பொழுது விடியுமுன்னே
நடந்தது பாக்கியத்தின் கல்யாணம்...
அழகாயிருந்த ஒரு
அம்மியை மிதிக்கச்சொல்லி,
அருந்ததியைக் காட்டுகையில்
இருட்டுத்தான் தெரிந்தது...
மெட்டிபோட்ட நிமிஷத்தில்,
அங்கே குட்டிப் பூகம்பம்...
காலில்,
தங்கக்கொலுசு இல்லையென்று
நாத்தனார் குரலெழுப்ப,
கண்ணில் நீர் சுமந்தவளின்
கையைப் பிடித்துக்கொண்டு,
கல்யாண மேடையைக்
கரகரவென்று சுற்றிவந்தது
ஒரு கூட்டம்...
எட்டிநின்றவர்கள் வீசிய பூக்கள்
கிட்டத்திலிருந்தவர்களின்
கோபப் பார்வைபட்டுச்
சுட்டதுபோலிருந்தது அவளுக்கு...
மணமகன் அறைக்குள் வந்ததும்
மாமியார் சொன்னார்,
பாக்கி நகைபோடாம
பால்பழம்கூடக் கிடையாது என்று...
பதைத்துத் திரும்பினாள் பாக்கியம்...
பக்கத்தில்,
பிடித்துவைத்த பிள்ளையாராய்ப்
பேசாமலிருந்தான்,
பத்துநிமிஷம் முன்னால்
அவள்
பாதம் பிடித்த மாப்பிள்ளை!