
அவள் மூணாவது,
அவன் நாலாவது...
அகல அகலமாய்ப்
புகைப்படம்போட்டு
அறிவிப்புச் செய்திருந்தார்கள்...
ஒண்ணாவதுக்கே
ஒருவழியும் இல்லாமல்
பெண்ணாய்ப் பிறந்ததற்காய்ப்
பெருமாளை நொந்தபடி,
கண்ணில்பட்ட செய்தியைக்
கசக்கியெறிந்தாள் அவள்...
அதைப்
பின்னாலிருந்து பார்த்துப்
பெருமூச்சுவிட்டார்,
பிரம்மச்சாரிப்
பெருவயிற்றுப் பிள்ளையார்!