இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈரம்

படம்
ஈரவாசனை படர்ந்திருந்தது அந்தக் கூரைக் குடிசையின் எல்லாப் பக்கமும்... கோரைப்பாயும் ஈரக்கோணியும் அதனதன் பங்குக்கு வாசனை பரப்ப, அரிசிப் பானைக்குள் அடிவரைக்கும் துழாவி, உரசிக் கிடைத்த ஒன்றிரண்டு மணிகளை, வாசல் குருவியின் வயிற்றுக்குக் கொடுத்துவிட்டு, ஈரச் சட்டையுடன் சோகைப்பிள்ளை சிரிக்க, உள்ளே, மூத்திர   ஈரத்தில் அழுதது, சேலைத் தொட்டிலில் சின்னப் பிள்ளை... மாசம் முடியுமுன்னால் முன்பணம் கேக்குதா? நாசமாய்ப் போச்சுதென்று ஓசைஉயர்த்திய எஜமானியிடம், ஈரத்தால் வெளுத்த இருகையும் பிசைந்தபடி, வாரேம்மா என்றபடி, வெளியிறங்கி நடந்தவளின் வீட்டுக்குள் அன்றைக்குக் காய்ந்து கிடந்தது, ஓரத்து விறகடுப்பும், ஒன்றிரண்டு வயிறுகளும்... ********** படம் : இணையத்திலிருந்து

விக்கியதில் கசிந்த விவகாரங்கள்!

படம்
                                                இப்போதெல்லாம், அக்கம்பக்கத்தில் பேசக்கூட அச்சப்படுகிறார்களாம் சிலர்... ஏனென்றால், ''விக்கி'யதில் வெளியான விவகாரங்கள் அப்படி... கட்டிப்பிடித்துக் கொண்டே கழுத்தறுத்த யுக்திகள், கைகுலுக்கிக் கூட்டிச்சென்று கழுவேற்றிய புத்திகள்... அத்தனையும் வெளியில்வர அதிர்ந்துபோயிருக்கின்றன, அரசியல் அரங்கத்தின் அசகாய சக்திகள்! அண்ணனுக்கும் ஆப்பு அவனுக்குக் குடைபிடித்த அடுத்தவனுக்கும் ஆப்பு... இங்கே, கண்ணின் விழிபிதுங்கக் கலங்கிப்போய்நிற்கிறது கயமை... அரசியலின் போர்வையில் அக்கிரமம் செய்தவர்களின் ரகசியங்களெல்லாம் விக்கியதில் வெளியேற, விக்கியவனின் வாயைத் தைக்கும்  முயற்சியில் மும்முரமாய் இறங்கியிருக்கின்றன, ஆத்திரம் தலைக்கேறிய சில ஆதிக்க முதலைகள்!

முடியாத துயரம்

படம்
இவை, எல்லாம் கடந்துபோகும், இயல்பாயிரு  என்றார்கள்... இருந்து பார்த்தாள், இயலவில்லை... ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டைப் பாடியும் படியவைக்கலா மென்றார்கள்... முயன்று பார்த்தாள், முடியவில்லை... வேதனையாயிருந்தால் கொஞ்சம்  விலகியிரு... விலக விலகத்தான் விருப்பம் வருமென்றார்கள்... விலகியும் பார்த்தாள், ஆனால், வெறுப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை... இறுதியில் விட்டு விலகி வெளியில் வந்தபின்தான் விபரம் புரிந்தது, அது வெந்த புண்ணில்  வேலைப் பாய்ச்சுகிற சொந்தம் மட்டுமல்ல, எட்டியிருந்தாலும் குத்திக்கிழிக்கிற எந்திரமும் தானென்று!!!