வாடகை வயிறுகள்!





நீ,
பத்துமாசம் மட்டும்
பல்லைக் கடிச்சிக்கிட்டா,
நம்ம
மொத்தப் பிரச்சனையும் 
இல்லாமல் போய்விடும்...

சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்...
உள்ளே,
செத்ததுபோல் உணர்ந்தாள் அவள்...

கருவறையைப் பணயம்வைத்துக்
காசுபார்க்கும் மும்முரத்தில்,
கட்டளைகள் வேறு பிறந்தது
அவள் கணவனிடமிருந்து...

பெத்தெடுத்துக் கொடுத்தமா
பணத்தை வாங்கினமான்னு 
கச்சிதமா இருக்கணும்,
மத்தபடி ஏதும் மனசு பிசகக்கூடாது...

பணக்கணக்குப் போட்டவன்
பக்குவம் சொல்லிக்கொண்டிருக்க,
அங்கே,
கண்ணீர்த் துளிகளுக்குக் 
கணக்கெழுதிக்கொண்டிருந்தாள் அவள்...

வாடகைக்குப் பெத்தெடுத்தா
வலியே இருக்காதோ?
கூடவே நெஞ்சினிலே 
பாலும் சுரக்காதோ?

கோடிகோடியாய்க் கொட்டிக்கொடுத்தாலும்
கொடுத்துவிட்டுவந்த
அந்தக் குழந்தைமுகம் மறக்குமா?
என்று,
அழுதவளின் வார்த்தைகளெல்லாம்,
அவசியத்தேவைகளைச் சொல்லி
அலட்சியப் படுத்தப்பட்டது...

உயிரூட்டிய கருவினை 
உள்ளே பதியமிட,
விதியை நொந்தவளுக்குள்,
வேகவேகமாய் வளர்ந்தது
குழந்தையும் கூடவே குமுறல்களும்...

வயிற்றுக் குழந்தைக்கு
வளையல்சத்தம் பிடிக்குமென்று,
வளைகாப்புப் போட்டுவிட்டார்கள்
வாரிசுக்குச் சொந்தக்காரர்கள்...

அவளது
வருத்தத்தைச் சொல்லி,
வளையல்கள் அரற்றிக்கொண்டிருக்க,
அவளோ,
அங்கே ஊமையாகிப் போயிருந்தாள்...

 காசுதர வந்தபிள்ளை
காலுதைத்துப் புரளுகையில்
உச்சிவரைக்கும் ஓடியது மின்னல்,
ஆனால்,
சிக்கலாகி இறுகியது 
வாழ்க்கையின் பின்னல்...

வலிக்கிற மனசோடு 
வருடியவளின் ஸ்பரிசத்தில், 
உள்ளே
கிறங்கித்தான்போனது பிள்ளை,
ஆனால்
உறங்காமல் தவித்திருந்தாள் அன்னை...

கடைசி தவணைக் காசுக்காகக்
கைபேசியில் அழைத்தான் கணவன்...

பெறப்போகிற பிள்ளையைத்
தரப்போகிற பயம்வரவே,
ஆத்திரம்மீறிட 
அவனிடம் சொன்னாள் அவள்...

வாங்கிய காசுக்கும் 
வயிற்றிலிருக்கிற பிள்ளைக்கும்,
பிறக்கிற வரைக்குமாவது 
உண்மையாய் இருக்கச்சொல்லி
உறுத்துகிறது மனசு...

அதனால்,
உறவென்று ஒன்றிருந்தால்,
பிறகு பேசலாமென்று
அலைபேசியை அணைத்தாள் அவள்,
அங்கே,
அதிர்ச்சியில் திகைத்தான் அவன்!

கருத்துகள்

  1. பணத்துக்காக மட்டும் என்று இருக்கும் போது, அந்த பெண்ணின் மனப்போராட்டம் புரிகிறது. ஆனால், அனைத்து பெண்களாலும் தாய்மையை சுமக்க முடிவதில்லையே..... சில தியாக பெண்களின் சேவையும் தேவைப்படுகிறதே.

    பதிலளிநீக்கு
  2. \\வலிக்கிற மனசோடு
    வருடியவளின் ஸ்பரிசத்தில்,
    உள்ளே
    கிறங்கித்தான்போனது பிள்ளை,
    ஆனால்
    உறங்காமல் தவித்திருந்தாள் அன்னை...\\
    வாடகைக்கென்றாலும் வலியும் பாசமும் நிஜம்தானே. நல்லகவிதை சுந்தரா.

    பதிலளிநீக்கு
  3. வாடகைதாயின் மனம் பற்றி சொன்ன இக்கவிதை ரொம்பவே மனசை நெகிழ வைச்சிடுச்சுங்க நல்லாயிருக்கு தொடருங்கள் :)))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!