காதலுடன் நான்...

புலருகிற பொழுதுகளில்
என்னோடு
வெளிச்சமாயிருந்தவன் நீ...

விலகி வெளிமண்ணில்
வேலைதேடிப் போனாலும்
உன்
விலகாத ஞாபகங்கள்
இன்னமும் இனிமையாக...

அன்று,
உன்னோடு பகிர்ந்துகொண்ட
தேநீர்க் கோப்பைகள்
இன்று
என்னோடிருந்து என்
தனிமையைப் பகிர்ந்துகொள்கின்றன...

வாசலில் பூக்கோலம்
வாசமான மலர்கள்,
ஆசையாய் நீ உண்ணும்
தோசை என்று அத்தனையும்
இன்று
எனக்குப் பிடிக்காத பொருட்களின்
பட்டியலில் வரிசையாக...

மாசத்தில் சிலதினங்கள்
பேச முடிந்தாலும்
வீட்டு விஷயங்கள்
வேலைச் சுமையென்று
காசுக்குப்பெறாத விஷயங்கள் பேசிவிட்டு,
கடைசியாய் நீ கொடுக்கும்
கைபேசிமுத்தம் மட்டுமே
காதோடு உறவாடி
மனசில் நிறைந்திருக்கிறது...

நம்முடைய பிறந்த நாட்கள்
நாம் இணைந்த திருமணநாள்
இன்னமும் வருகின்ற
நல்லநாள் அத்தனையும்
பொல்லாத நாட்களாகிக்
கொல்லத்தான் செய்கிறது...

சொல்லத்தான் இயலாத
தவிப்புகள் அத்தனையும்
வெள்ளைக் காகிதத்தில்
விழிநீர் சேர்த்தெழுதி
உன்னுடைய முகவரிக்குத்
தூதாக அனுப்புகிறேன்...

தள்ளிவைத்துப் பார்த்திருக்கும்
தெய்வத்தை,
வசவுகளால் அள்ளி அர்ச்சித்து
ஆத்திரம் கொள்ளாமல்,
நல்லதே நடக்குமென்று
நம்பிக்கை சேர்த்துவைத்து
உள்ளத்தில் இருத்திக்கொள்
சேரும்காலம் தூரமில்லை...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!