இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொல்லுக்குள் அடங்காத கவிதைகள்!

படம்
படம் : இணையத்திலிருந்து வெளிர்நீல வானத்தில் வெள்ளிறகு மேகங்கள், வெய்யில் பூக்களோடு விரிந்திருக்கும் தருநிழல், காற்றில் மிதந்துவந்து கன்னம்தொடும் மழைத்துளி, ஆற்றுநீர்ச் சுழிப்பில் அலைக்கழியும் சருகு, நீளமான மழைநாளில் நிமிஷநேரச் சூரியன், தூரிகையில் மாயம்செய்யும் துளியளவு தண்ணீர், மனம்நிறைந்த மகிழ்ச்சியில் முகிழ்த்துவரும் கண்ணீர், இருளணிந்த மலையினில் எங்கோ தெரியும் விளக்கு... கருநீல வானத்தில் கதிர்முளைக்கும் கிழக்கு, வழிநடந்த பாதத்தை வருடிவிடும் புல்மடி, மார்கழிப் பூக்களின்  மடிதுயிலும் மென்பனி, கூடித்திளைத்த பின் கொஞ்சநேரத் தனிமை, காதலின் மொழியோடு கலந்துவரும் ஒருமை, இவையனைத்தும் ரசித்தபின்னும் எழுதுவதைக் கவிதையென்பது எந்த ஊர் நியாயம்? ***

வேலையில்லாப் பட்டதாரியின் 'வீட்டுக்' குறிப்புகள்!

அப்பா வரவுக்கும் செலவுக்குமிடையில் வட்டிக்கணக்குப் பார்த்தபடி புட்டிக் கண்ணாடி வழியாகப் பிள்ளைகளின்  எதிர்காலத்தைத் தேடுபவர்... சட்டென்று கோவப்பட்டாலும் சம்சாரத்துக்கு முன்னால் பெட்டிப்பாம்பு... அம்மா அக்கறை காட்டுகிறேனென்று அவஸ்தைப்படுத்துபவள் அவ்வப்போது, அன்பில் கரைத்தும் அழவைப்பவள். தப்பென்று தெரிந்தாலும் தன்மையாய்ப் புரியவைப்பவள்  அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமிடையில் எப்போதும் தவிக்கும் இருதலைக்கொள்ளி எறும்பு... அக்கா petty cash படியளப்பதில் பெரிய மனசுக்காரி, சிலசமயம், தட்டிக்கேட்பதில் தாய். தம்பி போட்டுக்கொடுக்கவென்றே வீட்டிலிருக்கிற ராட்சசன்... மூத்தவனை முட்டாளாக்க இளையவனாய்ப் பிறந்துதொலைத்த எதிரி!  *****

பார்வையொன்றே போதும்!

படம்
நல்லபெண்கள் நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை அருகில் சென்று உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம் முகங்கனிந்து பார்த்தாலே பூக்குமாம் மாம்பூ பெண் மூச்சுக் காற்றாலே உயிர்த்திடும் உலகம்... நீ,  நேற்றுவரை நிராகரித்த காதல் பார்வைகளை என் தோட்டத்தில் பதியனிட்டேன்... அவையும் நாற்றுகளாகி நாலு இலை விட்டதோடு தோற்றுப்போய் நிற்கின்றன... அதற்காகவாவது பார்வையொன்றைப் பகிர்ந்திடு பெண்ணே, பாலையிலும் பூக்கள் பூக்கட்டும்! டிஸ்கி : உத்தமமான குணங்களையுடைய பெண்கள், பார்த்தால் தளிர்க்குமாம் மாமரம், நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை, அணைத்தால் தளிர்க்குமாம் மருதோன்றி, உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம், முத்தமிட்டால் தளிர்க்குமாம் மகிழமரம், இவைதவிர, நல்லதொரு பெண்ணின் நிழல்பட்டாலே தளிர்க்குமாம் சண்பகம். இது, சும்மா யாரும் பேச்சுக்கு சொன்னதில்லை. வில்லிப்புத்தூரார் தன் பாடலில் சொன்னது.

காட்சிப் பிழை!

படம்
புகைப்படம் : இணையத்திலிருந்து. கனத்த முகம் கருக்கு மீசை நெரித்த புருவமும் எரிக்கிற பார்வையுமாய்க் கைவைத்த நாற்காலியில் காசித் தாத்தா... நாற்காலிச் சரிவில் நளினமாய்க் கைவைத்து, நாணமும் அச்சமுமாய் நாகலச்சுமி ஆச்சி... புகைப்படத்தை உற்றுப்பார்க்கிற எல்லாரும் சட்டென்று சொல்லுவார்கள், காசித்தாத்தாவின் கண்களில் கடுங்கோபம் தெரிகிறதென்று... ஆனால், கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற ஆச்சியின் கண்களில் மின்னலாய் விரியும்... புகைப்படக்காரனுக்குப் புரியாத தினுசில், சின்ன ஸ்பரிசமும் கண்ணிறையக் கனிவுமாக இன்னும் கொஞ்சம் பக்கத்தில் நிற்கச்சொல்லி, அவர் பார்வையால் பேசியது!

சாக்குப்போக்கு!

இடியுடன் மழையடிக்க இரண்டுநாள் வரவில்லை மேகம் திரண்டுகொள்ள முந்தாநாளும் முடியவில்லை... நேற்றைக்கு வந்தபோது நேரமான காரணத்தால், காத்திருந்த களைப்பில் நீயும் கண்ணயர்ந்து உறங்கிவிட்டாய்...  இன்றைக்கும்கூட இரண்டொரு துளிவிழவே கண்டுவிட முடியுமோவென்று கவலையில் நான் தவித்துப்போனேன்... ஆனால், நொண்டிச் சாக்கெல்லாம் நடைமுறைக்கு உதவாதென்று கண்ணைக் கசக்கிக்கொண்டு கனத்தமுகம் காட்டுகிறாய்... என்ன நான் செய்வதடி? என்பிழைப்பு இப்படியென்று அப்பாவி முகத்துடன் அல்லியிடம் சாக்குச்சொன்னது, உப்பியும் இளைத்தும் ஊரைச்சுற்றும் சந்திரன்!

இந்தியனின் விதி!

அன்னாவின் உண்ணாவிரதம் அமெரிக்க சதி, ஊழலை எதிர்ப்பதெல்லாம் உள்நாட்டுச் சதி, இடையில்வரும் தடையெல்லாம் எதிரணியின் சதி என்று, ஆராய்ந்து சொல்கிறது ஆளும்கட்சியின் மதி, இதையெல்லாம், அனுபவித்தே தீரவேண்டியது அப்பாவி இந்தியனின் விதி! படம்: இணையத்திலிருந்து

சேலைச் சண்டை

என்றைக்கும்போல, அன்றைக்கு இரவிலும் ஆரம்பித்தது சேலைச் சண்டை... குளித்துத் தலைதுவட்ட வருத்தம்வந்தால் முகம்புதைக்க, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அருகாமையின் சுகத்தைக் கொடுத்தவை அந்தச் சேலைகள் மட்டுமே... பச்சைச்சேலை எனக்குத்தானென்று பற்றியிழுத்த இருவரின் கைகளையும் விலக்கிவிடும் நோக்கத்தில் வாசல்வரை வந்துவிட்டு, உலுக்கிய குரலுக்கு உள்ளே போனார் அப்பா... அங்கே, அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன இன்னுமொரு சேலையால்.

நான் 'மூத்த' பிள்ளை!

படம்
விறகுக் கட்டை விளக்குமாறு கரண்டிக் காம்பு கழற்றிப்போட்ட செருப்பு பள்ளிக்கூட பெல்ட்  பட்டை அடி ஸ்கேல் இவையெல்லாம், 'அடி'க்கடி பேசும் என்னிடம்... அப்பாவும் சித்தியும், அவசியமென்றால் மட்டும்... ****** படம் : இணையத்திலிருந்து

நானும், அப்பாபோல...

படம்
அப்பாபோல நானும் பெரியவனாகி... என்று அக்காவிடம் ஆரம்பித்தவன், அப்பாவைப் பார்த்ததும் வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்... அருகழைத்துக் கேட்டார் அப்பா... நீயும் அப்பா போல, வாத்தியார் ஆவியா? .... புல்லட் பைக் ஓட்டுவியா? ..... வேஷ்டி சட்டை போட்டுப்பியா? .... சொல்லுடா என் செல்லமகனே... 'அம்மாவை அடிச்சு அழ வைக்கமாட்டேன் ' என்றபடி, அழுதபடி நகர்ந்துபோனான் மகன். ***** **13/3/2011 அன்று" திண்ணையில் "வெளிவந்தது**

கடலோரத்து இருக்கை

படம்
உப்புக் கடல்நீரில் இரவெல்லாம் மிதந்துவிட்டு, பட்டுக்கரை மண்ணில் பகலினில் இளைப்பாறும் படகுகளின் தூக்கத்தைப் பதுங்குகிற ஜோடிகள் கெடுக்கும்... படுக்க வீடின்றிப் பாதையில் கிடந்துவிட்டு வெயிலிலே படுத்து விட்ட தூக்கத்தைத் தேடுகிற நடைபாதைப் பிச்சைக்காரனை நாய்குரைத்து எழுப்பும்... தூக்குச்சட்டியில் கடலையும் தோளை அழுத்தும் கவலையுமாய்க் கடந்துபோகிற கந்தசாமியின் ஒவ்வொரு பார்வையும் ஓய்வெடுக்க நினைக்கிற அவன் ஏக்கத்தைப் பகிரும்... பலூன்பொம்மை விற்கிற பாலுவின் விரல்கள் பற்றி யிருக்கிற இழைகளைக் காட்டிலும் சிக்கலான தாயிருக்கும் அவன் சொல்லாத துயரம்... எப்படி விலக்கினாலும் விலகாத  வறுமைதீர, வார்த்தை மூலதனத்தோடு வாழ்க்கை தேடுகிற செண்பகத்துக்குக் கைத்தொழிலாய்க் கிடைத்ததோ கைரேகை ஜோசியம்... வண்டியில் ஐஸ் இருக்கும் வயிற்றினில் பசியிருக்கும் விற்றபின் வீடுபோகக் கத்திக்கொண்டிருக்கிற கார்மேகம், பசிக்கு உணவுண்ணப் பகலழிந்து இரவாகும்... அத்தனை பேரின் துயரங்கள் அறிந்தாலும், ஆறுதல்சொல்ல ஆசைப்பட்டும் முடியாமல், அனாதையாய் நிற்கிற அந்த இருக்கையின் கவலை அதற்கு மட்டும். * 7/3/2011 அன்று, கீற்றில் வெளியிடப்பட்டது

உறவு வேலிகளும் உள்ளே சில பெண்களும்!

வந்த காலோடு வீட்டுக்குக் கிளம்புறியே, இருந்து ஒருவாய் சாப்பிட்டுப்போ அண்ணே... உரக்கச்சொல்ல நினைத்ததை உள்வாங்கிக்கொண்டு, முறைப்புக்கு அஞ்சி முனகலாய் வெளிவந்தது குரல்... மறுக்கத் தோன்றாமல் அவளை மறுபடியும் பார்த்தான் அண்ணன்... இருக்கிற போதெல்லாம் கொடுத்துப் பழக்கியவன், இல்லையென்று சொன்னபோது செல்லாக் காசாய்த் தெரிய, பிறந்தவீட்டு உறவெல்லாம் போதுமென்றானது... நெருக்கமான உறவில் நூறுபேர் இருந்தாலும், பொருத்தமானவன் இவனென்று பேசி முடித்தவனை, இன்றைக்கு உபசரிக்கக் கூடாதென்று உத்தரவும் போட்டது... மறைத்துக்கொண்ட முகத்தை மறந்தும் விலக்காமல், பத்திரிகைக்குள் புதைந்திருந்த பாசக்கார மாப்பிள்ளையிடம், பத்திரமாய்த் தங்கையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வைத்துவிட்டுப் போனான் அண்ணன் அழைப்பிதழ் ஒன்றை... உள்ளே, நல்வரவை விரும்புபவள் அவளாக இருந்தாள், அவள் உறவே அங்கு மறுக்கப்பட்ட பட்சத்தில்...

பெற்ற மனசு

படம்
கல்லூரி விடுதிக்குப்போன கடைக்குட்டியின் முகம் கண்ணிலேயே நிற்க, காசுதேற்றும் மும்முரத்தில் கீரை விற்றுக்கொண்டிருந்தாள் அவள்... இருக்கப்பட்டவர்கள் இறைச்சியையும் இல்லாதவர்கள் எலும்பையும் வாங்கிப்போக, ஞாயிற்றுக்கிழமையைச் சபித்தது அந்த ஏழைத்தாயின் மனசு... எண்ணிப்பார்த்த சில்லறை இளக்காரமாய்ச் சிரிக்கையில், கல்லூரிக்குப் போகிற கடைசி பஸ்ஸும் கடந்துபோய்விட, இடுப்புச் சேலையில் ஏக்கத்தையும் முடிந்தபடி, வாடிய கீரையோடு வீட்டுக்குப் புறப்பட்டாள்... ஆனால், அவளை விட்டுச் சாலையிலேயே நின்றது சங்கடத்துடன் மனசு. ***

ஒரு கவிஞனின் கதை

வார்த்தைகளுக்கிடையே சிக்கிய வாழ்க்கையின் துயரமும் எழுத்துகளுக்கிடையே சிக்கிய ஏழ்மையின் வலிகளும் வரிகளுக்கிடையே சிக்கிய பிரிந்துபோன உறவுகளும் அவனைக் கவிஞன் என்று ஊருக்கு அடையாளம்காட்ட, காலியாய்க் கிடந்த சமையலறைப் பாத்திரங்களையும் மூளியாய்க் கிடந்த முகத்தையும் கழுத்தையும் காட்டி, காசுக்குப்பெறாத மனுஷனென்று கணவனை அடையாளம்காட்டினாள் அவள்... வாழ்க்கையில் தொலைத்ததை வார்த்தைகளில் பிடித்த மகிழ்ச்சியில் அவன் வாழ்ந்துகொண்டிருக்க, வார்த்தைகளைக் கண்டெடுத்து அவனை  வருத்துவதே வாழ்க்கையென்றிருந்தாள் அவள்! ****

கலப்பதிகாரம்!

படம்
  படபடக்கிற மனசு பார்வையின் கோணங்கள் புதுசு சிறைப்படத் துடிக்கிற தவிப்பு சின்னச்சின்னதாய்ச் சிலிர்ப்பு... கண்கள் நிறையக் கனவு காலம் மறந்த நினைவு எழுதஎழுதக் கவிதை எல்லாப்பக்கமும் இனிமை... சும்மாயிருந்த மனசில் நீ தென்றலாய்த்தான் கலந்தாய், ஆனாலும், எழுந்ததென்னவோ ஏகப்பட்ட அதிர்வலைகள்... பார்க்கும் போதெல்லாம் பிரியத்தின் துளிகளை வீசிவிட்டுச் செல்கிறாய்... அவையெல்லாம் என் முற்றத்துத் தோட்டத்தின் முல்லைக்கொடியினில், மொட்டுக்களும் பூக்களுமாய் மலர்ந்து கிடக்கின்றன... அதைக் கோர்த்துக் கொடுத்திட வார்த்தைகளைத் தேடித்தேடி, செம்மொழியின் எல்லைகளைச் சுற்றிவந்து தோற்றபின்னர், வாய்திறந்து சொல்லிவிட்டால் வார்த்தைகள் சிதறுமோவென்று, காகிதத்தில் கோர்த்துக் கடிதமாய் அனுப்பிவைத்தேன்... அதைச் சத்தமிட்டு வாசித்தால் காற்றுக்கும் காதல்வந்து உன்னை முத்தமிடக்கூடுமடி... அதனால் பூக்களோடு அனுப்பியுள்ள பொத்திவைத்த காதலைப் பார்வையால்மட்டும் படி! விடையினையும், உன் விழிகளால்மட்டும் சொல்! ***

விசும்பல்!

தீக்குளித்த சீதை, மூக்கிழந்த சூர்ப்பனகை, அருந்ததி, கண்ணகி, அகலிகை,மாதவியென்று எல்லாப் பெண்களிடத்திலும் ஏதோ ஒரு விசும்பல்... சதவீதத்தைக் கூட்டினாலும், சக மனுஷியாய்ப் பார்க்க மறுக்கிற சமூகத்தில், முள்சுமக்கும் மல்லிகாவும் முன்னேறிய மஞ்சுளாவும் ஏதோ ஒரு புள்ளியில், பெண்ணாகப் பிறந்துவிட்ட தன் விதியை நொந்தபடி... ******

எதுவரை மதிப்பு?

இரவுக்கு மதிப்பு... விடியும் வரை. விடிந்து விட்டால்,,,வானில் தங்காது பிறை. கணவுக்கு மதிப்பு... களையும் வரை. களைந்து விட்டால்,,, வெளுத்திருப்பது வெள்ளை திரை. மழைக்கு மதிப்பு... மண்ணை சேறும் வரை. மண்ணை வந்தடைந்து விட்டால்,,,வெரும் சேற்று கறை. காதலுக்கு மதிப்பு... மணவரை வரை. மணவாழ்க்கையில் சேர்ந்து விட்டால்,,,தொட்டதெல்லாம் குறை. வயதுக்கு மதிப்பு... ஐம்பதை தொடும் வரை. காலம் கடந்து பொனால்,,,மிஞ்சியிருப்பது நரை. வாழ்க்கைக்கு மதிப்பு... வாழ்வை இரசிக்கும் வரை. வாழ்ந்து பார்க்கலாம்,,,ஒரே ஒரு முறை. உடலுக்கு மதிப்பு... உயிர் உள்ள வரை. உயிர் விட்டுச் சென்றால்,,,உடல் மண்னுக்கு இரை. தமிழனுக்கு மதிப்பு... தமிழ் உள்ள வரை. தாய் மொழி மறந்தவன்,,,எச்சில் கறை.                                                                 ************  இது, சுவரன் என்னும் பெயருடைய இலங்கைத் தமிழ்க்கவிஞரொருவர் எழுதியதாக, மின்னஞ்சலில் நான் படித்த, ரசித்த கவிதை. எந்த மாற்றமுமில்லாமல் அந்தக்கவிதை உங்களின் பார்வைக்காகவும்... அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள் சுவரன்!

காய்த்திருக்கும் கனிமரம்!

படம்
கல்லடி,சொல்லடி கனலுகிற பகையடியென்று எல்லாத் திசையிருந்தும் அடிக்கத் துடித்தாலும், துணிந்து மட்டுமல்ல தலைநிமிர்ந்தும் நிற்கிற  திறமைசாலி நீ... மொழியென்றும் மதமென்றும் மோதிக்கொள்ளும் மக்களுக்கு, மதியால் ஒன்றிணையும் மகத்துவமும் தெரிந்திருப்பதால், கண்ணடியும் உனக்குக் கொஞ்சம் அதிகம்தான்... புல்லுருவிகளாய் ஒருசிலர் பகையுடன் பார்த்தாலும், எல்லாரும் விரும்பும்படியான இணையற்ற அழகிதான் நீ... சுரண்டிச்சுரண்டியே உன் செல்வத்தைத் திருடினாலும் குறையாமல் நிறைவதே உன் குலச்சிறப்பாய்ச் சொல்கிறார்கள்.. . இணையாகச் சொல்லப்படுகிற இன்னுமொரு சிறப்பு, உலகெங்கும் புகழ்சேர்க்கும் உன்குலத் தோன்றல்கள்... கிட்ட இருக்கையில் உன்னைக் கேலிசெய்த வர்கள்கூட, எட்டிப்போனபின் உனக்காக ஏங்கத்தான் செய்கிறார்கள்... ஊழல் அரசியலும் உள்வீட்டுச் சண்டைகளும் வீழத் தள்ளிவிடும் வெறியோடு எழுந்தாலும், தாயாகி அத்தனையும் தாங்கி நிமிர்கிறாய், தாயே, திருநாடே, உனக்கு என் வணக்கங்கள்!

வாடகை வயிறுகள்!

படம்
நீ, பத்துமாசம் மட்டும் பல்லைக் கடிச்சிக்கிட்டா, நம்ம மொத்தப் பிரச்சனையும்  இல்லாமல் போய்விடும்... சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்... உள்ளே, செத்ததுபோல் உணர்ந்தாள் அவள்... கருவறையைப் பணயம்வைத்துக் காசுபார்க்கும் மும்முரத்தில், கட்டளைகள் வேறு பிறந்தது அவள் கணவனிடமிருந்து... பெத்தெடுத்துக் கொடுத்தமா பணத்தை வாங்கினமான்னு   கச்சிதமா இருக்கணும், மத்தபடி ஏதும்  மனசு பிசகக்கூடாது... பணக்கணக்குப் போட்டவன் பக்குவம் சொல்லிக்கொண்டிருக்க, அங்கே, கண்ணீர்த் துளிகளுக்குக்  கணக்கெழுதிக்கொண்டிருந்தாள் அவள்... வாடகைக்குப் பெத்தெடுத்தா வலியே இருக்காதோ? கூடவே நெஞ்சினிலே   பாலும் சுரக்காதோ? கோடிகோடியாய்க்  கொட்டிக்கொடுத்தாலும் கொடுத்துவிட்டுவந்த அந்தக் குழந்தைமுகம் மறக்குமா? என்று , அழுதவளின் வார்த்தைகளெல்லாம், அவசியத்தேவைகளைச் சொல்லி அலட்சியப் படுத்தப்பட்டது... உயிரூட்டிய கருவினை  உள்ளே பதியமிட, விதியை நொந்தவளுக்குள், வேகவேகமாய் வளர்ந்தது குழந்தையும் கூடவே குமுறல்களும்... வயிற்றுக் குழந்தைக்கு வளையல்சத்தம் பிடிக்குமென்று, வளைகாப்புப் போட்டுவிட்டார்கள் வாரிசுக்குச் சொந்தக்காரர்கள்