அவள் ஆத்திரமும் அழகுதான்!

காலையிலிருந்து எதற்காவது
கத்திக்கொண்டுதான் இருக்கிறாள்,
ஆனாலும் அவளிடத்தில்
கோபம் வரவில்லை எனக்கு...

வாசல் தெளித்துக்
கூட்டுவதில் தொடங்கி,
ராத்திரி வேலைகளை
முடித்து அயறும்வரை,
அவளுக்கே தெரியாமல்
ஆங்காங்கே உதிருகிறது
அவளுடைய
ஆத்திரத்தின் துணுக்குகள்...

கல்லூரி விட்டுக் கொஞ்சம்
தாமதமாய் வந்தாலும்,
பண்பலை வரிசையில்
பாட்டுக்கேட்டு ரசித்தாலும்
எல்லாமே அவளுக்கு
எரிச்சலாய்த்தான் இருக்கிறது...

கண்ணுக்குள் பொத்திவைத்த
கடைக்குட்டித் தம்பி
அவன்,
கணினியுடன் உட்கார்ந்து
காலம் கடத்தினால்
என்னவோ தெரியவில்லை,
எரிகிறது அவளுக்கு...

கண்ணாடிப் பார்வையில்
அப்பா
கதைகள் படிக்கக்கண்டால்,
என்னைக் கவனிக்க
யாருமில்லை என்றுசொல்லித்
தன்னாலே பேசுகிறாள்
தன்னிரக்கம் காட்டுகிறாள்...

அவர்,
என்னடி ஆச்சுதென்று
கொஞ்சம் அருகில்சென்று,
கண்பார்த்துக் கேட்டுவிட்டால்,
ஒன்றுமே பேசாமல்
உருகித்தான் போகிறாள்...

ரொம்பத்தான் அலட்டுகிறாய்
என்றுசொல்லி யாரேனும்
கோபத்தில் கொஞ்சம்
முகம்திருப்பிக் கொண்டுவிட்டால்,
பின்னாலே அழுகிறாள்
பேச்சிழந்து தவிக்கிறாள்...

என்னதான் ஆச்சு அம்மா?
ஓடிய ஓட்டத்தில்
நோயுற்றுப் போனாயோ?
வயதின் மாற்றங்களால்
வலுவிழந்து போனாயோ?

ஞாபகத்தின் அடுக்குகளை
ஊடுருவிப் பார்க்கிறேன்...
சின்ன வயசில்
சிரமமே பார்க்காமல்
என்னையும் தம்பியையும்
கண்ணுக்குள் இருத்தியவள்...

என்னவேலை யென்றாலும்
யாரையும் தேடாமல்
தன்னாலே செய்யத்
தலைப்பட்டு நின்றவள்,
இன்று,
தன்னைக் கவனிக்க
யாருமில்லை என்றெண்ணி
உள்ளுக்குள் புழுங்குகிறாள்
என்பதை உணர்ந்தேன்...

கண்ணில் நீர்திரையிட,
அவளைப் பார்க்கிறேன்...
அவள்,
இன்றைக்கும் தெரிகிறாள்,
எரிச்சலிலும் அழகாக...

கருத்துகள்

  1. //இன்றைக்கும் தெரிகிறாள்,
    எரிச்சலிலும் அழகாக...//

    என்றைக்குமே அழகுதான் இல்லையா சுந்தரா.

    உள்ளத்தைப் படித்து உணர்வுகளை வடித்திருக்கிறீர்கள்!

    //என்னவேலை யென்றாலும்
    யாரையும் தேடாமல்//

    வியப்பான உண்மை!

    //தன்னைக் கவனிக்க
    யாருமில்லை என்றெண்ணி//

    ஏங்கும் தாய்மை:(!

    பதிலளிநீக்கு
  2. என்னையும் பீல் பண்ண வச்சிடீங்க

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி கவிதை காதலன்!

    நன்றி மந்திரன்!

    நன்றி கமலேஷ்!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும்

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. //ராமலக்ஷ்மி said...
    //இன்றைக்கும் தெரிகிறாள்,
    எரிச்சலிலும் அழகாக...//

    என்றைக்குமே அழகுதான் இல்லையா சுந்தரா.

    உள்ளத்தைப் படித்து உணர்வுகளை வடித்திருக்கிறீர்கள்!

    //என்னவேலை யென்றாலும்
    யாரையும் தேடாமல்//

    வியப்பான உண்மை!

    //தன்னைக் கவனிக்க
    யாருமில்லை என்றெண்ணி//

    ஏங்கும் தாய்மை:(!//

    அம்மாவைப்பற்றி, நாமும் அம்மாவானபிறகு இன்னும் நிறைய உணர்ந்துகொள்ளமுடிகிறது அக்கா.

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அம்மாவை நான் ஒரே ஒரு முறைதான் எரிச்சல் மூட்டி இருக்கிறேன். ஆனாலும் அம்மாவின் அன்றைய முகமும் அதில் தோன்றிய சின்ன வேதனைக் கொடு இன்றும் எனக்கு நினைவில் இருக்கு. மீண்டும் அந்நாள் நிகழ்வை நினைவூட்டியது உங்கள் கவிதை. "அவள்"கள் அம்மா மட்டுமா.. இன்னும் நிறையா..

    :)
    வித்யா

    பதிலளிநீக்கு
  7. // Vidhoosh said...
    அம்மாவை நான் ஒரே ஒரு முறைதான் எரிச்சல் மூட்டி இருக்கிறேன். ஆனாலும் அம்மாவின் அன்றைய முகமும் அதில் தோன்றிய சின்ன வேதனைக் கொடு இன்றும் எனக்கு நினைவில் இருக்கு. மீண்டும் அந்நாள் நிகழ்வை நினைவூட்டியது உங்கள் கவிதை. //

    அம்மா மனசு அனைத்தையும் மறந்திருக்கும் வித்யா :)

    //"அவள்"கள் அம்மா மட்டுமா.. இன்னும் நிறையா..//

    நிஜம்தான் வித்யா.

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //அகநாழிகை said...
    கவிதை அருமை.//

    நன்றிகள் வாசுதேவன்!

    பதிலளிநீக்கு
  9. கவிதை மிகமிக அருமை..........பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  10. நிலாமதி,

    Madurai Saravanan,

    கண்மணி/kanmani,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!