உறுத்தலில் உருவாகி...


மனசுமுதிராத முன்னிருபதுகளில்
ஒரு
மாபெரும் உறுத்தலுக்கு,
மாலையிட்டவள் அவள்...

காலையில் கட்டிய
கனவுக்கோட்டை யெல்லாம்
மாலையில் சிதையவைக்கும்
மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு,
ஆலையில் அகப்பட்ட
கரும்பாகக் கசங்கியவள்...

நின்றால் ஒருகுற்றம்
நிலைமாற முன்னேறி
நடந்தாலும் குற்றமென்று,
கண்ணால் சுட்டெரித்த
கனலுக்குக் கட்டுப்பட்டுப்
பெண்ணாக மண்டியிட்ட
பேதைப் பிறவியவள்...

எண்ணிக்கைக் கடங்காத
இருட்டுக் கதைகளை,
எண்ணியெண்ணி அழுதிருந்தால்
இருண்டிடும் வாழ்க்கையென்று,
எல்லாவற்றையும்,
மண்ணாகிப்போன தன்
மனசுக்குள் புதைத்தவள்...

எண்ணைந்து வயசுகளின்
இறுதிப் பிராயத்தில்,
பெண்ணென்றால் இவளென்று
அவள்
பொறுமையைச் சிரசிலேற்றித்
தன்னோடு சேர்த்துக்கொள்ளத்
தேடிவந்தன உறவுகள்...

உறுத்தி உறுத்தியே
ஓய்ந்துபோன உறவுக்கும்கூட,
மருத்துவம் சொல்லி
மனதை மாற்றுமளவுக்குப்
பக்குவப்பட்டுப் போனது
அவளது
அப்பழுக்கில்லாத மனசு...

எப்படிப் பார்த்தாலும்
இவளுடைய பெருமைக்கு
மொத்தக் காரணம்
எப்பவும் நான்தானென்று
கண்ணீரைமீறி ஓர்நாள்
உண்மை கரைபுரள,
அங்கே,
புடமிட்ட பொன்னில்கோர்த்த
வடமாக ஜொலித்தது முத்து!

கருத்துகள்

  1. //உறுத்தலில் உருவாகி..//
    என்ன அருமையான ஒரு தலைப்பு சகோ..
    பெண் முத்து :)

    பதிலளிநீக்கு
  2. \\உறுத்தி உறுத்தியே
    ஓய்ந்துபோன உறவுக்கும்கூட,
    மருத்துவம் சொல்லி
    மனதை மாற்றுமளவுக்குப்
    பக்குவப்பட்டுப் போனது\\
    பக்குவமோ அல்லது விரக்தியோ...
    நிறைய பேரின் வாழ்க்கை அடக்கமான நல்முத்தாய்
    மற்றவர் ஒளிர்கிறது. நிஜம்... முத்தா அல்லது சிப்பியா என்பது அவள் மட்டுமே அறிவாள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை நல்லா இருக்குங்க..

    பதிலளிநீக்கு
  4. எப்படிப் பார்த்தாலும்
    இவளுடைய பெருமைக்கு
    மொத்தக் காரணம்
    எப்பவும் நான்தானென்று
    கண்ணீரைமீறி ஓர்நாள்
    உண்மை கரைபுரள,
    அங்கே,
    புடமிட்ட பொன்னில்கோர்த்த
    வடமாக ஜொலித்தது முத்து!


    ...... விலைமதிப்பில்லா கவிதை முத்து!

    பதிலளிநீக்கு
  5. //Balaji saravana said...

    //உறுத்தலில் உருவாகி..//
    என்ன அருமையான ஒரு தலைப்பு சகோ..
    பெண் முத்து :)//

    வாங்க சரவணன், நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //அம்பிகா said...

    \\உறுத்தி உறுத்தியே
    ஓய்ந்துபோன உறவுக்கும்கூட,
    மருத்துவம் சொல்லி
    மனதை மாற்றுமளவுக்குப்
    பக்குவப்பட்டுப் போனது\\
    பக்குவமோ அல்லது விரக்தியோ...
    நிறைய பேரின் வாழ்க்கை அடக்கமான நல்முத்தாய்
    மற்றவர் ஒளிர்கிறது. நிஜம்... முத்தா அல்லது சிப்பியா என்பது அவள் மட்டுமே அறிவாள்.//

    நிஜம்தான் அம்பிகா...ஆனா, இன்னமும் நிறையப் பெண்கள் இப்படி இருக்கத்தான்செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. //அரசன் said...

    அருமை நல்லா இருக்குங்க..//

    வாங்க அரசன், நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //Chitra said...

    எப்படிப் பார்த்தாலும்
    இவளுடைய பெருமைக்கு
    மொத்தக் காரணம்
    எப்பவும் நான்தானென்று
    கண்ணீரைமீறி ஓர்நாள்
    உண்மை கரைபுரள,
    அங்கே,
    புடமிட்ட பொன்னில்கோர்த்த
    வடமாக ஜொலித்தது முத்து!


    ...... விலைமதிப்பில்லா கவிதை முத்து!//

    நன்றி சித்ரா :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!