இடுகைகள்

ஜனவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடுகல்லும் நாளை கதைசொல்லும்!

அங்கே, மனித வாசனையைக் காட்டிலும் இயற்கையின் வாசனை கொஞ்சம் தூக்கலாய்த்தான் தெரியும்... காற்றுவாங்க வந்துவிட்டுக் கவிதைபாடிச் செல்லுகிற குயில்களின் நடமாட்டம் கூடுதலாய் இருக்கும்... வேலைக்கு வருகின்ற காலைக் கதிர்கூட அங்கே உத்தரவு கேட்டுத்தான் உள்ளே தலைகாட்டும்... வாலைப் பெண்களெல்லாம் வரப்புகளில் விளையாடி, சோலைப் குளிர்நீரில் மஞ்சள்பூசிக் குளித்துவிட்டு, பானை குடமெல்லாம் பளபளக்கச் சுத்தம்செய்து கோகுலத்துப் பெண்களைப்போல் நீர்சுமந்து நடந்துசெல்வர்... அருகில், வெள்ளாமைக் காட்டுக்கு விரைந்தோடும் வாய்க்கால்கள் செல்லமாய்க் கதைபேசித் துள்ளலாய்க் கடந்துபோகும்... கிள்ளைகள் உதிர்த்துவிடும் பூக்கள் அதில் விழுந்து, வயல்காட்டுப் பயிருக்கு வாசனையைக் கொண்டுசெல்லும்... ஆனால், நாளைமுதல் இவையெல்லாம் நடக்காது என்றுசொல்லி, ஆலை கட்டப்போவதாக ஆங்காங்கே அறிவிப்பு... இனி, சோலை மரங்களெல்லாம் அறுபட்டு விறகாகும், பாடும் குயில்களெல்லாம் கூடுவிட்டுப் பறந்துபோகும்... காற்றுக்கூட இனி இங்கே கற்பிழந்துதான் போகும் ஆற்றில்ஓடும் நீர்கூட அமிலமாக நிலைமாறும்... ஆட்சிசெய்யும்

சுமைதாங்கிக் கல்லாக...

படம்
அபரிமிதமான ஆசையென்றாலும் அழகாய்த்தான் அமைந்திருந்தது வீடு... விருந்தும் வைபவமும் விமரிசையாய் முடிவடைய வீட்டைச் சுற்றிச் சுற்றிவந்து சந்தோஷப்பட்டார்கள் பிள்ளைகள்... கட்டி முடித்த வீடு, கட்டவேண்டிய கடன்களென்று நெற்றியைச் சுருக்கிக்கொண்டு கணக்கிட்டுக்கொண்டிருந்தார் தந்தை... கட்டிலில் படுத்தாலும் தூக்கம் பிடிக்காமல், மொட்டை மாடியில் நடந்தவரைப் பார்த்துவிட்டு, திருஷ்டியா யிருக்குமோ என்று நினைத்தபடி வட்டப் பூசணியை வாங்கிக் கட்டினாள் மனைவி... பட்ட கண்ணெல்லாம் போயிடும் என்றுசொல்லிக் கிட்டவந்த மனைவியிடம் வட்டிக்கணக்குப் பார்த்தபடி வள்ளென்று விழுந்தார் அவர்... எட்டிப்போய் நின்றவள் எரிச்சலுடன் சொன்னாள், நாற்பதுக்குமேலே நாய்க்குணம் என்று நன்றாய்த்தான் அன்றைக்கே சொல்லிவைத் தார்களென்று... சொல்ல விரும்பாத சுமைகளைச் சுமந்தபடி, மெல்லத் திரும்பியவர் மௌனமாய்த் தலையசைத்தார்...

மதிய விடுப்பு!

பத்து நிமிஷம் தாமதமாய் ஆனதுக்கு இத்தனை சத்தம்போட்டிருக்கக்கூடாது... பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுப்பவள் அவள், என்ன சாப்பிட்டாளென்று கண்டுகொண்டதில்லை... படுக்கிறவரைக்கும் ஓடியாடி உழைக்கிறவள் உறங்கினாளா என்று ஒருநாளும் யோசித்ததில்லை... திறக்க மறுத்த சாப்பாட்டுப் பாத்திரத்தைத் வலிந்து திறக்கையில் உள்ளே நிறைந்திருந்தது அவள் கைமணம்... அவள் ஒருவேளை, அழுதுகொண்டிருப்பாளோ? திறந்த பாத்திரத்தை திரும்ப மூடச்சொன்னது மனசு... முதலாளி திட்டினாலும் பரவாயில்லை, இன்று, மதியச்சாப்பாடு மனைவி கூடத்தான்!

அப்பா...அம்மா...கவிதை!

"புள்ள வந்தானா?" "ஆமா..." "புது வண்டியப் பாத்தானா?" "ஆமா, ஆமா..." "என்ன சொன்னான்?..." எதுவும் சொல்லாமல் ஏறிட்டுச் சிரித்தாள்... "சொல்லித் தொலையேன்" "இன்னும் நல்லதாக் கிடைக்கலையான்னு சொன்னான்" உரக்கச் சிரித்துவிட்டு ஓய்ந்தவர் சொன்னார், "உன்னை முதல்முதலில் பாத்தப்ப என்னநான்  சொன்னேனோ, அப்படியே தான் அவனும் சொல்லியிருக்கான்..." அங்கே, கோபத்தைக் காண்பிக்க முயற்சித்துத் தோற்றவளாய், குலுங்கிச் சிரித்தாள் அம்மா.

பலசரக்குப் பட்டியல்!

ரெண்டு கிலோ அரிசி ரெண்டேரெண்டு தேங்காய் அரைக் கிலோ வெல்லம் அதே அளவு பருப்பு அம்பது கிராம் நெய்யி அதில பாதி முந்திரி ரெண்டு ரூபாய்க்கு ஏலம் ரெண்டோ மூணோ பழம் மனைவி சொல்லச்சொல்ல மகள் எழுதிக்கொடுத்தாள்... எழுதி நீட்டிய காகிதத்தில் பிள்ளையார் சுழி தவிர எல்லா இடத்திலும் நிழலாகத்தெரிந்தது, பாக்கி கேட்டு நச்சரிக்கும் பலசரக்குக் கடைக்காரரின் முகம்.

தூக்கம் கெடுத்த கவிதை!

ஊருக்குச் சென்றுவந்தான் உறவுகளை உதவிகேட்டான் வாரக்கணக்காய் வரமறுத்த அதை நினைத்து நேரங்காலமின்றி யோசித்துத் தீர்ந்துபோனான்... போகிறபோக்கில் எல்லாரும் செய்வதுபோல் தானும் செய்துவிடத் தலைகீழாய் நின்றுபார்த்தான்... விரட்டி விரட்டிப்போனதில் வீணாய்ப்போனது தூக்கம் கிடைக்காது நமக்கென்று கிழித்துப்போட்டது ஏக்கம்... உறக்கம் பிடிக்காத இரவுகளின் தனிமையில் சலிப்பின்றி அடுக்கிவைத்த வார்த்தைகளில் தொலைந்துபோனான்... கடைசியாய், கோர்த்துப்பார்த்த வார்த்தைகளை கோபத்தில் கலைத்துப்போட்டான்... அட,காகிதத்தில் கிடந்தது கவிதை!!!