இடுகைகள்

டிசம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடன், இரவல், இலவசம்

கேட்டுக்கேட்டு வாங்கினான் கொடுக்கையில் கசந்தது கோப்பையிலிருந்த காப்பியும் கொடுத்தவனின் நட்பும். ************************ கூறைப்புடவையைக் கழற்றிவிட்டு வேறுபுடவை மாற்றச்சொல்லி விலகிப்போனார்கள் மற்றவர்கள்... விலகத்தோன்றாமல் அறைக்குள்ளேயே இருந்தது, இரவலாய் நகைகொடுத்த ராணியக்காவின் பார்வை. **************************** பாத்திரத்தில் இருந்த பழங்கஞ்சிச் சோற்றை பக்கத்துவீட்டிலிருந்துவந்த கோழிக்குழம்பு வாசனையுடன் சேர்த்துச் சாப்பிட்டுச் சிலாகித்துக்கொண்டது, குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த கூடைக்காரியின் பிள்ளை.

பூக்களைச் சிதைக்காதீர்கள்!

என்றைக்கும்போல் அவன் இரைந்து கொண்டிருந்தான் அவளைச், 'சண்டைக்கு வாடி' என்றழைக்கிற தோரணையில்... "இன்றைக்கும் என்னிடத்தில் தோற்பாய் நீ" என்பதுபோல், கண்டுகொள்ளாமல் கர்வமாய் அவன் மனைவி... ஒன்றுக்கும் உதவாத ஆணவத்தைக் கட்டிக்கொண்டு தினம் சண்டைக் காட்சிகளை அரங்கேற்றிப் பார்த்திருக்க, காதலும் கனிவுமாய் அமைத்துக்கொண்ட வாழ்க்கை இன்று, துடுப்புகளைத் தொலைத்துவிட்டுச் சுற்றுகிற படகாக... எந்த நேரத்தில் மூழ்குமோ என்று அஞ்சி, சொந்தங்கள் தேடிப்போய் பெற்றவர்கள் சொல்லியழ, இவை எதுவுமே புரியாமல், தாய்மடியின் வெறுமையில் துவண்டுபோன கன்றுகளாய், யார்மடியில் புதையவென்று புரியாமல் தவிக்கிற பிள்ளைகள்... இப்படியே, காசும் கர்வமும் சபலமும் சங்கடமுமாய் வீட்டுக்குள் வெடிக்கிற போராட்டச் சத்தத்தில், ஒடுங்கிப் போகின்றன ஒன்றுமறியாத சின்னப்பூக்கள்.

கிறக்கம்!

நெஞ்சுமுட்டக் குடித்திருந்தேன்... கொஞ்சமாய்க் கண்திறக்க முயற்சித்துத் தோற்றுப்போனேன்... இழுத்துச் சொருகிக்கொண்டன இமைகள் ரெண்டும்... "பாரு இந்தப் பயலை..."என்று பரிகாசம் பேசினார்கள் பக்கத்தி லிருந்தவர்கள்... அவர்களுக்கெல்லாம் புரியவாபோகிறது என்னுடைய நிலைமை? மூடிய கண்களுக்குள் பேசியமுகங்கள் வந்துபோனது... அவற்றில், ஒற்றை முகம் மட்டும் ஒளிவட்டம் பூசிக்கொண்டு... காலை நிமிண்டியும் கன்னத்தைத் தட்டியும் கலைக்கப் பார்க்கிறார்கள் என்னுடைய, கிறக்கமான உறக்கத்தை... ஆனால், நெஞ்சுப் பக்கத்தில் சின்னதாய்த் துடித்தபடி, கதகதப்பைக் கொடுத்த அந்த அருகாமையிலிருந்து அகலத்தான் முடியவில்லை... "கொஞ்சியது போதும், கொஞ்சம் நிமிர்ந்திருடா..." என்று பொய்க்கோபம் காட்டி, நிமிர்த்திவைத்து என்முதுகை நீவுகிறாள் அம்மா... கெட்டுப்போனது சுகமான தூக்கமென்று முட்டிக்கொண்டு வந்தது கோபம்... இனி, எப்போ நான் ஏப்பம்விட்டு, எப்போதான் தூங்குவதாம்?

ஆச்சி ரொம்பத்தான் மாறிப்போச்சு!

அப்பல்லாம் ஆச்சிக்கு அடுத்த வீடே தெரியாது... எப்போதும் பிள்ளைகள், இல்லாவிட்டால் புருஷனென்று தப்பாமல் தன்வீட்டுக் கதையைத்தான் நமக்குச்சொல்லும்... ஊர்கண்ணு பட்டிடாம உலையடுப்பு அவிஞ்சிடாம ஆறிரண்டு பிள்ளைகளை அடுத்தடுத்துத் தான்பெற்று பேர்சொல்ல வளர்த்ததெல்லாம் பெருமிதம் பொங்கச்சொல்லும்... எப்போதாவது அலுத்துவிட்டால் இலவச இணைப்பாக, வச்சிருந்த நகைநட்டு, வளர்த்துவந்த ஆடு மாடு, முற்றத்து மரத்தடியில் நட்டுவைத்த சாமியென்று அத்தனை விஷயமும் அழகழகாய் அடுக்கிச் சொல்லும்... ஆனா, இப்பல்லாம் கதைகேட்டா எந்தக்கதை சொல்வதென்று ஆச்சி ரொம்பத்தான் தவிக்கிறது... அடுக்கடுக்காய்க் கஷ்டப்பட்ட அபியின் வீட்டில் நுழைந்து, அதிகாரம் குறையாத அரசியை அதிசயித்து, கஷ்டமே படும் அந்தக் கஸ்தூரிக்குக் கண்கலங்கி, துரதிர்ஷ்டம் தொடருகிற துளசிக்காய்த் துக்கம்கொண்டு, அர்ச்சனாவின் மாமியாரை ஆத்திரமாய்த் திட்டிவிட்டு, செல்லம்மாவின் கதைவரைக்கும் சொல்லிச்சொல்லி மாய்கிறது... இந்தக்கதை வேண்டாம் ஆச்சி, வேறுகதை சொல் என்றால் கள்ளிக்காட்டில் பார்த்த பள்ளிக்கூடக் கதையைச் சொல்ல, உள்ளபடி, ஏங்கித்தான்

அப்பாவும் அவனும்!

வீட்டுக்குள் நுழைகையில் நள்ளிரவாகியிருந்தது... உள்ளே, ஒற்றை விளக்கொளியில் உறங்காதிருந்தது வீடு... தேடியெடுத்த பதிலுடன் தைரியமாய் நுழைகையில், வாசல்படி தாண்டி வந்து விழுந்தன நெல்லைச் சீமையின் மண்மணம் மாறாத வசவுகள்... அப்பாவின் வசவுக்கு எதிர் வசவு தேடாமல் சட்டையைச் சுருட்டித் தலைக்கடியில் கொடுத்தபடி, மிதிவண்டித் திண்ணையில் ஒருநொடியில் உறங்கிப்போனான்... ஒற்றை விளக்கோடு வசவுகளும் ஓய்ந்திட, சத்தமின்றித் தூங்கியது வீடு... முப்பது நிமிடங்கள் முழுமையாய்க் கரையுமுன் அவன் தந்தை, தொட் டெழுப்பினர் தன் மனைவியை மெதுவாக... என்னவென்று கேட்டபடி எழுந்த மனைவியிடம் சொன்னார் மெதுவாக, "வெளியே, பிள்ளைக்குக் கொசுக் கடிக்கும், போய் போர்த்திவிட்டு வா" என்று!

என்னையும் புரிந்துகொள்ளேன்...

நான் கடந்து போகும்வரை நகராமல் ரசித்துவிட்டுத் தான் கடந்துபோகிறாய்... சொல்,நானும் அழகுதானே? தாமதமாய் வந்தாலும் தகவல்சொல்ல மறப்பதில்லை ஆனாலும், கேவலமாய்த் திட்டுகிறாய்... என் பெருமூச்சே பதிலுனக்கு. இரவு நேரத்தில் என்னோடு வந்தாய்... உன்னைத் தாலாட்டி மடியிலிட்டு இதமாகத் தூங்கவைத்தேன்... ஆனால், போகிற அவசரத்தில் உடைமைகளைச் சேகரித்து, எட்டியும் பார்க்காமல் என்னை விட்டுப் போகின்றாய்... இதைக் குற்றமென்று சொல்லிக் கொடிபிடிக்க மாட்டேன் நான்... ஆனாலும், என் நெஞ்சுக்குள் புகைந்திடும் நீண்டநாள் குமுறல் இது... அதுபோல, எத்தனையோ உறவுகளைச் சேர்த்துத்தான் வைத்தேன்... ஆனாலும், என்னுடைய சிநேகிதத்தில் உனக்கு எப்போதும் சந்தேகம்தான்... குற்றமென்ன செய்தேன்? கொடுக்கிற காசுக்குத் தக்கபடி கவனிப்பேன்... கூடப் பணம்கொடுத்தால் குளிரவைத்து சுகம்கொடுப்பேன்... ஆனால், அதற்காக நீ, சமயத்தில் காசே கொடுக்காமல் கன்னம்வைத்தால் என்ன அர்த்தம்? எத்தனையோ தவறுகள் எங்கேயோ நடக்கிறதுதான்... அதற்காக, என்னைச் சிதைத்துப் பார்ப்பதில் உனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி? எனக்கும் வலிக்கிறது, ஆ