Tuesday, March 15, 2011

நானும், அப்பாபோல...அப்பாபோல நானும் பெரியவனாகி...
என்று
அக்காவிடம் ஆரம்பித்தவன்,

அப்பாவைப் பார்த்ததும்
வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்...


அருகழைத்துக் கேட்டார் அப்பா...

நீயும் அப்பா போல,


வாத்தியார் ஆவியா?
....

புல்லட் பைக் ஓட்டுவியா?

.....

வேஷ்டி சட்டை போட்டுப்பியா?
....

சொல்லுடா என் செல்லமகனே...

'அம்மாவை அடிச்சு
அழ வைக்கமாட்டேன் ' என்றபடி,
அழுதபடி நகர்ந்துபோனான் மகன்.

*****

**13/3/2011 அன்று" திண்ணையில் "வெளிவந்தது**

Tuesday, March 8, 2011

கடலோரத்து இருக்கை


உப்புக் கடல்நீரில்
இரவெல்லாம் மிதந்துவிட்டு,
பட்டுக்கரை மண்ணில்
பகலினில் இளைப்பாறும்
படகுகளின் தூக்கத்தைப்
பதுங்குகிற ஜோடிகள் கெடுக்கும்...

படுக்க வீடின்றிப்
பாதையில் கிடந்துவிட்டு
வெயிலிலே படுத்து
விட்ட தூக்கத்தைத் தேடுகிற
நடைபாதைப் பிச்சைக்காரனை
நாய்குரைத்து எழுப்பும்...

தூக்குச்சட்டியில் கடலையும்
தோளை அழுத்தும் கவலையுமாய்க்
கடந்துபோகிற கந்தசாமியின்
ஒவ்வொரு பார்வையும்
ஓய்வெடுக்க நினைக்கிற
அவன் ஏக்கத்தைப் பகிரும்...

பலூன்பொம்மை விற்கிற
பாலுவின் விரல்கள்
பற்றி யிருக்கிற
இழைகளைக் காட்டிலும்
சிக்கலான தாயிருக்கும்
அவன் சொல்லாத துயரம்...

எப்படி விலக்கினாலும்
விலகாத  வறுமைதீர,
வார்த்தை மூலதனத்தோடு
வாழ்க்கை தேடுகிற செண்பகத்துக்குக்
கைத்தொழிலாய்க் கிடைத்ததோ
கைரேகை ஜோசியம்...

வண்டியில் ஐஸ் இருக்கும்
வயிற்றினில் பசியிருக்கும்
விற்றபின் வீடுபோகக்
கத்திக்கொண்டிருக்கிற கார்மேகம்,
பசிக்கு உணவுண்ணப்
பகலழிந்து இரவாகும்...

அத்தனை பேரின்
துயரங்கள் அறிந்தாலும்,
ஆறுதல்சொல்ல
ஆசைப்பட்டும் முடியாமல்,
அனாதையாய் நிற்கிற
அந்த இருக்கையின் கவலை
அதற்கு மட்டும்.

* 7/3/2011 அன்று, கீற்றில் வெளியிடப்பட்டது *

Tuesday, March 1, 2011

உறவு வேலிகளும் உள்ளே சில பெண்களும்!


வந்த காலோடு
வீட்டுக்குக் கிளம்புறியே,
இருந்து ஒருவாய்
சாப்பிட்டுப்போ அண்ணே...

உரக்கச்சொல்ல நினைத்ததை
உள்வாங்கிக்கொண்டு,
முறைப்புக்கு அஞ்சி
முனகலாய் வெளிவந்தது குரல்...

மறுக்கத் தோன்றாமல்
அவளை
மறுபடியும் பார்த்தான் அண்ணன்...

இருக்கிற போதெல்லாம்
கொடுத்துப் பழக்கியவன்,
இல்லையென்று சொன்னபோது
செல்லாக் காசாய்த் தெரிய,
பிறந்தவீட்டு உறவெல்லாம்
போதுமென்றானது...

நெருக்கமான உறவில்
நூறுபேர் இருந்தாலும்,
பொருத்தமானவன் இவனென்று
பேசி முடித்தவனை,
இன்றைக்கு
உபசரிக்கக் கூடாதென்று
உத்தரவும் போட்டது...

மறைத்துக்கொண்ட முகத்தை
மறந்தும் விலக்காமல்,
பத்திரிகைக்குள் புதைந்திருந்த
பாசக்கார மாப்பிள்ளையிடம்,

பத்திரமாய்த் தங்கையைப்
பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு,
வைத்துவிட்டுப் போனான்
அண்ணன்
அழைப்பிதழ் ஒன்றை...

உள்ளே,
நல்வரவை விரும்புபவள்
அவளாக இருந்தாள்,
அவள் உறவே
அங்கு மறுக்கப்பட்ட பட்சத்தில்...

LinkWithin

Related Posts with Thumbnails