என்னத்தைச் செய்தீங்க...(நிறைவுப்பகுதி)

கையிருந்த மோதிரம்
காசான உண்மையினை
ஐயமின்றி உணந்திட்டாள்
அவர் மனைவி சிவகாமி...
பொய்யேதும் சொல்லிப்
புதுக்குழப்பம் செய்யாமல்
பைய இடத்தைவிட்டு
அகன்றார் செல்வமணி...

தான்கொண்ட ஆசையால்
தன்குடும்பம் கடனுற்ற
வேதனையைச் சொல்லாமல்
விதிர்த்துநின்றாள் சிவகாமி
ஆதரவாய் அவள்மனதைப்
புரிந்துகொண்ட ஆசிரியர்
பாதகம் இல்லை எல்லாம்
சரியாகும் என்றுரைத்தார்...

புத்தி தடுமாறிப்
பேசுவார் சொல்கேட்டு
சக்திக்குமீறியதாய்ச்
சங்கடத்தைச் சேர்த்துவிட்டேன்
புத்திக்கு எட்டிப்
புலனாகும் நேரத்தில்
எத்தனையோ இழந்துவிட்டோம்
என்றழுதாள் சிவகாமி

எதையும் இழக்கவில்லை
எதுவும் விட்டுப்போகவில்லை
கனவாக வந்துவிட்டுப்
போனதோர் காட்சியிது
உனையே நீ புரிந்துகொள்ள
உண்மைநிலை அறிந்துகொள்ள
கொஞ்சம் செலவழித்துக்
கண்டதோர் காட்சியிது

பிழையான காட்சியெல்லாம்
போயகல இனி வாழ்வில்
நலமே பெருகிடும்
நம்பிட வேண்டுமென்றார்.
இழையோடும் கண்ணீரை
அழுத்தித் துடைத்துவிட்டுப்
பலகாரம் செய்வதற்குப்
புறப்பட்டாள் சிவகாமி

விடிந்தது தீபாவளி
வீட்டிலே மகிழ்ச்சிபொங்க
விதவிதமாய் இனிப்புகளும்
விருந்தும் மணமணக்க
புதியதாய் வாழ்கையைப்
புரிந்துகொண்ட மகிழ்ச்சியுடன்
இனிமையாய் தீபமேற்றி
வழிபட்டாள் சிவகாமி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!