மௌனம்












அவள்,
இழை பிரிந்த சேலைக்காரி,
களைபறிக்கும் வேலைக்காரி...

கழனியிலே களைபறித்துக்
காசுகொஞ்சம் சேர்த்துவைத்துக்
கைநிறைய வளையல்போட்டு
அழகுபார்க்கும் ஆசைக்காரி...

வயிற்றுக்குள் வளருகிற
மழலையின் காதுக்கு
வளைச்சத்தம் பிடிக்குமென்று
தெரிந்தவர்கள் சொல்லிவிட
ராவோடு பகல் உழைத்து
வளையல் வாங்கி அணிந்துகொண்டாள்...

அலுத்துவந்த கணவனுக்கு
அன்னம் சமைக்கையிலும்,
துவைத்துவைத்த ஆடைகளை
விசிறி உலர்த்தையிலும்
குலுக்கிவிட்ட வளையல்களின்
சிரிப்பொலியில் மகிழ்ந்துபோனாள்

வாழ்க்கையின் வல்லினங்கள்
வருத்திவிட்டுப் போகையிலும்
உழைத்துவரும் காசில்தினம்
உணவுக்கே திணறினாலும்,
அத்தனையும் உதறிவிட்டு
மழலைக்குக் காத்திருந்தாள்...

தாய்வீட்டில் போட்டுவிட்ட
தங்கத் தோடெடுத்து
மார்வாடிக் கடையில்வைத்து
மருத்துவம் பார்த்தபின்னர்,
தாயாகித் தன்மகனை
வீட்டுக்குக் கொண்டுவந்தாள்...

பசிவயிற்று ஏழைக்குப்
பாயாசம் கிடைத்ததுபோல்
நசிந்துபோன அவள்விழிகள்
மகிழ்ச்சியைக் கொப்பளிக்க,
கண்ணிறைய மகனைக்கண்டு
கர்வமாய் வளர்க்கலானாள்

தொட்டிலிட்டுத் தூங்கவைத்தாள்
துயர்மறந்து பாட்டிசைத்தாள்
முட்டியிட்டுப் பிள்ளை
தவழும் பருவம்வர
முடியிறக்கி சாமிக்கு
வேண்டுதலும் செலுத்தச்சென்றாள்...

கொட்டும் மேளமுமாய்
கோயிலிலே மணியொலித்தும்
எட்டியும் பார்க்காத
பிள்ளையின் செய்கையினால்
சற்றே திணறினாள்
சடுதியில் புரிந்துகொண்டாள்

பெற்றெடுத்த பிள்ளைக்குப்
பெருங்குறை யிருக்குதென்று
பேர்பெற்ற மருத்துவரைத்
தேர்ந்தெடுத்துத் துயரைச்சொன்னாள்...

சுட்டது நிஜம்...
சுடும்விழிநீர் வழிந்திறங்க,
ஆசையாய்க் கையிலிட்டு
அலங்கரித்த வளையல்களில்
மற்றதெல்லாம் உடைந்துவிடத்
தான்மட்டும் மௌனமாகி,

ஒற்றையாய்க் கிடந்த அந்தக்
கண்ணாடி வளையலினை
வேலியினைத் தாண்டி
வீதியிலே வீசிவிட்டு,
பெற்றெடுத்த தன்மகனின்
முகம்பார்த்தாள்...மொழியிழந்தாள்...

கருத்துகள்

  1. ஊனமுற்ற குழந்தையை பெற்ற தாயின்

    மனசாய்

    வலிக்கிறது

    வார்த்தைகள் மிளிர்கின்றன

    பதிலளிநீக்கு
  2. /பிரியமுடன்.........வசந்த் said...

    ஊனமுற்ற குழந்தையை பெற்ற தாயின்

    மனசாய்

    வலிக்கிறது

    வார்த்தைகள் மிளிர்கின்றன/

    அதே

    பதிலளிநீக்கு
  3. நிஜமாகவே பேச முடியாமல் செய்து விட்டது கவிதை.

    பதிலளிநீக்கு
  4. திகழ்மிளிர் said...
    /பிரியமுடன்.........வசந்த் said...

    ஊனமுற்ற குழந்தையை பெற்ற தாயின்

    மனசாய்

    வலிக்கிறது

    வார்த்தைகள் மிளிர்கின்றன/

    அதே

    நன்றிகள் திகழ்மிளிர்!

    பதிலளிநீக்கு
  5. //ராமலக்ஷ்மி said...
    நிஜமாகவே பேச முடியாமல் செய்து விட்டது கவிதை.//

    நன்றி ராமலஷ்மியக்கா.

    வறுமையால் ஏற்படும் ஊட்டச்சத்துக்குறைவினால் குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதாகப் படித்தேன். அதையே கவிதையாக்கிப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  6. //அன்புடன் அருணா said...
    மனதைத் தொடும் கவிதை!//

    மிக்க நன்றி அருணா!

    பதிலளிநீக்கு
  7. என்ன அருமையாய் வளையோசை ஆரம்பித்து, குப்பையில் முடிந்து விட்டதே.:(
    சுந்தரா, மனம் நிறைய அழகுக் கவிதை இன்னொன்று எழுதுங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!