நிறம் மாறிய தீபாவளி!


அதிகாலை விடியலில்
ஐந்தாறுநிறப் பொடிகளுடன்
அகல்விளக்குக் கோலமிட
ஆசைவந்தது அவளுக்கு...

பதினெட்டில் மணமுடித்து
பத்தொன்பதில் நிறமிழந்து,
பத்து வருடங்களாய்ப்
பாரம் சுமந்தவள்,
கறுப்பு நெற்றிப்பொட்டோடு
கலர்க்கோலம் இடப்போனாள்...

முதல்வருஷத் தீபாவளியுடன்
முடிந்துபோன நினைவுகள்,
முறுக்கிப் பிழிவதுபோல்
மனதை அழுத்திநிற்க,

பெருக்கி நீர்தெளித்துப்
பெருமூச்சை இறைத்தவளை,
அங்கே
எட்டிப்பார்த்துச் சிரித்தது
எதிர்வீட்டுக் குழந்தையொன்று...

கற்பனையில் தொட்டில்கட்டிக்
கனவுகளில் பெற்றெடுத்த
சுட்டிக்குழந்தையின்
நினைவுவந்து மனம்வருத்த,

கைக்குவந்த கோலத்தைப்
காலடியில் போட்டுவிட்டுக்
கண்கள் கலங்கிவிட
உள்ளே திரும்பினாள்...

வெளியே,
எட்டு எட்டாய் அடிவைத்து
வாசலுடன் முடிந்திருந்தது,
குட்டிக்கண்ணனின் பாதச்சுவடுகள்!

கருத்துகள்

  1. கவிதை அருமை. நிறங்களால் நிறையட்டும் விரைவில் அவளது தீபாவளி.

    பதிலளிநீக்கு
  2. ஹ்ம்ம்....கற்பனையிலும் வீட்டிற்குள் வராத கண்ணன், கஷ்டமாய்தான் இருக்கிறது...:(

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதை... வாழ்த்துக்கள்... ஹேப்பி தீபாவளி...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!