Thursday, February 24, 2011

கூண்டுக்கிளிகளும் குடும்பநல விதிகளும்!


பிடித்தமாதிரி நடந்துக்கோ
பிரியமாய்ப் பேசு
கழுத்தளவு கவலையென்றாலும்
கண்ணில் அதைக் காட்டாதே...

ஆளப்பிறந்தவன் அவன்
பேணப் பிறந்தவள் நீ
காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால்
கல்லானாலும் கணவன்...

விதவிதமாய் உடுத்திக்கொள்
வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு
வயிற்றின் வாயிலாக
அவன் மனசுக்குள் நுழையப்பார்...

ஆணென்றால் அவன் கொஞ்சம்
அப்படி இப்படித்தான் இருப்பான்,
கட்டிய கணவனையும்
குழந்தைபோல நினைத்துக்கொள்...

சிரித்த முகமென்றால் சீதேவி
சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி
பொறுமையின் சிகரமென்றால் பூதேவி
பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி...

கல்யாணம் பேசியதிலிருந்து
கணக்கில்லாத அறிவுரைகள்;
எல்லாவற்றையும் கேட்டவள்
இறுதியாய்ச் சொன்னாள்...

வழிவழியாய்ச் சொல்லுகிற
விதிகளெல்லாம் கடைப்பிடிக்க
வானத்திலிருந்து யாரும்
வரனாக வருவதில்லை...

பயத்தோடு பார்ப்பதற்கும்
பக்குவமாய் நடிப்பதற்கும்
அவன் தலைவன் மட்டுமல்ல,
நன்றும் தீதும்
பகிர்ந்துகொள்ளப் போகும்
நண்பனும்கூடத்தான்...

அதனால்
பெண்மையின் விதிகளை
என்னிடம் சொன்னதுபோல
ஆண்மைக்கும் சொல்லுங்கள்,
அதை
அனுப்பிவைக்கிறேனென்று!

*****


Wednesday, February 23, 2011

பெற்ற மனசு


கல்லூரி விடுதிக்குப்போன
கடைக்குட்டியின் முகம்
கண்ணிலேயே நிற்க,
காசுதேற்றும் மும்முரத்தில்
கீரை விற்றுக்கொண்டிருந்தாள் அவள்...

இருக்கப்பட்டவர்கள் இறைச்சியையும்
இல்லாதவர்கள் எலும்பையும் வாங்கிப்போக,
ஞாயிற்றுக்கிழமையைச் சபித்தது
அந்த ஏழைத்தாயின் மனசு...

எண்ணிப்பார்த்த சில்லறை
இளக்காரமாய்ச் சிரிக்கையில்,
கல்லூரிக்குப் போகிற
கடைசி பஸ்ஸும் கடந்துபோய்விட,

இடுப்புச் சேலையில்
ஏக்கத்தையும் முடிந்தபடி,
வாடிய கீரையோடு
வீட்டுக்குப் புறப்பட்டாள்...

ஆனால்,
அவளை விட்டுச்
சாலையிலேயே நின்றது
சங்கடத்துடன் மனசு.

Sunday, February 20, 2011

இளமையில் 'கல்'





இளமையில் கல் என்று
எழுத்துக்கூட்டிப் படிக்கும்போதே,
வறுமையெனும் கல் விழுந்து
வழிமாறிப்போனது வாழ்க்கை...

கல்லை நகர்த்த
முயற்சித்துத் தோற்றுப்போக,
கல்விதான் நகர்ந்துபோச்சு
கைகளுக்கு எட்டாமல்...

இன்றைக்கு,
அடுக்கிக் கல்சுமந்தால்
அடுத்தவேளை சோறு,
அதிலும்,
வளர்த்திக் குறைவென்று
சம்பளமும் 'வேறு'...

ம்...ஒன்றுஒன்றாய்க் கூட்டி
நாலுவரிசை வந்தாச்சு...

இனி,
இன்னும் சிலவரிசை
ஏற்றிப் பூசிவிட்டால்,
நாங்களும் தூண்கள்தான்
நாளைய இந்தியாவுக்கு!

*****

என்னுடைய இந்தக்கவிதை, கடந்தவாரம் " கீற்று இணைய இதழில்" வெளிவந்தது.

Wednesday, February 16, 2011

ஒரு கவிஞனின் கதை


வார்த்தைகளுக்கிடையே சிக்கிய
வாழ்க்கையின் துயரமும்
எழுத்துகளுக்கிடையே சிக்கிய
ஏழ்மையின் வலிகளும்
வரிகளுக்கிடையே சிக்கிய
பிரிந்துபோன உறவுகளும்
அவனைக் கவிஞன் என்று
ஊருக்கு அடையாளம்காட்ட,

காலியாய்க் கிடந்த
சமையலறைப் பாத்திரங்களையும்
மூளியாய்க் கிடந்த
முகத்தையும் கழுத்தையும் காட்டி,
காசுக்குப்பெறாத மனுஷனென்று
கணவனை
அடையாளம்காட்டினாள் அவள்...

வாழ்க்கையில் தொலைத்ததை
வார்த்தைகளில் பிடித்த மகிழ்ச்சியில்
அவன் வாழ்ந்துகொண்டிருக்க,
வார்த்தைகளைக் கண்டெடுத்து
அவனை 
வருத்துவதே வாழ்க்கையென்றிருந்தாள் அவள்!

Monday, February 14, 2011

கலப்பதிகாரம்!

 

படபடக்கிற மனசு
பார்வையின் கோணங்கள் புதுசு
சிறைப்படத் துடிக்கிற தவிப்பு
சின்னச்சின்னதாய்ச் சிலிர்ப்பு...

கண்கள் நிறையக் கனவு
காலம் மறந்த நினைவு
எழுதஎழுதக் கவிதை
எல்லாப்பக்கமும் இனிமை...

சும்மாயிருந்த மனசில்
நீ தென்றலாய்த்தான் கலந்தாய்,
ஆனாலும்,
எழுந்ததென்னவோ
ஏகப்பட்ட அதிர்வலைகள்...

பார்க்கும் போதெல்லாம்
பிரியத்தின் துளிகளை
வீசிவிட்டுச் செல்கிறாய்...

அவையெல்லாம்
என்
முற்றத்துத் தோட்டத்தின்
முல்லைக்கொடியினில்,
மொட்டுக்களும் பூக்களுமாய்
மலர்ந்து கிடக்கின்றன...

அதைக்
கோர்த்துக் கொடுத்திட
வார்த்தைகளைத் தேடித்தேடி,
செம்மொழியின் எல்லைகளைச்
சுற்றிவந்து தோற்றபின்னர்,

வாய்திறந்து சொல்லிவிட்டால்
வார்த்தைகள் சிதறுமோவென்று,
காகிதத்தில் கோர்த்துக்
கடிதமாய் அனுப்பிவைத்தேன்...

அதைச்
சத்தமிட்டு வாசித்தால்
காற்றுக்கும் காதல்வந்து
உன்னை முத்தமிடக்கூடுமடி...

அதனால்
பூக்களோடு அனுப்பியுள்ள
பொத்திவைத்த காதலைப்
பார்வையால்மட்டும் படி!

விடையினையும்,
உன் விழிகளால்மட்டும் சொல்!

Wednesday, February 9, 2011

விசும்பல்!

தீக்குளித்த சீதை,
மூக்கிழந்த சூர்ப்பனகை,
அருந்ததி, கண்ணகி,
அகலிகை,மாதவியென்று
எல்லாப் பெண்களிடத்திலும்
ஏதோ ஒரு விசும்பல்...

சதவீதத்தைக் கூட்டினாலும்,
சக மனுஷியாய்ப்
பார்க்கமறுக்கிற சமூகத்தில்,

முள்சுமக்கும் மல்லிகாவும்
முன்னேறிய மஞ்சுளாவும்
ஏதோ ஒரு புள்ளியில்,
பெண்ணாகப் பிறந்துவிட்ட
தன் விதியை நொந்தபடி...

Tuesday, February 8, 2011

காந்திதேசம் வருகிறதாம்!



தென்னை மட்டையும்
துணிசுற்றிய பந்துமாக
என்னைப் பார்த்துவிட்டால்
எரிந்துவிழுவாள் அம்மா...

மட்டை விளையாட்டில்
கெட்டிக்கார னாவான்,
திட்டாதே அவனையென்று
கட்டிக்கொள்ளுவார் அப்பா...

சிக்சர் அடிக்கிறேனென்று
சிதறடித்த பானையின்
சுக்கலாகிய துண்டுகள்போல்
சிதைந்துபோனது வாழ்க்கை...

கட்சிகளுக் கிடையே
நடந்த களேபரத்தில்
வெட்டிச் சாய்க்கப்பட்டார்
வேடிக்கைபார்த்த அப்பா...
அதைக்
கிட்டநின்று பார்த்ததினால்
சித்தம் கலங்கிப்போனாள் அம்மா...

இன்று,
மட்டைக்குப் பதிலாக
மண்வெட்டி யெடுத்தபடி,
ஒற்றைவேளை உணவுக்காக
ஓடாய்த் தேய்கிறேன்...

அங்கேயோ,
காந்திதேசம் வருகுதென்று
வாந்தியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்!



*சுந்தரா*

தேர்தல் வரும்போது யோசிச்சிட்டு ஓட்டுப்போடணும்... அது அங்கே!
எப்ப வந்தாலும் வாசிச்சிட்டு ஓட்டுப்போடலாம்... அது இங்கே :)

LinkWithin

Related Posts with Thumbnails