Wednesday, June 23, 2010

ஆணவத்தின் கரைகளில் அகதிகளாய்ப் பெண்கள்!
சண்டையின் வாசனை
கவிந்து கிடந்தது வீட்டில்...

என்ன செலவுசெய்தீர்களென்று
இயல்பாய் எழுந்த கேள்விக்கு,
'என்னசெய்தால் உனக்கென்ன'
என்ற ஆணவம் பதிலாக,

ரெண்டு வருஷ வாழ்க்கையின்
அர்த்தம் விளங்காமல்,
துண்டுதுண்டாகிப்போனது
துணையானவளின் மனசு..

வீசப்பட்ட வார்த்தைகளை
வலைபோட்டுத் தேடி,
ஆத்திரம் கூட்டிக்கூட்டி
அனலேற்றியது நினைவு...

எட்டத்தில் இருக்கும்
உறவுகளைத் தொலைபேசி,
குற்றப் பத்திரிகை
வாசிக்க விருப்பமின்றி,

கிட்டப்போய் மறுபடியும்
கேள்விகளால் நியாயம்கேட்க,
சட்டையேதும் செய்யாமல்
சம்பாதிப்பவன் வெளியேற,
கண்ணீராய்ப் பெருகிக்
கடலானது தன்னிரக்கம்...

கேட்டாலும் குற்றம்
கேட்க விருப்பமின்றி,
கேள்விகளாய் மனதில்
புதைத்தாலும் கஷ்டம்...

வேலைக்குப் போகாத
படித்தவளாய்க் கேட்டுவிட்டு,
இன்று,
வீட்டோடு இருப்பவளைத்
துச்சமாகப் பார்க்கக்கண்டு
கூசித்தான்போனது மனசு...

பெண்ணாகச் சார்ந்திருத்தல்
பெருமையில்லை என்றுணர்ந்து,
கண்ணீரில் மனத்தையும்
தண்ணீரில் முகத்தையும்
நன்றாகக் கழுவிவிட்டு
நிறைய யோசித்தாள்...

ஆனால்,
எடுத்தமுடிவுகள் எல்லாவற்றிலும்
எதிரே வந்துநின்றது,
அழைத்தணைக்க யாருமின்றி
அழுதுகொண்டிருந்த அவள் குழந்தை...

பெண்மனதின் தவிப்பையும்
பெருகிவந்த அவமானத்தையும்
ஒரு குவளை நீரோடு
உள்ளே விழுங்கிவிட்டு
மண்ணாகத் தலைப்பட்டாள்,
மௌனமாய் அழுதது மனசு!

13 மறுமொழிகள்:

சந்தனமுல்லை said...

ஒரு சிறுகதையை வாசித்த மாதிரி இருந்தது! மிக அருமையாக கையாலாகத்தனத்தை எழுதியிருக்கிறீர்கள்!

ராமலக்ஷ்மி said...

வழமை போலவே சிறப்பான கவிதை சுந்தரா.

காமராஜ் said...

இயல்பை அப்படியே கவிதைத்தட்டில் பறிமாறக் கைவந்திருக்கிறது சுந்தராவுக்கு.நல்லாருக்குப்பா.
நலம் தானே.நாளாச்சல்லாவா.வாருங்கள் தங்கச்சி. இந்த வலையில் நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வோம்.

அம்பிகா said...

\\ரெண்டு வருஷ வாழ்க்கையின்
அர்த்தம் விளங்காமல்,
துண்டுதுண்டாகிப்போனது
துணையானவளின் மனசு\\
எத்தனை வருடம் ஆனாலும் இப்படி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அருமையா எழுதியிருக்கீங்க, சுந்தரா.

Maria Mcclain said...

You have a very good blog that the main thing a lot of interesting and useful!hope u go for this website to increase visitor.

ஹுஸைனம்மா said...

//ஒரு குவளை நீரோடு
உள்ளே விழுங்கிவிட்டு//

ம்ம்..

சுந்தரா said...

//சந்தனமுல்லை said...
ஒரு சிறுகதையை வாசித்த மாதிரி இருந்தது! மிக அருமையாக கையாலாகத்தனத்தை எழுதியிருக்கிறீர்கள்!//

நன்றிகள் முல்லை!

சுந்தரா said...

//ராமலக்ஷ்மி said...
வழமை போலவே சிறப்பான கவிதை சுந்தரா.//

நன்றிகள் அக்கா!

சுந்தரா said...

//காமராஜ் said...
இயல்பை அப்படியே கவிதைத்தட்டில் பறிமாறக் கைவந்திருக்கிறது சுந்தராவுக்கு.நல்லாருக்குப்பா.
நலம் தானே.நாளாச்சல்லாவா.வாருங்கள் தங்கச்சி. இந்த வலையில் நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வோம்.//

மகிழ்ச்சி அண்ணா...

மிக்க நன்றி!

சுந்தரா said...

//அம்பிகா said...
\\ரெண்டு வருஷ வாழ்க்கையின்
அர்த்தம் விளங்காமல்,
துண்டுதுண்டாகிப்போனது
துணையானவளின் மனசு\\
எத்தனை வருடம் ஆனாலும் இப்படி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அருமையா எழுதியிருக்கீங்க, சுந்தரா.//

நிஜம்தான் அம்பிகா, நன்றி!

சுந்தரா said...

//Maria Mcclain said...
You have a very good blog that the main thing a lot of interesting and useful!hope u go for this website to increase visitor.//

நன்றி மரியா!

சுந்தரா said...

//ஹுஸைனம்மா said...
//ஒரு குவளை நீரோடு
உள்ளே விழுங்கிவிட்டு//

ம்ம்..//

நன்றி ஹுசைனம்மா :)

அப்பாவி தங்கமணி said...

நல்ல உணர்வு பதிவுங்க... ஒரு தோழியின் நிலை கண் முன் வந்தது... இந்த காலத்திலும் இப்படி மனிதர் உண்டு தான்...

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails