இடுகைகள்

நவம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறுத்தலில் உருவாகி...

மனசுமுதிராத முன்னிருபதுகளில் ஒரு மாபெரும் உறுத்தலுக்கு, மாலையிட்டவள் அவள்... காலையில் கட்டிய கனவுக்கோட்டை யெல்லாம் மாலையில் சிதையவைக்கும் மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்பாகக் கசங்கியவள்... நின்றால் ஒருகுற்றம் நிலைமாற முன்னேறி நடந்தாலும் குற்றமென்று, கண்ணால் சுட்டெரித்த கனலுக்குக் கட்டுப்பட்டுப் பெண்ணாக மண்டியிட்ட பேதைப் பிறவியவள்... எண்ணிக்கைக் கடங்காத இருட்டுக் கதைகளை, எண்ணியெண்ணி அழுதிருந்தால் இருண்டிடும் வாழ்க்கையென்று, எல்லாவற்றையும், மண்ணாகிப்போன தன் மனசுக்குள் புதைத்தவள்... எண்ணைந்து வயசுகளின் இறுதிப் பிராயத்தில், பெண்ணென்றால் இவளென்று அவள் பொறுமையைச் சிரசிலேற்றித் தன்னோடு சேர்த்துக்கொள்ளத் தேடிவந்தன உறவுகள்... உறுத்தி உறுத்தியே ஓய்ந்துபோன உறவுக்கும்கூட, மருத்துவம் சொல்லி மனதை மாற்றுமளவுக்குப் பக்குவப்பட்டுப் போனது அவளது அப்பழுக்கில்லாத மனசு... எப்படிப் பார்த்தாலும் இவளுடைய பெருமைக்கு மொத்தக் காரணம் எப்பவும் நான்தானென்று கண்ணீரைமீறி ஓர்நாள் உண்மை கரைபுரள, அங்கே, புடமிட்ட பொன்னில்கோர்த்த வடமாக ஜொலித்தது முத்து!

அடர்கருப்பு

படம்
இது, வெளிச்சத்தின் வாசல், காதலின் தேடல், இரவுகளின் இயல்பு, கனவுகளின் பிறப்பு... உயிர்களின் துயிலணை, பனியிறங்கும் பஞ்சணை, ஆழ்கடலின் ஆழம், நிழலினிலும் நீளும்... நீர்சுமந்த மேகங்கள் அணிந்திருக்கும் வண்ணம், யாருமிலாத் தனியிரவில் பயமுறுத்தும் எண்ணம்... மழைகுளித்த பனைமரங்கள் காட்டுகிற நிறம், சுடர் விளக்கின்ஒளியினிலும் ஒளிந்திருக்கும் நிஜம்... கருப்பென்ற வார்த்தை அந்தக் கண்ணனுக்கும் பொருந்தும், உலகத்து நிறங்களெல்லாம் அடர்கருப்பில் அடங்கும்!

கடல்புறத்து வாழ்க்கை

படம்
அலையும் ஆரவாரமுமாய் அமைந்த சிறுகுடி... வலையும் வள்ளமுமாய் அலங்கரித்த கடல்மடி... அதிவேகக் காற்று, அகங்காரப் பெருமழை, மோகித்த அலைக்கரங்கள் மூர்க்கமாய் எழுந்துவர, மனித ஓசைகள் முற்றிலும் ஒடுங்கிப்போய், இயற்கையில் குரல்மட்டுமே எதிரொலித்தது அங்கு... பட்டதெல்லாம் போதாதா பாடெல்லாம் மறந்துபோச்சா? விட்டுச்செல் கரையை என்று அலைகள் விரட்டினாலும், எட்டிச்செல்ல முடியாமல் இணைந்துவிட்ட மனசுகள் தொட்டெடுத்துப் பூசிக்கொண்டன நெற்றியில் கடலின்மண்ணை ... சுற்றிச் சுழன்றுவந்த புயலும் பெருமழையும் அந்தப் பற்றும் பாசமும்கண்டு மிரண்டுபோய்ப் பின்வாங்க, எங்கே அகப்படுவோம் எப்போது சுகப்படுவோம் என்ற எந்தக் கேள்வியையும் எண்ணத்தில் நிறுத்தாமல், மற்றொரு நாளின் பிழைப்புக்காய் வலையெடுத்து, மீண்டும் அலையாடும் கடலுடன் விளையாடப் புறப்பட்டது, வாழ்வெனும் பெருஞ்சுழலில் அகப்பட்ட கூட்டமொன்று.

நிறம் மாறிய தீபாவளி!

படம்
அதிகாலை விடியலில் ஐந்தாறுநிறப் பொடிகளுடன் அகல்விளக்குக் கோலமிட ஆசைவந்தது அவளுக்கு... பதினெட்டில் மணமுடித்து பத்தொன்பதில் நிறமிழந்து, பத்து வருடங்களாய்ப் பாரம் சுமந்தவள், கறுப்பு நெற்றிப்பொட்டோடு கலர்க்கோலம் இடப்போனாள்... முதல்வருஷத் தீபாவளியுடன் முடிந்துபோன நினைவுகள், முறுக்கிப் பிழிவதுபோல் மனதை அழுத்திநிற்க, பெருக்கி நீர்தெளித்துப் பெருமூச்சை இறைத்தவளை, அங்கே எட்டிப்பார்த்துச் சிரித்தது எதிர்வீட்டுக் குழந்தையொன்று... கற்பனையில் தொட்டில்கட்டிக் கனவுகளில் பெற்றெடுத்த சுட்டிக்குழந்தையின் நினைவுவந்து மனம்வருத்த, கைக்குவந்த கோலத்தைப் காலடியில் போட்டுவிட்டுக் கண்கள் கலங்கிவிட உள்ளே திரும்பினாள்... வெளியே, எட்டு எட்டாய் அடிவைத்து வாசலுடன் முடிந்திருந்தது, குட்டிக்கண்ணனின் பாதச்சுவடுகள்!