பார்த்துப் போடுங்க...

கார்த்தாலே யிருந்து
கால்கடுக்க நிக்கிறேன்
எடையைப்
பார்த்துப் போடுதம்பி,
உலையரிசி வீட்டில்இல்லை...

சேர்த்துவச்ச காசுக்கு
ரேஷன்வாங்க ஓடிவந்தேன்
அடுத்து,
வாங்கிவச்ச அரிசிவேக
விறகுதேடிப் போகவேணும்...

உண்ணாமல் இங்கே
வயிறுகள் காய்ந்திருக்க,
உண்ணாவிரத மென்றால்
பொன்னாடை போர்த்திவிட்டு,

நீர்த்துப் போகின்ற
நம்பிக்கை நிலையாக,
தோற்றுப் போகின்ற
உண்மைகள் புலனாக,
ஓட்டுப் போடென்று
நேற்றிரவு சொல்லிச்சென்றார்...

பசியடைத்த காதும்
பஞ்சடைந்த கண்ணும்
ரசிக்கவில்லை அந்தத்
தேர்தல்நேர வார்த்தைகளை...

ருசியை மறந்துவிட்டு
பசிக்குப் பழகிவிட்டோம்
வசிக்கும் ஊருக்குள்
வன்முறைகள் பார்த்துவிட்டோம்...

கூட்டாட்சிக் கொடுமையும்
வீட்டாட்சி வீம்புகளும்
காட்டாட்சி நடத்திடும்
காலக் கொடுமையிலே,

ஓட்டுப்
போட்டுவிட்டு வந்துவிட்டால்
ஒருவிரலில் மைவைப்பார்
போடாமல் இருந்தாலோ
கள்ளஓட்டில் கைவைப்பார்...

இருக்கின்ற தேசத்தில்
இல்லாமல் போகாமல்
இல்லாமை எப்பொழுது
இல்லாமல் போகுமென்று,

சொல்லாமல் மனமழுத்தும்
சோகங்கள் தீர்த்துவைக்க
எல்லாக் கடவுளையும்
வேண்டி அழுத்தமாக,

ஓட்டுப்போடுங்க,
அதையும்
பார்த்துப் போடுங்க...

கருத்துகள்

  1. /இருக்கின்ற தேசத்தில்
    இல்லாமல் போகாமல்
    இல்லாமை எப்பொழுது
    இல்லாமல் போகுமென்று/

    அருமை

    பதிலளிநீக்கு
  2. நன்றி திகழ்மிளிர்.

    நலம்தானே?

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதை சுந்தரா! பார்த்துத்தான் போட்டிருக்கிறோம். பார்ப்போம் எல்லோருக்குமாய் விடிகிறதா என்று.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராமலஷ்மி...

    நம்பிக்கையுடன் காத்திருப்போம் :)

    பதிலளிநீக்கு
  5. ருசியை மறந்துவிட்டு
    பசிக்குப் பழகிவிட்டோம்
    வசிக்கும் ஊருக்குள்
    வன்முறைகள் பார்த்துவிட்டோம்...

    வலிக்குதுங்க இந்த வார்த்தைய படிக்கும்போது

    பதிலளிநீக்கு
  6. வாங்க பாலாஜி...

    வறுமையும் வன்முறையும் படுத்தும் பாட்டினைப் பார்க்கையில் வலியும் வேதனையும்தான் மனதில் நிறைகிறது.

    வருகைக்கு என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  7. நெடு நாட்களுக்குப் பிறகு, சுந்தராவைப் படிப்பதில் சந்தோஷம். உணர்ச்சியும் உண்மையும் போட்டி போட்டுக்கொண்டு
    வார்த்தைகளாக விழ அழகுக் கவிதை புனைந்திருக்கிறீர்கள்.

    வருத்தமே இந்தத் தேர்தலைப் பார்த்த பிறகு மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!