Wednesday, September 29, 2010

தூரமாகிப்போன சாமியும் சந்தோஷமும்!


தூரமா யிருக்கிறப்ப
தெருவுக்கெல்லாம் கூடாது,
ஓரமா உக்காந்து
பரமபதம் ஆடென்று
காரமாய்ச் சொல்லிவிட்டுக்
கண்ணை உருட்டியது பாட்டி...

வேறெதுவும் பிடிக்காமல்
வெற்றுத் தாளெடுத்துவைத்து,
சுற்றிக் கோடுபோட்டு
ஸ்ரீராம ஜெயம் எழுத,

கெட்டுதுபோ குடியென்று
பட்டென்று பிடுங்கிவிட்டு,
சுத்தமாகிற வரைக்கும்
சாமியெல்லாம் வேண்டாம்,
குத்தமாகிப் போகுமடி
என்று பயமுறுத்த,

தூரமாகிப்போனது சாமியுமா என்று
பாரமாகிப்போன மனதுடன்
பாயில்போய் விழுந்தது,
பெரியவளாகிப் போன
பத்துவயசுச் சின்னப் பூ.

Monday, September 27, 2010

பெண்மையின் மென்மையில் இல்லை பலவீனம்!


அலுவலகப் பணிமுடித்து
ஆறுமணிக்கு வந்தாலும்,
ஆறுதலாய் உட்கார
அவளுக்கு விதியில்லை...

குளிக்கின்ற சமயத்தில்
குழாயடியில் நீர்பிடித்து,
சமைக்கிற தருணத்தில்
சமையலறை சுத்தம்செய்வாள்...

பிள்ளையைப்
படிக்கவைக்கும் நேரத்தில்
பத்திரிகை பார்த்துவிட்டு,
மாவரைக்கும் நேரத்தில்
மடித்ததுணி எடுத்துவைப்பாள்...

நடைப்பயிற்சி என்றுசொல்லிக்
கடைக்கெல்லாம் போய்வந்து,
கணக்கெழுதும் நேரத்தில்
கவிதையொன்றும் எழுதிவைப்பாள்...

அடுத்த நாள் சமையலுக்கு
ஆயத்தம் செய்தபடி,
படிக்கின்ற பிள்ளைக்கு
உணவூட்டி உறங்கவைப்பாள்...

படுத்தபின்னும் உறக்கமின்றிப்
பால்கணக்கு என்னவென்று,
மனக்கணக்குப் போட்டு அதை
மறக்காமல் குறித்துவைப்பாள்...

சுற்றுகிற பூமிபோலப்
பொறுமையுடன் பணிமுடித்துச்,
சுற்றிவரும் பெண்ணிவளைப்
போற்றிட முடியாமல்,

பெட்டைக் கோழிகூவி
பொழுதொன்றும் விடியாதென்று
நக்கலாய்ப் பேசி
நையாண்டி செய்துவிட்டு,

கணினித் திரையினுள்
கண்புதைத்துக் கொண்ட
கணவனைப் பார்த்தவள்
தனக்குள்ளே முணுமுணுத்தாள்...

பெண்மையின் மென்மையில்
இல்லை பலவீனம்,
அது,
ஆணென்னும் அகங்காரத்தில்
அடங்கிக் கிடக்கிறதென்று!

- சுந்தரா

Monday, September 20, 2010

ஒற்றை மனுஷியும் கற்றை எதிர்பார்ப்புகளும்


காலையிலிருந்து,
கண்ணாடியைத் தேடுறேன்,
எடுத்துத் தரணும்னு
யாருக்கும் தோணலை,
கடுப்பாகச் சொல்லிவிட்டுப்
படுத்துக்கொண்டார் தாத்தா...

என்னோட வீட்டுப்பாடத்தை
எப்பதான் சொல்லித்தருவே?
எழுதுகிற ஏட்டிலிருந்து
கழுத்தைத் திருப்பி,
ஏறிட்டுப் பார்த்துவிட்டு
வீறிட்டான் தம்பி...

சட்டையைத் துவைக்கச்சொன்னேன்
அதைத்தான் செய்யவில்லை,
இஸ்திரிபோட்டாவது
எடுத்துவைத்திருக்கலாம்
கட்டைக் குரலில்
கத்திக்கொண்டிருந்தான் அண்ணன்...

நாளைக்கும்,
இட்டிலி யென்றால்
என்னை விட்டுவிடு,
பட்டினியாய்க் கூடப்
பள்ளிக்கூடம் போகிறேன்,
எட்டிப்பார்த்துவிட்டு
எரிந்துவிழுந்தாள் அக்கா...

ஒற்றைத் தலைவலி
உலுக்கியெடுத்தாலும்
தலையில்
கட்டுப்போட்டுக்கொண்டு
கருமமே கண்ணாயிருந்தாள் அம்மா...

கிட்டப்போய் அருகிருந்து
நெற்றியை வருடிவிட்டு,
சற்றுநேரம் படு அம்மா
சரியாப்போயிடும் என்றேன்,
கட்டிக்கொண்டாள் என்னை...

என் சட்டையை நனைத்தது
அவள் கண்ணீராயிருக்குமோ???

-சுந்தரா

Saturday, September 18, 2010

இருளில் புரிந்த பொருள்!

வீட்டைவிட்டு வெளியேறிய
இரவுநேர மின்சாரம்,
வேதனையில் தேர்ந்தெடுத்த
உத்திரத்துக் கொச்சக்கயிறு...

முடிச்சுக்குள் முகம்நுழைக்கப்
பார்வையில் பட்டது,
வெளிச்ச நெருப்பில்
விழப்போகிற விட்டில்பூச்சி...

பளிச்சென்று இறங்கியவன்
விளக்கணைத்து யோசித்தான்,
பரஸ்பரம் உயிர்காத்த
பரிவுடன் பறந்தது விட்டில்.

Monday, September 13, 2010

நானும் பாலைவனம் போகிறேன்!பழகிய பூமியைப்
பலமாத இடைவெளியில்
பார்க்கக் கிடைக்கிற
படபடப்பான சந்தோஷம்...

நீர்க்கக் கிடைத்த மோரில்
கறிவேப்பிலை நறுமணமாய்,
ஊர்ப்புறத்து நட்புகளில்
ஊற்றெடுக்கும் அன்பு வெள்ளம...

எதிர் பார்ப்புகள் எதுவுமின்றி
என்னுடைய முகம்பார்த்து,
இதயத்தைப் பகிர்ந்துகொள்ளும்
இணையில்லா மனநெருக்கம்...

வேர்க்கின்ற வேளையில்
கிடைக்கிற விசிறிபோல,
பார்க்கின்ற கண்களெல்லாம்
பகிர்ந்துகொள்ளும் பரவசம்...

யார்பிள்ளை நீயென்று
இயல்பாய்க் கேட்டுவிட்டு,
பேர்கேட்ட பின்னாலே
கைப்பிடிக்கும் கரிசனம்...

வேற்று நிலத்தில்
விழுதுவிட்ட வாழ்க்கையினைத்
தோற்கடித்துச் சரிக்கிற
உறவுகளின் உற்சாகம்...

இவையெல்லாம்
எனக்கும் கிடைக்குமென்றால்
இப்போதே சொல்லுங்கள்,
நானும்
பாலைவனம் போகிறேன்!

Sunday, September 12, 2010

எல்லாம்...அம்மாவால வந்தது!


அப்பா, உனக்கு எப்போ
தொப்பை வந்திச்சு?

உங்கம்மா வந்ததுக்கப்புறம்...


உச்சந்தலையில வழுக்கை?

அதுவும் கூட,
அம்மா வந்தப்புறம்தான்...


கிட்டப்பார்வைக் கண்ணாடி?

எத்தனை தடவை
அதையே நான் சொல்லுறது?


வாசல்ல நிக்கிற வண்டி?

............

'அதுவும் அம்மாவாலன்னு
அழுத்தமாச் சொல்லுங்க'
-அடுப்படியிலிருந்து வந்தது குரல்...

அதெல்லாம்,
சொன்னாப் புரியாது
சீக்கிரம்போய் தூங்கு நீ,
செல்ல மகளை
மெல்ல நகர்த்தினான் அவன்!

படம் : நன்றி http://www.cultureandpublicaction.org

Tuesday, September 7, 2010

அவளை அனாதையென்று அழைக்காதீர்கள்!


அக்கம்பக்கத்திலிருப்பவர்களெல்லாம்
அவளை
அனாதையென்றுதான் அழைக்கிறார்கள்...

அவள்
பேரென்ன எதுவென்ற
பெரிய அக்கறையின்றி,
அவளை
அநாதையென்று சொல்லித்தான்
அடையாளப் படுத்துகிறார்கள்...

பெற்றவொரு பிள்ளையையும்
நோயிலே தொலைத்தபின்,
மற்றபிள்ளை யெல்லாம் தன்
மகனென்றே நினைத்தவள்...

அடிக்கிற காற்றுக்கூட
அன்புக்குக் கட்டுப்பட்டு,
அவள்
குடிசையின் கூரைக்குள்
கொஞ்சநேரம் தங்கிப்போகும்...

ஆனால்,
உண்ணவும் குடிக்கவும்
அவள்
என்னசெய்கிறாள் என்று
யாருமே யோசித்ததில்லை...

அவளைச்
சுற்றமென்று யாரும்
சொல்லியழைப்பதில்லை,
ஆனால்
மற்றவர் துயரங்களில்
அவள்
முதலாக வந்துநிற்பாள்...

முற்றத்து மரத்துக்கும்
அதில் தங்கும் பறவைக்கும்
கட்டுப்பாடில்லாத
கருணையைக் காட்டுவாள்...

ஓடையின் மீன்களுக்கு
ஒருகைப் பொரியும்,
ஓரத்துப் பிள்ளையாருக்கு
ஒன்றிரண்டு மலர்களுமாய்,
ஊரிலுள்ள எல்லாவற்றிற்கும்
உறவுசொல்லி அருகிருப்பாள்...

தேடாத தெருநாய்க்கும்
வீடில்லாப் பூனைக்கும்
இருக்கிற தன் சோற்றை
இல்லையென்னாமல் கொடுப்பாள்...

ஆனால்
படுக்கவும் பாயின்றிப்
பாடுபடும் அவளை,
அதிர்ஷ்டக்கட்டை யென்று
அலட்சியப்படுத்துகிறார்கள் மக்கள்!

Sunday, September 5, 2010

குடும்பக் கவிதை!

வழக்கம்போலவே அன்றைக்கும்
வம்பில்தான் முடிந்தது
வாக்குவாதம்...

வந்தது போனதெல்லாம்
வாய்விட்டுச் சொன்னபடி
கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்தாள் அவள்...

அழுகிற அம்மாவைப்பார்த்து
அமைதியாயிருந்தார்கள் பிள்ளைகள்...

"ஷிஃப்டுக்கு நேரமாச்சு,
சொம்புல தண்ணிகுடும்மா"
சட்டையைப் போட்டுக்கொண்டு
சைக்கிளை எடுக்கப்போனான் அவன்...

ரெண்டுபுள்ள பெத்தாச்சு
இன்னமும் புத்தியில்ல,
வெத்து வயித்தோட
வேலைக்குப்போற விதியப்பாரு...

என்னதான் படிச்சியோ
என்று முனகிக்கொண்டு,
தண்ணீர் எடுக்கப்போனாள்
அவனைப் பெற்ற அம்மா...

இப்ப,
என்ன பண்ணிட்டாருன்னு
எரிஞ்சு விழுறீங்க?
தண்ணிமட்டும் கேட்டதுக்கே
இந்த ஆர்ப்பாட்டமா?
கொண்டையை முடிந்துகொண்டு
கோபத்தைத் திசைமாற்றினாள் அவள்...

எடுத்த ஆயுதம்
ஜெயித்த சந்தோஷத்தில்,
வெற்றிலைப் பையோடு
வாசலில் உட்கார்ந்தாள் அம்மா...

அங்கே,
தட்டில்வைத்த சோற்றை
உண்ணத் தொடங்குமுன்
எட்டி வெளியில்பார்த்தான் அவன்...

கற்றை வெளிச்சம் விழக்
கன்னங்களின் அசைவினில்,
கொஞ்சமாய்த் தெரிந்தது
அம்மாவின் புன்னகை!

LinkWithin

Related Posts with Thumbnails