ஆச்சி ரொம்பத்தான் மாறிப்போச்சு!

அப்பல்லாம் ஆச்சிக்கு
அடுத்த வீடே தெரியாது...
எப்போதும் பிள்ளைகள்,
இல்லாவிட்டால் புருஷனென்று
தப்பாமல் தன்வீட்டுக்
கதையைத்தான் நமக்குச்சொல்லும்...

ஊர்கண்ணு பட்டிடாம
உலையடுப்பு அவிஞ்சிடாம
ஆறிரண்டு பிள்ளைகளை
அடுத்தடுத்துத் தான்பெற்று
பேர்சொல்ல வளர்த்ததெல்லாம்
பெருமிதம் பொங்கச்சொல்லும்...

எப்போதாவது அலுத்துவிட்டால்
இலவச இணைப்பாக,
வச்சிருந்த நகைநட்டு,
வளர்த்துவந்த ஆடு மாடு,
முற்றத்து மரத்தடியில்
நட்டுவைத்த சாமியென்று
அத்தனை விஷயமும்
அழகழகாய் அடுக்கிச் சொல்லும்...

ஆனா,
இப்பல்லாம் கதைகேட்டா
எந்தக்கதை சொல்வதென்று
ஆச்சி ரொம்பத்தான் தவிக்கிறது...

அடுக்கடுக்காய்க் கஷ்டப்பட்ட
அபியின் வீட்டில் நுழைந்து,
அதிகாரம் குறையாத
அரசியை அதிசயித்து,
கஷ்டமே படும் அந்தக்
கஸ்தூரிக்குக் கண்கலங்கி,

துரதிர்ஷ்டம் தொடருகிற
துளசிக்காய்த் துக்கம்கொண்டு,
அர்ச்சனாவின் மாமியாரை
ஆத்திரமாய்த் திட்டிவிட்டு,
செல்லம்மாவின் கதைவரைக்கும்
சொல்லிச்சொல்லி மாய்கிறது...

இந்தக்கதை வேண்டாம் ஆச்சி,
வேறுகதை சொல் என்றால்
கள்ளிக்காட்டில் பார்த்த
பள்ளிக்கூடக் கதையைச் சொல்ல,
உள்ளபடி,
ஏங்கித்தான் போனது மனசு...

அப்போது சொல்லிவைத்த
அந்தநாள் கதைகளைப்போல்
இப்போ சொல்லும் கதையெல்லாம்
இதமாக இல்லையென்று
சொல்லத்தான் நினைக்கிறது மனசு...
ஆனால்,
கேட்கும் நிலையில்தான்
ஆச்சி இன்று இல்லை...

கருத்துகள்

  1. //கேட்கும் நிலையில்தான்
    ஆச்சி இன்று இல்லை...//

    கேட்கும் நிலையில் யாருமே இல்ல போங்க! அருமையாய் நடப்பைச் சொல்லியிருக்கீங்க சுந்தரா.

    ‘கதை கேட்டல்’(லேபிள்) ஹும்ம்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ராமலக்ஷ்மி அக்கா.

    பெயர்களைச் சரிபார்ப்பதற்காக, நேற்று நாலைந்து தொடர்களைப் பார்க்க நேர்ந்தது.

    ஐயோ, நம்ம மக்கள் ரொம்பப் பாவம்னு தோணிப்போச்சு :)

    பதிலளிநீக்கு
  3. //இந்தக்கதை வேண்டாம் ஆச்சி,
    வேறுகதை சொல் என்றால்
    கள்ளிக்காட்டில் பார்த்த
    பள்ளிக்கூடக் கதையைச் சொல்ல,
    உள்ளபடி,
    ஏங்கித்தான் போனது மனசு...//

    ஆச்சி கதை நல்லாயிருக்கு.......

    பதிலளிநீக்கு
  4. எங்க பாட்டி ஞாபகம் வந்துபோச்சுபா...

    பதிலளிநீக்கு
  5. சுந்தரா, நான் கூட 'கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்'' பார்க்கிறேன்.;)
    மத்ததெல்லாம் பார்த்ததில்லை. எங்க பாட்டி இருந்தபோதே காலம் மறி விட்டது. அப்போது மெட்டி ஒலியும்,சித்தியும் ஆட்சி செய்தாங்க.
    பாட்டியிடம் கதை கேட்ட காலமும் இருந்தது. அழகான கவிதைம்மா

    பதிலளிநீக்கு
  6. தொ(ல்)லைக்காட்சியில் தான் அழ வைக்கிற தொடர்கள் என்றால்

    அந்தத் தொடர்களின் பாத்திரப்பெயர்களை
    மறுபடியும் நினைவுப் படுத்த வேண்டுமா

    ஏங்க இந்தக் கொலை வெறி

    ;))))))))))))

    //கேட்கும் நிலையில்தான்
    ஆச்சி இன்று இல்லை...//

    பாட்டி இற‌ந்த‌யுட‌ன்
    க‌தைக‌ளும் செத்துவிட்ட‌ன‌

    உண்மைதான்

    அது எல்லாம் ஒரு கால‌ம்

    ஆச்சியின் கதை மட்டுமா
    இது நம்ம கதையும் தான்

    நல்ல இருக்கிறதுங்க‌

    பதிலளிநீக்கு
  7. //Sangkavi said...
    //இந்தக்கதை வேண்டாம் ஆச்சி,
    வேறுகதை சொல் என்றால்
    கள்ளிக்காட்டில் பார்த்த
    பள்ளிக்கூடக் கதையைச் சொல்ல,
    உள்ளபடி,
    ஏங்கித்தான் போனது மனசு...//

    ஆச்சி கதை நல்லாயிருக்கு.......//

    நன்றிங்க சங்கவி!

    பதிலளிநீக்கு
  8. //கலையரசன் said...
    எங்க பாட்டி ஞாபகம் வந்துபோச்சுபா...//

    :) நன்றி கலையரசன்!

    பதிலளிநீக்கு
  9. //வல்லிசிம்ஹன் said...
    சுந்தரா, நான் கூட 'கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்'' பார்க்கிறேன்.;)
    மத்ததெல்லாம் பார்த்ததில்லை. எங்க பாட்டி இருந்தபோதே காலம் மறி விட்டது. அப்போது மெட்டி ஒலியும்,சித்தியும் ஆட்சி செய்தாங்க.
    பாட்டியிடம் கதை கேட்ட காலமும் இருந்தது. அழகான கவிதைம்மா.//

    நன்றிகள் வல்லிம்மா...

    எங்கிட்டயும் தோழிகள் சிலர் , கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம் பாருங்க, ரொம்ப நல்லாருக்குன்னு
    சொன்னாங்க :)

    பதிலளிநீக்கு
  10. //திகழ் said...
    தொ(ல்)லைக்காட்சியில் தான் அழ வைக்கிற தொடர்கள் என்றால்

    அந்தத் தொடர்களின் பாத்திரப்பெயர்களை
    மறுபடியும் நினைவுப் படுத்த வேண்டுமா

    ஏங்க இந்தக் கொலை வெறி

    ;))))))))))))//

    எழுதியிருக்கிறதைப் பாத்தா அந்தத் தொடர்களையெல்லாம் பார்த்து ரொம்ப பாதிக்கப்பட்டமாதிரி தெரியுதே...

    //ஆச்சியின் கதை மட்டுமா
    இது நம்ம கதையும் தான்//

    பாத்தீங்களா, இங்க உண்மையை ஒத்துக்கிட்டீங்க :)

    நன்றிகள் திகழ்மிளிர் :)

    பதிலளிநீக்கு
  11. அப்போது சொல்லிவைத்த
    அந்தநாள் கதைகளைப்போல்
    இப்போ சொல்லும் கதையெல்லாம்
    இதமாக இல்லையென்று
    சொல்லத்தான் நினைக்கிறது மனசு...
    ஆனால்,
    கேட்கும் நிலையில்தான்
    ஆச்சி இன்று இல்லை... ...........உண்மைதான். ........... டிவியில் வரும் கதைகள் மட்டும் தெரிந்து வாழும் பல மனிதர்களுக்கு எதை தொலைத்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  12. நல்ல கவிதைங்க யதார்த்தத்தை ஏக்கத்தோடு சொலியிருக்கிங்க மிக ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  13. தொடர் தொந்திரவு பத்தாம இப்ப சன் டி.வி படம் வேற எடுக்க ஆரம்பிச்சு அதை பாத்து நிமிஷத்துக்கு ஒருதரம் போட்டு அய்யோ தாங்கவே முடியலைங்க

    பாட்டி கதையை டிவியோடு இணைத்து பார்த்தது அழகு

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!