இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீபாவளி வேட்டு!

கோட்டுப்போட்ட கிறுக்கனொருத்தன் கத்தியோட அலையிறானாம், வீட்டைவிட்டுப் பிள்ளைகளை வெளிய அனுப்பாதே... போனஸ் பணம்கேட்டு போராட்டத்துக்குக் கிளம்பியவன், ஜாடையாய்க் கூப்பிட்டு, சத்தமாய்ச்சொன்னான் மனைவியிடம்... கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் கிலியோடு முகம்பார்க்க, கதவைப் பூட்டியவள் மெல்லமாய் மனசுக்குள் முணுமுணுத்தாள்... வீட்டுச் சுவற்றுக்குள் அடைஞ்சு கிடந்தாலும், வேட்டும் விமரிசையும் காதில் விழாமலா இருக்குமென்று...

ஒற்றை மரம்!

படம்
                        விழுதிருந்தா ஆலமரம், கன்றிருந்தா வாழைமரம், பாளையிருந்தா பனைமரம், தோகையிருந்தா தென்னைமரம்... இது எதுவுமே இல்லாம இருந்தா...? பக்கத்திலிருந்த ஆயாவிடம், பாடத்தில் சந்தேகம் கேட்டது குழந்தை... "வாழ்ந்துகெட்ட தனிமரம்" விரக்தியாய்ச் சொல்லிவிட்டு, விழிகளைத் துடைத்துக்கொண்டது, வீடுகூட்டி வயிற்றைக் கழுவுகிற அறுபது வயசு ஆயா... ********

ஃபைவ் ஸ்டார்!!!

படம்
"அப்பா, மிச்சம் காசிருந்தா மூணு ஃபைவ் ஸ்டார்..." கத்திச்சொல்லிவிட்டுக் கதவுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டது கடைக்குட்டி... சட்டைப்பை காலியாயிருக்க, கடனுக்கு அரிசிவாங்கக் கடைக்குப் புறப்பட்டவன், "அம்மாவும் நானும் ரெண்டு ஸ்டார், அம்முவும் அண்ணன்களும் மூணு ஸ்டார்... அஞ்சு ஸ்டார் வீட்டிலே இருக்க, அப்புறம் எதுக்கு இன்னும் கொஞ்சம் ஃபைவ் ஸ்டார்?" என்று, இடக்காய்க் கேட்டுவிட்டுத் திரும்பாமல் நடந்தான்... சுருங்கிய பிஞ்சின் முகத்தைப் பார்க்காமலும், அரும்பிய கண்ணீரை அடுத்தவர்க்குக் காட்டாமலும்...

பாரபட்சம்

படம்
அன்று, அழைத்த திரௌபதிக்கு ஆடைகொடுத்துக் காத்தவன், இன்று, அழைப்பதறியாமல் அனாதையாய்த் திரியும், அந்த ஊமைக் கோமளத்துக்கும் கொஞ்சம் உவந்து கொடுத்திருக்கலாம்... அங்காடித் தெருக்களில் ஆள்துளைக்கும் பார்வைகளில், அன்றாடம், தொட்டும் தொடாமலும் கெட்டுப்போகிறாள் அவள்...

ஈசலுக்கும் இரங்கும்!

படம்
உதிர்த்துப் போட்ட சிறகுகளுக்கு மத்தியில் உருண்டு கொண்டிருந்தது ஈசல்... வீடெல்லாம் குப்பையாக்கிட்டு விழுந்துகிடக்குது பார்... என்று, விளக்குமாறை எடுத்துவந்து வீடுகூட்டப்போனாள்  அம்மா... அதுவே, அம்மாகிட்ட போகமுடியலேன்னு அழுதுகிட்டிருக்கு, நீ  சும்மாயிரு அம்மா... கன்னத்தில் கைவைத்துக் கவலையுடன் சொன்னது குழந்தை...

ஒரு அமீரகத்துத் தமிழனின் அழுகுரல்!

இது என்னுடைய கவிதை அல்ல...அமீரகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரர் எழுதியதாக, நான் மின்னஞ்சலில் படித்த கவிதை. இதில்வரும் அபஷி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தெரிஞ்சவங்க சொன்னால் தெரிஞ்சுக்கலாம். இதோ, கவிதை... நாம் யார்? வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள்! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள்! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள்! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள்! நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள்! பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள்! ஏ . சி . காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள்

காசா பணமா, காலரத் தூக்கிவிடு!

மதியத்துக்கு என்ன? மசால் டீயும் பன்னும்... மாசச் சம்பளம்? வந்ததெல்லாம் வருமானம்... சாலையோரக் குடிமக்கள்? சர்த்தான்,வாடகை இல்ல... காஷ்மீர் பிரச்சனை? குளுரு கொஞ்சம் ஜாஸ்திதான்... அயோத்தி விவகாரம்? அட,ஆள விடுங்கப்பா... மாவோயிஸ்ட் பிரச்சனை? மருந்துக்கடைப் படிப்புதான... எந்திரன் பற்றி ஏதாவது...? அபிசேக்பச்சன் பொண்டாட்டி அழகாத்தான் இருக்குது... அம்பானியைப் பத்தி...? நாலாவது பணக்காரன் நம்மூரு மொபைல்காரன், காசா பணமா, காலரத் தூக்கிவிடு!

அக்கரைப்பூக்களின் இக்கரை ஆசை!

காட்டுப்பூக்க ளெல்லாம் ஒருநாள் கடவுளிடம்போய் முறையிட்டன... ஊருக்குள் பூக்கிற ஒவ்வொரு பூவுக்கும் பேரும் பெருமையும் நிறையவே இருக்கிறது... ஆனால், காட்டுக்குள் பூத்துச் சிரிக்கின்ற எங்களை கவனிக்கக்கூட யாருமே இல்லையென்று... கேட்டுக்கொண்டிருந்த கடவுள் வாய்விட்டுச் சிரித்துவிட்டுக் கூட்டிப்போய் காட்டினார் நாட்டுப்பூக்களின் நிலைமையை... கொட்டிக் கவிழ்த்துவைத்து கற்றைநூலில் இறுகக்கட்டி, சுற்றிப் பந்தாக்கிக் கூடையிலே போட்டுவைத்து, அப்பப்போ மலர்களின் மயக்கம் தெளிவிக்க, பச்சைத் தண்ணீரை அள்ளித் தெளித்துவிட, அச்சச்சோ என்னை விட்டுவிடேன் என்று அழக்கூட முடியாமல் விதிர்த்திருக்கும் பூக்களையும், மல்லிகை மரிக்கொழுந்து, சம்பங்கி ரோஜாவென்று கண்ணுக்கு அழகாகக் கலந்தெடுத்து மாலைகட்டி, கண்ணாடிக் காகிதத்தில் சுற்றிவைத்துத் தொங்கவிட, கழுத்திறுகிக் காத்திருக்கும் கதம்ப மலர்களையும், தலைச்சிடுக்கில் சிக்கி தன்னுடல் காயமாகப், படுக்கையிலே பாவமாக நசுங்கிய பூக்களையும், பார்த்துப் பயந்துபோய் கானகமே சொர்க்கமென்ற காட்டுப் பூக்களிடம் கடைசியாகச் சொன்னார் கடவுள்... நாட்டிலின்று, நோட்டுமாலை கட்டிப்போட்டு நாலுபேர் பழக்கிவிட,

பொய்ப் பிரிவு

படம்
அனுமதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமாய்ப் பொய்சொன்னாய் நீயென்று, பிரித்துவைத்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பெரியவர்கள்... இங்கே, நீயற்ற நெடுவெளியில் நோயுற்ற நினைவுகளுடன் ஒற்றையாய் நடக்கிறேன்... ஆனால், சொல்லிழந்துகிடக்கும் சோக நிமிஷங்களிலும், என்னைக் கொஞ்சமேனும் புன்னகைக்கவைப்பது, அன்றைக்கு நீ சொன்ன சில அழகான பொய்கள் என்று எப்படிச் சொல்லி இவர்களுக்குப் புரியவைப்பேன்?