தீபாவளி மிச்சங்கள்

விடிய விடிய
விடாத வேட்டுச்சத்தம்...

உறங்கிவிட்ட அம்மாவின்
தலைப்பினைப் பிடித்தபடி,
காதுகளை மூடிக்கொண்டு
கண்திறந்து படுத்திருந்தான் மகன்...

சிதறிய வாணங்கள்
இடைவெளியில் தெரிந்தபோது,
கூரையிலும் விழுமோவென்று
பதறித்தான்போனது மனசு...

உறக்கமில் லாதவனின்
உள்ளம் புரிந்ததுபோல்
புகையோடு விரைவாகப்
புலர்ந்தது புதுப்பொழுது...
ஆளரவ மில்லாமல்
உறங்கிக் கிடந்தது வீதி...

அங்கே,
வெடிக்காத சரவெடி
அடிக்காத பொட்டுவெடி
எரியாத மத்தாப்பூ
விரியாத பூச்சட்டி

ஏதாவது கிடைக்காதா என்ற
ஏக்கம் தலையெடுக்கக்
காகிதக் குப்பையைக்
கண்களால் துழாவுகிறான்,
கால்சட்டை நழுவிவரக்
கைப்பிடித்த சிறுவனவன்...

கருத்துகள்

  1. ஊரெல்லாம் மகிழ்ந்து கொண்டாடியிருக்க
    ஒருபக்கம் ஏக்கத்துடன் மிச்சங்களுக்காக...

    சமூகத்தின் மறுபக்கம்:(!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!