இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிள்ளையெனும் பேரன்பு!

படம்
சுவற்றில், முட்டிமுட்டித் திரும்புகிற குட்டிப் பந்துடன் பேசியபடி, எட்டிஎட்டிப் பார்க்கிறாய் என்னை... தட்டிலூற்றவேண்டிய மாவைத் தரையில் ஊற்றினாலும் தடுமாற்றம் காட்டாமல் எனக்குள்ளே சிரிக்கின்றேன் நான்... ரெண்டு விரலை நீட்டி ஒன்றைத்தொடு என்று ஒன்றுமே நடக்காததுபோல் முன்வந்து முகம்பார்க்கிறாய்... கண்களைத் தவிர்த்துவிட்டுக் கடந்துபோக எத்தனிக்கையில், பின்னாலிருந்துகொண்டு புடவையை இழுக்கிறாய்... சொன்னபடி கேட்காமல் சங்கடப் படுத்திவிட்டு, இன்னும் ஏன் வதைக்கிறாய் என்றபடி திரும்புகிறேன்... உன் கண்ணாடிக் கண்கள் கருணையை யாசிக்க, முன்னாடி நிற்கின்றாய்... உருக்கிடும் பார்வையில் இறுக்கம் தொலைந்துபோக, இணக்கமாய்ச் சிரிக்கிறேன்... கையணைத்துச் சிறுஇதழால் கட்டி முத்தமிட்டு, சின்ன விரல்களால் என் முகம் தொட்டுச் சொல்கிறாய்... உன்னோடு பேசாத வருத்தத்தைக் காட்டிலும், புத்தகப் பாடமொன்றும் அத்தனை கஷ்டமில்லை... இனி, நன்றாய்ப் படிக்கிறேன் நம்பு அம்மா என்கிறாய்... என்னுயிரே இறங்கிவந்து உன்வடிவில் கெஞ்சிநிற்க, கண்கள் பனித்தபடி கனிந்து நிற்கிறேன் அன்னையாக!