இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈரம்

படம்
ஈரவாசனை படர்ந்திருந்தது அந்தக் கூரைக் குடிசையின் எல்லாப் பக்கமும்... கோரைப்பாயும் ஈரக்கோணியும் அதனதன் பங்குக்கு வாசனை பரப்ப, அரிசிப் பானைக்குள் அடிவரைக்கும் துழாவி, உரசிக் கிடைத்த ஒன்றிரண்டு மணிகளை, வாசல் குருவியின் வயிற்றுக்குக் கொடுத்துவிட்டு, ஈரச் சட்டையுடன் சோகைப்பிள்ளை சிரிக்க, உள்ளே, மூத்திர   ஈரத்தில் அழுதது, சேலைத் தொட்டிலில் சின்னப் பிள்ளை... மாசம் முடியுமுன்னால் முன்பணம் கேக்குதா? நாசமாய்ப் போச்சுதென்று ஓசைஉயர்த்திய எஜமானியிடம், ஈரத்தால் வெளுத்த இருகையும் பிசைந்தபடி, வாரேம்மா என்றபடி, வெளியிறங்கி நடந்தவளின் வீட்டுக்குள் அன்றைக்குக் காய்ந்து கிடந்தது, ஓரத்து விறகடுப்பும், ஒன்றிரண்டு வயிறுகளும்... ********** படம் : இணையத்திலிருந்து

விக்கியதில் கசிந்த விவகாரங்கள்!

படம்
                                                இப்போதெல்லாம், அக்கம்பக்கத்தில் பேசக்கூட அச்சப்படுகிறார்களாம் சிலர்... ஏனென்றால், ''விக்கி'யதில் வெளியான விவகாரங்கள் அப்படி... கட்டிப்பிடித்துக் கொண்டே கழுத்தறுத்த யுக்திகள், கைகுலுக்கிக் கூட்டிச்சென்று கழுவேற்றிய புத்திகள்... அத்தனையும் வெளியில்வர அதிர்ந்துபோயிருக்கின்றன, அரசியல் அரங்கத்தின் அசகாய சக்திகள்! அண்ணனுக்கும் ஆப்பு அவனுக்குக் குடைபிடித்த அடுத்தவனுக்கும் ஆப்பு... இங்கே, கண்ணின் விழிபிதுங்கக் கலங்கிப்போய்நிற்கிறது கயமை... அரசியலின் போர்வையில் அக்கிரமம் செய்தவர்களின் ரகசியங்களெல்லாம் விக்கியதில் வெளியேற, விக்கியவனின் வாயைத் தைக்கும்  முயற்சியில் மும்முரமாய் இறங்கியிருக்கின்றன, ஆத்திரம் தலைக்கேறிய சில ஆதிக்க முதலைகள்!

முடியாத துயரம்

படம்
இவை, எல்லாம் கடந்துபோகும், இயல்பாயிரு  என்றார்கள்... இருந்து பார்த்தாள், இயலவில்லை... ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டைப் பாடியும் படியவைக்கலா மென்றார்கள்... முயன்று பார்த்தாள், முடியவில்லை... வேதனையாயிருந்தால் கொஞ்சம்  விலகியிரு... விலக விலகத்தான் விருப்பம் வருமென்றார்கள்... விலகியும் பார்த்தாள், ஆனால், வெறுப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை... இறுதியில் விட்டு விலகி வெளியில் வந்தபின்தான் விபரம் புரிந்தது, அது வெந்த புண்ணில்  வேலைப் பாய்ச்சுகிற சொந்தம் மட்டுமல்ல, எட்டியிருந்தாலும் குத்திக்கிழிக்கிற எந்திரமும் தானென்று!!!

உறுத்தலில் உருவாகி...

மனசுமுதிராத முன்னிருபதுகளில் ஒரு மாபெரும் உறுத்தலுக்கு, மாலையிட்டவள் அவள்... காலையில் கட்டிய கனவுக்கோட்டை யெல்லாம் மாலையில் சிதையவைக்கும் மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்பாகக் கசங்கியவள்... நின்றால் ஒருகுற்றம் நிலைமாற முன்னேறி நடந்தாலும் குற்றமென்று, கண்ணால் சுட்டெரித்த கனலுக்குக் கட்டுப்பட்டுப் பெண்ணாக மண்டியிட்ட பேதைப் பிறவியவள்... எண்ணிக்கைக் கடங்காத இருட்டுக் கதைகளை, எண்ணியெண்ணி அழுதிருந்தால் இருண்டிடும் வாழ்க்கையென்று, எல்லாவற்றையும், மண்ணாகிப்போன தன் மனசுக்குள் புதைத்தவள்... எண்ணைந்து வயசுகளின் இறுதிப் பிராயத்தில், பெண்ணென்றால் இவளென்று அவள் பொறுமையைச் சிரசிலேற்றித் தன்னோடு சேர்த்துக்கொள்ளத் தேடிவந்தன உறவுகள்... உறுத்தி உறுத்தியே ஓய்ந்துபோன உறவுக்கும்கூட, மருத்துவம் சொல்லி மனதை மாற்றுமளவுக்குப் பக்குவப்பட்டுப் போனது அவளது அப்பழுக்கில்லாத மனசு... எப்படிப் பார்த்தாலும் இவளுடைய பெருமைக்கு மொத்தக் காரணம் எப்பவும் நான்தானென்று கண்ணீரைமீறி ஓர்நாள் உண்மை கரைபுரள, அங்கே, புடமிட்ட பொன்னில்கோர்த்த வடமாக ஜொலித்தது முத்து!

அடர்கருப்பு

படம்
இது, வெளிச்சத்தின் வாசல், காதலின் தேடல், இரவுகளின் இயல்பு, கனவுகளின் பிறப்பு... உயிர்களின் துயிலணை, பனியிறங்கும் பஞ்சணை, ஆழ்கடலின் ஆழம், நிழலினிலும் நீளும்... நீர்சுமந்த மேகங்கள் அணிந்திருக்கும் வண்ணம், யாருமிலாத் தனியிரவில் பயமுறுத்தும் எண்ணம்... மழைகுளித்த பனைமரங்கள் காட்டுகிற நிறம், சுடர் விளக்கின்ஒளியினிலும் ஒளிந்திருக்கும் நிஜம்... கருப்பென்ற வார்த்தை அந்தக் கண்ணனுக்கும் பொருந்தும், உலகத்து நிறங்களெல்லாம் அடர்கருப்பில் அடங்கும்!

கடல்புறத்து வாழ்க்கை

படம்
அலையும் ஆரவாரமுமாய் அமைந்த சிறுகுடி... வலையும் வள்ளமுமாய் அலங்கரித்த கடல்மடி... அதிவேகக் காற்று, அகங்காரப் பெருமழை, மோகித்த அலைக்கரங்கள் மூர்க்கமாய் எழுந்துவர, மனித ஓசைகள் முற்றிலும் ஒடுங்கிப்போய், இயற்கையில் குரல்மட்டுமே எதிரொலித்தது அங்கு... பட்டதெல்லாம் போதாதா பாடெல்லாம் மறந்துபோச்சா? விட்டுச்செல் கரையை என்று அலைகள் விரட்டினாலும், எட்டிச்செல்ல முடியாமல் இணைந்துவிட்ட மனசுகள் தொட்டெடுத்துப் பூசிக்கொண்டன நெற்றியில் கடலின்மண்ணை ... சுற்றிச் சுழன்றுவந்த புயலும் பெருமழையும் அந்தப் பற்றும் பாசமும்கண்டு மிரண்டுபோய்ப் பின்வாங்க, எங்கே அகப்படுவோம் எப்போது சுகப்படுவோம் என்ற எந்தக் கேள்வியையும் எண்ணத்தில் நிறுத்தாமல், மற்றொரு நாளின் பிழைப்புக்காய் வலையெடுத்து, மீண்டும் அலையாடும் கடலுடன் விளையாடப் புறப்பட்டது, வாழ்வெனும் பெருஞ்சுழலில் அகப்பட்ட கூட்டமொன்று.

நிறம் மாறிய தீபாவளி!

படம்
அதிகாலை விடியலில் ஐந்தாறுநிறப் பொடிகளுடன் அகல்விளக்குக் கோலமிட ஆசைவந்தது அவளுக்கு... பதினெட்டில் மணமுடித்து பத்தொன்பதில் நிறமிழந்து, பத்து வருடங்களாய்ப் பாரம் சுமந்தவள், கறுப்பு நெற்றிப்பொட்டோடு கலர்க்கோலம் இடப்போனாள்... முதல்வருஷத் தீபாவளியுடன் முடிந்துபோன நினைவுகள், முறுக்கிப் பிழிவதுபோல் மனதை அழுத்திநிற்க, பெருக்கி நீர்தெளித்துப் பெருமூச்சை இறைத்தவளை, அங்கே எட்டிப்பார்த்துச் சிரித்தது எதிர்வீட்டுக் குழந்தையொன்று... கற்பனையில் தொட்டில்கட்டிக் கனவுகளில் பெற்றெடுத்த சுட்டிக்குழந்தையின் நினைவுவந்து மனம்வருத்த, கைக்குவந்த கோலத்தைப் காலடியில் போட்டுவிட்டுக் கண்கள் கலங்கிவிட உள்ளே திரும்பினாள்... வெளியே, எட்டு எட்டாய் அடிவைத்து வாசலுடன் முடிந்திருந்தது, குட்டிக்கண்ணனின் பாதச்சுவடுகள்!

தீபாவளி வேட்டு!

கோட்டுப்போட்ட கிறுக்கனொருத்தன் கத்தியோட அலையிறானாம், வீட்டைவிட்டுப் பிள்ளைகளை வெளிய அனுப்பாதே... போனஸ் பணம்கேட்டு போராட்டத்துக்குக் கிளம்பியவன், ஜாடையாய்க் கூப்பிட்டு, சத்தமாய்ச்சொன்னான் மனைவியிடம்... கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் கிலியோடு முகம்பார்க்க, கதவைப் பூட்டியவள் மெல்லமாய் மனசுக்குள் முணுமுணுத்தாள்... வீட்டுச் சுவற்றுக்குள் அடைஞ்சு கிடந்தாலும், வேட்டும் விமரிசையும் காதில் விழாமலா இருக்குமென்று...

ஒற்றை மரம்!

படம்
                        விழுதிருந்தா ஆலமரம், கன்றிருந்தா வாழைமரம், பாளையிருந்தா பனைமரம், தோகையிருந்தா தென்னைமரம்... இது எதுவுமே இல்லாம இருந்தா...? பக்கத்திலிருந்த ஆயாவிடம், பாடத்தில் சந்தேகம் கேட்டது குழந்தை... "வாழ்ந்துகெட்ட தனிமரம்" விரக்தியாய்ச் சொல்லிவிட்டு, விழிகளைத் துடைத்துக்கொண்டது, வீடுகூட்டி வயிற்றைக் கழுவுகிற அறுபது வயசு ஆயா... ********

ஃபைவ் ஸ்டார்!!!

படம்
"அப்பா, மிச்சம் காசிருந்தா மூணு ஃபைவ் ஸ்டார்..." கத்திச்சொல்லிவிட்டுக் கதவுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டது கடைக்குட்டி... சட்டைப்பை காலியாயிருக்க, கடனுக்கு அரிசிவாங்கக் கடைக்குப் புறப்பட்டவன், "அம்மாவும் நானும் ரெண்டு ஸ்டார், அம்முவும் அண்ணன்களும் மூணு ஸ்டார்... அஞ்சு ஸ்டார் வீட்டிலே இருக்க, அப்புறம் எதுக்கு இன்னும் கொஞ்சம் ஃபைவ் ஸ்டார்?" என்று, இடக்காய்க் கேட்டுவிட்டுத் திரும்பாமல் நடந்தான்... சுருங்கிய பிஞ்சின் முகத்தைப் பார்க்காமலும், அரும்பிய கண்ணீரை அடுத்தவர்க்குக் காட்டாமலும்...

பாரபட்சம்

படம்
அன்று, அழைத்த திரௌபதிக்கு ஆடைகொடுத்துக் காத்தவன், இன்று, அழைப்பதறியாமல் அனாதையாய்த் திரியும், அந்த ஊமைக் கோமளத்துக்கும் கொஞ்சம் உவந்து கொடுத்திருக்கலாம்... அங்காடித் தெருக்களில் ஆள்துளைக்கும் பார்வைகளில், அன்றாடம், தொட்டும் தொடாமலும் கெட்டுப்போகிறாள் அவள்...

ஈசலுக்கும் இரங்கும்!

படம்
உதிர்த்துப் போட்ட சிறகுகளுக்கு மத்தியில் உருண்டு கொண்டிருந்தது ஈசல்... வீடெல்லாம் குப்பையாக்கிட்டு விழுந்துகிடக்குது பார்... என்று, விளக்குமாறை எடுத்துவந்து வீடுகூட்டப்போனாள்  அம்மா... அதுவே, அம்மாகிட்ட போகமுடியலேன்னு அழுதுகிட்டிருக்கு, நீ  சும்மாயிரு அம்மா... கன்னத்தில் கைவைத்துக் கவலையுடன் சொன்னது குழந்தை...

ஒரு அமீரகத்துத் தமிழனின் அழுகுரல்!

இது என்னுடைய கவிதை அல்ல...அமீரகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரர் எழுதியதாக, நான் மின்னஞ்சலில் படித்த கவிதை. இதில்வரும் அபஷி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தெரிஞ்சவங்க சொன்னால் தெரிஞ்சுக்கலாம். இதோ, கவிதை... நாம் யார்? வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள்! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள்! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள்! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள்! நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள்! பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள்! ஏ . சி . காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள்

காசா பணமா, காலரத் தூக்கிவிடு!

மதியத்துக்கு என்ன? மசால் டீயும் பன்னும்... மாசச் சம்பளம்? வந்ததெல்லாம் வருமானம்... சாலையோரக் குடிமக்கள்? சர்த்தான்,வாடகை இல்ல... காஷ்மீர் பிரச்சனை? குளுரு கொஞ்சம் ஜாஸ்திதான்... அயோத்தி விவகாரம்? அட,ஆள விடுங்கப்பா... மாவோயிஸ்ட் பிரச்சனை? மருந்துக்கடைப் படிப்புதான... எந்திரன் பற்றி ஏதாவது...? அபிசேக்பச்சன் பொண்டாட்டி அழகாத்தான் இருக்குது... அம்பானியைப் பத்தி...? நாலாவது பணக்காரன் நம்மூரு மொபைல்காரன், காசா பணமா, காலரத் தூக்கிவிடு!

அக்கரைப்பூக்களின் இக்கரை ஆசை!

காட்டுப்பூக்க ளெல்லாம் ஒருநாள் கடவுளிடம்போய் முறையிட்டன... ஊருக்குள் பூக்கிற ஒவ்வொரு பூவுக்கும் பேரும் பெருமையும் நிறையவே இருக்கிறது... ஆனால், காட்டுக்குள் பூத்துச் சிரிக்கின்ற எங்களை கவனிக்கக்கூட யாருமே இல்லையென்று... கேட்டுக்கொண்டிருந்த கடவுள் வாய்விட்டுச் சிரித்துவிட்டுக் கூட்டிப்போய் காட்டினார் நாட்டுப்பூக்களின் நிலைமையை... கொட்டிக் கவிழ்த்துவைத்து கற்றைநூலில் இறுகக்கட்டி, சுற்றிப் பந்தாக்கிக் கூடையிலே போட்டுவைத்து, அப்பப்போ மலர்களின் மயக்கம் தெளிவிக்க, பச்சைத் தண்ணீரை அள்ளித் தெளித்துவிட, அச்சச்சோ என்னை விட்டுவிடேன் என்று அழக்கூட முடியாமல் விதிர்த்திருக்கும் பூக்களையும், மல்லிகை மரிக்கொழுந்து, சம்பங்கி ரோஜாவென்று கண்ணுக்கு அழகாகக் கலந்தெடுத்து மாலைகட்டி, கண்ணாடிக் காகிதத்தில் சுற்றிவைத்துத் தொங்கவிட, கழுத்திறுகிக் காத்திருக்கும் கதம்ப மலர்களையும், தலைச்சிடுக்கில் சிக்கி தன்னுடல் காயமாகப், படுக்கையிலே பாவமாக நசுங்கிய பூக்களையும், பார்த்துப் பயந்துபோய் கானகமே சொர்க்கமென்ற காட்டுப் பூக்களிடம் கடைசியாகச் சொன்னார் கடவுள்... நாட்டிலின்று, நோட்டுமாலை கட்டிப்போட்டு நாலுபேர் பழக்கிவிட,

பொய்ப் பிரிவு

படம்
அனுமதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமாய்ப் பொய்சொன்னாய் நீயென்று, பிரித்துவைத்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பெரியவர்கள்... இங்கே, நீயற்ற நெடுவெளியில் நோயுற்ற நினைவுகளுடன் ஒற்றையாய் நடக்கிறேன்... ஆனால், சொல்லிழந்துகிடக்கும் சோக நிமிஷங்களிலும், என்னைக் கொஞ்சமேனும் புன்னகைக்கவைப்பது, அன்றைக்கு நீ சொன்ன சில அழகான பொய்கள் என்று எப்படிச் சொல்லி இவர்களுக்குப் புரியவைப்பேன்?

தூரமாகிப்போன சாமியும் சந்தோஷமும்!

படம்
தூரமா யிருக்கிறப்ப  தெருவுக்கெல்லாம் கூடாது,  ஓரமா உக்காந்து  பரமபதம் ஆடென்று  காரமாய்ச் சொல்லிவிட்டுக்  கண்ணை உருட்டியது பாட்டி...  வேறெதுவும் பிடிக்காமல்  வெற்றுத் தாளெடுத்துவைத்து,  சுற்றிக் கோடுபோட்டு  ஸ்ரீராம ஜெயம் எழுத,  கெட்டுதுபோ குடியென்று  பட்டென்று பிடுங்கிவிட்டு,  சுத்தமாகிற வரைக்கும்  சாமியெல்லாம் வேண்டாம்,  குத்தமாகிப் போகுமடி  என்று பயமுறுத்த,  தூரமாகிப்போனது  சாமியுமா என்று  பாரமாகிப்போன மனதுடன்  பாயில்போய் விழுந்தது,  பெரியவளாகிப் போன  பத்துவயசுச் சின்னப் பூ. *****

பெண்மையின் மென்மையில் இல்லை பலவீனம்!

அலுவலகப் பணிமுடித்து  ஆறுமணிக்கு வந்தாலும்,  ஆறுதலாய் உட்கார  அவளுக்கு விதியில்லை...  குளிக்கின்ற சமயத்தில்  குழாயடியில் நீர்பிடித்து,  சமைக்கிற தருணத்தில்  சமையலறை சுத்தம்செய்வாள்...  படிக்கவைக்கும் நேரத்தில்  பத்திரிகை பார்த்துவிட்டு,  மாவரைக்கும் நேரத்தில்  மடித்ததுணி எடுத்துவைப்பாள்...  நடைப்பயிற்சி என்றுசொல்லிக்  கடைக்கெல்லாம் போய்வந்து,  கணக்கெழுதும் நேரத்தில்  கவிதையொன்றும் எழுதிவைப்பாள்...  அடுத்த நாள் சமையலுக்கு  ஆயத்தம் செய்தபடி,  படிக்கின்ற பிள்ளைக்கு  உணவூட்டி உறங்கவைப்பாள்...  படுத்தபின்னும் உறக்கமின்றிப்  பால்கணக்கு என்னவென்று,  மனக்கணக்குப் போட்டு  அதை  மறக்காமல் குறித்துவைப்பாள்...    சுற்றுகிற பூமிபோலப்  பொறுமையுடன் பணிமுடித்துச்,  சுற்றிவரும் பெண்ணிவளைப்  போற்றிட முடியாமல்,  பெட்டைக் கோழிகூவி  பொழுதொன்றும் விடியாதென்று  நக்கலாய்ப் பேசி  நையாண்டி செய்துவிட்டு,  கணினித் திரையினுள்  கண்புதைத்துக் கொண்ட  கணவனைப் பார்த்தவள்  தனக்குள்ளே முணுமுணுத்தாள்...  பெண்மையின் மென்மையில்  இல்லை பலவீனம்,  அது,  ஆணென்னும் அகங்காரத்தில்  அடங்கிக் கிடக்கிறதென்று!  ******

ஒற்றை மனுஷியும் கற்றை எதிர்பார்ப்புகளும்

காலையிலிருந்து, கண்ணாடியைத் தேடுறேன், எடுத்துத் தரணும்னு யாருக்கும் தோணலை, கடுப்பாகச் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டார் தாத்தா... என்னோட வீட்டுப்பாடத்தை எப்பதான் சொல்லித்தருவே? எழுதுகிற ஏட்டிலிருந்து கழுத்தைத் திருப்பி, ஏறிட்டுப் பார்த்துவிட்டு வீறிட்டான் தம்பி... சட்டையைத் துவைக்கச்சொன்னேன் அதைத்தான் செய்யவில்லை, இஸ்திரிபோட்டாவது எடுத்துவைத்திருக்கலாம் கட்டைக் குரலில் கத்திக்கொண்டிருந்தான் அண்ணன்... நாளைக்கும், இட்டிலி யென்றால் என்னை விட்டுவிடு, பட்டினியாய்க் கூடப் பள்ளிக்கூடம் போகிறேன், எட்டிப்பார்த்துவிட்டு எரிந்துவிழுந்தாள் அக்கா... ஒற்றைத் தலைவலி உலுக்கியெடுத்தாலும் தலையில் கட்டுப்போட்டுக்கொண்டு கருமமே கண்ணாயிருந்தாள் அம்மா... கிட்டப்போய் அருகிருந்து நெற்றியை வருடிவிட்டு, சற்றுநேரம் படு அம்மா சரியாப்போயிடும் என்றேன், கட்டிக்கொண்டாள் என்னை... என் சட்டையை நனைத்தது அவள் கண்ணீராயிருக்குமோ??? -சுந்தரா

இருளில் புரிந்த பொருள்!

வீட்டைவிட்டு வெளியேறிய  இரவுநேர மின்சாரம்...  வேதனையில் தேர்ந்தெடுத்த  உத்திரத்துக் கொச்சக்கயிறு...  முடிச்சுக்குள் முகம்நுழைக்கப்  பார்வையில் பட்டது,  வெளிச்ச நெருப்பில்  விழப்போகிற விட்டில் பூச்சி..   பளிச்சென்று இறங்கியவன்  விளக்கணைத்து யோசித்தான்,  பரஸ்பரம் உயிர்காத்த பரிவுடன்  பறந்தது விட்டில் பூச்சி.

நானும் பாலைவனம் போகிறேன்!

படம்
பழகிய பூமியைப்   பலமாத இடைவெளியில்   பார்க்கக் கிடைக்கிற   படபடப்பான சந்தோஷம்...     நீர்க்கக் கிடைத்த மோரில்   கறிவேப்பிலை நறுமணமாய்,   ஊர்ப்புறத்து நட்புகளில்   ஊற்றெடுக்கும் அன்பு வெள்ளம்...   எதிர் பார்ப்புகள் எதுவுமின்றி   என்னுடைய முகம்பார்த்து,   இதயத்தைப் பகிர்ந்துகொள்ளும்   இணையில்லா மனநெருக்கம்...   வேர்க்கின்ற வேளையில்   கிடைக்கிற விசிறிபோல,   பார்க்கின்ற கண்களெல்லாம்   பகிர்ந்துகொள்ளும் பரவசம்...   யார்பிள்ளை நீயென்று   இயல்பாய்க் கேட்டுவிட்டு,   பேர்கேட்ட பின்னாலே   கைப்பிடிக்கும் கரிசனம்...   வேற்று நிலத்தில்   விழுதுவிட்ட வாழ்க்கையினைத்   தோற்கடித்துச் சரிக்கிற   உறவுகளின் உற்சாகம்...   இவையெல்லாம்,   எனக்கும் கிடைக்குமென்றால்   இப்போதே சொல்லுங்கள்,   நானும் பாலைவனம் போகிறேன்!

எல்லாம்...அம்மாவால வந்தது!

படம்
அப்பா, உனக்கு எப்போ தொப்பை வந்திச்சு? உங்கம்மா வந்ததுக்கப்புறம்... உச்சந்தலையில வழுக்கை? அதுவும் கூட, அம்மா வந்தப்புறம்தான்... கிட்டப்பார்வைக் கண்ணாடி? எத்தனை தடவை அதையே நான் சொல்லுறது? வாசல்ல நிக்கிற வண்டி? ............ 'அதுவும் அம்மாவாலன்னு அழுத்தமாச் சொல்லுங்க' -அடுப்படியிலிருந்து வந்தது குரல்... அதெல்லாம், சொன்னாப் புரியாது சீக்கிரம்போய் தூங்கு நீ, செல்ல மகளை மெல்ல நகர்த்தினான் அவன்! படம் : நன்றி http://www.cultureandpublicaction.org

அவளை அனாதையென்று அழைக்காதீர்கள்!

படம்
அக்கம்பக்கத்திலிருப்பவர்களெல்லாம் அவளை அனாதையென்றுதான் அழைக்கிறார்கள்... அவள் பேரென்ன எதுவென்ற பெரிய அக்கறையின்றி, அவளை அநாதையென்று சொல்லித்தான் அடையாளப் படுத்துகிறார்கள்... பெற்றவொரு பிள்ளையையும் நோயிலே தொலைத்தபின், மற்றபிள்ளை யெல்லாம் தன் மகனென்றே நினைத்தவள்... அடிக்கிற காற்றுக்கூட அன்புக்குக் கட்டுப்பட்டு, அவள் குடிசையின் கூரைக்குள் கொஞ்சநேரம் தங்கிப்போகும்... ஆனால், உண்ணவும் குடிக்கவும் அவள் என்னசெய்கிறாள் என்று யாருமே யோசித்ததில்லை... அவளைச் சுற்றமென்று யாரும் சொல்லியழைப்பதில்லை, ஆனால் மற்றவர் துயரங்களில் அவள் முதலாக வந்துநிற்பாள்... முற்றத்து மரத்துக்கும் அதில் தங்கும் பறவைக்கும் கட்டுப்பாடில்லாத கருணையைக் காட்டுவாள்... ஓடையின் மீன்களுக்கு ஒருகைப் பொரியும், ஓரத்துப் பிள்ளையாருக்கு ஒன்றிரண்டு மலர்களுமாய், ஊரிலுள்ள எல்லாவற்றிற்கும் உறவுசொல்லி அருகிருப்பாள்... தேடாத தெருநாய்க்கும் வீடில்லாப் பூனைக்கும் இருக்கிற தன் சோற்றை இல்லையென்னாமல் கொடுப்பாள்... ஆனால் படுக்கவும் பாயின்றிப் பாடுபடும் அவளை, அதிர்ஷ்டக்கட்டை யென்று அலட்சியப்படுத்துகிறார்கள் மக்கள்!

குடும்பக் கவிதை!

வழக்கம்போலவே அன்றைக்கும் வம்பில்தான் முடிந்தது வாக்குவாதம்... வந்தது போனதெல்லாம் வரிசையாய்ச் சொன்னபடி கணவனை  வசைபாடிக் கொண்டிருந்தாள்  மருமகள்... அம்மாவைப் பார்த்தபடியே அமைதியாய் நின்றார்கள் பிள்ளைகள்... "ஷிஃப்டுக்கு நேரமாச்சு, சொம்புல தண்ணிகுடும்மா" சட்டையைப் போட்டுக்கொண்டு சைக்கிளை எடுக்கப்போனான் அவன்... ரெண்டுபுள்ள பெத்தாச்சு இன்னமும் புத்தியில்ல, வெத்து வயித்தோட வேலைக்குப்போற விதியப்பாரு... என்னதான் படிச்சியோ என்று முனகிக்கொண்டு, தண்ணீர் எடுக்கப்போனாள் அவனைப் பெற்ற அம்மா... இப்ப, என்ன பண்ணிட்டாருன்னு எரிஞ்சு விழுறீங்க? தண்ணிமட்டும் கேட்டதுக்கே இந்த ஆர்ப்பாட்டமா? கொண்டையை முடிந்துகொண்டு கோபத்தைத் திசைமாற்றினாள் அவள்... எடுத்த ஆயுதம் ஜெயித்த சந்தோஷத்தில், வெற்றிலைப் பையோடு வாசலில் உட்கார்ந்தாள் அம்மா... அங்கே, தட்டில்வைத்த சோற்றை உண்ணத் தொடங்குமுன் எட்டி வெளியில்பார்த்தான் அவன்... கற்றை வெளிச்சம் விழக் கன்னங்களின் அசைவினில், கொஞ்சமாய்த் தெரிந்தது அம்மாவின் புன்னகை!

தூண்டில் மனிதர்கள்!

ஏனென்ற தூண்டிலும் எப்படியென்ற இரையுமாய் கிட்டவந்து உட்காரும் கேள்விக்குறி மனிதர்கள்... வெள்ளந்திப் பேச்சு விலையில்லாச் சிரிப்பு கிள்ளிவிட்டு மெள்ளமாக வருடிவிடும் நாசூக்கு... கள்ளெடுத்துத் தோய்த்துக் கொக்கியைக் களமிறக்க, உள்மனசின் வருத்தமெல்லாம் உருகி வெளிக்கிளம்ப, ஒவ்றொன்றாய்ப் பிடிபடும் உள்ளத்து மீன்கள்... இறக்கிவைத்த வேதனையால் இதயம் தெளிந்தாலும் கிடைத்துவிட்ட விஷயங்களால் கள்ளமனம் கூத்தாடும்... மாதச் சருகுகள் வருஷமாகி உதிர்ந்துபோக, மனம்விட்டுப் பேசியதே மறந்துபோன தருணத்தில், பிடிபட்ட மீன்களை வடிவமாய் அலங்கரித்து, உறவுக் கூடத்தில் ஒவ்வொன்றாய் ஏலமிடும்... கேள்வியுற்ற விஷயத்தால் கொதிப்படைந்து போனாலும், முற்றிலுமாய் நம்பாத நல்ல இதயங்கள் சுற்றிவந்து நம்மிடமே கொட்டிப் புலம்பிநிற்க, மாட்டிக்கொண்ட மர்மம் மனசுக்குப் புலப்படும்... கெட்டோம் நாமன்று கேள்விகளா லென்றஎண்ணம் புத்தியில் தைத்துப் புலப்படும் வேளையில், எல்லாமே முற்றிப் போயிருக்கும் முடிச்சிறுகி வலிகொடுக்கும்... அதனால் கிட்டவரும் தூண்டில்கள் பற்றிக்கொள்ளும் முன்பாக, எச்சரிக்கையா யிருத்தல

பிள்ளையெனும் பேரன்பு!

படம்
சுவற்றில், முட்டிமுட்டித் திரும்புகிற குட்டிப் பந்துடன் பேசியபடி, எட்டிஎட்டிப் பார்க்கிறாய் என்னை... தட்டிலூற்றவேண்டிய மாவைத் தரையில் ஊற்றினாலும் தடுமாற்றம் காட்டாமல் எனக்குள்ளே சிரிக்கின்றேன் நான்... ரெண்டு விரலை நீட்டி ஒன்றைத்தொடு என்று ஒன்றுமே நடக்காததுபோல் முன்வந்து முகம்பார்க்கிறாய்... கண்களைத் தவிர்த்துவிட்டுக் கடந்துபோக எத்தனிக்கையில், பின்னாலிருந்துகொண்டு புடவையை இழுக்கிறாய்... சொன்னபடி கேட்காமல் சங்கடப் படுத்திவிட்டு, இன்னும் ஏன் வதைக்கிறாய் என்றபடி திரும்புகிறேன்... உன் கண்ணாடிக் கண்கள் கருணையை யாசிக்க, முன்னாடி நிற்கின்றாய்... உருக்கிடும் பார்வையில் இறுக்கம் தொலைந்துபோக, இணக்கமாய்ச் சிரிக்கிறேன்... கையணைத்துச் சிறுஇதழால் கட்டி முத்தமிட்டு, சின்ன விரல்களால் என் முகம் தொட்டுச் சொல்கிறாய்... உன்னோடு பேசாத வருத்தத்தைக் காட்டிலும், புத்தகப் பாடமொன்றும் அத்தனை கஷ்டமில்லை... இனி, நன்றாய்ப் படிக்கிறேன் நம்பு அம்மா என்கிறாய்... என்னுயிரே இறங்கிவந்து உன்வடிவில் கெஞ்சிநிற்க, கண்கள் பனித்தபடி கனிந்து நிற்கிறேன் அன்னையாக!

ஆணவத்தின் கரைகளில் அகதிகளாய்ப் பெண்கள்!

படம்
சண்டையின் வாசனை கவிந்து கிடந்தது வீட்டில்... என்ன செலவுசெய்தீர்களென்று இயல்பாய் எழுந்த கேள்விக்கு, 'என்னசெய்தால் உனக்கென்ன' என்ற ஆணவம் பதிலாக, ரெண்டு வருஷ வாழ்க்கையின் அர்த்தம் விளங்காமல், துண்டுதுண்டாகிப்போனது துணையானவளின் மனசு.. வீசப்பட்ட வார்த்தைகளை வலைபோட்டுத் தேடி, ஆத்திரம் கூட்டிக்கூட்டி அனலேற்றியது நினைவு... எட்டத்தில் இருக்கும் உறவுகளைத் தொலைபேசி, குற்றப் பத்திரிகை வாசிக்க விருப்பமின்றி, கிட்டப்போய் மறுபடியும் கேள்விகளால் நியாயம்கேட்க, சட்டையேதும் செய்யாமல் சம்பாதிப்பவன் வெளியேற, கண்ணீராய்ப் பெருகிக் கடலானது தன்னிரக்கம்... கேட்டாலும் குற்றம் கேட்க விருப்பமின்றி, கேள்விகளாய் மனதில் புதைத்தாலும் கஷ்டம்... வேலைக்குப் போகாத படித்தவளாய்க் கேட்டுவிட்டு, இன்று, வீட்டோடு இருப்பவளைத் துச்சமாகப் பார்க்கக்கண்டு கூசித்தான்போனது மனசு... பெண்ணாகச் சார்ந்திருத்தல் பெருமையில்லை என்றுணர்ந்து, கண்ணீரில் மனத்தையும் தண்ணீரில் முகத்தையும் நன்றாகக் கழுவிவிட்டு நிறைய யோசித்தாள்...

கோபால் பல்பொடியும் கொஞ்சம் காரப்பொரியும்!

ஊருக்கு வருகிறேனென்று உறவுகளை அழைத்துச்சொல்ல, ஆளுக்கொரு பொருள்கேட்டு அடுக்கடுக்காய் அழைப்புகள்... பவுனாக வாங்கிவந்தால் பெருமையாக இருக்குமென்று மாமியார் சொன்னபோது பணக்கணக்குப் போட்டது மனசு... அடுத்து, பேத்தியிடம் கேட்டார்கள், இந்தியா வந்ததும் உனக்கு என்னவேண்டுமென்று... சின்னமகள் சொன்னாள், கோபால் பல்பொடியும் கொஞ்சம் காரப்பொரியும் என்று!!!

இருவகை இரவுகள்

படம்
குற்றாலம் கொடைக்கானல் குமரகம் குலுமணாலி எப்போ பார்த்தாலும் இதே இடங்கள்தானா? எந்தஊரும் பிடிக்கல என்றுசொல்லிக் கதவடைத்து, உறக்கமின்றிப் புரண்டது 'இருக்கிற' வீட்டுப்பிள்ளை... வானத்துக்கூரை வருடுகிற மென்காற்று ஓலமிடும் ஆந்தைச்சத்தம், ஊடே ஒரு மழைத்துளி தூரத்து இடிமுழக்கம் ஊளையிடும் நாயின்சத்தம் இவற்றோடு, அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் அருகாமையும்சேர, கனவில், காகிதக் கப்பலோட்டிக் கண்டமெல்லாம் சுற்றிவந்தது சாலையோரத் தொழிலாளியின் சட்டையில்லாத பிள்ளை.

மங்களூர் விமான நிலையம்

வருகிறவர்களை வரவேற்க, ஆசையும் பாசமும் வாடகை வண்டியுமாய் வாசல்பக்கம் காத்திருந்தார்கள் வந்த உறவினர்கள்... ஆனால், பாசக் கயிற்றினைப் பாதையெங்கும் விரித்தபடி, ஓடுபாதையிலேயே உறங்காமல் காத்திருந்தான் எமன்!

அந்திமழையும் அழகான காதலும்!

படம்
சட்டென்று வந்திறங்கியது சாயங்காலத்து மழை... சுமந்த சட்டிமண்ணைக் கொட்டியவள், வேப்ப மரத் தொட்டில் பிள்ளையையும், விளையாடிய பிள்ளையையும் கிட்ட அணைத்தபடி கூரைச் சரிவைத்தேட, கட்டிய தலைப்பாகையை கழற்றிப் பிடித்தபடி மண்வெட்டியை போட்டுவிட்டுக் கிட்டவந்தான் அவள் கணவன்... ஒட்டுச் சேலையால் பிள்ளைகளின் தலைதுடைத்துக் கட்டியவன் பக்கம் கனிவாகக் கைநீட்டித் தொட்டவள் சொன்னாள் துடைச்சிக்கோ என்று... தொட்டவளை அருகழைத்துத் துண்டாலே போர்த்திவிட்டுத் தோற்றுப்போன தூவாணத்தைத் துச்சமாக அவன் பார்க்க, கொட்டுவதை நிறுத்திவிட்டுக் கலைந்துபோயின மேகங்கள்... நாளை, புயலையும் கூட்டிவந்து அந்தப் பேரன்பை ரசிப்பதற்கு!

பல்லி 'விழுந்த' பலன்!

படம்
துடித்துக் கிடந்த அறுந்தவால் அடங்குமுன்னே, தேடிப் பிடித்து அந்தப் பல்லியின் தலையில்போட்டாள்... கண்ணை மூடுமுன் கடைசியாக நினைத்தது பல்லி... மனிதனின், உச்சந்தலையில் வீழ்ந்தால் நிச்சயம் மரணமென்று அப்போதே சொன்னார்கள், அலட்சியமாய் இருந்துவிட்டேனென்று!

எடை குறைக்கும் ரகசியம்!

படம்
ஓவர்வெயிட் ஒபிஸிட்டி  டயட்டில் இருக்கிறேன்,  ட்ரெட் மில்லில் நடக்கிறேனென்று  அலட்டிக் கொள்ளுவதே  அன்றாடம் வழக்கமாச்சு...  மனசுக்குப் பிடித்ததைச்  சாப்பிடமுடியாமல்  மருத்துவரும் மருந்துமாகக்  கரைகிறது கைக்காசு...  உலகத்துத் தொலைக்காட்சி,  வீடெங்கும் வலைஆட்சி  சிறைப்பட்டுக் கிடக்கிறது  மனிதர்களின் உடலாட்சி...  அரைக்க தரைபெருக்க  துவைக்க துணிஉலர்த்த  துடைக்க சமைத்துவைக்க  சமைத்ததை சுத்தம்செய்ய,   அத்தனையும் செய்துவைக்க  எந்திரங்கள் வந்திறங்க,  ஏறிக்கொண்டு போனது  எடையும் இயலாமையும்...  கால்விரலைப் பார்ப்பதே  கஷ்டமென்று சொல்லும்படி,  மேலெழுந்து நிற்கின்ற  மத்தள வயிற்றினால்,  இல்லாத வருத்தமெல்லாம்  சொல்லாமல் வந்துவிட,  கொல்லாமல் கொல்லுகிறது  கொலஸ்ட்ராலும் நீரிழிவும்...  வேதனையைக் குறைப்பதற்கு  விரதத்தைக் கடைப்பிடித்து,  சோதனை முயற்சியாகக்   கோதுமைக்கு மாறினாலும்,  உடலைக் குறைக்கின்ற  அவசியம் வந்துவிட்டால்,  வேலையைக்கூட்டிக்  கொஞ்சம்  விளையாட்டைப் பெருக்கிவிட்டால்,  உடல்சுமை கழிந்துவிடும்  இதுவே,  காசில்லாத எளிய வைத்தியம். ******

கவலைகளில் கரைந்தபடி...

படம்
"இருக்கிற கவலையெல்லாம் கழிச்சுக் கட்டிவிட்டு சிறுபிள்ளைபோல சந்தோஷமாய் இருக்கப்பாரு" என் அவஸ்தைகளைப் புரிந்துகொண்டு அம்மா சொன்னாள் அலைபேசி வழியாக... இருக்கிற வேலை நாளை நிலைக்குமா எனும் கவலை, படிக்கிறபிள்ளை நன்றாய்ப் படிக்கலையே எனும் கவலை மகளுக்குக் கல்யாணம் அமையாத மனக்கவலை... அம்மாவை அநாதரவாய் விட்டுவந்த வலிக்கவலை மனைவியின் எதிர்பார்ப்பைத் தீர்க்காத பெருங்கவலை படுத்துகிற உடல்வருத்தம் போகாத ஒரு கவலை வாங்குகிற மருந்தெல்லாம் போலிதானோ எனும் கவலை தூங்குகையில் திருடனவரக் கூடுமென்ற பயக்கவலை வாங்கிய கடனை நண்பன் கொடுக்கணுமே எனும் கவலை... எந்தக் கவலையை எப்படிக் கழிப்பதென்று சிந்தனை முழுவதும் கேள்விகளாய்க் கிளம்பிவிட இல்லாமல்போனது தூக்கம்... இருக்கிற கவலையுடன் இரவெல்லாம் தூங்காத கவலையும் சேர்ந்துகொள்ள, துக்கத்தின் கணக்கிலொன்று மொத்தத்தில் அதிகமாச்சு! படம்: இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

வளர்பிறை வாய்ப்புகள்

படம்
அழைப்புவந்த வேலைக்கு அவசரமாய்க் கிளம்பினான்... வளர்பிறையில் போகலாமென்றாள் வெத்திலை வாயுடன் பாட்டி; அமைதியாய் ஆமோதித்தாள் அடுக்களைப்பக்கமிருந்து அம்மா... மறைமதிக் காலம் முழுமையாகக் காத்திருந்து, வளர்பிறை வந்ததும் போய்விட்டுத் திரும்பிவந்தான்... வாசலிலேயே காத்திருந்தது பாட்டி... வருத்தத்தோடு சொன்னான், அமாவாசையில பிறந்த ஒருத்தன் அந்த வேலையில் அமர்ந்துவிட்டானென்று...

ஒன்றோடு ஒன்றைக்கூட்ட...

படம்
வேண்டாம்...முடியாது லீவெல்லாம் கிடைக்காது... இதுக்குப்பட்ட கஷ்டமே இன்னும் மறக்கல, புதுசா வேறயா? போதும்டா சாமீ... எதுக்குத்தான் இப்பிடி அடம்பிடிக்கிறீங்களோ? அண்ணன் தங்கை எல்லாம் இருந்தும் என்னத்தைக் கண்டீங்க? பரிதாபமா பாத்துப்பாத்தே படுத்துறீங்க நீங்க... பாத்துக்க யாரும் பாலைவனத்துக்கு வரமாட்டாங்க, சோத்துக்கு நீங்க திண்டாடிப்போவீங்க... சரி,புள்ளைகிட்ட கேட்கலாம் வேணுமா வேணாமான்னு... ஒண்ணும் வேண்டாம் பொம்மையெல்லாம் கேட்கும், அழுது அழுது அம்மாவைப் படுத்தும்... கண்ணே நீ வாடான்னு கட்டி முத்தம்வைக்க, ஒண்ணே போதுமென்று முடிவாகிப்போனது வீட்டில்!

தனிக்குடித்தனம்

படம்
இருக்கவும் முடியல இருந்து உடல்வலித்தாலும் படுக்கவும் முடியல... ஏழுமாத வயிற்றை இடையிடையே நீவிக்கொண்டு முதுகுசாய்ந்து அமர்ந்தபடி மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள்... உறக்கம் தொலைந்துபோக கலக்கம்பிறந்தது மனதில்... பற்றிக்கொண்ட பதட்டத்துடன், நெற்றிக்கு இட்டுவிட்டு, மற்றென்ன செய்வதென்று மனசுக்குத் தோன்றாமல் கண்ணோடு கண்பார்த்து கைப்பிடித்து நீவிவிட்டான்... நீவிய கைகளின் நடுக்கம் புரிந்தவளாய் ஓரச்சிரிப்போடு அவன் விரல்களை இறுகப்பற்ற, அன்னையும் தந்தையுமாய் அடுத்தவரைத் தேற்றத்தேற்ற சின்னதாகிப்போனது இரவும் இயலாமையும்!

வேலியோரத்து மரங்கள்

படம்
அந்தப்பக்கம் பூக்காதே, அங்கெல்லாம் காய்க்காதே,  சொந்தமாயிருந்ததெல்லாம்  நேற்றோடு முடிஞ்சுபோச்சு...   வேலியோர மரத்திடம்  விளக்கிச் சொல்ல முடியாமல்,  முள்கம்பி போட்டு  முறுக்கிக்கொண்டிருந்தார் அப்பா...    ஆனாலும்,  வாடிநின்ற தருணத்தில்  பகிர்ந்துகொண்ட நீருக்காக,  கண்ணுக்குத் தெரியாமல்  உறவாடிக்கொண்டன,  மண்ணுக்குக்கீழ் வேர்களும்  மௌனமாய்ச் சில மனங்களும்!

மனிதக் கூடுகள்

படம்
நெட்டையாக வளர்ந்திருக்கும் கட்டிடக் காடுகள்... ஒற்றைவீட்டு இடப்பரப்பில் கற்றையாக வீடுகட்டி பெட்டி நிறைக்கின்ற பட்டணத்து வித்தைகள்... சட்ட மடித்துவைத்த கைப்பிடிச் சுவற்றினில் கட்டிடத்துக் கிழிசல்களாய் அசைந்துகாயும் ஆடைகள்... ஒட்டிவைத்த வாசல்கோலம் தொட்டிவைத்த குறுஞ்செடிகள் தீப்பெட்டிக் குச்சிகளாய் அடுக்குகளில் மனிதர்கள்... ஊஞ்சலாடும் பால்பைகள் ஓடியாடும் பிள்ளைகள் மாடிவீட்டுச் சன்னல்களில் முகம்தேடும் இளைஞர்கள்... தோளுரசிச் சென்றாலும் ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமாய்ப் படியிறங்கும் வேலைநேர மனிதர்கள்... அடுத்தடுத்து வாசல்கள் அழுத்தமான நிஜமுகங்கள் ரசனைகளைத் தொலைத்தபடி நகர்ந்துபோகிறது நகரவாழ்க்கை.

பால்சோறும் பழஞ்சோறும்

பிசைந்த பால்சோற்றில் பசுநெய்யும்போட்டு பிள்ளைக்குக் கொண்டுவந்து கிண்ணத்தில் கொடுத்தாள்... "இன்னைக்கும் பால்சோறா? எனக்கு வேண்டாம் போ" கிண்ணத்தைத் தள்ளியது செல்லத்தில் வளர்ந்த பிள்ளை... தள்ளிவிட்ட பிள்ளையின் கன்னத்தைக் கிள்ளியவள் கிண்ணத்தை வீசினாள் தென்னை மரத்தடியில்... முகத்தில் பட்டுத்தெறித்த பால்சோற்றை ஒற்றைக்கையால் துடைத்தபடி, அங்கே, முந்தாநாள் சோற்றை வெங்காயம் கூட்டித் தின்றுகொண்டிருந்தது பாத்திரம் தேய்க்கிற பொன்னம்மாவின் பிள்ளை.

காலாவதி மனிதம்!

படம்
படம் : நன்றி யூத்ஃபுல் விகடன் காசுக்கும் பணத்துக்கும் விலைபோகும் மனிதர்களால் நாளாக நாளாக நாடிதளருகிற நம்பிக்கை... தொட்டுத் துடைத்தாலும் ஒட்டியதை எடுத்தாலும் கெட்டுப்போனதெல்லாம் பணமாகும் புதுவித்தை... தப்பைச் செய்தவரின் தலைகாக்கும் பினாமியாய் கெட்டுப்போய்க் கிடக்கிற குப்பை மேடுகள்... காசு கொடுத்து நம்பிக்கை வாங்கினாலும் காவு கொள்ளப்படும் மனித உயிர்கள்... உயிரைக் கொடுத்தேனும் நீதிகாத்த நாட்டினில் உயிரை எடுத்தேனும் பணம்சேர்க்கும் மனிதர்கள்... வணிகமயமாகிவிட்ட வாழ்க்கையின் போக்கினில் காலாவதியாகிப்போனது மனிதமும்கூடத்தான்...

சுடச் சுடரும் சம்சாரம்??!

காலையில இன்னிக்கு கவிதையொண்ணு எழுதினேன், நாலுவரி படிக்கிறேன் புடிச்சிருக்கா சொல்லுங்க... சட்டைக்குப் பித்தானைத் தச்சு வைக்கச்சொல்லி பத்துநாளாச் சொல்லுறேன், பத்திரிகைக்கு எழுதித்தான் பாழப் போச்சுதுபோ... சந்தைக்குப் போனப்ப அவரைக்காய் வாங்கினேன், உங்களுக்குப் பிடிச்சதுபோல் கறிசமைச்சு வச்சிருக்கேன்... என்னத்த சமைச்சுவச்சு என்னதான் போட்டியோ, ரத்தத்தில் சர்க்கரையும் கொதிப்பும்தான் கூடிப்போச்சு... நல்லபடம் வந்திருக்குன்னு நளினியக்கா சொன்னாங்க, ஞாயித்துக் கிழமையில நாமளும் போகலாமா? நம்மவீட்டுக் கதையவச்சே நாலுபடம் எடுத்துரலாம் இன்னுமென்ன புதுக்கதையை அங்கபோயி பாக்கப்போறே? பள்ளிக்கூட லீவுக்கு பாட்டிவீட்டுக்குப் போவோம்னு புள்ளைக சொல்றாங்க பத்துநாள் போகவா? ஒத்தையா உட்டுட்டு உறவாடக் கேக்குதோ? சோத்தைப் பொங்கினமா வீட்டைப் பாத்தமான்னு 'சிவனே'ன்னு இரு... புள்ளைங்க ரெண்டுபேரும் போயிட்டு வரட்டும்!

அப்பாக்கள் பொய்சொல்கிறார்கள்!

பொய்சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காதுடா தம்பி, பொருத்தமான முன்னுரையோடுதான் பேசத்தொடங்குவாள் அம்மா... அப்பா இப்பல்லாம் அதிகம் பேசுவதில்லை அப்படியே பேசினாலும் அதிகமாய்ப் பொய்தான், தட்டில் சோற்றோடு வருத்தத்தையும் முன்வைப்பாள்... குழம்பு ஊற்றாமல் சுணங்குவதிலிருந்து குழம்பிப் போயிருக்கிறாளென்று குழப்பமில்லாமல் தெரியும்... ஆனால், அப்பனுக்குத் தப்பாத அழுத்தக்காரப் பிள்ளையென்று எப்போதும் என்னைச் சொல்ல முடியாதபடி, மனசைத் திறந்துவைத்தேன் மனைவிக்கு முன்னாடி... ஆயிரம் கேள்விகள் அனைத்துக்கும் கவலை வரவுசெலவு கேட்டு வறுத்தெடுக்கும் விசாரணை ஆக மொத்தத்தில், கிட்டியதென்னவோ முட்டாளென்னும் பட்டம்தான்... போதுமடா சாமீன்னு வேகவேகமாய்த் திரும்பிவிட்டேன் அப்பா கடைப்பிடித்த அருமையான வழிக்கே... ஆனாலும் அடிக்கடி முணுமுணுக்கிறது வாய், "அம்மா, என்னையும் மன்னித்துவிடு" என்று!

கோபங்கள் கலைகையில்...

படம்
யூத்ஃபுல் விகடனில் படிக்க, இங்கே... விகடனுக்கு நன்றி! கோபங்கள் கலைகையில்... **************************** இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்கிற இடுப்புக் குழந்தையாய் அழுத்தமாயிருந்தது கோபம்... தோற்கிற அறிகுறிகள் தென்பட்ட மாத்திரத்தில் இறக்கிவிடப்பட்ட குழந்தையின் எரிச்சல் அழுகுரலாய் வெடித்துக்கிளம்பியது கண்ணீர்... கண்ணீர் துடைத்துவிட்ட கைகளின் ஸ்பரிசத்தில் மெல்லப் புரிந்தது முழுமையான கரிசனம்... கரிசனத்தின் பிடியில் கர்வங்கள் கழன்றுவிழ, இழுத்தணைத்துக்கொண்டு தோளில் விம்மியது அன்பு!

அவளை அப்படித்தான் அழைக்கிறார்கள்!

பொழுதுபோனதொரு பின்மாலை நேரம்... புழுதி மண்டிய பிள்ளையார்கோயில் தெரு, விழுது வீசிய வயல்காட்டு ஆலமரம், அடியில் விளையாடி அழுக்கான பிள்ளைகள்... கூட்டுக்குத் திரும்புகிற கூட்டப் பறவைகள், மாடுகளை உரசிக்கொண்டு மடிதேடும் கன்றுகள், வேலைவிட்டுத் திரும்புகிற வேக மனிதர்கள், விளம்பரம் வீசுகிற அவசர வானொலி... வட்டிப் பணம்கேட்டு வசவு கக்கும் வசதிக்காரன் புட்டிக்குப் பணம்கேட்டுச் சண்டைபோடும் புருஷன்காரன் சட்டியில் உலைகொதிக்க உடன் கொதிக்கும் மனசுக்காரி தீப் பெட்டிக்குப் பசைதடவி ஒட்டிப்போன உடம்புக்காரி... ஆகமொத்தம் எல்லாரும் அழுத்தத்தில் தோய்ந்திருக்க, பாதி ரொட்டியை நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியைக் காப்பிக்குள் முக்கிச் சுவைத்தபடி, அவள் மட்டும் அங்கே ஆறுதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்... ஆனால், அவளை அங்கே எல்லாரும் அனாதையென்றும் கிறுக்கியென்றும் அவதூறு சொல்லுகிறார்கள்!

உறவுக் கயிறு

படுமுடிச்சுப் போட்டுவிட்ட பள்ளிக் காலணியின் முடிச்சினை அவிழ்க்கச்சொல்லி முன்னால்வந்து நீட்டுவாய்... போடீ, முடியாதென்று பொய்க்கோபம் காட்டினாலும், ஓர விழிகளில் கண்ணீர் துளிர்க்கக்கண்டால், ஓடிவந்து அப்போதே அவிழ்த்துவிடுவேன் நான்... இன்றும் முடிச்சினால் திணறுகிற கடினமான வாழ்க்கைதான் உனக்கு... கண்தோய்ந்த கண்ணீரும் கையிலொரு பிள்ளையுமாய் அவ்வப்போது நீ எந்தன் கண்ணில் படுகிறாய்... ஆனால், முடிச்சு இறுகுதென்று நீயோ, இருக்கிறேன் அண்ணனென்று நானோ, சொல்லிக்கொள்ள முடியாதபடி என்னவோ தடுக்கிறது... ஒற்றைப் புன்னகையும் ஒருசில வார்த்தைகளுமாய் விட்டுவிலகிப்போகிறோம்... ஆனால், எட்டிச்சென்றபின் முட்டுகிறது மனசு... ஒன்றாய்ப் பிறந்த நம் உறவின் அடர்த்தியை எங்கே தொலைத்தோம் இடைப்பட்ட நாட்களில்!???

முன்னே வா பெண்ணே!

முன்னே வா முன்னே வா என்று மும்முரமாய் அழைத்தார்கள்... பின்னிருந்து தள்ளுகிற தைரியத்தின் துணையோடு முன்னேறிச் சென்று சில அடிகள் வைத்தேன்... ஆனால், சுற்றிலும் தெரிந்ததோ முட்டுச்சுவர்கள் மட்டுமே... ஆனாலும், முன்வைத்த காலைப் பின்வைக்கத் தோன்றாமல் அங்கேயே நிற்கிறேன், அனைத்தையும் கடக்கலாம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்! *************************************

அள்ளித் தெளிக்கிற வார்த்தைகள்!

தெருவுக்கெல்லாம் தெரிந்துபோனது அவன் தோற்றுப் போனானென்று... சின்ன வயசுமுதல் செய்தகுற்றம் அத்தனையும் அள்ளியெடுத்து அவனோடு சேர்த்துவீசித் தள்ளிவைத்தார்கள் தெருவாசல் திண்ணையில்... பசித்திருந்த வயிறும் படபடக்கும் இதயமுமாக விழித்துக்கொண்டது இன்னொரு பகல்... எல்லா வற்றையும் இரவோடு மறந்துவிட்டு அவனை, உள்ளே அழைத்துக்கொண்டது வீடு... ஆனால், அள்ளியெறிந்த வார்த்தைகள்மட்டும் அலைந்துகொண்டிருந்தன அக்கம் பக்கமெல்லாம்...

நித்திய ஆனந்தம் தேடி...

ஒரு முகத்தை மறைத்து இன்னொன்றைக் காட்டினார்கள், சாமியார் ஒருவரும் சபலமுற்ற ஒருத்தியுமாக... அட, ரெண்டுபேருமே நடிகர்களென்று துண்டுபோட்டாற்போல் சொல்லியிருக்கலாம்... ஏமாந்த கூட்டத்தின்முன் இருவரும் நடிக்கிறார்கள் அவள் திரையிலும், அவன் தினசரி வாழ்க்கையிலுமாக...

கல்யாண பாக்கியம்!

படம்
பொழுது விடியுமுன்னே நடந்தது பாக்கியத்தின் கல்யாணம்... அழகாயிருந்த ஒரு அம்மியை மிதிக்கச்சொல்லி, அருந்ததியைக் காட்டுகையில் இருட்டுத்தான் தெரிந்தது... மெட்டிபோட்ட நிமிஷத்தில், அங்கே குட்டிப் பூகம்பம்... காலில், தங்கக்கொலுசு இல்லையென்று நாத்தனார் குரலெழுப்ப, கண்ணில் நீர் சுமந்தவளின் கையைப் பிடித்துக்கொண்டு, கல்யாண மேடையைக் கரகரவென்று சுற்றிவந்தது ஒரு கூட்டம்... எட்டிநின்றவர்கள் வீசிய பூக்கள் கிட்டத்திலிருந்தவர்களின் கோபப் பார்வைபட்டுச் சுட்டதுபோலிருந்தது அவளுக்கு... மணமகன் அறைக்குள் வந்ததும் மாமியார் சொன்னார், பாக்கி நகைபோடாம பால்பழம்கூடக் கிடையாது என்று... பதைத்துத் திரும்பினாள் பாக்கியம்... பக்கத்தில், பிடித்துவைத்த பிள்ளையாராய்ப் பேசாமலிருந்தான், பத்துநிமிஷம் முன்னால் அவள் பாதம் பிடித்த மாப்பிள்ளை!

சட்டைக்குள் புகுந்துவிட்ட அட்டைகள்!

அட்டை கடித்துவிட்டால் அதிக ரத்தம் போகுமென்று தீயால் சுட்டுப் பிரிப்பார்கள்... ஆனால் இன்று, சட்டைப்பை முழுக்க அட்டைகளின் ராஜ்ஜியம்... சுட்டுப் பிரிக்கவோ எட்டிக்கடக்கவோ முடியாமல் வட்டிக்குள் புதைகிறது வாழ்க்கைப் போராட்டம்.

அவள் ஆத்திரமும் அழகுதான்!

காலையிலிருந்து எதற்காவது கத்திக்கொண்டுதான் இருக்கிறாள், ஆனாலும் அவளிடத்தில் கோபம் வரவில்லை எனக்கு... வாசல் தெளித்துக் கூட்டுவதில் தொடங்கி, ராத்திரி வேலைகளை முடித்து அயறும்வரை, அவளுக்கே தெரியாமல் ஆங்காங்கே உதிருகிறது அவளுடைய ஆத்திரத்தின் துணுக்குகள்... கல்லூரி விட்டுக் கொஞ்சம் தாமதமாய் வந்தாலும், பண்பலை வரிசையில் பாட்டுக்கேட்டு ரசித்தாலும் எல்லாமே அவளுக்கு எரிச்சலாய்த்தான் இருக்கிறது... கண்ணுக்குள் பொத்திவைத்த கடைக்குட்டித் தம்பி அவன், கணினியுடன் உட்கார்ந்து காலம் கடத்தினால் என்னவோ தெரியவில்லை, எரிகிறது அவளுக்கு... கண்ணாடிப் பார்வையில் அப்பா கதைகள் படிக்கக்கண்டால், என்னைக் கவனிக்க யாருமில்லை என்றுசொல்லித் தன்னாலே பேசுகிறாள் தன்னிரக்கம் காட்டுகிறாள்... அவர், என்னடி ஆச்சுதென்று கொஞ்சம் அருகில்சென்று, கண்பார்த்துக் கேட்டுவிட்டால், ஒன்றுமே பேசாமல் உருகித்தான் போகிறாள்... ரொம்பத்தான் அலட்டுகிறாய் என்றுசொல்லி யாரேனும் கோபத்தில் கொஞ்சம் முகம்திருப்பிக் கொண்டுவிட்டால், பின்னாலே அழுகிறாள் பேச்சிழந்து தவிக்கிறாள்... என்னதான் ஆச்சு அம்மா? ஓடிய ஓட்டத்தில் நோயுற்றுப் போனாயோ? வயதின் மாற்றங்களால் வலுவ

வீட்டு அழைப்புகள்!

எடுத்தவுடன் மௌனம், அடுத்தவார்த்தை 'நான் தான்', தொடுத்துப் பேசிட வார்த்தைகள் தேடி தோற்றுத் தொடருகிற நிமிஷங்கள்... சொற்களைச் சேர்க்கச் சிரமப்படுகிறாளென்று இக்கரையிலிருந்தே அப்பட்டமாய்த் தெரியும்... வேளாவேளைக்குச் சாப்பிடு, வாரம் ஒருமுறை கூப்பிடு திக்கித்திக்கி வந்துவிழும், திரும்பத்திரும்பக் கேட்கும் தொலைபேசி வார்த்தைகள்... ஒருமைக்குத் தாவி ஒற்றை ஒற்றையாய்ச் சொல் உதிர்த்து, நெருப்புப் பற்றவைத்து நீங்கிப்போவாள் அவள்... அலையடிக்கும் கடல் ஆயிரமாயிரம் மைல் அடைத்திருக்கும் கதவு அத்தனையும் தாண்டி, அலைக்கழித்துக்கொண்டிருக்கும் அவளுடைய குரல்... நினைவெல்லாம் செயலிழந்து நிற்கும் தருணத்தில், நனைந்துபோன இமைகள் மட்டும் ஞாபகமாய்ச் சொல்லும், பிரிவையும் ஜெயித்துநிற்கும் காதலின் அர்த்தத்தை...!

காகங்கள் கரைவதில்லை!

முன்னெல்லாம், காகம் கரைந்தாலே கண்கள் துடித்தாலோ இருப்புக்கொள்ளாது அம்மாவுக்கு.. வாசல் பக்கத்தைப் பார்வை அளந்திருக்க, அரைக்கால்படி அரிசி அன்றைக்கு அதிகமாகவேகும்... ஆறுமுக நேரி ஆச்சி வருவாங்க, பேயன் விளையிலிருந்து பெரியம்மா வருவாங்க... அம்மங்கொடைக்கு அழைக்க அத்தை வருவாங்க, மாடு கன்னுபோட்டுதுன்னு மாமா வருவாங்க... இப்படி, ஆசையாய்வரும் உறவுகளை அடிக்கடி எதிர்பார்த்து அன்பெனும் உயிர்ப்போடு காத்துக்கிடந்த காலம்... அவிச்ச கிழங்கும் வறுத்த கடலையும் கடம்புப் பாலும், கருப்பட்டிப் புட்டுமாகப் பகிர்ந்துகொள்ளப்படும் பண்டங்கள் அத்தனையும் பாசத்தின் வாசனையைத்தான் பளிச்சென்று சொல்லும்... வந்துசேரும் உறவுகள் தங்கியிருக்கிற வரைக்கும் கூத்தும் கும்மாளமும் வீட்டில், குவிந்துதான் கிடக்கும்... ஆனால்,இன்று அழைப்பு மணியைக்காட்டிலும் அதிகமாய் ஒலிப்பது தொலைபேசி மணிகள்தான்... வரவா என்று தொலைபேசிக்கேட்டு வரலாம் என்று உத்தரவுபெற்று, ஒருவேளை கைநனைத்து ஓடிப்போகிற உறவுகள்... அவசியம் வரும்போது அழைப்பெனும் போர்வைக்குள் விலையாக வாங்கப்படுகிற உறவுகளின் பாசம்... ஆக, மு

நாடகம்!

ஓடுகிற வாழ்க்கையில் உயிர்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது... காணுகிற கனவுகளைக் கண்ணில் சுமந்தபடி... மூடுகிற கதவுகளை முட்டித் திறந்தபடி... ஆளுகிற ஆசைகளை அடையத் துடித்தபடி... நாடுகிற பொருள்களைத் தேடிச் சலித்தபடி... கூடுகிற உறவுகளில் குற்றம் கண்டபடி... வாடுகிற நிகழ்வுகளில் வருந்தித் தோய்ந்தபடி... வீழுகிற தருணத்தில் வெறுப்பை உமிழ்ந்தபடி... ஆட்டுகிற கயிற்றின் அசைவுக் கேற்றபடி ஆடி நடிக்கிறது, நூல் அறுகிற நாள்வரைக்கும்!

நடுகல்லும் நாளை கதைசொல்லும்!

அங்கே, மனித வாசனையைக் காட்டிலும் இயற்கையின் வாசனை கொஞ்சம் தூக்கலாய்த்தான் தெரியும்... காற்றுவாங்க வந்துவிட்டுக் கவிதைபாடிச் செல்லுகிற குயில்களின் நடமாட்டம் கூடுதலாய் இருக்கும்... வேலைக்கு வருகின்ற காலைக் கதிர்கூட அங்கே உத்தரவு கேட்டுத்தான் உள்ளே தலைகாட்டும்... வாலைப் பெண்களெல்லாம் வரப்புகளில் விளையாடி, சோலைப் குளிர்நீரில் மஞ்சள்பூசிக் குளித்துவிட்டு, பானை குடமெல்லாம் பளபளக்கச் சுத்தம்செய்து கோகுலத்துப் பெண்களைப்போல் நீர்சுமந்து நடந்துசெல்வர்... அருகில், வெள்ளாமைக் காட்டுக்கு விரைந்தோடும் வாய்க்கால்கள் செல்லமாய்க் கதைபேசித் துள்ளலாய்க் கடந்துபோகும்... கிள்ளைகள் உதிர்த்துவிடும் பூக்கள் அதில் விழுந்து, வயல்காட்டுப் பயிருக்கு வாசனையைக் கொண்டுசெல்லும்... ஆனால், நாளைமுதல் இவையெல்லாம் நடக்காது என்றுசொல்லி, ஆலை கட்டப்போவதாக ஆங்காங்கே அறிவிப்பு... இனி, சோலை மரங்களெல்லாம் அறுபட்டு விறகாகும், பாடும் குயில்களெல்லாம் கூடுவிட்டுப் பறந்துபோகும்... காற்றுக்கூட இனி இங்கே கற்பிழந்துதான் போகும் ஆற்றில்ஓடும் நீர்கூட அமிலமாக நிலைமாறும்... ஆட்சிசெய்யும்

சுமைதாங்கிக் கல்லாக...

படம்
அபரிமிதமான ஆசையென்றாலும் அழகாய்த்தான் அமைந்திருந்தது வீடு... விருந்தும் வைபவமும் விமரிசையாய் முடிவடைய வீட்டைச் சுற்றிச் சுற்றிவந்து சந்தோஷப்பட்டார்கள் பிள்ளைகள்... கட்டி முடித்த வீடு, கட்டவேண்டிய கடன்களென்று நெற்றியைச் சுருக்கிக்கொண்டு கணக்கிட்டுக்கொண்டிருந்தார் தந்தை... கட்டிலில் படுத்தாலும் தூக்கம் பிடிக்காமல், மொட்டை மாடியில் நடந்தவரைப் பார்த்துவிட்டு, திருஷ்டியா யிருக்குமோ என்று நினைத்தபடி வட்டப் பூசணியை வாங்கிக் கட்டினாள் மனைவி... பட்ட கண்ணெல்லாம் போயிடும் என்றுசொல்லிக் கிட்டவந்த மனைவியிடம் வட்டிக்கணக்குப் பார்த்தபடி வள்ளென்று விழுந்தார் அவர்... எட்டிப்போய் நின்றவள் எரிச்சலுடன் சொன்னாள், நாற்பதுக்குமேலே நாய்க்குணம் என்று நன்றாய்த்தான் அன்றைக்கே சொல்லிவைத் தார்களென்று... சொல்ல விரும்பாத சுமைகளைச் சுமந்தபடி, மெல்லத் திரும்பியவர் மௌனமாய்த் தலையசைத்தார்...

மதிய விடுப்பு!

பத்து நிமிஷம் தாமதமாய் ஆனதுக்கு இத்தனை சத்தம்போட்டிருக்கக்கூடாது... பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுப்பவள் அவள், என்ன சாப்பிட்டாளென்று கண்டுகொண்டதில்லை... படுக்கிறவரைக்கும் ஓடியாடி உழைக்கிறவள் உறங்கினாளா என்று ஒருநாளும் யோசித்ததில்லை... திறக்க மறுத்த சாப்பாட்டுப் பாத்திரத்தைத் வலிந்து திறக்கையில் உள்ளே நிறைந்திருந்தது அவள் கைமணம்... அவள் ஒருவேளை, அழுதுகொண்டிருப்பாளோ? திறந்த பாத்திரத்தை திரும்ப மூடச்சொன்னது மனசு... முதலாளி திட்டினாலும் பரவாயில்லை, இன்று, மதியச்சாப்பாடு மனைவி கூடத்தான்!

அப்பா...அம்மா...கவிதை!

"புள்ள வந்தானா?" "ஆமா..." "புது வண்டியப் பாத்தானா?" "ஆமா, ஆமா..." "என்ன சொன்னான்?..." எதுவும் சொல்லாமல் ஏறிட்டுச் சிரித்தாள்... "சொல்லித் தொலையேன்" "இன்னும் நல்லதாக் கிடைக்கலையான்னு சொன்னான்" உரக்கச் சிரித்துவிட்டு ஓய்ந்தவர் சொன்னார், "உன்னை முதல்முதலில் பாத்தப்ப என்னநான்  சொன்னேனோ, அப்படியே தான் அவனும் சொல்லியிருக்கான்..." அங்கே, கோபத்தைக் காண்பிக்க முயற்சித்துத் தோற்றவளாய், குலுங்கிச் சிரித்தாள் அம்மா.

பலசரக்குப் பட்டியல்!

ரெண்டு கிலோ அரிசி ரெண்டேரெண்டு தேங்காய் அரைக் கிலோ வெல்லம் அதே அளவு பருப்பு அம்பது கிராம் நெய்யி அதில பாதி முந்திரி ரெண்டு ரூபாய்க்கு ஏலம் ரெண்டோ மூணோ பழம் மனைவி சொல்லச்சொல்ல மகள் எழுதிக்கொடுத்தாள்... எழுதி நீட்டிய காகிதத்தில் பிள்ளையார் சுழி தவிர எல்லா இடத்திலும் நிழலாகத்தெரிந்தது, பாக்கி கேட்டு நச்சரிக்கும் பலசரக்குக் கடைக்காரரின் முகம்.

தூக்கம் கெடுத்த கவிதை!

ஊருக்குச் சென்றுவந்தான் உறவுகளை உதவிகேட்டான் வாரக்கணக்காய் வரமறுத்த அதை நினைத்து நேரங்காலமின்றி யோசித்துத் தீர்ந்துபோனான்... போகிறபோக்கில் எல்லாரும் செய்வதுபோல் தானும் செய்துவிடத் தலைகீழாய் நின்றுபார்த்தான்... விரட்டி விரட்டிப்போனதில் வீணாய்ப்போனது தூக்கம் கிடைக்காது நமக்கென்று கிழித்துப்போட்டது ஏக்கம்... உறக்கம் பிடிக்காத இரவுகளின் தனிமையில் சலிப்பின்றி அடுக்கிவைத்த வார்த்தைகளில் தொலைந்துபோனான்... கடைசியாய், கோர்த்துப்பார்த்த வார்த்தைகளை கோபத்தில் கலைத்துப்போட்டான்... அட,காகிதத்தில் கிடந்தது கவிதை!!!