கடவுள் வேலை!

என்னவேலை கொடுத்தாலும்
செய்கிறேனென்று வந்தவனிடம்
சின்னதொரு வேலைதான்
செய்கிறாயா என்றேன்...

கண்கள் மின்னக்கேட்டான்
"என்ன வேலை சார்?" என்று...

நிழலிலே வேலை
நேரமெல்லாம் கணக்கில்லை,
பிடித்ததைச் சாப்பிடலாம்
நினைத்தபோது  தூங்கலாம்...

ஏ சி யில் இருக்கலாம்,
எல்லாச் சேனலும் பார்க்கலாம்,
ஆசையிருந்தால் பாடலாம்,
பாடிக்கொண்டே ஆடலாம்...

வீட்டுச் செடிகளையும்
வளர்க்கிற நாய்களையும்
நாட்டமாய்ப்  பராமரித்து
நாள்முழுக்க ரசிக்கலாம்...

காலையில் காப்பியும்
கார்ன் ஃப்ளேக்ஸும் தந்துவிட்டு,
மத்தியான சமையலையும்
மணி எட்டரைக்குள் முடிக்கலாம்...

சாப்பாட்டுக் கூடையில்
சமைத்ததை எடுத்துவைத்து,
ஆபீசுக்குக்கு அனுப்பிவிட்டால்
அப்புறம் சிரமமில்லை...

எப்போது விருப்பமோ
அப்போது சலவைசெய்து,
அழுக்கெல்லாம் பெருக்கிக்கூட்டி,
அங்கணத்தைச் சுத்தம்செய்து,
விருப்பமான தேநீரை
நான்
வீடுவருமுன் போட்டால்போதும்...

இறுக்கம் குறைந்து
நறுக்கென்று சுவைப்பதற்கு
ரெண்டேரெண்டு மசால் வடை...

மற்றபடி,
உனக்கும் எனக்கும் சேர்த்து
இருக்கிறதில் எளிதான
இரவுசமையல் போதும்...

விருப்பமென்றால் சொல்,
வீட்டுமுகவரி தருகிறேனென்றேன்...

'சுருக்'கென்று சொன்னான் அவன்...

"ஆக்குதல் காத்தல்
அழித்தலென்று அத்தனையும்
நேக்காகச் செய்கிற
கடவுள் வேலைசார் இது,
காசுக்கெல்லாம் கிடைக்காது...

பொருத்தமான
பெண்ணைப் பார்த்து
இறுக்கமாய்
மூணு முடிச்சுப்போடுங்க" என்று,
சிரித்தபடி சொல்லிப்போனான்...

எனக்குத்தான் சிரிப்பே வரவில்லை!


கருத்துகள்

  1. அப்படிச் சொல்லுங்க...

    // கடவுள் வேலைசார் இது... //

    இது தான் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் எழுத்துக்களை இணையத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சி, சுந்தரா. தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான கவிதை
    நிச்சயம் அது கடவுள் வேலைதான்
    எளிமையான வார்த்தைகளை கொண்டு
    கனமான விஷயத்தைச் சொல்லிப்போனவிதம்
    அருமை

    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அதானே? ஒரு குடும்பத்தலைவி (மனைவி) என்றால் சும்மாவா? சரி சரி சீக்கிரமா பொருத்தமான பெண்ணை பார்த்துடுங்க...மேளம் கொட்ட!
    அருமை! தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!