையாக... அன்று, உன்னோடு பகிர்ந்துகொண்ட தேநீர்க் கோப்பைகள் இன்று என்னோடிருந்து என் தனிமையைப் பகிர்ந்துகொள்கின்றன... வாசலில் பூக்கோலம் வாசமான மலர்கள், ஆசையாய் நீ உண்ணும் தோசை என்று அத்தனையும் இன்று எனக்குப் பிடிக்காத பொருட்களின் பட்டியலில் வரிசையாக... மாசத்தில் சிலதினங்கள் பேச முடிந்தாலும் வீட்டு விஷயங்கள் வேலைச் சுமையென்று காசுக்குப்பெறாத விஷயங்கள் பேசிவிட்டு, கடைசியாய் நீ கொடுக்கும் கைபேசிமுத்தம் மட்டுமே காதோடு உறவாடி மனசில் நிறைந்திருக்கிறது... நம்முடைய பிறந்த நாட்கள் நாம் இணைந்த திருமணநாள் இன்னமும் வருகின்ற நல்லநாள் அத்தனையும் பொல்லாத நாட்களாகிக் கொல்லத்தான் செய்கிறது... சொல்லத்தான் இயலாத தவிப்புகள் அத்தனையும் வெள்ளைக் காகிதத்தில் விழிநீர் சேர்த்தெழுதி உன்னுடைய முகவரிக்குத் தூதாக அனுப்புகிறேன்... தள்ளிவைத்துப் பார்த்திருக்கும் தெய்வத்தை, வசவுகளால் அள்ளி அர்ச்சித்து ஆத்திரம் கொள்ளாமல், நல்லதே நடக்குமென்று நம்பிக்கை சேர்த்துவைத்து உள்ளத்தில் இருத்திக்கொள் சேரும்

இவள்...இல்லத்தரசி!

காலை எழுந்தவுடன் கையில்தந்த காப்பியை பத்திரிகை விலக்காமல் ரசித்துக் குடித்துவிட்டு, குளிப்பதற்கு இதமாகக் கலந்துவைத்த சுடுநீரை அலுக்காமல் பாட்டோடு அனுபவித்துக் குளித்துவிட்டு, மடிப்புக் கலையாமல் எடுத்துவைத்த ஆடையினைக் கலைத்துப் போட்டுவிட்டு வேறு உடை தேர்ந்தெடுத்து, கண்ணாடி முன்நின்று கவனமாய்த் தலைதிருத்தி, பின்னாலே முகம்திருப்பி உணவுக்குக் குரல்கொடுக்க, எல்லாமே ரெடியென்று எடுத்துவைத்துப் பரிமாறி கண்ணாடிக் குவளையிலே குடிப்பதற்கு நீரூற்றி, பின்னாலே குரல்கொடுத்த பிள்ளையை அதட்டிவிட்டு, காலுக்குச் செருப்பையும் கவனமாய்த் துடைத்துவிட்டு, மேலே நிமிர்ந்தவளின் முகத்தையும் பார்க்காமல் செல்பேசிச் சிணுங்கலுடன் கணவன் வெளியில்செல்ல, களைத்துக் கதிரையிலே சரிந்து அமர்ந்தவளை அழைத்தது ஒரு குரல்... அடுத்ததொரு ஏவலுக்காய்.

நம்பிக்கை விதைகள்

படம்
கரைபுரண்டு ஓடும் காட்டாறாய் நினைவுகள் சிறையெடுத்து மனம் சிதைத்திட்ட சுவடுகள் இளமையின் களிப்பினை இயலாமை யாக்கிவிட்டு வறுமைக்கு விலைபோன வாழ்க்கையின் பக்கங்கள்... உறவுகள் உருகிஓட கனவுகள் கரைந்துபோக கைகொடுக்க யாருமின்றிக் கலங்கிய பொழுதுகள்... தனிமையின் போர்வையில் அழுகையே துணையாக உடல்வருத்திக் கிடந்த ஒன்றிரண்டு வருடங்கள்... வறுமையின் தவிப்பினிலும் வகைவகையாய்ப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தசில சோக நிகழ்வுகள்... எள்ளி இகழ்வுசெய்து ஏமாளி எனச்சிரித்து தள்ளிவிட்டுச் சென்று தூரமான உறவுகள்... தூரமான உறவுகளைத் துச்சமாய் எண்ணிவிட்டு வேகமாய் முன்னேறத் துடித்திட்ட உணர்வுகள் முன்னேறும் பாதையில் என்னெதிராய் வந்துதினம் கண்ணாமூச்சி ஆடிய கணக்கிலாத் தடைக்கற்கள் தடைகளைக் கடக்கையிலே வருத்திய சோகமெல்லாம் அடையாளம் தெரியாமல் மறைந்த மணித்துளிகள்... கொடிகட்டிப் பறக்கவில்லை ஆனாலும் நிறைவாக குடிசைகட்டி வாழ்க்கற்ற முன்னேற்றப் பதிவுகள்... எத்தனையோ நினைவுகளின் ஆழத்தில் அமிழ்ந்தாலும் நித்தமும் எனைவருடும் பழமையின் பக்கங்கள் கரையொதுங்கும் கடல்நுரையாய் ஆங்கங்கே தோன்றி ஆனந்தம் விளைவிக்கும் அன்பின் நினைவுகள்... இத்தனைக்கு இடையில

தண்ணீர்...தண்ணீர்...

படம்
வைகையோ வறண்டுபோச்சு காவிரியைக் காணவில்லை... ஏரியெல்லாம் மாறிப்போச்சு குளங்களெல்லாம் குப்பையாச்சு... வான்மழையும் கானலாச்சு வயல்காடும் வெடிச்சுப்போச்சு அதற்காக, நான் மட்டும் குளிக்காவிட்டால் நன்மையென்ன நடந்துவிடும்? குளிக்கவென்று குதூகலமாய் குழாயடியில் உட்கார்ந்தால், அடுப்படிப் பாத்திரம்போல் அழுக்கைமட்டும் தேய்த்துவிட்டு, கால்வாளித் தண்ணீரில் கழுவி என்னை அனுப்புகிறாய்... ஆனாலும் இது ரொம்ப அநியாயக் கொடுமையம்மா... நெய்யென்று கேட்டால்கூட நிறையவே ஊற்றும் நீ, குளிக்கும் தண்ணீரைக் கேட்டால் மட்டும் கொஞ்சமாகத் தெளிக்கிறாயே...

அவளை...இப்படித்தான் அழைக்கிறோம்!

ரெண்டுமூன்று வருஷங்களாய் இங்கேதான் இருக்கிறாள்... வந்தபோது வைத்திருந்த புன்னகை மாறாமல், என்ன வீட்டில் சொன்னாலும் எதிர்வார்த்தைபேசாமல்... விருந்தினர்கள் வந்தாலும் வேறுபாடு பார்க்காமல், வேலை மிகவென்றாலும் முகச் சுளிப்புக்காட்டாமல்... கண்ணையும் கசக்காமல் காசெதுவும் கேட்காமல் தன்னுடைய நோவுக்காய் விடுமுறையும் எடுக்காமல்... சொல்லுவ தெல்லாமும் செய்து முடித்துவிட்டு இன்னமென்ன இருக்குதென்று எதிர்பார்த்து நிற்பதுபோல்... என்ன பிறவியிவள் என வியக்கவைத்தவளை... 'அம்மா' என்றழைக்கிறான் என்மகன், 'அடியே' என்றழைக்கிறேன் நான்...

மௌனம்

படம்
அவள், இழை பிரிந்த சேலைக்காரி, களைபறிக்கும் வேலைக்காரி... கழனியிலே களைபறித்துக் காசுகொஞ்சம் சேர்த்துவைத்துக் கைநிறைய வளையல்போட்டு அழகுபார்க்கும் ஆசைக்காரி... வயிற்றுக்குள் வளருகிற மழலையின் காதுக்கு வளைச்சத்தம் பிடிக்குமென்று தெரிந்தவர்கள் சொல்லிவிட ராவோடு பகல் உழைத்து வளையல் வாங்கி அணிந்துகொண்டாள்... அலுத்துவந்த கணவனுக்கு அன்னம் சமைக்கையிலும், துவைத்துவைத்த ஆடைகளை விசிறி உலர்த்தையிலும் குலுக்கிவிட்ட வளையல்களின் சிரிப்பொலியில் மகிழ்ந்துபோனாள் வாழ்க்கையின் வல்லினங்கள் வருத்திவிட்டுப் போகையிலும் உழைத்துவரும் காசில்தினம் உணவுக்கே திணறினாலும், அத்தனையும் உதறிவிட்டு மழலைக்குக் காத்திருந்தாள்... தாய்வீட்டில் போட்டுவிட்ட தங்கத் தோடெடுத்து மார்வாடிக் கடையில்வைத்து மருத்துவம் பார்த்தபின்னர், தாயாகித் தன்மகனை வீட்டுக்குக் கொண்டுவந்தாள்... பசிவயிற்று ஏழைக்குப் பாயாசம் கிடைத்ததுபோல் நசிந்துபோன அவள்விழிகள் மகிழ்ச்சியைக் கொப்பளிக்க, கண்ணிறைய மகனைக்கண்டு கர்வமாய் வளர்க்கலானாள் தொட்டிலிட்டுத் தூங்கவைத்தாள் துயர்மறந்து பாட்டிசைத்தாள் முட்டியிட்டுப் பிள்ளை தவழும் பருவம்வர முடியிறக்கி சாமிக்கு வேண்டுதலும்

நெருப்பில் பூக்கள்

படம்
நெருப்பில் பூக்கள் அன்று, வார்த்தைகள் தடிப்பாக வழக்குமன்றமானது வீடு... பொறுப்பில்லாத ஒரு போராட்டம் அரங்கேற பார்வையாளராய் ரெண்டு பாவப்பட்ட குழந்தைகள்... தாக்குகிற வார்த்தைகள் தாறுமாறாய் வந்துவிழ நோக்கிக்கொண்டனர் குழந்தைகள் இருவரும் எப்போதோ பார்த்த ஏதோவொரு திரைப்படம்போல் அப்பாவுக்கொரு பிள்ளை அம்மாவுக்கொரு பிள்ளையென்று பக்கத்துக் கொருவராகப் பிரிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் துளிர்த்தது அழுகையின் முதல்துளி... துப்பாக்கி யிருந்திருந்தால் தோட்டாக்கள் பாயும்போல உச்சகட்டத்து வார்த்தைச்சீறல்கள்... முன்னிரவு வரை மோதல் தொடர்ந்திருக்க, பசியும் பதைப்புமாய் உறங்கிப்போன குழந்தைகளின் கனவிலும் கூட கடுமையான சண்டைதான்... அடித்து எழுப்பியதுபோல் அதிகாலை விடியலில் துடித்து எழுந்தது என்ன நடந்ததோ என்று... தாறுமாறாய்த் துடிக்கும் இதயத்தைச் சுமந்தபடி முகத்தில் அறையக் காத்திருக்கும் அதிர்ச்சியை எதிர்நோக்கி, மெள்ள அறையைவிட்டு வந்தது ஒரு பிள்ளை... வெளியே, முற்றத்துக் குழாயடியில் முகம்திருப்பி நின்றிருந்த அப்பாவுக்கு அங்கே முதுகுதேய்த்துக் கொண்டிருந்தாள் அம்மா... அசம்பாவிதம் ஏதும் இல்லையென்ற நிம்மதியில் 'அப்பாடா

பார்த்துப் போடுங்க...

கார்த்தாலே யிருந்து கால்கடுக்க நிக்கிறேன் எடையைப் பார்த்துப் போடுதம்பி, உலையரிசி வீட்டில்இல்லை... சேர்த்துவச்ச காசுக்கு ரேஷன்வாங்க ஓடிவந்தேன் அடுத்து, வாங்கிவச்ச அரிசிவேக விறகுதேடிப் போகவேணும்... உண்ணாமல் இங்கே வயிறுகள் காய்ந்திருக்க, உண்ணாவிரத மென்றால் பொன்னாடை போர்த்திவிட்டு, நீர்த்துப் போகின்ற நம்பிக்கை நிலையாக, தோற்றுப் போகின்ற உண்மைகள் புலனாக, ஓட்டுப் போடென்று நேற்றிரவு சொல்லிச்சென்றார்... பசியடைத்த காதும் பஞ்சடைந்த கண்ணும் ரசிக்கவில்லை அந்தத் தேர்தல்நேர வார்த்தைகளை... ருசியை மறந்துவிட்டு பசிக்குப் பழகிவிட்டோம் வசிக்கும் ஊருக்குள் வன்முறைகள் பார்த்துவிட்டோம்... கூட்டாட்சிக் கொடுமையும் வீட்டாட்சி வீம்புகளும் காட்டாட்சி நடத்திடும் காலக் கொடுமையிலே, ஓட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டால் ஒருவிரலில் மைவைப்பார் போடாமல் இருந்தாலோ கள்ளஓட்டில் கைவைப்பார்... இருக்கின்ற தேசத்தில் இல்லாமல் போகாமல் இல்லாமை எப்பொழுது இல்லாமல் போகுமென்று, சொல்லாமல் மனமழுத்தும் சோகங்கள் தீர்த்துவைக்க எல்லாக் கடவுளையும் வேண்டி அழுத்தமாக, ஓட்டுப்போடுங்க, அதையும் பார்த்துப் போடுங்க...

தேர்தலும் ஒரு காலநிலை!

ஒற்றை இரவினில் உருவான தார்ச்சாலை கட்சிக்கொடி நிறத்தில் இலவசமாய் நூல்சேலை எதிர்க்கட்சி வந்தால் என்ன கிடைக்குமென்று கதிரறுக்க மறந்தபடி கதைபேசும் வீண்வேலை நேற்றுவரை இங்கே காற்றுவந்த குழாய்களிலே ஆற்று வெள்ளமெனப் பெருகிவரும் நீரின்அலை கட்சி வேட்டிகள் சகதியிலே கரைபுரள சாதிகளின் பெயர்சொல்லிப் பெருந்தலைகள் பேசும்விலை முந்தைய ஆட்சியிலே மறைந்திருந்த ஊழலெல்லாம் சந்தியிலே கிழித்துக் கடைவிரிக்கும் மாயவலை பற்றவைத்த குடிசைகளின் தணல்சூடு தணியுமுன்னே சட்டெனவே தயாராகும் ஏழைகட்கு வீட்டுமனை வேனில் வசந்தமென்று வந்துபோகும் பருவமென இந்திய நாட்டினிலே தேர்தலும் ஒரு காலநிலை!!!

அஸ்தமித்தாய் ஜோதியே...

கதவாய் ஜன்னலாய் வாசல் கடந்துசெல்லா ஜடப்பொருளாய் பாயாய்த் தலையணையாய் நாளும் படுக்கையிலே துணைப்பொருளாய் தாயாய்த் தாதியுமாய் வாட்டும் நோவினிலே கைமருந்தாய் யாவுமாகி நிறைந்தும் வீட்டில் எள்ளளவும் புரிதலில்லை... மனமிருக்கும் ஜீவனென்று யாரும் மதிப்பளிக்க மறந்ததனால் பொத்திவைத்த சோகமெல்லாம் உடலில் புற்றாகி உயிர்குடிக்க, அஸ்தமித்தாய் ஜோதியே, இன்று அழும்குழந்தை துவளுதடி!

காதல் பூப்பூக்கட்டும்...

மாடி வீட்டில், கோடி வீட்டில், ஏழை வீட்டில், எதிர்த்த வீட்டில், எங்கே வேண்டுமானாலும் காதல் பூப்பூக்கட்டும்... என்வீட்டுச் சுவற்றுக்குள் எப்போதும் வேண்டாம் சாமீ... கண்மூடி வேண்டினார் காதலித்து மணந்த தந்தை!!!

விடுதலை நாள்!!!

குண்டு துளைக்காத கண்ணாடி மேடை கண்கொத்திப் பாம்பாய் நாற்புறமும் காவலர்கள் குண்டுகள் முழங்கி அதிரும் ஒலியெழும்ப, எந்த நிமிடத்தில் எறிகணை விழுமோஎன்று அச்சத்தில் விரல்நடுங்க விடுதலைக் கொடியேற்ற, உச்சத்தில் படபடக்கும் கொடியுடன் இதயம்கூட!!!

** வண்ணத்துப்பூச்சி விருது **

படம்
என்னுடைய கிறுக்கல்களுக்கும் மதிப்பளித்து இந்த விருதினை எனக்கு வழங்கிய தமிழ்ப் பிரியரான திகழ்மிளிருக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இவரது வலைத்தளத்தின் அமைப்பும், அதில் இடும் படங்களும் என்னை மிகவும் ரசிக்கவைத்த விஷயங்கள். எனக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியை நான் தேடிப்படிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களான இவர்களுக்கு வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. கிருத்திகா , அனுபவங்களாகட்டும் கவிதைகளாகட்டும் சொல்லவந்ததைச் சிறப்பாகச்சொல்லும் இவரது பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். துளசி கோபால் , டீச்சர் என அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் இவருடைய பதிவுகள், நகைச்சுவையாகவும் அதேசமயத்தில் பள்ளிக்குழந்தைகளுப் பொறுமையுடன் சொல்லித்தருவதுபோலவே படங்களும் விளக்கங்களுமாய் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். நாவிஷ் செந்தில்குமார் , முத்தமிழ்மன்றத்திலிருந்தே இவரது கவிதைகள் பரிச்சயம் எனக்கு. கதைசொல்லும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.அருமையாக எழுதுகிறார். அருமையான இந்த வாய்ப்பினை வழங்கிய திகழ்மிளிருக்கு மீண்டும் என் நன்றிகள்!

மழைவிழும் எழில்வனம்

படம்
மழைக் காற்றது மூங்கில்வழி நுழையும் ஒலி கேட்கும் இசைகேட்டிட மகிழ்வில் தரு வகைகள் தலையாட்டும் இதழின் வழி மதுவோடிட இலையும் நிலை தளரும் கிளை யாடிய மலர்கள்பல மண்ணின் மடியுதிரும் வழியும்இசை பரந்தோடிட மகிழும் உயிரினங்கள் வழிமாறிட மலைப்பாறையில் வதியும் குருகினங்கள் துளியும்விழத் தோகைமலர் விரிக்கும் மயிலினங்கள் ஒளியும்செல ஓசையுடன் பிளிரும் களிறினங்கள் ஊதும்இசை யொலிகேட்டிட அதிரும் எழில்மேகம் காதில்குளிர் வாடைதொடத் தழுவும் இளமானும்... மன்றின்மழை பெரிதாகிட வெளியில் வரும்நாகம் கொன்றைமலர் விரிபோர்வையில் களித்தே நெளிந்தாடும்... கண்டேயதன் எழிலில்மிக மையல்கொடு தானும் வண்டாடிடும் மலர்த்தூளியில் கவியும் விளையாடும்... கொண்டாடிடும் மழைநாளதன் கோலம்நிறை அழகில் உண்டோ அதன் நிகராய் மற்றெதுவும் இவ்வுலகில்?

ராட்சசியோ நீ ???...

படம்
நாலு வருஷங்களாய் நடக்கவிடாமல் எனைத் தோளில்சுமந்த தந்தை கீழே இறக்கிவிட்டு, ஆனை அம்பாரியென உனைச் சுமந்து ரசித்திருக்க, பாலோடு அன்னமிட்டு பாசமாய்க் கொடுத்தஅன்னை நாலு வயசாச்சு நல்லா வளர்ந்தாச்சு வேலையிருக் கெனக்கு நீயாகச் சாப்பிடென, எனக்கான உறவுகளை உனதாக்கிப் பகிர்ந்துகொண்டு கணப்பொழுது நகர்ந்தாலும் கணக்குப் புத்தகத்தைக் கிறுக்கிக் கிழிக்கின்றாய் சிரிக்கின்றார் அதை ரசித்து... என் பின்னாலே நடந்துவந்து பள்ளியிலே சேர்ந்த நீயும், மதிப்பெண் முன்னாலே பெற்று எனைப் பின்னாலே தள்ளிவிட்டாய்... அண்ணா என்றழைத்தபடி என்வகுப்பில் நுழைந்து நீயும் கண்ணாலே நோட்டமிட்டு கடைசி இருக்கையென்று வீட்டில், சொல்லாத பெருமையெல்லாம் சொல்லி அழவைத்தாய்... பாட்டு வகுப்போடு பரத நாட்டியமும் பள்ளிப் படிப்போடு பதவிசாய்ப் படித்துவிட்டுப் பதக்கங்கள் வாங்கினாய் நீ, பாட்டு வாங்கினேன் நான்... கல்லூரி வயசினில் நான் காதலுடன் கவியெழுத, நான் இல்லாத பொழுதிலதை எடுத்து கொடுத்துவிட்டு, நல்லவளாய்ப் பேரெடுத்தாய் நந்தியாயென் வழியில்நின்றாய்... கல்யாணச் சந்தையிலே கனக்க நகைபோட்டு ஆட்டுக்கல் அம்மியோடு அனைத்துவகைச் சீரும்செய்ய, தோட்டம் துரவென்று அத