அவளை அனாதையென்று அழைக்காதீர்கள்!


அக்கம்பக்கத்திலிருப்பவர்களெல்லாம்
அவளை
அனாதையென்றுதான் அழைக்கிறார்கள்...

அவள்
பேரென்ன எதுவென்ற
பெரிய அக்கறையின்றி,
அவளை
அநாதையென்று சொல்லித்தான்
அடையாளப் படுத்துகிறார்கள்...

பெற்றவொரு பிள்ளையையும்
நோயிலே தொலைத்தபின்,
மற்றபிள்ளை யெல்லாம் தன்
மகனென்றே நினைத்தவள்...

அடிக்கிற காற்றுக்கூட
அன்புக்குக் கட்டுப்பட்டு,
அவள்
குடிசையின் கூரைக்குள்
கொஞ்சநேரம் தங்கிப்போகும்...

ஆனால்,
உண்ணவும் குடிக்கவும்
அவள்
என்னசெய்கிறாள் என்று
யாருமே யோசித்ததில்லை...

அவளைச்
சுற்றமென்று யாரும்
சொல்லியழைப்பதில்லை,
ஆனால்
மற்றவர் துயரங்களில்
அவள்
முதலாக வந்துநிற்பாள்...

முற்றத்து மரத்துக்கும்
அதில் தங்கும் பறவைக்கும்
கட்டுப்பாடில்லாத
கருணையைக் காட்டுவாள்...

ஓடையின் மீன்களுக்கு
ஒருகைப் பொரியும்,
ஓரத்துப் பிள்ளையாருக்கு
ஒன்றிரண்டு மலர்களுமாய்,
ஊரிலுள்ள எல்லாவற்றிற்கும்
உறவுசொல்லி அருகிருப்பாள்...

தேடாத தெருநாய்க்கும்
வீடில்லாப் பூனைக்கும்
இருக்கிற தன் சோற்றை
இல்லையென்னாமல் கொடுப்பாள்...

ஆனால்
படுக்கவும் பாயின்றிப்
பாடுபடும் அவளை,
அதிர்ஷ்டக்கட்டை யென்று
அலட்சியப்படுத்துகிறார்கள் மக்கள்!

கருத்துகள்

  1. //அடிக்கிற காற்றுக்கூட
    அன்புக்குக் கட்டுப்பட்டு,
    அவள்
    குடிசையின் கூரைக்குள்
    கொஞ்சநேரம் தங்கிப்போகும்...//

    படிக்கும் போதே பாதி மனதை இளகச்செய்த வரிகள்....,

    முடித்த போது , அம்முதியவள்... தாயாகிபோயிருந்தாள் இம்மகனுக்கு!

    இனியவளை “அனாதையென்று அழைக்காதீர்கள்”

    பதிலளிநீக்கு
  2. காற்றுக்கும் தங்கிப்போக இடம் கொடுப்பவள்.தேடாத நாய்க்கும் தெருப்பூனைக்கும்,ஆத்து மீனுக்கும்,கரைப்பிள்ளையாருக்கும். இந்த உலகத்தில் அவள் எதை விட்டு வைக்கவில்லை.உதாசினப்படுத்தியவர்களையும் சேர்த்து.

    ஆழ ஆழத்துக்கு இழுத்துக்கொண்டே போகுது கவிதை. அழகுக்கவிதை.

    பதிலளிநீக்கு
  3. காற்று காட்டும் கனிவை நாம் காட்டத் தவறி விடுகிறோம் இது போன்ற மனிதரிடத்து என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  4. அவள் அநாதையே இல்லை. எல்லோருக்கும் அவள் உறவு. அவள் மனத்தளவில் யாவரும் கேளீர்.
    அழகான கவிதை சுந்தரா.

    பதிலளிநீக்கு
  5. //சத்ரியன் said...

    //அடிக்கிற காற்றுக்கூட
    அன்புக்குக் கட்டுப்பட்டு,
    அவள்
    குடிசையின் கூரைக்குள்
    கொஞ்சநேரம் தங்கிப்போகும்...//

    படிக்கும் போதே பாதி மனதை இளகச்செய்த வரிகள்....,

    முடித்த போது , அம்முதியவள்... தாயாகிபோயிருந்தாள் இம்மகனுக்கு!

    இனியவளை “அனாதையென்று அழைக்காதீர்கள்” //

    நேசிக்கத்தெரிந்த யாருமே அனாதைகளில்லைதான்.

    உங்கள் நெகிழ்வினை அறிந்தால் அந்த மூதாட்டி நிச்சயம் மகிழ்ந்துபோவாள்.

    நன்றிகள் சத்ரியன்!

    பதிலளிநீக்கு
  6. //காமராஜ் said...

    காற்றுக்கும் தங்கிப்போக இடம் கொடுப்பவள்.தேடாத நாய்க்கும் தெருப்பூனைக்கும்,ஆத்து மீனுக்கும்,கரைப்பிள்ளையாருக்கும். இந்த உலகத்தில் அவள் எதை விட்டு வைக்கவில்லை.உதாசினப்படுத்தியவர்களையும் சேர்த்து.

    ஆழ ஆழத்துக்கு இழுத்துக்கொண்டே போகுது கவிதை. அழகுக்கவிதை.//

    எதிர்பார்ப்பில்லாத அன்புகாட்டும் இப்படிச் சிலர் ஆங்காங்கே எதிர்ப்படுகிறார்கள்.

    ஆனால், அவர்களது அன்பு வேறுவிதமாய்த்தான் புரிந்துகொள்ளப்படுகிறது.

    நன்றிகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. //ராமலக்ஷ்மி said...

    காற்று காட்டும் கனிவை நாம் காட்டத் தவறி விடுகிறோம் இது போன்ற மனிதரிடத்து என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுந்தரா.//

    நிஜம்தான் அக்கா.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //வல்லிசிம்ஹன் said...

    அவள் அநாதையே இல்லை. எல்லோருக்கும் அவள் உறவு. அவள் மனத்தளவில் யாவரும் கேளீர்.
    அழகான கவிதை சுந்தரா.//

    அப்படித்தான் வாழ்கிறார்கள் வல்லிம்மா.

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!