நம்பிக்கை விதைகள்



கரைபுரண்டு ஓடும்
காட்டாறாய் நினைவுகள்
சிறையெடுத்து மனம்
சிதைத்திட்ட சுவடுகள்

இளமையின் களிப்பினை
இயலாமை யாக்கிவிட்டு
வறுமைக்கு விலைபோன
வாழ்க்கையின் பக்கங்கள்...

உறவுகள் உருகிஓட
கனவுகள் கரைந்துபோக
கைகொடுக்க யாருமின்றிக்
கலங்கிய பொழுதுகள்...

தனிமையின் போர்வையில்
அழுகையே துணையாக
உடல்வருத்திக் கிடந்த
ஒன்றிரண்டு வருடங்கள்...

வறுமையின் தவிப்பினிலும்
வகைவகையாய்ப் பாடங்கள்
சொல்லிக் கொடுத்தசில
சோக நிகழ்வுகள்...

எள்ளி இகழ்வுசெய்து
ஏமாளி எனச்சிரித்து
தள்ளிவிட்டுச் சென்று
தூரமான உறவுகள்...

தூரமான உறவுகளைத்
துச்சமாய் எண்ணிவிட்டு
வேகமாய் முன்னேறத்
துடித்திட்ட உணர்வுகள்

முன்னேறும் பாதையில்
என்னெதிராய் வந்துதினம்
கண்ணாமூச்சி ஆடிய
கணக்கிலாத் தடைக்கற்கள்

தடைகளைக் கடக்கையிலே
வருத்திய சோகமெல்லாம்
அடையாளம் தெரியாமல்
மறைந்த மணித்துளிகள்...

கொடிகட்டிப் பறக்கவில்லை
ஆனாலும் நிறைவாக
குடிசைகட்டி வாழ்க்கற்ற
முன்னேற்றப் பதிவுகள்...

எத்தனையோ நினைவுகளின்
ஆழத்தில் அமிழ்ந்தாலும்
நித்தமும் எனைவருடும்
பழமையின் பக்கங்கள்

கரையொதுங்கும் கடல்நுரையாய்
ஆங்கங்கே தோன்றி
ஆனந்தம் விளைவிக்கும்
அன்பின் நினைவுகள்...

இத்தனைக்கு இடையிலும்
எனைவிட்டு விலகாமல்
எனக்குள் பதிந்திருந்த
நம்பிக்கை விதைகள்...

விதையெலாம் பயிராகி
விளைவுகண்ட காலத்தில்
தெளிவோடு நிமிர்ந்துநின்றேன்
வானமே வளையக் கண்டேன்.

கருத்துகள்

  1. //முன்னேறும் பாதையில்
    என்னெதிராய் வந்துதினம்
    கண்ணாமூச்சி ஆடிய
    கணக்கிலாத் தடைக்கற்கள்//

    சிறப்பாய் இருக்கு கவிதை....

    பதிலளிநீக்கு
  2. அருமை
    அழகாய்
    அற்புதமாய் உள்ளது.

    வாழ்த்துகள்

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!