தூண்டில் மனிதர்கள்!



ஏனென்ற தூண்டிலும்
எப்படியென்ற இரையுமாய்
கிட்டவந்து உட்காரும்
கேள்விக்குறி மனிதர்கள்...

வெள்ளந்திப் பேச்சு
விலையில்லாச் சிரிப்பு
கிள்ளிவிட்டு மெள்ளமாக
வருடிவிடும் நாசூக்கு...

கள்ளெடுத்துத் தோய்த்துக்
கொக்கியைக் களமிறக்க,
உள்மனசின் வருத்தமெல்லாம்
உருகி வெளிக்கிளம்ப,
ஒவ்றொன்றாய்ப் பிடிபடும்
உள்ளத்து மீன்கள்...

இறக்கிவைத்த வேதனையால்
இதயம் தெளிந்தாலும்
கிடைத்துவிட்ட விஷயங்களால்
கள்ளமனம் கூத்தாடும்...

மாதச் சருகுகள்
வருஷமாகி உதிர்ந்துபோக,
மனம்விட்டுப் பேசியதே
மறந்துபோன தருணத்தில்,
பிடிபட்ட மீன்களை
வடிவமாய் அலங்கரித்து,
உறவுக் கூடத்தில்
ஒவ்வொன்றாய் ஏலமிடும்...

கேள்வியுற்ற விஷயத்தால்
கொதிப்படைந்து போனாலும்,
முற்றிலுமாய் நம்பாத
நல்ல இதயங்கள்
சுற்றிவந்து நம்மிடமே
கொட்டிப் புலம்பிநிற்க,
மாட்டிக்கொண்ட மர்மம்
மனசுக்குப் புலப்படும்...

கெட்டோம் நாமன்று
கேள்விகளா லென்றஎண்ணம்
புத்தியில் தைத்துப்
புலப்படும் வேளையில்,
எல்லாமே
முற்றிப் போயிருக்கும்
முடிச்சிறுகி வலிகொடுக்கும்...

அதனால்
கிட்டவரும் தூண்டில்கள்
பற்றிக்கொள்ளும் முன்பாக,
எச்சரிக்கையா யிருத்தல்
எப்போதும் அவசியம்!

கருத்துகள்

  1. தூண்டில்கள் பற்றியதான எச்சரிக்கையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுந்தரா. உண்மை.

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோ

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. என்ன அழகான கருத்து வெளிப்பாடு.
    ஒவ்வொரு வார்த்தையாய் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. அடடா என வியக்க வைத்து விட்டீர்கள்.
    மனதுக்கு நெருக்கமான வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!