
குற்றாலம் கொடைக்கானல்
குமரகம் குலுமணாலி
எப்போ பார்த்தாலும்
இதே இடங்கள்தானா?
எந்தஊரும் பிடிக்கல
என்றுசொல்லிக் கதவடைத்து,
உறக்கமின்றிப் புரண்டது
'இருக்கிற' வீட்டுப்பிள்ளை...
வானத்துக்கூரை
வருடுகிற மென்காற்று
ஓலமிடும் ஆந்தைச்சத்தம்,
ஊடே ஒரு மழைத்துளி
தூரத்து இடிமுழக்கம்
ஊளையிடும் நாயின்சத்தம்
இவற்றோடு,
அம்மாவின் அரவணைப்பும்
அப்பாவின் அருகாமையும்சேர,
கனவில்,
காகிதக் கப்பலோட்டிக்
கண்டமெல்லாம் சுற்றிவந்தது
சாலையோரத் தொழிலாளியின்
சட்டையில்லாத பிள்ளை.







