தேர்தலும் ஒரு காலநிலை!

ஒற்றை இரவினில்
உருவான தார்ச்சாலை
கட்சிக்கொடி நிறத்தில்
இலவசமாய் நூல்சேலை

எதிர்க்கட்சி வந்தால்
என்ன கிடைக்குமென்று
கதிரறுக்க மறந்தபடி
கதைபேசும் வீண்வேலை

நேற்றுவரை இங்கே
காற்றுவந்த குழாய்களிலே
ஆற்று வெள்ளமெனப்
பெருகிவரும் நீரின்அலை

கட்சி வேட்டிகள்
சகதியிலே கரைபுரள
சாதிகளின் பெயர்சொல்லிப்
பெருந்தலைகள் பேசும்விலை

முந்தைய ஆட்சியிலே
மறைந்திருந்த ஊழலெல்லாம்
சந்தியிலே கிழித்துக்
கடைவிரிக்கும் மாயவலை

பற்றவைத்த குடிசைகளின்
தணல்சூடு தணியுமுன்னே
சட்டெனவே தயாராகும்
ஏழைகட்கு வீட்டுமனை

வேனில் வசந்தமென்று
வந்துபோகும் பருவமென
இந்திய நாட்டினிலே
தேர்தலும் ஒரு காலநிலை!!!

கருத்துகள்

  1. வெகு அருமை சுந்தரா! இதே போன்று மக்களின் நிலையைப் பற்றிய நான் எழுதிய ‘விடியலுக்கு ஏங்கும் வெற்றுப் பிம்பங்கள்’ கவியரங்கக் கவிதை நினைவுக்கு வருகிறது. அது 'நாம்' படித்த சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரிலும் வெளியானதாகும்.

    [எந்த வருடம் எனக் கேட்டிருந்தீர்கள் அல்லவா? 1982-87:)!]

    பதிலளிநீக்கு
  2. ஆஹா,மிகவும் மகிழ்ச்சி ராமலஷ்மி :)

    கல்லூரியில் நிச்சயம் உங்களைப் பார்த்திருப்பேன். ஏன்னா,நீங்க படிச்சப்போ நானும் அங்கே இருந்திருக்கேனே... நான் 84-89 !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!