காகங்கள் கரைவதில்லை!

முன்னெல்லாம்,
காகம் கரைந்தாலே
கண்கள் துடித்தாலோ
இருப்புக்கொள்ளாது அம்மாவுக்கு..

வாசல் பக்கத்தைப்
பார்வை அளந்திருக்க,
அரைக்கால்படி அரிசி
அன்றைக்கு அதிகமாகவேகும்...

ஆறுமுக நேரி
ஆச்சி வருவாங்க,
பேயன் விளையிலிருந்து
பெரியம்மா வருவாங்க...

அம்மங்கொடைக்கு அழைக்க
அத்தை வருவாங்க,
மாடு கன்னுபோட்டுதுன்னு
மாமா வருவாங்க...

இப்படி,
ஆசையாய்வரும் உறவுகளை
அடிக்கடி எதிர்பார்த்து
அன்பெனும் உயிர்ப்போடு
காத்துக்கிடந்த காலம்...

அவிச்ச கிழங்கும்
வறுத்த கடலையும்
கடம்புப் பாலும்,
கருப்பட்டிப் புட்டுமாகப்
பகிர்ந்துகொள்ளப்படும்
பண்டங்கள் அத்தனையும்
பாசத்தின் வாசனையைத்தான்
பளிச்சென்று சொல்லும்...

வந்துசேரும் உறவுகள்
தங்கியிருக்கிற வரைக்கும்
கூத்தும் கும்மாளமும்
வீட்டில்,
குவிந்துதான் கிடக்கும்...

ஆனால்,இன்று
அழைப்பு மணியைக்காட்டிலும்
அதிகமாய் ஒலிப்பது
தொலைபேசி மணிகள்தான்...

வரவா என்று தொலைபேசிக்கேட்டு
வரலாம் என்று உத்தரவுபெற்று,
ஒருவேளை கைநனைத்து
ஓடிப்போகிற உறவுகள்...

அவசியம் வரும்போது
அழைப்பெனும் போர்வைக்குள்
விலையாக வாங்கப்படுகிற
உறவுகளின் பாசம்...

ஆக,
முன்னைப்போல் இப்பல்லாம்
காகங்களும் கரைவதில்லை,
கண்ணுக்கெட்டிய வரைக்கும்
உறவுகளும் தெரியவில்லை!

***

கருத்துகள்

  1. நானும் ஊரில் இருக்கும்போது காக்கா கத்தினால் கண்டிப்பாக சித்தப்பாவோ, மாமாவோ வருவார்கள் என்று நினைப்பேன் சுந்தரா.
    எத்தனை அருமையாக எழுதுகிறீர்கள்.
    பாட்டாகவே பாட்லாம் போலிருக்கிறதே.
    ஏக்கமும் பெருமூச்சும் எதிர்பார்த்துக் கரைந்து போன இன்னாட்களில் தொலை பேசி ஒன்றாவது இணைக்கிறதே என்று நிம்மதி கொள்கிறேன்.
    அருமையான கவிதை அம்மா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க வல்லிம்மா...

    உங்கள் வாழ்த்துக்கு என் மனம்நிறைந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  3. //முன்னைப்போல் இப்பல்லாம்
    காகங்களும் கரைவதில்லை,
    கண்ணுக்கெட்டிய வரைக்கும்
    உறவுகளும் தெரியவில்லை!//

    ஆமாங்க எல்லாம் போன்லியே பேசறாங்க.....

    பதிலளிநீக்கு
  4. ரெண்டு நாள் தொலைபேசி இல்லையென்றால் மனது துடிக்கிறது.ஆனால் மூனுமாசம் விடுதியில் இருந்து திரும்பும்போது கிடைத்த சந்தோசம் இப்போ இல்லை. உறவுகள் வந்தால் விஷயங்கள் வற்றிப்போய். தொலைக்காட்சிப்பெட்டிக்குள் புதைந்து போகிறார்களே.

    அட... சுந்தரா கவிதை மீட்டிய நினைவுகளின் நீட்சி இது.
    மிக வலிமையான கவிதை சுந்தரா.ரொம்ப பிடிச்சிருக்கு.
    வேண்டம், பாடவேண்டாம். விட்டு விடுங்கள் மாசுபடாமல் இருக்கட்டும் கவிதையாகவே.

    பதிலளிநீக்கு
  5. /ஆனால்,இன்று
    அழைப்பு மணியைக்காட்டிலும்
    அதிகமாய் ஒலிப்பது
    தொலைபேசி மணிகள்தான்.../



    /ஆக,
    முன்னைப்போல் இப்பல்லாம்
    காகங்களும் கரைவதில்லை,
    கண்ணுக்கெட்டிய வரைக்கும்
    உறவுகளும் தெரியவில்லை!/

    உண்மை தான்

    பதிலளிநீக்கு
  6. அருமையான‌
    இயல்பான வரிகள்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. அழ‌கான‌ க‌விதை. ந‌ல்லாயிருக்குங்க‌.

    -Toto

    பதிலளிநீக்கு
  8. //Sangkavi said...

    //முன்னைப்போல் இப்பல்லாம்
    காகங்களும் கரைவதில்லை,
    கண்ணுக்கெட்டிய வரைக்கும்
    உறவுகளும் தெரியவில்லை!//

    ஆமாங்க எல்லாம் போன்லியே பேசறாங்க.....//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி!

    பதிலளிநீக்கு
  9. //காமராஜ் said...

    ரெண்டு நாள் தொலைபேசி இல்லையென்றால் மனது துடிக்கிறது.ஆனால் மூனுமாசம் விடுதியில் இருந்து திரும்பும்போது கிடைத்த சந்தோசம் இப்போ இல்லை. உறவுகள் வந்தால் விஷயங்கள் வற்றிப்போய். தொலைக்காட்சிப்பெட்டிக்குள் புதைந்து போகிறார்களே.//

    நிஜம்தான் அண்ணா. ஏன் இந்த இடைவெளி என்று ஏக்கமாக்த்தான் இருக்கிறது.

    //அட... சுந்தரா கவிதை மீட்டிய நினைவுகளின் நீட்சி இது.
    மிக வலிமையான கவிதை சுந்தரா.ரொம்ப பிடிச்சிருக்கு.//

    நன்றி அண்ணா :) மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. //திகழ் said...

    அருமையான‌
    இயல்பான வரிகள்

    வாழ்த்துகள்//

    அட,ஒரே சொல் என்ற நிலைமாறி ரெண்டு மறுமொழி வந்திருக்குதே...

    மகிழ்ச்சி திகழ். நலம்தானே?

    பதிலளிநீக்கு
  11. //Toto said...

    அழ‌கான‌ க‌விதை. ந‌ல்லாயிருக்குங்க‌.//

    உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Toto!

    பதிலளிநீக்கு
  12. அப்போ தொலைபேசி அதிகம் இல்லாததால, நேரில பாத்தாத்தான் கதையெல்லாம் முழுசா பேச முடியும். இப்போ தொலைபேசியில தினமும் பேசி பகிர்ந்துகொள்வதால் அடிக்கடி நேரில் வரவேண்டிய அவசியமில்லாமல் போச்சு. இப்படி எடுத்துக்கலாமே?

    ;-)

    பதிலளிநீக்கு
  13. உண்மை தான் நண்பரே காலம் ரொம்பத தான் மாறிப்போச்சு..

    மனித மனங்களும்,
    அதனோடு மாறிப்போனது..

    பதிலளிநீக்கு
  14. கவிதை ... உறவின் வலியை சொல்கிறது மிக வியந்தேன்.... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நிதர்சனத்தை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் வரிகளில்.

    //வந்துசேரும் உறவுகள்
    தங்கியிருக்கிற வரைக்கும்
    கூத்தும் கும்மாளமும்
    வீட்டில்,
    குவிந்துதான் கிடக்கும்...//

    அந்த நினைவுகளுக்கே போய் விட்டேன்.

    //அழைப்பு மணியைக்காட்டிலும்
    அதிகமாய் ஒலிப்பது
    தொலைபேசி மணிகள்தான்...//

    உண்மைதான். அதுவே போதுமென்ற மனப்பான்மையும் வந்து விட்டது:(!

    அருமையான கவிதை சுந்தரா!

    பதிலளிநீக்கு
  16. //ஹுஸைனம்மா said...
    அப்போ தொலைபேசி அதிகம் இல்லாததால, நேரில பாத்தாத்தான் கதையெல்லாம் முழுசா பேச முடியும். இப்போ தொலைபேசியில தினமும் பேசி பகிர்ந்துகொள்வதால் அடிக்கடி நேரில் வரவேண்டிய அவசியமில்லாமல் போச்சு. இப்படி எடுத்துக்கலாமே?

    ;-)//

    அப்படியே எடுத்துக்குவோம் :)

    நன்றி ஹுசைனம்மா!

    பதிலளிநீக்கு
  17. //முனைவர்.இரா.குணசீலன் said...
    உண்மை தான் நண்பரே காலம் ரொம்பத தான் மாறிப்போச்சு..

    மனித மனங்களும்,
    அதனோடு மாறிப்போனது..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  18. //சி. கருணாகரசு said...
    கவிதை ... உறவின் வலியை சொல்கிறது மிக வியந்தேன்.... பாராட்டுக்கள்.//

    வாங்க கருணாகரசு!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  19. //ராமலக்ஷ்மி said...
    நிதர்சனத்தை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் வரிகளில்.

    //வந்துசேரும் உறவுகள்
    தங்கியிருக்கிற வரைக்கும்
    கூத்தும் கும்மாளமும்
    வீட்டில்,
    குவிந்துதான் கிடக்கும்...//

    அந்த நினைவுகளுக்கே போய் விட்டேன்.

    //அழைப்பு மணியைக்காட்டிலும்
    அதிகமாய் ஒலிப்பது
    தொலைபேசி மணிகள்தான்...//

    உண்மைதான். அதுவே போதுமென்ற மனப்பான்மையும் வந்து விட்டது:(!

    அருமையான கவிதை சுந்தரா!//

    நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!