குடும்பக் கவிதை!

வழக்கம்போலவே அன்றைக்கும்
வம்பில்தான் முடிந்தது
வாக்குவாதம்...

வந்தது போனதெல்லாம்
வரிசையாய்ச் சொன்னபடி
கணவனை 
வசைபாடிக் கொண்டிருந்தாள் 
மருமகள்...

அம்மாவைப் பார்த்தபடியே
அமைதியாய் நின்றார்கள் பிள்ளைகள்...

"ஷிஃப்டுக்கு நேரமாச்சு,
சொம்புல தண்ணிகுடும்மா"
சட்டையைப் போட்டுக்கொண்டு
சைக்கிளை எடுக்கப்போனான் அவன்...

ரெண்டுபுள்ள பெத்தாச்சு
இன்னமும் புத்தியில்ல,
வெத்து வயித்தோட
வேலைக்குப்போற விதியப்பாரு...

என்னதான் படிச்சியோ
என்று முனகிக்கொண்டு,
தண்ணீர் எடுக்கப்போனாள்
அவனைப் பெற்ற அம்மா...

இப்ப,
என்ன பண்ணிட்டாருன்னு
எரிஞ்சு விழுறீங்க?
தண்ணிமட்டும் கேட்டதுக்கே
இந்த ஆர்ப்பாட்டமா?
கொண்டையை முடிந்துகொண்டு
கோபத்தைத் திசைமாற்றினாள் அவள்...

எடுத்த ஆயுதம்
ஜெயித்த சந்தோஷத்தில்,
வெற்றிலைப் பையோடு
வாசலில் உட்கார்ந்தாள் அம்மா...

அங்கே,
தட்டில்வைத்த சோற்றை
உண்ணத் தொடங்குமுன்
எட்டி வெளியில்பார்த்தான் அவன்...

கற்றை வெளிச்சம் விழக்
கன்னங்களின் அசைவினில்,
கொஞ்சமாய்த் தெரிந்தது
அம்மாவின் புன்னகை!

கருத்துகள்

  1. சுந்தரா அன்புத்தங்கையே ஒரு கமா முற்றுப்புள்ளி கூட கதை சொல்லும் எழுத்து உனது.

    என்னா மாதிரியான வேகம்.
    அருமை.
    அம்மாக்களின் உலகமே தனி.

    ஆனா ஒரு வருத்தம்.
    அடிக்கடி டெம்ப்லேட் மாத்துகிற உன்னால் இந்த டைட்டிக்லை மாத்த முடியாதா ?. குறிஞ்சி மலர்கள் னு பேர வச்சதாலோ என்னவோ அங்கிருந்து எப்பாவாவது தான் வருகிறது கவிதை.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..... கோபத்தை திசை மாற்றும் தாயின் வார்தைகள்..

    பதிலளிநீக்கு
  3. அருமைங்க.. ஒரு சிறுகதை படித்த உணர்வு :)

    பதிலளிநீக்கு
  4. :) நன்றிகள் அண்ணா,

    எப்போவாவது மலர்வதால்தானே குறிஞ்சிக்குப் பெருமை :)

    எதுக்கும், நீங்களே ஒரு நல்ல பேரையும் சொல்லிருங்களேன்.

    பதிலளிநீக்கு
  5. //வழிப்போக்கன் - யோகேஷ் said...

    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..... கோபத்தை திசை மாற்றும் தாயின் வார்தைகள்..//

    ரொம்ப நன்றி யோகேஷ், வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  6. //இராமசாமி கண்ணண் said...

    அருமைங்க.. ஒரு சிறுகதை படித்த உணர்வு :)//

    வாங்க இராமசாமி கண்ணண்...

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஒரு சிறு குடும்ப கதைய கவிதையா வடிச்சிட்டீங்க அருமை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!