Monday, November 22, 2010

எரிதழல் கேட்கும் எதிர்காலம்!


எனக்கு, எல்ல்ல்லாம் தெரியும்,
எடுத்துச் சொன்னால் பிடிக்காது,
முன்னாள் கதையெல்லாம்
இந்நாளில் எனக்கெதற்கு?

முன்னா லிருக்கிறது
என்
விரிந்த உலகமென்று,
கண்ணாடித் திரைக்குமுன்னால்
கவிழ்ந்துகிடக்கிற தளிர்கள்...

இது,
சுட்டும் விழிச்சுடர்களின்
சுதந்திரம் கைப்பற்றிக்
கணினியும் தொலைக்காட்சியும்
ஆட்சிநடத்துகிற காலம்...

எட்டுக்கேள்வி யெழுப்பியபின்
தட்டுத் தடுமாறிவரும்
ஒற்றைப் பதிலும்கூட
சுற்றிச்சுற்றி வருகிறது
கற்பனை உருவங்களோடு...

கனவுகாணச்சொன்ன கலாம் ஐயா,
இவர்களின்
உறக்கத்திற்கு உதவவும்
வழியொன்றைச் சொல்லுங்கள்...

ஏனெனில்,
இரவுகளைக்கூட ஆக்கிரமித்திருக்கிறது
இளைய தலைமுறையின்
இன்டர்நெட் மோகம்...

எழும்காலையில் தேடிப்படித்தும்
விழும்மாலையில் கூடிக்களித்தும்
விளையாடி மகிழவேண்டிய வயதில்,
அலைபேசியும் கையுமாய்
அடைந்துகிடக்கிறது வீட்டில்...

நிஜம்தொலைத்துத் தளிர்களை
நிழலோடு பழக்கிவிடும்,
மாய உலகத்தின்
மயக்கத்திலிருந்து விடுபட,
வீட்டுக்கு வெளியே
சிறகுவிரிக்கக் கற்றுக்கொடுங்கள்...

புத்தகத்துப் படிப்பும்
கற்றுத்தரக் கணினியுமென்று
கோடுபோட்ட வாழ்க்கையாய்க்
கொஞ்சநேரம் கழிந்தாலும்,
மிச்சமாகும் நேரங்களில்
சிகரம்தொடப் பயிற்றுங்கள்...

காலத்தின் கோலத்தில்
கருநிழல் சூழுகையில்,
எரிதழல் கொண்டுவாவென்று
எதிர்காலம் அழைக்கக்கூடும்...

அதற்கு,
அக்கினிக் குஞ்சுகள்
நிச்சயம் அவசியம்!

இது பாரத்...பாரதியின் ரோஜாப்பூந்தோட்டம் என்னும் வலைப்பக்கத்தில், அதிரடிக் கவிதைப்போட்டிக்காக நான் எழுதி, அங்கே ஏற்கெனவே பகிர்ந்த கவிதை.

11 மறுமொழிகள்:

ராமலக்ஷ்மி said...

//நிஜம்தொலைத்துத் தளிர்களை
நிழலோடு பழக்கிவிடும்,
மாய உலகத்தின்
மயக்கத்திலிருந்து விடுபட,
வீட்டுக்கு வெளியே
சிறகுவிரிக்கக் கற்றுக்கொடுங்கள்...//

அருமை சுந்தரா. அவசியமான வரிகள். நல்ல கவிதை. வாழ்த்துக்கள். அக்னிக் குஞ்சினை ஏந்தி நிற்கும் கரம் பொருத்தமான படம்.

Kousalya said...

இன்றைய யதார்த்தம் பற்றி சொல்லி இருக்கீங்க.... கவிதையாக வடித்த விதம் அருமை....மிச்சத்தை அந்த படம் சொல்லி விட்டது....!!

பாரத்... பாரதி... said...

எரிதழல் கேட்கும் எதிர்காலம்!

அருமையான தலைப்பு..

குழந்தைகளுக்கு தங்களின் முதல் ஐந்து வருட கால கட்டங்களில் பெற்றோர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பார்கள். அவர்களை விட உலகில் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று எண்ணமிடுவார்கள்.
பின்னர் ஆசிரியர்களே எல்லாம் தெரிந்தவர்கள் என்று சிந்திப்பார்கள். அதன் பின் குமாரப்பருவத்தில் தனக்கே எல்லாம் தெரியும் என எண்ண நினைப்பாரகள்.

ஆனால் தொலைக்காட்சியும், கணிணியும் வந்துவிட்ட பின் , மிக குறைந்த வயதிலேயே எனக்கு மட்டும் எல்லாம் தெரியும் எண்ணம் வந்துவிடுகிறது என்பதை கவிதையின் ஆரம்ப வரிகள் காட்டுகின்றன.

குழந்தைப் பருவத்தின் சந்தோஷங்களை தொலைந்து போய் விடக்கூடாது என்பதே கவிதையின் நோக்கம், விருப்பம், ஆசை ...

சுந்தரா said...

//ராமலக்ஷ்மி said...

//நிஜம்தொலைத்துத் தளிர்களை
நிழலோடு பழக்கிவிடும்,
மாய உலகத்தின்
மயக்கத்திலிருந்து விடுபட,
வீட்டுக்கு வெளியே
சிறகுவிரிக்கக் கற்றுக்கொடுங்கள்...//

அருமை சுந்தரா. அவசியமான வரிகள். நல்ல கவிதை. வாழ்த்துக்கள். அக்னிக் குஞ்சினை ஏந்தி நிற்கும் கரம் பொருத்தமான படம்.//

வாங்க அக்கா, நன்றிகள்!

சுந்தரா said...

//Kousalya said...

இன்றைய யதார்த்தம் பற்றி சொல்லி இருக்கீங்க.... கவிதையாக வடித்த விதம் அருமை....மிச்சத்தை அந்த படம் சொல்லி விட்டது....!!//

வாங்க கௌசல்யா...நன்றி!

சுந்தரா said...

//பாரத்... பாரதி... said...

எரிதழல் கேட்கும் எதிர்காலம்!

அருமையான தலைப்பு..//

நன்றிகள் பாரத்...பாரதி :)

Chitra said...

படமும், கருத்து செறிவுள்ள கவிதையும் அருமை!

சுந்தரா said...

நன்றி சித்ரா.

அரசன் said...

உண்மையான இன்றைய நிலையை அழகுபட சொல்லி இருக்கிர்கள்..
நன்றி

சுந்தரா said...

நன்றிகள் அரசன்...வருகைக்கும் கருத்துக்கும்!

valarmathi said...

today is my day!

i enjoyed yr poems sundara.

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails