என்னையும் புரிந்துகொள்ளேன்...

நான் கடந்து போகும்வரை
நகராமல் ரசித்துவிட்டுத்
தான் கடந்துபோகிறாய்...
சொல்,நானும் அழகுதானே?

தாமதமாய் வந்தாலும்
தகவல்சொல்ல மறப்பதில்லை
ஆனாலும்,
கேவலமாய்த் திட்டுகிறாய்...
என் பெருமூச்சே பதிலுனக்கு.

இரவு நேரத்தில்
என்னோடு வந்தாய்...
உன்னைத்
தாலாட்டி மடியிலிட்டு
இதமாகத் தூங்கவைத்தேன்...

ஆனால்,
போகிற அவசரத்தில்
உடைமைகளைச் சேகரித்து,
எட்டியும் பார்க்காமல்
என்னை விட்டுப் போகின்றாய்...

இதைக் குற்றமென்று சொல்லிக்
கொடிபிடிக்க மாட்டேன் நான்...
ஆனாலும்,
என் நெஞ்சுக்குள் புகைந்திடும்
நீண்டநாள் குமுறல் இது...

அதுபோல,
எத்தனையோ உறவுகளைச்
சேர்த்துத்தான் வைத்தேன்...
ஆனாலும்,
என்னுடைய சிநேகிதத்தில்
உனக்கு
எப்போதும் சந்தேகம்தான்...

குற்றமென்ன செய்தேன்?
கொடுக்கிற காசுக்குத்
தக்கபடி கவனிப்பேன்...
கூடப் பணம்கொடுத்தால்
குளிரவைத்து சுகம்கொடுப்பேன்...

ஆனால்,
அதற்காக நீ,
சமயத்தில் காசே கொடுக்காமல்
கன்னம்வைத்தால் என்ன அர்த்தம்?

எத்தனையோ தவறுகள்
எங்கேயோ நடக்கிறதுதான்...
அதற்காக,
என்னைச் சிதைத்துப் பார்ப்பதில்
உனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி?

எனக்கும் வலிக்கிறது,
ஆகவே தனிமையில்
ஓலமிட்டு அழுகிறேன்,
என்னையும் புரிந்துகொள்ளேன்...

என்றுசொல்லிப் புலம்பிவிட்டு
ஏக்கப்பெருமூச்சு விட்டு
எனைக் கடந்துபோகிறது
அந்தப் புகைவண்டி!

கருத்துகள்

  1. அருமை பாஸ்...

    புகை வண்டியின் ஆதங்கம்...

    பதிலளிநீக்கு
  2. அடடா...புகை வந்தியா இவ்வளவு ஆதங்கப் படுகிறது!!! வாஸ்த்தவம் தான் வாயிருந்தால் பேருந்தைக் காட்டிலும் சொல்வதற்கு ஆயிரமாயிரம் கதைகள் கொண்டது தான் புகை வண்டிகள் ,நல்ல ஆதங்கம் தான்.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நன்றாக இருக்கிறது...
    கவிதை...

    பதிலளிநீக்கு
  4. //பிரியமுடன்...வசந்த் said...
    அருமை பாஸ்...

    புகை வண்டியின் ஆதங்கம்...//

    நன்றி வசந்த்!

    தொடர்ச்சியான உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. //Mrs.Dev said...
    அடடா...புகை வந்தியா இவ்வளவு ஆதங்கப் படுகிறது!!! வாஸ்த்தவம் தான் வாயிருந்தால் பேருந்தைக் காட்டிலும் சொல்வதற்கு ஆயிரமாயிரம் கதைகள் கொண்டது தான் புகை வண்டிகள் ,நல்ல ஆதங்கம் தான்.//

    நன்றி Mrs.Dev :)

    நிஜம்தான்...பேசாத பொருட்களெல்லாம் பேச ஆரம்பித்தால் நாமெல்லாம் வாயை மூடிக்கவேண்டியதுதான் :)

    பதிலளிநீக்கு
  6. //கமலேஷ் said...
    ரொம்ப நன்றாக இருக்கிறது...
    கவிதை...//

    முதல் வருகைக்கு நன்றிகளும் வரவேற்புகளும் கமலேஷ்!

    பதிலளிநீக்கு
  7. நல்லாயிருக்கு.........
    கலக்கல் கவிதை.........

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப அழகா இருக்கு உங்களின் கவிதை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  9. ahaa! train sollra kathaiya ithu?
    kadaisi varai theriyalai enaku :)
    super sundara.

    anbudan
    anu

    பதிலளிநீக்கு
  10. சுந்தரா, பயந்துவிட்டேன் முதலில்:)
    ஆஹா ரயில்கள் பேச ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அருமையான கவிதை. அசத்திட்டீங்க:)

    பதிலளிநீக்கு
  11. //Sangkavi said...
    நல்லாயிருக்கு.........
    கலக்கல் கவிதை.........//

    நன்றி சங்கவி, வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  12. //கல்யாணி சுரேஷ் said...
    simply superb.:)//

    நன்றி கல்யாணி!

    உங்க தளத்தைப் பார்த்தேன். ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. //கவிதை(கள்) said...
    ரொம்ப அழகா இருக்கு உங்களின் கவிதை

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    கவிதை படிக்க கவிதைகள் வந்ததில் மகிழ்ச்சி.

    நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  14. //Anonymous said...
    ahaa! train sollra kathaiya ithu?
    kadaisi varai theriyalai enaku :)
    super sundara.

    anbudan
    anu//

    வாங்க அனு :)

    கடைசிவரை படிச்சதுக்கு நன்றி.

    இல்லேன்னா, என்னடா கவிதை இப்படிப்போகுதேன்னு நினைச்சிருப்பீங்கல்ல :)

    பதிலளிநீக்கு
  15. //வல்லிசிம்ஹன் said...
    சுந்தரா, பயந்துவிட்டேன் முதலில்:)
    ஆஹா ரயில்கள் பேச ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அருமையான கவிதை. அசத்திட்டீங்க:)//

    நினைச்சேன் வல்லிம்மா :)

    பாதி கவிதைவரைக்கும் படிக்கையில் திகிலாத்தான் இருந்திருக்கும்.

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!